21

21

ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் கும்பலை இயக்கியதற்காக 14 இலங்கைப் பிரஜைகளுக்கு பிரான்சில் சிறை !

ஐரோப்பா முழுவதும் ஆட்கடத்தல் கும்பலை இயக்கியதற்காக 14 இலங்கைப் பிரஜைகளுக்கு வடக்கு பிரான்ஸில் உள்ள நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இது இலாபகரமான குற்றவியல் வலைப்பின்னல்களை ஒடுக்குவதற்கான கண்டம் தழுவிய முயற்சியின் ஒரு பகுதியாகும் என விபரிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் பரிஸுக்கு வடக்கே 80 கிமீ தொலைவில் உள்ள செரிஃபோன்டைன் கிராமத்தில் உள்ள மளிகைக் கடையில் இருந்து இந்த நடவடிக்கையை மேற்பார்வையிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட முக்கிய சந்தேக நபருக்கு நான்கு ஆண்டுகள் சிறையும், ஓராண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து உக்ரைனில் இருந்து கண்டம் முழுவதும் இலங்கை மற்றும் பங்களாதேஷில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை நகர்த்துவதற்கான விலைகளையும் வழிகளையும் அவர் நிர்ணயித்ததாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மற்றொரு சந்தேக நபருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, மற்றவர்களுக்கு குறுகிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

பிரான்ஸில் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை கொவிட்-க்கு முந்தைய பதிவுக்கு அருகில் உள்ளது.

ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவை அடையலாம் என்ற நம்பிக்கையில், சமீப ஆண்டுகளில் ஐரோப்பாவை நோக்கி குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடத்தல் கும்பல்கள் செழித்து வளர்ந்துள்ளன.

45,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் 2022ஆம் ஆண்டில் ஐரோப்பாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து பிரித்தானியாவுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர், இது முந்தைய ஆண்டின் சாதனையை 17,000க்கும் அதிகமாக முந்தியது என அரசாங்க புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

நானுஓயா விபத்து – சாரதி கைது !

நானுஓயா– ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் 3 சிறார்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தநிலையில் வேகமாக சென்று வேன் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதிய பேருந்தினை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

62 வயதான குறித்த சாரதி, விபத்து இடம்பெறுவதற்கு முன்னரும் பல பிரதேசங்களில் அதிவேகமாக பயணித்தமையை பொதுமக்கள் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிக்கு 18 வருடங்களின் பின் மரணதண்டனை !

அஹுங்கல்ல, வெல்லபட பிரதேசத்தில் 2004ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் திகதி துப்பாக்கியால் சுட்டு நபர் ஒருவரைக் கொலைசெய்த சம்பவம் தொடர்பில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வழக்கு நேற்று(19) பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவர் 29 நவம்பர் 2021 அன்று உயிரிழந்த நிலையில், மற்றைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்குள் சட்டவிரோத குடியேற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானம் !

ஐக்கிய அரபு அமீரகம் தமது நாட்டிற்குள் சட்டவிரோத குடியேற்றத்தை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கான அமைச்சரின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவள அமைச்சர் அப்துல்ரஹ்மான் அப்துல்மன்னன் அல் அவார், அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு ஊழியர்களை நாட்டிற்குள் கொண்டுவருபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

தனிநபர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களின் பல்வேறு மோசடிகளின் விளைவாக விசிட் விசாவில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வேலை தேடி வரும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து அமைச்சர் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரிடம் விளக்கினார்.

விசிட் விசா மூலம் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை நாடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையைச் சேர்ந்த திறமையான தொழிலாளர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிக வேலை வாய்ப்புகளை வழங்குமாறு அமைச்சர் விடுத்த கோரிக்கைக்கு ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் சாதகமாக பதிலளித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே 2021 இல் அமைக்கப்பட்ட கூட்டு தொழில்நுட்பக் குழு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விசிட் விசா மூலம் மனித கடத்தலை எவ்வாறு தடுப்பது என்பது குறித்த தொழில்நுட்ப விவரங்களை தொடர்ந்து கலந்துரையாடுகிறது.

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் தகுதிகளை அங்கீகரிக்கும் வகையில் இரு நாடுகளின் தகுதிக் கட்டமைப்பை வரைபடமாக்குவதன் மூலம் ஒரு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கடந்தாண்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக 35,572 இலங்கை பணியாளர்கள் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர், இது இலங்கையில் இருந்து வெளியேறிய மொத்த பயணங்களில் 11.4% ஆகும். இது 2021 உடன் ஒப்பிடும்போது 2022 இல் 27 சதவீதம் அதிகமாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் – அபராதம் விதித்த பொலிஸ் !

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசினார். அப்போது அவர் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

நாட்டின் பிரதமரே காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரஷி சுனக் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக ரிஷி சுனக்குக்கு பொலீசார் அபராதம் விதித்துள்ளனர். அவருக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“யாழ்.மாநகர சபையின் முதல்வராக ஆனோல்ட் தெரிவு செய்யப்பட்டமை சட்டவிரோதமானது.”- இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு செல்லவுள்ளதாக மணி அறிவிவப்பு !

யாழ்.மாநகர சபையின் முதல்வர் தெரிவு சட்டவிரோதமாக இடம்பெற்றிருப்பதால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உட்பட அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாநகர சபைக்கு முதல்வர் தெரிவாகியுள்ளதாக ஊடகங்களிலும் வர்த்தமானி பிரசுரத்திலும் யாழ்.மாநகர சபையின் முதல்வராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர சபையின் முதல்வர் தொடர்பில் ஆரம்பம் தொட்டு சட்டவிரோதமாக செயற்பட்ட விடயமாகவே கருதுகின்றேன். இது திட்டமிட்ட நோக்கத்துடன் தங்களது தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஒருவரை நியமிக்கவேண்டும்  என்கின்ற தேவைப்பாட்டின் அடிப்படையில் மாநகர முதல்வர் தெரிவு இடம்பெற்றிருக்கின்றது என்பதை நான் நம்புகின்றேன்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டத்தில் சட்ட விதிமுறைகளை மீறி சட்டவிரேதமாக அறிவிப்பு வெளியாகியது பின்னர் ஒரு தேர்தல் நடைபெற்றது. உள்ளூராட்சி மன்றத்தின் சுற்று நிரூபம் ஒன்றில் இரண்டு முறைகள் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து வெல்லமுடியாது. பதவி இழந்த ஒருவர் மீண்டும் பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று சுற்று நிரூபம் இருக்கின்றது. அந்த சுற்று நிரூபத்தை மீறி யாழ் மாநகர சபையின் முதல்வராக இம்மானுவேல் ஆனோல்ட்டின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பின்னர் உறுப்பினர்கள் வெளியேறிய பின்னர் நிறைவெண் காணாது என உள்ளூராட்சி ஆணையாளர் கூட்டத்தை ஒத்திவைத்து வெளியேறிய பின்னர் இப்பொழுது மோசடியாக சட்டவிரோதமாக ஒருவர் யாழ்.மாநகர சபையின் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இதிலே பெருமளவு இலஞ்ச ஊழல் இடம்பெற்றிருக்கின்றதோ..? என எண்ணத்தோன்றுகின்றது.

எனவே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்வதில் இருந்து அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளையும் – இந்த சட்டவிரோத செயற்பாடுகள் நடக்கலாம் என்றால் யாழ்ப்பாணத்திலே சட்டங்கள் தேவையில்லை. சட்டப்புத்தகங்களை குப்பையிலே எறிந்து விட்டு இந்த முதல்வர் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றது. ஆகவே இலஞ்ச ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்வதிலிருந்து தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராகி வருகின்றோம்.

கடந்த சில வாரங்களாக உள்ளூராட்சி மன்ற வேட்பு மனு தயாரிக்கும் வேலைப்பளுவினால் இயங்கிக் கொண்டிருந்தமையினால், சில வழக்குகளை தாக்கல் செய்யமுடியாத நிலை இருந்தது. தற்போது இந்த வேலைப்பளுக்கள் குறைவடைந்துள்ளது உடனடியாக நீதி மன்றத்தை நாடி சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றார்.

யானை சின்னத்தில் களமிறங்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் !

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறு சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், 6 சபைகளுக்கு கூட்டணியாக யானை சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது.

இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச் யானை சின்னத்திலும்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ் இன்று (21) தாக்கல் செய்யப்பட்டன.

இதன்படி நுவரெலியா, அக்கரப்பத்தனை, கொட்டகலை, மஸ்கெலியா, நோர்வூட் ஆகிய பிரதேச சபைகளுக்கும், தலவாக்கலை – லிந்துலை நகர சபைக்கும் சேவல் சின்னத்தில் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.

அத்துடன், நுவரெலியா மாநகர சபை, ஹட்டன் – டிக்கோயா நகரசபை, அம்பகமுவ பிரதேச சபை, வலப்பனை பிரதேச சபை மற்றும் கொத்மலை பிரதேச சபை, ஹங்குராங்கெத்த பிரதேச சபை ஆகியவற்றுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இலங்கை பிரதிநிதிகள் இருவரை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதிகள் இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மிலிந்த ஹெட்டியாராய்ச்சி மற்றும் இந்திரஜித் ஹெட்டியாராய்ச்சி ஆகிய இருவருக்கு எதிராகவே இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்பை மாசுபடுத்தியமை உள்ளிட்ட 08 குற்றச்சாட்டுகளின் கீழ், கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்தின் உள்ளூர் முகவர் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்ட பிரதிவாதிகள் 08 பேருக்கு எதிராக கடல்சார் சூழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்தநிலையில், இவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கடந்த வருடத்தின் மத்திய பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்களுடன் சரக்குகளை ஏற்றிச்சென்ற போது தீப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

அரச வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ..?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 19 அரச வாகனங்களை தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்துவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.

இந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தனிப்பட்ட பாவனைக்காக அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது தனிப்பட்ட வாகனத்தை மாத்திரமே பயணத்திற்கு பயன்படுத்துவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.