14

14

“கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்த ரணில் விக்கிரமசிங்க இன்று தேசிய தைப்பொங்கல் என கூறுகிறார்.” – அருட்தந்தை மா.சத்திவேல்

“கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்து அதன் அறுவடையில் மகிழ்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேசிய பொங்கல் என கூறிக்கொண்டு தமிழர் தாயகத்தில் காலடி எடுத்து வைக்க கூடாது.” என அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரச திணைக்களங்கள் பேரினவாத சிந்தனையோடு தமிழர்களின் நிலத்தையும் வாழ்வையும் தொடர்ந்து சூறையாடிவரும் காலம் இது என குற்றம் சாட்டியுள்ள அவர், மக்கள் பூர்வீகமாக விவசாயம் செய்த நிலங்கள் இராணுவத்திடம் சிக்கி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தேசிய தை பொங்கல் என்பது அரசியல் நாடகம் என்றும் இதனை ஏற்க தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்பதை போலி தேசியவாதிகள் உணர வேண்டும் என்றும் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தைப்பொங்கல் என்பது பானையும், அரிசியும், அடுப்பும் சம்பந்தப்பட்ட விடயம் மட்டுமல்ல உழைப்பாளரின் வியர்வை, அதனால் விளைந்த விளைச்சல் உழைப்பு, உழைப்புக்கு அடிப்படை காரணமான மண் அதனுடைய உரிமை கலந்த விடயமாகும். இதிலே வாழ்வும் வளமும் தங்கி இருக்கின்றது.

கலாசார சிறப்போடு தேச உணர்வும் அதன் பாதுகாப்பும் அதற்கான உறுதியும் மேலோங்கி இருக்கின்றது. இவற்றையெல்லாம் சிதைத்தழித்து தொடர் அழிவுகளுக்கும் திட்டமிட்டு கொண்டு தேசிய பொங்கல் என்று அதிபர் தமிழர் தாயகத்தில் காலடி வைப்பதோ அவரின் வருகையை வரவேற்பதையோ நாம் எந்த வகையிலும் அங்கீகரிக்க முடியாது.

வியர்வை விதைத்த நிலம், உழுது விளைந்த நிலம், பொங்கலிட்டு மகிழ்ச்சியோடு உறவுகளோடு கூடி பகிர்ந்து உண்ட நிலம், இராணுவத்திடம் சிக்கி உள்ளது. அரச திணைக்களங்கள் பேரினவாத சிந்தனையோடு தமிழர்களின் நிலத்தையும் வாழ்வையும் தொடர்ந்து சூறையாடிவரும் காலமிது.

இதற்கு மத்தியில் தேசிய தை பொங்கல் என அரசியல் நாடகம். இதனை ஏற்க தமிழர்கள் ஏமாளிகள் அல்ல என்பதை போலி தேசியவாதிகள் உணர வேண்டும். தமிழர்களின் கலாசாரத்தை முற்றாக அழிப்பதற்கு போதை பொருட்களின் பாவனையும் எங்கும் வியாபித்துள்ளது.

இதற்குப் பின்னால் அரச படைகள் உள்ளதாகவும் மக்கள் சந்தேகிக்கின்றனர். நாட்டில் வேறெந்த பிரதேசத்திலும் இல்லாத அளவிற்கு முப்படையினரும் காவல்துறையினரும் அவர்களுக்கு உதவியாக இரகசிய காவல்துறையும் அவர்களின் புலனாய்வாளர்களும் அவர்களோடு சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களும் பலமாக இருக்கும் போது போதை பொருட்கள் வடகிழக்கில் அதிகரித்துள்ளதென்றால் அதற்கு பொறுப்பு கூற வேண்டியது பாதுகாப்பு அமைச்சும் பாதுகாப்புக்கு பொறுப்பான ஜனாதிபதியுமே.

இத்தகைய கலாசார அழிவை தமிழர் தாயகத்தில் விதைத்து அதன் அறுவடையில் மகிழ்ந்த ஜனாதிபதி தேசிய தைப் பொங்கல் என தமிழர் தாயகத்தில் காலடி வைக்க வேண்டாம் என்றே கேட்கின்றோம்.

தமிழர்களின் தேசிய பாதுகாப்பிற்காக போராடி உயிர்த்தியாகமானோரை சொந்த மண்ணிலே நினைவு கூர முடியாது. இறுதி யுத்தத்தில் வான் தாக்குதலாலும், நச்சு குண்டுகளாலும் படுகொலை செய்யப்பட்டோரை கூட்டாக நினைவு கூருவதற்கு முடியாதுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டோர்க்கு நீதி இல்லை. தமிழர் தேச தேசியத்தின் உயிர்த் துடிப்போடு இயங்கியவர்கள் அரசியல் கைதிகளாகி விடுதலை இன்றி வாடுகின்றனர்.

இவற்றுக்கெல்லாம் அடிப்படை காரணர்களில் ஒருவரான தற்போதைய ஜனாதிபதி தேசிய தைப்பொங்கல் என தமிழர்கள் மத்தியில் வந்து உழைப்பின் விழாவை பாரம்பரிய தேசிய நிகழ்வை அசிங்கப்படுத்துவதற்கு இடமளிக்கக் கூடாது.

அத்தோடு தேசிய தைப்பொங்கல் என தமிழர்களை கூட்டுச் சேர்க்கும் செயற்பாட்டிலும் பல அரசியல் கைக்கூலிகள் நம்மத்தியிலே தோன்றி இயங்கத் தொடங்கியுள்ளனர்.

இது இவர்களின் அரசியலாகும் இவர்கள் காலாகாலமாக எமக்கு எதிராகவே செயல்பட்டு வந்துள்ளனர். இத்தகைய புல்லுருவிகளை அகற்றி தமிழர் தாயக அரசியலை காப்பதற்கு உறுதி கொண்டு நிலம் காக்கும் பொங்கல் எம் மண்ணிலே பொங்க சக்தி கொள்வோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஸ்பிரே !

அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயர்கள், மெல்லிய நூல் போன்ற மூலக்கூறு இழைகளை கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக, கொரோனாவை உண்டாக்கும் வைரஸ், நாம் சுவாசிக்கும்போது நுரையீரல் வழியாக உடலுக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்குகிறது.

 

இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மூலக்கூறுகள், சுவாசப்பாதையிலேயே வைரசை தடுத்து விடும். அதன்மூலம், அது நுரையீரலை அடைவது தடுக்கப்பட்டு, கொரோனா ஏற்படாமல் தடுக்கலாம். இவர்கள் கண்டுபிடித்த மூலக்கூறுகள், பஞ்சு போல் செயல்பட்டு, கொரோனா வைரசையும், இதர வைரஸ்களையும் உறிஞ்சி விடும். அதனால், அந்த வைரஸ்கள், மேற்கொண்டு உடலுக்குள் பயணிப்பது தடுக்கப்படும்.

 

இந்த மூலக்கூறுகளை மூக்கு வழியாக ‘ஸ்பிரே’ போல் பயன்படுத்தலாம். வாய் வழியாகவும் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

 

இதை சுண்டெலியிடம் பயன்படுத்தியபோது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. மூலக்கூறு இழைகள், சுண்டெலியின் நுரையீரலில் 24 மணி நேரம்வரை இருந்தபோதிலும், நுரையீரலில் எரிச்சலோ, பாதிப்போ ஏற்படவில்லை.

ஒரு லட்சமாக குறைக்கப்படும் இலங்கை இராணுவ பலம் !

தற்போது இலங்கை இராணுவத்தில் உள்ள 200,783 வீரர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டளவில் 135,000 ஆக குறைக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு வெள்ளிக்கிழமை (13) தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோனை மேற்கோள்காட்டி, பாதுகாப்பு அமைச்சு இதை தெரிவித்துள்ளது.

மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டில் இராணுவ பலம் 100,000 ஆக இருக்கும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரிய தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பிறந்து 11 மாதங்களேயான பெண்குழந்தை – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணத்தில் பிறந்து 11 மாதங்களேயான பெண் குழந்தையை தாயின் சகோதரியின் கணவன் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.

கோப்பாய் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியில் வீக்கம் காணப்பட்டமையால் , குழந்தையின் தாய் குழந்தையை வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று அனுமதித்துள்ளார்.

வைத்திய பரிசோதனையின் போது , குழந்தை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குழந்தையின் தாயின் சகோதரியின் கணவனே குழந்தையை வன்புணர்விற்கு உள்ளாக்கினார் என கண்டறியப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மக்களின் நலனுக்காக தமிழ்தேசிய கட்சிகள் கூட்டணி அமைக்கவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டணிகள் மக்களின் நலன்சார்ந்தவை அல்ல என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டபோது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மத்தியில் புதிதாக உருவாக்கப்படும் கூட்டணிகள் மக்களின் நலன்சார்ந்தவை அல்ல. வாக்குகளை எவ்வாறு அபகரிப்பது என்பதே அவர்களின் நோக்கமாகும். அங்கு மக்கள் நலன் பின்தள்ளப்படுகிறது.

அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாடுகளையே தமிழ்க் கட்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளகின்றன” – என்றார்.

மனிதக்கடத்தலை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சி தொடர்பில் இலங்கை – அமெரிக்கா இடையே கலந்துரையாடல்!

இலங்கையும் அமெரிக்காவும் மனித கடத்தலை முடிவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு இடையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்றது.

சமீபத்தில் ஓமனுக்கு கடத்தப்பட்ட பெண்களை மீட்பது உட்பட, மனித கடத்தலை நிறுத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை ஊக்குவிக்கும் மற்றும் உலகளாவிய அரங்கில் இலங்கையின் ஒட்டுமொத்த போட்டித்தன்மையை மேம்படுத்தும் தற்போதைய தொழிலாளர் சீர்திருத்த முயற்சிகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இலங்கையை வந்தடைந்தது சீனாவின் 4.24 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாடசாலை சீருடைகள் !

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பாடசாலை சீருடைகள் நாட்டை வந்தடைந்துள்ளது.

4.24 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பாடசாலை சீருடைகள் 20 40 அடி கொள்கலன்கள் நாட்டை வந்தடைந்ததாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவினால் வழங்கப்பட்ட இச்சீருடைத் தொகுதி இன்று கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான மாணவர்களின் தேவையில் 70% உள்ளடக்கத்தை முதல் தொகுதி உள்ளடக்கியதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வீதி நாடகம்!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் இணைந்து குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இணைந்து வீதி நாடகமொன்றினை யாழ். பல்கலைக்கழகத்தினுள் முன்னெடுத்தனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடக வளாகத்திற்கு முன்பாக நேற்றைய தினம் (வெள்ளிக்கிழமை) குறித்த வீதி விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், இந்த முறை தைப்பொங்கலிற்கு எமது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என நம்பிய பொழுதும் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம்.

இதனை மையப்படுத்தியே இவ்வாறு சிறைக்கூண்டு அமைக்கப்பட்டு சிறையிலுள்ள கைதிகளை போல உருவகித்து பொங்கல் பொருட்கள் வீடுகளில் தயார் நிலையில் உள்ள போதும் இம்முறையும் எமது உறவுகள் இன்றி பொங்கலை பொங்கமுடியாத சூழலை வெளிப்படுத்துமுகமாக இதனை நாம் நாடகமாக நிகழ்த்திகாட்டியிருந்தோம்.

மேலும் அரசியல் கைதிகள் விடுதலையின்றி வாழும் சூழலில் இங்கு நடைபெற இருக்கின்ற தேசிய பொங்கல் விழாவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தரும் பொழுது எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் பிரிதிநிதிகள் குறித்த நிகழ்வை முற்றாக நிராகரிக்கவேண்டும்.

இதே நேரம் எங்களுடை எஞ்சிய சிறைகைதிகளும் விடுதலை செய்யபடவேண்டும் என வலியுறுத்தினார்.

“முறையற்ற கொள்கைகளை வகுத்து வடக்கு – கிழக்கை நாசமாக்கியவர்கள் யாழ்ப்பாண மேட்டுக்குடியினர்.” – அமைச்சர் பிள்ளையான்

மரணம் வரையிலும் சம்பந்தன் ஐயா போன்றவர்கள் இலங்கையின் அரசியலை ஊகித்துக்கொள்ளவில்லையென்பது மிகவும் கவலையான விடயம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தினை நேற்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மேற்கொண்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இந்த கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி தவிர்ந்த உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடவுள்ளதாக இதன்போது இராஜாங்க சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”பிராந்திய மட்டத்தில் அரசியல் கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவேண்டும். அந்த அடிப்படையில் கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிதைவும் கிழக்கு சார்ந்த ஒரு கூட்டமைப்புக்கான சாத்தியத்தினை அதிகரித்துள்ளது.

அந்தடிப்படையில் கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்திய அனைவரையும் போராட்ட அமைப்புகளிலிருந்து வெளியேறியவர்கள்,  போராட்டத்தின் வலிதெரிந்த அமைப்புகளோடும் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்றோம்.

இருந்தபோதிலும் அவர்கள் இன்னமும் போலித்தேசியவாதிகளை நம்பியிருக்கின்றார்கள். அது தோல்வியில்முடியும் என நம்புகின்றேன். இருந்தபோதிலும் கிழக்கு மாகாணத்தில் ஒரு கூட்டமைப்பினை உருவாக்குவதற்கு நாங்கள் கலந்து பேசிவருகின்றோம்.

இந்த நாட்டின் அரசியலில் இவ்வளவு காலமும் சீரழிந்து சின்னாபின்னமாகி பொருளாதார இழப்புகளுக்கு காரணமாகயிருந்தவர்கள் கொள்கையினை வகுத்தவர்கள், தாங்கள் மட்டும் என்ற எண்ணக்கருக்களை உருவாக்கிய யாழ்ப்பாணத்தில் பிறந்த சிலர் தாங்கள் மாத்திரந்தான் என்ற எண்ணக்கருவினைக் கொண்டவர்களைத்தான் மேட்டுக்குடிகள் என்று சொல்கின்றோமேயொழிய வடபகுதியிலிருக்கும் எல்லோரையும்சொல்லவில்லை.

அவர்கள் இப்போதும் தங்களது ஆதிக்கத்தினை நிலைநாட்டுவதற்கு பலமாக போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதன் தீர்மானத்தின் ஒரு பகுதியே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைந்துள்ளதாகும். அந்த மேட்டுக்குடியின் சித்தாந்ததின் எடுக்கப்பட்ட முடிவுகளே இதற்கு காரணம்.

சுமந்திரனை நாங்கள் சட்டத்தரணியென்றே நினைத்தோம்.  ஆனால் கணக்கு வாத்தியார் போல கணக்கு படிப்பிக்கின்றார் தொழில்நுட்பம் தொடர்பாக  அவருக்குத்தான் அந்த கணக்கு தெரியும். எனக்கு தெரியாது.

இன்று வடகிழக்கு இணைப்பு மாகாணசபை தொடர்பில் பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அன்றைய நிலைப்பாட்டை யாரும் மறந்துவிடக்கூடாது. 2008ஆம்ஆண்டு நாங்கள் தேர்தலில் போட்டியிடமாட்டோம் கொள்கை ரீதியான முரண்பாடு என பல விமர்சனங்களை செய்தார்கள்.

2008ஆம் ஆண்டு நான் முதலமைச்சராக வந்தபோது என்னை வரவிடாமல்செய்வதற்கு முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு வழங்கினார்கள். இரண்டாவது முறை தவறவிட்டு அடுத்ததடவை முதலைமைச்சர் பதவியை தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுக்கவேண்டும் என்று சம்பந்தர் ஐயாவிடம் சென்று கதைத்தோம்.

கிழக்கில் போராடியவர்கள் பல இழப்புகளை சந்தித்தவர்கள் என்ற அடிப்படையில் கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர் முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக எனது முழு ஆதரவினையும் தருகின்றேன் என சம்பந்தர் ஐயாவிடம் கூறியபோது அதனை உதாசீனம் செய்தார்.

அதனால் அமைச்சர் ஹாபீஸ் சொல்வது உண்மையில்லை. நாங்கள் சாதகமான விடயங்களை ஊகித்துக்கொள்கின்றோம். சம்பந்தன் ஐயா போன்ற தலைவர்கள் மரணம் வரையிலும் இலங்கையின் அரசியலை ஊகித்துக்கொள்ளவில்லையென்ற என்ற கவலை எனக்கு இன்னும் இருக்கின்றது.” என தெரிவித்தார்.