13

13

மான் சின்னத்தில் இணையும் விக்கி – மணி கூட்டணி !

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் யாழ்.மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் அணியினர் இணைந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.

மான் சின்னத்தில் போட்டியிடுவதற்கு இரு தரப்பும் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.

தமிழ் தேசிய கட்சிகளின் கூட்டணியின் கலந்துரையாடலில் இருந்து சி.வி விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மாளிகைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணம் – கோட்டாபாயவிடம் விசாரணை!

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து கண்டுபிடிக்கப்பட்ட 17.5 மில்லியன் ரூபா பணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு,இன்று பொலிஸ் விசேட குற்றப் பிரிவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெற்றுக்கொண்ட 200 மில்லியன் டொலர் – இலங்கைக்கு 6 மாத அவகாசத்தை வழங்கிய பங்களாதேஷ்!

இலங்கையின் கோரிக்கைக்கு இணங்க பங்களாதேஷ் அரசாங்கம் கடனை செலுத்துவதற்கு மேலும் 6 மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் பங்களாதேஷ் அரசிடமிருந்து இலங்கை கடந்த மே மாதம் 2021 இல்  200 மில்லியன் டொலரை கடனாக பெற்றது.

அந்நியச் செலாவணி ஒப்பந்தத்தின் கீழ் பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த நேரத்தில் வழங்க முடியாத நிலையில் இலங்கையின் கோரிக்கைக்கு அமைவாக  இரண்டு தடவைகள் காலத்தை நீடிக்க ஏற்கனவே பங்களாதேஷ் இணக்கம் தெரிவித்திருந்தது.

அந்த வகையில் குறித்த கடனை செலுத்தும் காலம் நெருங்கி வந்த நிலையில் இலங்கையில் நிலவும் நீண்டகால பொருளாதார நெருக்கடி காரணமாக, இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு பங்களாதேஷிடம் இலங்கை மீண்டும் கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கிணங்க மேலும் ஆறுமாத கால அவகாசத்தை வழங்கியுள்ளது பங்காதேஷ்.

கால அவகாசத்தின்படி, இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை கடனை திருப்பிச் செலுத்த வேண்டும்.

மனிதாபிமானமற்ற நரபலி சடங்கில் 9 வயது சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு கொலை !

மனிதாபிமானமற்ற நரபலி சடங்கில் 9 வயது சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குஜராத் மாநிலம் வல்சாத் வாபி நகருக்கு அருகில் உள்ள கால்வாயில் சிறுவன் ஒருவனின் சிதைந்த உடல் பயங்கரமான முறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட சிறுவன் சைலி என்ற கிராமத்தை சேர்ந்தவர் என்றும், டிசம்பர் 29ம் திகதி சிறுவன் காணாமல் போனதை தொடர்ந்து, டிசம்பர் 30 ஆம் திகதி சில்வாஸ்ஸா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் செல்வந்தர் ஆவதற்காக கொடூரமான நபர்களால் நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற நரபலி சடங்கில் சிறுவன் பலி கொடுக்கப்பட்டு இருப்பதாக காவல்துறை தகவல்கள் மூலம் கூறப்படுகிறது.

இந்த கொடூரமான சம்பவத்தில் கொல்லப்பட்ட சிறுவன் வார்லி சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி சிறுவன் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணைகளில் சிறுவனின் தலை துண்டிக்கப்பட்டு, வீசப்படுவதற்கு முன்பு அவரது எச்சங்கள் சிதைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைதுசெய்திருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

காவல்துறை விசாரணையில் குற்றவாளிகளில் ஒருவர் டிசம்பர் 29, 2022 அன்று, சைலி கிராமத்தில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுவனை கடத்தி சென்று தனது நண்பரின் உதவியுடன் நரபலியாகக் கொன்றதை தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் நரபலிக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் ஆயுதங்களுடன் எச்சங்கள் ஆகியவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சேது சமுத்திரத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் – தமிழக சட்டசபையில் விசேட தீர்மானம் நிறைவேற்றம் !

சேது சமுத்திரத் திட்டத்தை இந்திய மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் சட்டசபையில் நேற்று முன்தினம் விசேட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார்.

சேதுசமுத்திரத் திட்டம் 1860 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு கப்பல் கால்வாயை உருவாக்குவதற்காக முதன் முதலில் வரையப்பட்டது

இந்த திட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்குநீரிணையை இணைக்கும் கால்வாயை தோண்டுவதுடன் தொடர்புடையது.
சேது சமுத்திரத் திட்டம் செயற்படுத்தப்பட்டால், தமிழகத்தின் பொருளாதாரம் மேம்படும் என இந்த தீர்மானத்தை வாசிக்கும் போது தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தென்மாநிலங்களில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டமானது 150 வருட கால கனவாகும்.
1860 ஆம் ஆண்டு கொமாண்டர் டெய்லரால் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.

1955 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் உள்ள ஏ.ராமசாமி இந்த திட்டத்தை அமுல்படுத்தவதற்கான பிரயத்தனங்களை முன்னெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து 1963 ஆம் மற்றும் 1964 ஆம் ஆண்டுகளில் மத்திய அமைச்சரவையில் அதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதனை செயல்படுத்த தமது அரசாங்கம் அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கும் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேர்தல் செலவுகளை இயலுமான அளவு குறைத்தாவது தேர்தலை நடத்த வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய

செலவுகளை இயலுமான அளவு குறைத்தாவது உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டத்திற்கு அமைய நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கும், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு.

ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுவது குற்றமாகும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் ஏற்றல் பணிகளில் இருந்து விலகுமாறு அறிவித்து வெளியிடப்பட்ட சுற்றறிக்கை சட்டவிரோதமானது என்பதால் அந்த சுற்றறிக்கை மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

நியமிக்கப்பட்டுள்ள தெரிவத்தாட்சி அலுவலர்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கு அமைய செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு இவ்வாறான சம்பவம் இடம்பெற்றது. கட்டுப்பணம் செலுத்தலில் இருந்து விலகுமாறு தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு குறுந்தகவல் செய்தி ஊடாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஆணைக்குழு அதற்கு இடமளிக்கவில்லை. தெரிவத்தாட்சி அலுவலர்கள் முறையாக செயற்பட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஆளும் தரப்பினர் 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தேர்தலுக்காக குரல் கொடுத்தார்கள்.

தேர்தலை பிற்போட தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பிற்போடப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டி நீதிமன்ற நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார்கள், ஆகவே அவர்கள் தற்போது தேர்தலை பிற்போட முயற்சிப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு அல்லது நாடாளுமன்ற தீர்மானத்திற்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடலாம்.

தேர்தலை நடத்த நிதி இல்லை என குறிப்பிடப்படுகிறது. குறைந்த செலவில் தேர்தலை நடத்த ஆணைக்குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

தேர்தல் செலவுகளை இயலுமான அளவு குறைத்தாவது தேர்தலை நடத்த வேண்டும் எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கொள்வனவுக்காக பணம் செலுத்தாத இரு இளைஞர்கள் கொலை – பொலிசார் விசாரணை!

போதைப்பொருளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் இரு இளைஞர்கள் அதற்கான பணத்தைக் கொடுக்காமையால் அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ரம்புக்கனை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கொல்லப்பட்டதாக கூறப்படும் இரு இளைஞர்களும் கொலை செய்யப்பட்டு சம்பவம் இடம்பெற்ற தோட்டத்திலேயே புதைக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

“நாங்கள் அனைவரும் பிரிந்தே பலமாக ஒன்றிணையத்தான்.” – மாவை.சேனாதிராஜா விளக்கம்!

“வாக்குகளை அதிகமாக பெறுவதற்காகவே நாங்கள் பிரிந்து தேர்தலை எதிர்கொள்கின்றேம், எங்களுடைய திட்டம் அணைவரும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சியாக இருக்கின்றது.” என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சியின் மன்னார் கிளையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எங்களின் நிலைப்பாடு, மக்களின் பொறுப்பு தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். இத்தேர்தல் பல அரசியல் அமைப்பு திருத்தங்களோடும் தேர்தல் திருத்தங்களோடு இடம் பெற வேண்டும்.

இத்தேர்தல் ஏற்கனவே உள்ள நடைமுறையோடு, மக்கள் மத்தியில் பல குறைபாடுகள், ஆட்சி நடத்த முடியாத நிலை,வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற முடியாத அளவிற்கு ஆளும் தரப்பு,எதிர் தரப்பு என்ற வகையில்,ஆளும் தரப்பில் வெற்றி பெற்றிருந்தது பதவியை பெற்றிருந்தாலும் எதிர் தரப்பில் இருக்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் இந்த ஆட்சியை நடாத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது.

 

இதில் இன்னும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என அரசாங்கம் கூறிய போதும் அதற்கான திருத்தங்கள் இன்னும் கொண்டு வரவில்லை.

தமிழரசுக்கட்சியை பொறுத்தவரையில் செயற்குழுவில் பல வகையான கேள்விகள் எழுப்பப்பட்டு, சாதக பாதகங்கள் விவாதிக்கப்பட்டு இறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு முன்னால் அந்த செயற் குழுவில் வரைந்த மாதிரி ஒரு சிபாரிசை நாங்கள் வரைந்து இருக்கின்றோம்.

ஏற்கனவே பெற்ற பெறுமானங்களின் அடிப்படையில் அதை வைத்து ஆட்சியை நடத்த முடியாத அடிப்படையில் தேசிய கூட்டமைப்பு பல வெற்றிகளை பெற்றிருந்த போதும் அந்த அனுபவங்களை பெற்றிருந்த போதிலும் இப்பொழுது தமிழரசுக்கட்சியின் சிபாரிசு ஒரு புதிய நடைமுறை வெற்றியை பெற்றுக்கொள்வதற்கான, கூடிய ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நடைமுறை பற்றி பிரேரிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி நாங்கள் தமிழரசுக் கட்சிக்கு வெளியில் நிற்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற புளொட்,ரெலோ கட்சிகளுடன் தமிழரசுக்கட்சியின் சிபாரிசுக்கு பின்னர் நாங்கள் விவாதித்து இருக்கின்றோம்.

 

வாக்குகளை அதிகமாக பெறுவதற்காகவே நாங்கள் பிரிந்து தேர்தலை எதிர்கொள்கின்றேம், எங்களுடைய திட்டம் அணைவரும் இணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சியாக இருக்கின்றது” என அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் !

யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் இன்றய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி விளையாட்டு மற்றும் பொருளாதாரத்தில் ஈடுபடுத்தி ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்துவைத்து சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மைதானத்திற்காக ஏற்கனவே 50 ஏக்கர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் 100 ஏக்கர் வரை தேவைப்படுவதாகவும் அதனை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜிம்னாஸ்ட்டிக் ஸ்ரேடியம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மேலும் மாவடங்கள் தோறும் விளையாட்டு மையங்களை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹண திசாநாயக்க வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல சேன, யாழ்.மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் யாழ்.மாவட்ட பிரதம திட்டமிடல் பணிப்பாளர் நிக்களஸ்பிள்ளை மற்றும் வடமாகாண விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரம் சார்ந்த அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.