கடந்த 08.01. 2023 அன்று இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமத்தை ஆரம்பிப்பது தொடர்பான அங்குரார்பண ஆலோசனைக் கூட்டம் இணுவில் மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இலங்கைக்கான கல்வி மேம்பாட்டு மன்றம் (பிரித்தானியா ) ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் வடக்கின் முக்கியமான கல்வித்துறை மற்றும் நிர்வாகத் துறையில் செயல்பட்டுக் கொண்டிருப்போர் – ஓய்வு பெற்றோர் – அரச சார்பற்ற நிறுவன அங்கத்தினர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வுக்கான ஆசியுரையை வழங்கிய சிவபூமி அறக்கட்டளை தலைவர் ஆறுதிருமுகன் பேசிய போது “வடக்கின் கல்வி நிலை இன்று தனியார் டியூசன் சென்டர்களை மையப்படுத்தி நகர்வதாகவும் – மாணவர்களுக்கு ஆன்மீக கல்வியின் தேவை இல்லாது போய்விட்டது எனவும் விசனம் வெளியிட்டார். மேலும் போதைப்பொருள் கலாச்சாரத்தினுள் உள்நுழைய ஆரம்பித்துள்ள இளைஞர் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என கூறியதுடன் யாழ்ப்பாண பல்ககைழகமானது முற்றாக சிங்கள- முஸ்லீம் வசமாவமாவதாகவும் அவர் சுட்டிக்காட்டியழிருந்தார்.
இந்த கூட்டம் தொடர்பில் பேசியிருந்த EDFSL ன் தலைவர் திரு. சச்சிதானந்தம் அவர்கள் “இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமம்” ஆரம்பிக்கப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி இருந்தார். இதன் போது மேலும் கருத்துரையாற்றியிருந்த அவர்,
வடக்கின் கல்வி வீழ்ச்சி தொடர்பிலும் அதனை அதன் அடிக்கட்டுமானத்திலிருந்து வளர்த்தெடுக்க வேண்டியதன் தேவை தொடர்பிலும் – இதற்கு கல்வி நிர்வாகத்தில் செயற்படக்கூடிய அனைவருடைய ஒத்துழைப்பின் தேவை தொடர்பிலும் திரு. சச்சிதானந்தம் வலியுறுத்தி இருந்தார். அத்துடன் புலம்பெயர் தேசங்களில் உள்ள உறவுகளிடம் இருந்து இன்னும் சில வருடங்களுக்கு பின்பு எந்த ஒரு உதவிகளையும் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் புலம்பெயர் தேசங்களில் வாழக்கூடிய முதலாம் இரண்டாம் தலைமுறையினரே இன்று தாயக பகுதிக்கு கிடைக்கக்கூடிய உதவிகளை செய்பவோராக உள்ளனர். ஆனால் புலம்பெயர் தேசங்களில் உள்ள மூன்றாம், நான்காம் தலைமுறையினரிடமிருந்து இந்த உதவிகளை எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் அவர்கள் என்னைப்போல தாயகத்தில் பிறந்து – தாயக வாழ்வியலை அறிந்து கொண்டவர்கள் அல்ல. எனவே புலம்பெயர் தேசங்களில் இருந்து பெறக்கூடிய உதவிகளை விரைந்து பெறுவதும் அதனை ஆக்கப்பூர்வமான வகையில் தாயக கல்வி மேம்பாட்டுக்கு பயன்படுத்துவதும் இன்றியமையாதது என வலியுறுத்தி இருந்தார். மேலும் கல்விச் சுடர் வெளியீடு தொடர்பான முக்கியமான விடயங்கள் பற்றியும் அவர் தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து திருமதி செல்வரூபி ஸ்கந்த ராஜா அவர்கள் முன்பள்ளி கல்வியின் தேவை தொடர்பிலும் அதனை வடக்கிலிருந்து வலுப்படுத்த வேண்டியதனுடைய தேவை தொடர்பாகவும் விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
தொடர்ந்து திரு . சிவசிதம்பரம் கிருஷ்ணாணந்தன் அவர்களால் இலங்கை கல்வி அபிவிருத்தி குழுமத்தின் அங்குரார்ப்பணம் தொடர்பான தெளிவூட்டல் ஒன்று இடம்பெற்றது. இதில் கருத்துரையாற்றியிருந்த சிவசி
01. முன்பள்ளிகள் தொடர்பான கரிசனையை அதிகரித்து முன் பள்ளிகளை தரமானதாகவும் – ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள கூடியதுமான ஒரு களமாக மாற்றுவதற்காக செயற்படுதல். (முன் பள்ளி ஆசிரியர்களுக்கான மேலதிக நிதி வழங்குதல், மாணவர்களுக்கான ஊட்டச்சத்துள்ள உணவுகளை வழங்குதல், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கற்பித்தல் தொடர்பான பயிற்சிகளை வழங்குதல்)
02. ஆங்கில கல்வியை வழங்குதல். தொழில்துறையில் மிக முக்கியமான மொழியாக இருக்கக்கூடிய ஆங்கிலத்தை சிறுவயது முதலே வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல். இதற்காக முன் பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில பயிற்சி தொடர்பான வகுப்புக்களை மேற்கொள்ளுதல் – இதற்காக British Council உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
03. கல்வி தொடர்பான செய்திகளை பரிமாற்றிக் கொள்ளும் ஒரு தளமாக கல்விச் சுடர் சஞ்சிகையை வளர்த்தெடுத்தல்.
04. தாயகப் பகுதிகளில் வாழும் மக்களிடையே கல்விச்சிந்தனை தொடர்பான மாற்றங்களை ஏற்படுத்துதல்.
போன்ற விடயங்களை கல்வி அபிவிருத்தி குழுமம் தனது நோக்கங்களாக கொண்டுள்ளதாக திரு. சிவசிதம்பரம் கிருஷ்ணாணந்தன் அவர்கள் தெரிவித்திருந்தார். மேலும் கல்வி அபிவிருத்தி குழுமத்திற்கான அலுவலகம் தொடர்பிலும் அதன் நிர்வாக நடவடிக்கைகள் அவற்றுக்கான நிதி திரட்டுதல் போன்ற பல விடயங்களையும் அவர் முன் வைத்திருந்தார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அகில இலங்கை கம்பன் கழக தலைவர் கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் ” வெளிநாட்டவர்களின் நிதியை பெறுவதற்கான ஒரு கழகம் ஒன்று உருவாக்க
ப்பட வேண்டும் எனவும் – வெளிநாட்டில் இருக்கக்கூடிய புலம்பெயர் சொந்தங்களின் எண்ணிக்கை 15லட்சமாகும். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பவுன்ஸ் வீதம் வழங்கினாலே வடக்கின் பின்தங்கிய நிலையை மாற்றி விடலாம். இதற்கு அரசியல்வாதிகள் முன் வந்து இந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் யாழ்ப்பாண தமிழர்கள் இன்று தன்மானம் இழந்து கையேந்தி வாழ்கின்ற வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விட்டார்கள் எனவும் அவர் கருத்துரையாற்றினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்த வைத்தியகலாநிதி t.சத்தியமூர்த்தி அவர்கள் கருத்துரையாற்றிய போது “இன்றைய கல்விமுறையானது அகம் சார்ந்ததாக இல்லாது மிகப் பெரிய கட்டடங்களையும் – உபகரணங்களையும் பதக்கச் சான்றிதழ்களையும் மையப்படுத்தி நகர்கின்றது. போட்டி பரீட்சைகளூடாக பல மாணவர்கள் கல்வி நிலையில் பின்தங்கியவர்களாக அடையாளம் காணப்பட்டு அவர்கள் ஒதுக்கப்படுகின்ற போக்கு நீடிக்கின்றது. இது இன்று நாம் எதிர் கொள்ளக்கூடிய போதைப் பொருள் கலாச்சாரம் உள்ளிட்ட மிகப்பெரிய சமூக சீர்கேடுகளுக்கு அடித்தளம் இட்டு விடுகிறது. இந்தக் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். இலங்கையின் கல்வியும் சுகாதாரமும் மிகப்பெரிய சொத்து. ஆனால் இன்று இவை பொது நலனுக்காக பயன்படுவதை காட்டிலும் இன்று தனி நபர் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்ற போக்கு மேலோங்குகின்றது. இந்த நிலையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிகழ்வில் கருத்துரையாற்றியிருந்த Face அமைப்பின் பணிப்பாளர் A.சத்தியமூர்த்தி அவர்கள் கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சி தொடர்பிலும் – கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றியும் – அவர்களிடமிருந்து வடக்கு தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றியும் விவரித்து இருந்தார். இதன் போது தேசம் நெட் திரு.த. ஜெயபாலன் அவர்கள் எழுதியிருந்த “கிழக்கில் ஒரு கல்விச் சுனாமி” என்ற கட்டுரையின் விடயங்களை மேற்கோள் காட்டி “கிழக்கின் கல்வி, ஜெயபாலன் குறிப்பிட்டது போல ஒரு மிகப்பெரிய விஸ்வரூபம் கண்டுள்ளது” என தன்னுடைய உரையை நிகழ்த்தியிருந்தார்.
இறுதியாக ஓய்வு பெற்ற பிரதி பரீட்சைகள் ஆணையாளர் செல்வரூபி ஸ்கந்த ராஜா அவர்களுக்கும் – யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மையப்படுத்தி இயங்கிக்கொண்டிருக்கும் மனிதம் மாணவர் அமைப்பின் அங்கத்தினர்களுக்குமிடையே முன்பள்ளி கல்வியை முன்னேற்றுவதற்கான நடைமுறைகள் தொடர்பான உரையாடலும் இடம்பெற்றதனை தொடர்ந்து கல்வி அபிவிருத்தி குழுமம் ஆரம்பிப்பதற்கான அங்குரார்ப்பண ஆலோசனை கூட்டம் முடிவுக்கு வந்தது.
அடிப்படைக் கல்வியில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றமே சமூக மாற்றத்துக்கான திறவுகோலாக – கல்வி நோக்கிய பெரும்பாய்ச்சலுக்கு அடிப்படையாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து எதுவும் இல்லை. திரு. சச்சிதானந்தன் அவர்கள் குறிப்பிட்டது போல அடிப்படைக் கல்வியில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றமே சமூக வளர்ச்சிக்கு அடிப்படையானது என்ற கருத்து வரவேற்கத்தக்கது. இருந்த போதிலும் அடிப்படைக் கல்வி அதாவது மாணவர்களுக்கான முன்பள்ளி கல்வியானது நேரடியாக அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு இயங்க வேண்டும் என்ற கருத்துக்களும் வருகை தந்திருந்தோரால் வலியுறுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக முன்பள்ளி ஆசிரியர்களுக்காக மேலதிகமான கொடுப்பனவை EDFSL வழங்குவதாக கூறியது தொடர்பில் இறுதியாக உரையாற்றிய இணுவில் மத்திய கல்லூரி அதிபர் இளைய தம்பி துரை சிங்கம் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டிருந்ததுடன் அதற்கு மாற்று வழிகள் தொடர்பில் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
முன்பள்ளிகளில் இருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டியது இன்றைய திகதிக்கு மிக முக்கியமானது ஆக்கபூர்வமானதுமான ஒரு செயற்பாடாகும். எனவே இந்த மாற்றத்திற்கு கல்விச்சூழலில் இயங்கும் சகல தரப்பினரும் தங்களுடைய வலுவான ஆதரவை கல்வி அபிவிருத்தி குழுமத்திற்கு வழங்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
