07

07

போர் எப்போது முடியும்..? – உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு !

ரஷ்யா மற்றும் உக்ரைனில் வாழும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று (சனிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இதையொட்டி உக்ரைனில் போர் நிறுத்தத்தை அறிவிக்க ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று, வெள்ளிக்கிழமை நண்பகல் தொடங்கி சனிக்கிழமை நள்ளிரவு வரை 36 மணி நேரத்துக்கு தாக்குதல்களை நிறுத்தும்படி ரஷ்ய படைகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ரஷ்ய படைகளின் தற்காப்பு நடவடிக்கைகளுக்கு போர்நிறுத்தம் பொருந்துமா, உக்ரைன் தொடர்ந்து சண்டையிட்டால் ரஷ்யா திருப்பித் தாக்குமா என்பது அந்த உத்தரவில் தெளிவுப்படுத்தவில்லை. இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது என தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி ; இது உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கும் ஒரு தந்திரம் எனவும் குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “உக்ரைனின் அமைதி திட்டத்தை ரஷ்யா பலமுறை புறக்கணித்துள்ளது. அவர்கள் இப்போது கிறிஸ்துமசை ஒரு மறைப்பாகப் பயன்படுத்த விரும்புகிறார்கள். ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாசில் உக்ரைன் படைகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், ராணுவ தளவாடங்களை எங்கள் துருப்புகளுக்கு நெருக்கமாக கொண்டு வருவதற்கும் ரஷியாவின் தந்திரம் இது. புதிய பலத்துடன் போரைத் தொடர ரஷ்யா எவ்வாறு போரில் குறுக்கீடுகளைப் பயன்படுத்துகிறது என்பது முழு உலகமும் அறிந்ததே. ரஷ்யா துருப்புக்கள் உக்ரைனை விட்டு வெளியேறும்போது அல்லது வெளியேற்றப்படும்போது போர் முடிவடையும்” என்றார்.

 

ஆசிரியருடன் வாக்குவாதம் – ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 6வயது சிறுவன் !

அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள ரிச்நெக் தொடக்கப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டிருந்தார்.

அப்போது 6 வயது மாணவன் ஒருவன் திடீரென்று துப்பாக்கியால் ஆசிரியையை நோக்கி சுட்டான். இதில் ஆசிரியை ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனால் வகுப்பறையில் இருந்த மாணவர்கள் அலறியடித்து ஓடினார்கள்.

உடனே துப்பாக்கியால் சுட்ட மாணவனை மற்ற ஆசிரியர்கள் மடக்கி பிடித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்த ஆசிரியையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தற்செயலாக நடக்கவில்லை. மாணவனுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது.

 

துப்பாக்கி சூட்டில் மாணவர்கள் யாரும் காயம் அடையவில்லை. இப்பள்ளியில் 550 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களை சோதனை செய்யும் கருவி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து மாணவர்களும் சோதனை செய்யப்படாமல் சிலர் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார். விசாரணையில் வகுப்பறையில் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்து மாணவன் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது.

போலீஸ் காவலில் உள்ள மாணவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது.