20

20

புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 56 வீதமானவர்களின் கல்வி மட்டமானது சாதாரண தரம் மாத்திரமே – சமூக அபிவிருத்திக்கான மத்திய நிலையம்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 56 வீதமானவர்களின் கல்வி மட்டமானது சாதாரண தரம் மாத்திரமே என குருநாகல் மனித உரிமைகள் மற்றும் சமூக அபிவிருத்திக்கான மத்திய நிலையம் வெளிப்படுத்தியுள்ளது.

புலம்பெயர்ந்தோர் சுகாதாரக் கொள்கை மற்றும் புலம்பெயர்ந்தோர் சேவை உடன்படிக்கையின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இது தெரிய வந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் அண்மையில் நடைபெற்ற பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு தனியார் முகவர் மூலம் இடம்பெயர்கிறார்கள் என்றும், சாதாரண தர தகுதி மாத்திரமே இருந்தபோதிலும், 52% ஆனோர் புலம்பெயர்ந்தோர் சேவை ஒப்பந்தத்தை ஆங்கிலத்திலும் பிற ஒப்பந்தங்களில் அரபு மொழியிலும் கையெழுத்திட்டுள்ளனர் என்பதையும் அந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

எனவே, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அத்தகைய ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது புரிந்து கொள்ளும் நிலை குறித்து குழு கவலை தெரிவித்துள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் 60% குவைத்துக்கும், மீதமுள்ளவர்கள் சவுதி அரேபியா மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகளுக்கும் வெளியேறுகிறார்கள், அதில் 70% வீட்டுப் பணிப்பெண்களாக வேலைக்காக இடம்பெயர்கின்றனர்.

புலம்பெயர்ந்தோர் சுகாதாரக் கொள்கை மற்றும் புலம்பெயர்ந்தோர் சேவை ஒப்பந்தம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் மேலும் விவாதிக்கப்பட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் குழுவின் முன் அழைக்கப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

12,000 பேரை வேலையில் இருந்து நீக்கும் கூகுள் !

மைக்ரோசொப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்ய உள்ளது. தொடர்ந்து ஏற்பட்டு வரும் வர்த்தக சரிவு காரணமாக, உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

 

இந்த ஆட்குறைப்பு தொடர்பாக தனது பணியாளர்களுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சலில், “கடினமான செய்திகளை நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் தோராயமாக 12,000 பேரை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளோம். கடுமையான ஆய்வுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உறுதியுடன் கடினமாக உழைத்து, பணியமர்த்த விரும்பி, அதீத திறமை வாய்ந்த சிலரிடம் இருந்து விடை பெறுகிறோம்.

 

அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். பணியாளர்களின் வாழ்க்கையில் இது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என்னைப் பெரிதும் பாதிக்கிறது. இதற்கான, முழுப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் வியத்தகு முன்னேற்றத்தைக் கண்டோம்.

 

இந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில், பணியமர்த்தம் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இன்று நாம் வேறுபட்ட பொருளாதார யதார்த்தத்தை எதிர்கொண்டு வருகிறோம். இருப்பினும், நமது வலுவான கட்டமைப்பு, தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் மதிப்பு, செயற்கை நுண்ணறிவு துறையில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்தார்.

 

முன்னதாக மைக்ரோசாப்ட் 11000 பணியாளர்களையும், அமேசான் 18000 பணியாளர்களையும், பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11000 பணியாளர்களையும் நீக்குவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

“நூறாவது சுதந்திர தினத்தின்போது இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும்.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நூறாவது சுதந்திர தினத்தின்போது இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு பல்கலைக்கழக சமூகம் உள்ளிட்ட இளைஞர், யுவதிகளின் ஆகக்கூடிய பங்களிப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அபிவிருத்திப் பணிகளின்போது பல்கலைக்கழக சமூகத்தின் பங்களிப்பு மிக அவசியம் என்றும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

75 ஆவது சுதந்திர தினத்திற்கு இணையாக தேசிய இளைஞர் தளத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

2048 ஆம் ஆண்டாகும்போது சுபீட்சமானதும் பலம் மிக்கதுமான இலங்கையை கட்டியெழுப்பும் வேலைதிட்டத்தில் பங்குதார்களாவதற்கு இலங்கையின் இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பளித்தல் மற்றும் 25 வருட கால அபிவிருத்தி வேலைதிட்டத்துக்கு இளைஞர் சமூகத்தை பொறுப்பு மிக்க பங்காளர்களாக இணைத்துக் கொள்ளுதல் என்பன தேசிய இளைஞர் தளத்தின் நோக்கங்களாகும்.

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களை இணைத்துக்கொண்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முக்கிய நகரங்களை சுற்றுலா நகரங்களாக மேம்படுத்தும் வேலைத்திட்டமொன்றும் இதன் கீழ் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அது தொடர்பான முன்மொழிவுகளும் இச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டன.

அதற்கமைய, யாழ்.மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகங்களும் அநுராதபுரம் மாவட்டம் தொடர்பான சுற்றுலா திட்டங்களை களனி மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகங்களும் கையளித்தன.

ருஹுனு பல்கலைக்கழகம், சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து காலி மாவட்டத்தை மையமாகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு வேலைத் திட்டங்களையும் கொழும்பு பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், நுண்கலை பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து கொழும்பு மாவட்டத்திற்கான வேலைத் திட்டங்களையும் சமர்ப்பித்துள்ளன.

பேராதனை, வடமேற்கு மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்கள் இணைந்து கண்டி மாவட்டம் தொடர்பான திட்டங்களையும், கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பல்கலைக்கழகங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான சுற்றலா மேம்பாட்டு திட்டங்களையும் முன்மொழிந்துள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள அனைத்து சுற்றுலாத் திட்டங்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது தனியார் துறையினரின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியங்கள் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அபிவிருத்திக்குப் பல்கலைக்கழக சமூகம் பங்களிப்பது மிகவும் நல்லதொரு விடயம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், இந்த தேசிய இளைஞர் தள வேலைத்திட்டத்திற்கு பல்கலைக்கழக கட்டமைப்பு வழங்கும் ஒத்துழைப்புக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவிருந்த 65 வயதான பெண் வெட்டிப் படுகொலை !

கம்பஹா மாவட்டம், மினுவாங்கொடைப் பிரதேசத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடவிருந்த 65 வயதான பெண் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை – யொகொதமுல்லையில் உள்ள அவரது வீடும் தீ வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு நேற்று தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, குறித்த பெண் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் இம்முறை தேர்தலில் போட்டியிட இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக கம்பஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

“இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு அவசியம்” – இந்திய வெளியுறவு அமைச்சரிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இலங்கையின் மிக முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகின்றார்.

அந்தவகையில், இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்கும் –  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில்,

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சில முக்கிய கோரிக்கைகள் இந்திய வெளியுறவு அமைச்சருக்கு முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடல் வளத்திற்கும், இலங்கை கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள, இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் செயற்பாடுகளை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய வெளியுறவு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேறுவதற்கும், இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் உட்பட அனைத்து சவால்களையும் தீர்ப்பதற்கு இந்தியாவின் உணர்வுபூர்வமான ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலைகளில் அதிகரிக்கும் கட்டணங்கள் – அரச வைத்தியசாலைகளில் குவியும் மக்கள் !

தனியார் வைத்தியசாலைகளில் கட்டணம் மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு காரணமாக அரச வைத்தியசாலைகளில் நோயாளர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக வெளிநோயாளர் சிகிச்சை பிரிவுகள் மற்றும் கிளினிக்குகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு காரணமாக சிரமத்திற்குள்ளாகும் நிலை காணப்படுவதாகவும் நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக வெளியில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சில கிராமப்புற வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள் இல்லாததால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால், கிளினிக்குகள் மற்றும் வெளி நோயாளர் பிரிவு நோயாளிகள், வெளி மருந்தகங்களில் அதிகளவில் மருந்துகளை வாங்க வேண்டியுள்ளது என அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலுக்காக பொதுச் சொத்துக்கள் துஷ்பிரயோகம்!

உள்ளூராட்சி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கும் பணிகள் ஆரம்பித்த முதல் நாளில் இருந்து இதுவரை 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பொதுச் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் பிரதிநிதிகளின் பலவித வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் தேர்தல் செலவினங்களை ஒழுங்குபடுத்தும் சட்டமூலம், உள்ளூராட்சித் தேர்தலை பாதிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்ற விசேட குழு !

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்ற விசேட குழுவிற்கு உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நியமித்துள்ளார்.

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையிலான இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் சரித ஹேரத், கலாநிதி சுரேன் ராகவன், கலாநிதி ஹரிணி அமரசூரிய, ரமேஷ் பத்திரன, சீதா அரம்பேபொல, ரவூப் ஹக்கீம், அனுர பிரியதர்ஷன யாப்பா, திஸ்ஸ அத்தநாயக்க ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட காதலன் – காதலி ஹெரோயினுடன் கைது !

காலி – அஹங்கம, மிதிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொலைபேசியில் தொடர்புகொண்டு இளைஞரை மிதிகமவிற்கு அழைத்த குறித்த பெண், அவரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையே காதல் தொடர்பு காணப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மஹரகம பிரதேசத்தில் தலைமறைவாகியிருந்த நிலையில், சந்தேகநபரான பெண் 15 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

24 வயதான இளைஞர் கடந்த 11 ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியா கோரிக்கை!

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து, இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் இணைந்து அவர் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தியிருந்தார்.

இந்தியாவுடனான கூட்டாண்மை, நாட்டின் பொருளாதார மீட்சியை எவ்வாறு எளிதாக்குவது என்பது குறித்து கலந்துரையாட ஜனாதிபதி விக்ரமசிங்கவை விரைவில் இந்தியாவிற்கு வருமாறு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தை கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா, இலங்கையின் நம்பகமான அண்டை நாடு, நம்பகமான பங்காளி மற்றும் இலங்கைக்கு தேவை ஏற்படும்போது, எந்த தொலைவுக்கு செல்ல தயாராக உள்ள ஒரு நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது இலங்கைப் பயணம், பிரதமர் மோடியின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் அறிக்கை என வலியுறுத்திய ஜெய்சங்கர், தேவைப்படும் நேரத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், திருகோணமலையை ஒரு வலுசக்தி மையமாக மேம்படுத்தும் திறன் இலங்கைக்கு உள்ளது. அத்தகைய முயற்சிகளுக்கு நம்பகமான பங்காளியாக, இந்தியா தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்துழைப்பை முன்னோக்கி கொண்டு செல்லும், புதுப்பிக்கத்தக்க சக்தி கட்டமைப்புக்கு, கொள்கை அடிப்படையில் இன்று இணக்கம் எட்டப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.