05

05

“நாட்டை சீரழித்த அரசியல்வாதிகளை புனர்வாழ்வு நிலையங்களில் அடைத்து விடுங்கள்.” நாடாளுமன்றத்தில் சரத் பொன்சேகா

“புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும். ஏனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்துள்ளார்கள்.” என ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதம் இன்று (05) பாராளுமன்றத்தில் இடம்பெறும் எதிர்பார்த்தேன்,இருப்பினும் ஒருசில காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்படுகிறது.

கந்தகாடு புனர்வாரழ்வு மத்திய நிலையத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் முன்பு 2 வருட காலம் புனர்வாழ்வு வழங்கப்பட்டு, இறுதி ஆண்டில் தொழிற்துறை தொடர்பான பயிற்சி வழங்கப்படும் ஆனால் தற்போது 06 மாதங்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கும் தரப்பினர் ஹெரோய்ன் போதைப்பொருள்பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்க பயிற்றுவிக்கப்பட்டவர்கள், ஆனால் அவர்கள் தற்போது ஐஸ்போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டியுள்ளது.

கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான 350 பேரை பராமரிக்க 90 இராணுவத்தினர் மாத்திரம் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆகவே கந்நகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தின் ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கு அவதானம் செலுத்துவதை விடுத்து போதைப்பொருள் வியாபாரத்தை முழுமையாக இல்லாதொழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய கஞ்சிபான இம்ரானுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட நிலையில் அவர் சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இவ்விடயத்தின் தேசிய புலனாய்வு பிரிவின் செயற்திறனை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.மொத்த சனத்தொகையில் 50 சதவீதமானோர் மூன்று வேளை உணவை இருவேளையாக குறைத்துக் கொண்டுள்ளார்கள்.

பாடசாலை பாதனிக்கு பதிலாக சாதாரண செருப்பை அணிந்துக் கொண்டு மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தர கல்வி அமைச்சு அனுமதி தர வேண்டும்.

இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கும் நிலைக்கு நாடு அவலத்தை எதிர்கொண்டுள்ளது.

புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு தான் புனர்வாழ்வு வழங்க வேண்டும்,எனெனில் அரசியல்வாதிகள் தான் நாட்டை சீரழித்தார்கள்.

போராட்டத்திற்கு ஊழல் அரசியல்வாதிகள் அச்சமடைந்துள்ளார்கள்.ஆகவே நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுக்க வேண்டும்.போராட்டத்தின் ஊடாகவே சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க முடியும் என்றார்.

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வலியுறுத்தி எட்டு மாவட்டங்களில் கவனயீர்ப்பு போராட்டம் !

அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.

இன்று முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் தெரிவித்தார்.

இனப்பிரச்சினை தீர்வு குறித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான மூன்றாவது சந்திப்பின் முடிவு என்ன..?

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு இடையில் தற்போது காணப்படும் அதிகாரங்களை செயற்படுத்துவற்கு செய்ய வேண்டிய விடயங்கள் குறித்து இன்றைய ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பரிசீலித்து எதிர்வரும் 10 ஆம் திகதி முடிவை அறிவிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்ததாக, சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்திருந்த நிலையில், அதிபருடன் தமிழ்க் கட்சிகள் கலந்தரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.

இதன்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாவது தடவையாக இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளது.

இன்றைய சந்திப்பில் பிரதமர் தினேஸ் குணவர்தன, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டுள்ளதுடன், கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

அடுத்த சந்திப்பு ஏனைய தமிழ்க் கட்சிகளையும் உள்ளடக்கி எதிர்வரும் 10 அம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமது இறுதி நிலைப்பாடு குறித்து எதிர்வரும் 10 ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

சீனாவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் கொவிட்-19 வகைகள் இலங்கையிலும் !

தற்போது சீனாவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் கொவிட்-19 வகைகள் இலங்கையிலும் உலகின் ஏனைய நாடுகளிலும் பல மாதங்களாக காணப்படுவதாக சுகாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து வெளியிடப்பட்ட வரிசைமுறை தரவுகளின் அடிப்படையில் இது உறுதிப்படுத்தப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் தலைவரும் பேராசிரியருமான நீலிகா மாளவிகே தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய – உக்ரைன் மோதலால் உயிரிழந்த இராணுவ வீரர்களின் தொகையை வெளியிட்டது ஐ.நா !

ரஷ்யா மற்றும் உக்ரைன்க்கு இடையிலான போர் 10 மாதங்களாக தொடர்ந்த வண்ணம் உள்ளது.

குறித்த போரினால் இதுவரை உயிரிழந்துள்ள இரு நாட்டு இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இறுதியாக வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையகத்தின் அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் போரினால் இதுவரை இரு நாடுகளையும் சேர்ந்த 2 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா சபையின் அறிக்கை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் விளைவாக இதுவரை உக்ரைன் நாட்டின் அப்பாவிப் பொதுமக்கள் 6,884 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10,947 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஐ.நா சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையகத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

“உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களையும், இளைஞர்களையும் முன் நிறுத்துவோம்.” – எம்.ஏ.சுமந்திரன்

“உள்ளூராட்சி தேர்தலில் சரியானவர்களையும், இளைஞர்களையும், யுவதிகளையும் முன் நிறுத்துவோம்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

சாவகச்சேரியில் ஊடகங்களுக்கு நேற்று (04) கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உள்ளுராட்சி தேர்தல் வேட்புமனுதாக்களுக்கான திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எமது கட்சியின் சார்பிலே தேர்தல்கள் பிற்போடகூடாது , அது ஜனநாயகத்தினை மீறுகின்ற செயல் என தொடர்ச்சியாக கூறி வந்திருக்கிறோம்.

அரசாங்கம் இந்த தேர்தலினை பிற்போடுவதற்கு எடுத்த முயற்சிகள் எங்களுக்கு தெரியும். எதுவும் கைகூடாத நிலைமையில் தேர்தல் ஆணைக்குழு சட்ட ரீதியாக அறிவித்துள்ளது. இந்த வேளையில் இதனை தடுப்பதற்கு சில முயற்சிகள் நடக்க கூடும். அவ்வாறு முயற்சிகள் எடுக்கப்படுமிடத்து உடனடியாக நாங்கள் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம்.

சில வருடங்களாக நடத்தப்படாமல் இருக்கின்ற மாகாண சபை தேர்தலும் உடனடியாக நடத்தப்பட வேண்டும். மாகாண சபைகள் இயங்காமல் இருப்பது என்பது மிகவும் பாரிய பின்னடைவு. இலங்கை தமிழரசுக்கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில், எங்களின் மூலக்கிளையில், இருந்து இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பதாரிகளை முன் வருமாறு கோரியிருக்கிறோம்.

இந்த தடவை சரியானவர்களையும், இளைஞர்களையும், யுவதிகளையும் இந்த தேர்தலில் முன் நிறுத்துவோம். மக்களின் ஆதரவினை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது..? – 17 ஆம் திகதி பதில் தருவதாக இராணுவம் அறிவிப்பு!

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது என்று எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் பதில் அளிப்போம் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கே இராணுவம் இவ்வாறு பதிலளித்துள்ளது.

சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது என்று பத்திரிகையாளர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.

1111/2022 என்ற இலக்கத்தை கொண்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான மேல்முறையீடு, தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் தலைவர் நீதியரசர் உபாலி அபேவர்த்தன தலைமையில் நேற்றைய தினம் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது பொறுப்பு வாய்ந்த இராணுவம் என்கின்ற வகையில் முழுமையான சரியான தகவல்களை 17ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவதாக இராணுவம் கூறியுள்ளது.

“யாரையும் நம்பாதீர்கள் அனைவரும் போலித்தமிழ் தேசியவாதிகள். எங்களை நம்புங்கள்.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி, ஸ்ரீலங்கா போன்ற அரசாங்கத்தின் கூலிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.” என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமகாலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள விரும்பாது. தேர்தல் எதையும் வைக்காமல் இருந்தால் சர்வதேசம் தவறாக கருதும் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலை அறிவித்து பின்னர் வழக்குகளை தாக்கல் செய்து தேர்தலை இழுத்தடிக்க முற்படலாம்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதாக இருந்தால் நிலையான அரசாங்கம் அமையவேண்டுமென சர்வதேச நிதி நிறுவனங்கள் விரும்புகின்றன.

நாடாளுமன்ற தேர்தலை நடத்தாமல் உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவது நெருக்கடியை அதிகரிக்கும். ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும்.

ஒற்றையாட்சிக்குள் ஏக்கியராஜ்ஜியவை ஏற்றவர்கள் 13ஆம் திருத்ததை ஏற்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினவர்கள் வாக்குபெறுவதற்காக தற்போது தாயகம் ,தேசியம்,சுயநிர்ணயம் என்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, விக்னேஸ்வரன் அணி, ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கூலிகள் போலித் தமிழ் தேசிய வாதிகள் ஆகியோரை இனங்கண்டு அவர்களை புறக்கணித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

மின்சார கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

பொருளாதார மறுசீரமைப்பை அமுல்படுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

உத்தேச மின்சாரக் கட்டண உயர்வு என்பது சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட நிபந்தனை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சில நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் IMF தவணை தொடர்பில் சிக்கல்கள் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இணங்கத் தவறினால் நாடு சர்வதேச ஆதரவையும் இழக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் விலையேற்றத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவாக இல்லை எனவும் அதற்கு பதிலாக பல சலுகைகளை வழங்க விரும்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், சலுகைகள் தன்னிச்சையாக வழங்கப்பட்டால் சர்வதேச உதவிகள் பெறப்படாது என்றும் கடன் மறுசீரமைப்பும் நடைபெறாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.