30

30

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தலிபான் அமைப்பு தற்கொலை தாக்குதல் – 46 பேர் பலி !

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பலத்த பாதுகாப்பு மிக்க பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

பிற்பகல் தொழுகையின்போது தற்கொலைப்படை தீவிரவாதி இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளான். இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். மசூதியின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக 17 பேர் உயிரிழந்த நிலையில், நேரம் செல்லச் செல்ல உயிரிழப்பு அதிகரித்தது. இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அந்த அமைப்பின் முக்கிய கமாண்டர் உமர் காலித் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவனது சகோதரன் கூறியிருக்கிறான்.

50,000 ஆண்டுகளுக்கு முன்பு நியண்டதால் மனிதர்கள் கண்ட பச்சை வால் நட்சத்திரம் மீண்டும் காணும் வாய்ப்பு 2023ல் – எப்போது வானில் தென்படும்..?

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அரிய பச்சை வால் நட்சத்திரம் நாளை மறுதினம் (01) பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது.

C2022E3, அல்லது ZTF என்ற இந்த வால் நட்சத்திரம் இறுதியாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நியண்டதால் மனிதனின் இறுதி காலத்தில் அவதானிக்கப்பட்டது.

இந்த பிரகாசமான பச்சை நிற வால் நட்சத்திரம் நாளைமறுதினம் மற்றும் பெப்ரவரி 2 ஆம் திகதி பூமியில் இருந்து 45 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் என்றும், தென் திசையாக தொலைநோக்கியின் உதவியுடன் இதை பார்க்க முடியும் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வால் நட்சத்திரம் தற்போது நமது சூரிய மண்டலத்தின் வழியாக வேகமாக நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் 50,000 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தோன்றாது என்று பிரிட்டனின் கிரீன்விச் ரோயல் ஒப்சர்வேட்டரியின் வானியலாளர் கலாநிதி கிரெக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கலிபோர்னியாவின் செண்டியோனில் உள்ள ஆய்வகத்தில் வைட் ஃபீல்ட் சர்வே கெமராக்களைப் பயன்படுத்தி இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது.

பெருவில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் – 60 பேர் வரை பலி !

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது.

2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 ஜனாதிபதிகளைக் கண்டது. இந்தநிலையில் பெரு ஜனாதிபதி டீனா பொலுவார்டே பதவி விலகக் கோரி தலைநகர் லிமாவில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி காஸ்டில்லோ பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதே போராட்டங்கள் துவங்கின.

போலீசாரின் அடக்குமுறையால் ஏராளமான போராட்டக்காரர்களால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், போலீசார் நடத்திய தாக்குதலில் லிமாவில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவரும் அடங்குவார். லிமாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டக்காரர்கள், போலீசார் இடையே பெரும் மோதல் வெடித்தது. காவல் துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.