வெளிநாட்டில் வேலைக்குச் செல்வதற்கான பணம் மற்றும் கடவுச்சீட்டை முகவர் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது .இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவிப்பு ஒன்றை விடுத்து இதனைக் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் 24 மணித்தியால தகவல் நிலையத்தைத் தொடர்புகொள்ளலாம் அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று சம்பந்தப்பட்ட முகவர் நிலையத்தின் சட்டபூர்வமான தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவ ரிடமிருந்து 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டு உறுதியளித்தபடி வேலை வழங்கவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த நிறுவனம் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
பின்னர், வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் மற்றும் முகாமையாளர் விசேட புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததையடுத்து, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில்இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதேவேளை, குவைத் பண்ணை ஒன்றில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை இளைஞர்கள் 06 பேர் இன்று (09) அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவர்கள் திருகோணமலை மற்றும் கிண்ணியா பிரதேசங்களில் வசிப்பவர்கள் எனவும், குறித்த நபர்கள் கிண்ணியாவில் உள்ள சட்டவிரோத தரகர் ஊடாக குவைத் தொழிலுக்காக சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.