மலையகம் 200 ஆண்டுகள் – தோட்டத்தொழிலாளர்களின் இரத்தத்தை அட்டைகளை விட மோசமாக உறிஞ்சிய அரசியல்வாதிகள் !

இன்றைய தேதிக்கு இலங்கைக்கு டொலர்களை  கொண்டு வரக்கூடிய மிக முக்கியமான துறைகளாக 03 T காணப்படுகிறது.

Textiles and Garments
Tea Factories
Tourism
இவற்றுள் ஆடை உற்பத்தியும் சுற்றுலாத்துறை சார்ந்த நடவடிக்கைகளும் அண்மை கால இலங்கையில் பெரிய அளவிற்கு வெளிநாட்டு வருவாயை பெற்று தந்தாலும் பிரித்தானியர் இலங்கையை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலப்பகுதி தொடங்கி இலங்கைக்கு பெரிய அளவிலான பொருளாதார லாபத்தை ஈட்டி தரக்கூடிய ஒரு துறையாக தேயிலை உற்பத்தி துறை காணப்படுகின்றது.
No photo description available.
இந்த தேயிலை உற்பத்தியின் முதுகெலும்பு மலையக தோட்டங்களில் கடந்த 2 நூற்றாண்டுகளாக மாடாய் உழைத்துக்கொண்டிருக்கும்  தென்னிந்திய வழ்சாவழி மக்கள்  என்பதை மறுக்கமுடியாது. இவர்கள் இலங்கைக்கு கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்டு சுமார் 200 ஆண்டுகளாகியுள்ள நிலையில் அவர்கள் இலங்கையின் பொருளாதாரத்துக்காக ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து பாரிய விழாக்களை முன்னெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டிருந்த அதே நாளில் என் கண்ணில் இன்னுமொரு படமும் தென்பட்டது. மலையகத் தோட்டத்தொழிலாளியின் மகளான பாடசாலை மாணவி ஒருத்தியின் கிழிந்த சப்பாத்து. இந்த மக்களை அநாதைகளாக்கிய – உழைப்பை சுரண்டிய அரசியல்வாதிகள் ஆடம்பர வாழ்க்கை வாழ – இவர்களுக்காக – இலங்கையின் பொருளாதாரத்துக்காக ஓடாய் தேய்ந்த மக்களின் நிலை இன்று வரை இந்த மாணவியின் கிழிந்த சப்பாத்து போலவே காணப்படுகின்றது. இன்று நாம் காணும் சுற்றுலாத்தளமாக – இலங்கையின் பொருளாதார மையமாக மலையகம் மாறியிருந்தாலும் கூட அந்த பகுதிகளின் காடுகளை வெட்டி – அவற்றை பொருளாதார உற்பத்திக்கான நிலமாக மாற்றி – மனிதர் நடமாட கூடிய பகுதிகளாக மாற்றிய இந்த மலையக தோட்டத்தொழிலுக்காக வந்த மக்கள் இன்று வரை நம்மால் தோட்டக்காட்டான் என விழிக்கப்படும் அவலம் தொடர்கதையாகியுள்ளது.
பிரித்தானியர் கால இலங்கையில் கோப்பிச்செய்கைக்காக தென்னிந்தியாவில் இருந்து குறைந்த ஊதியத்திற்காக வேலை செய்ய மக்கள் கொத்தடிமைகளாக கொண்டு வரப்பட்டனர்.   கோப்பிச்செய்கை வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து அதற்கு மாற்றாக தேயிலை பெருந்தோட்ட பயிராக இலங்கையில் அறிமுகமானது. மிகப்பெரிய அளவில் தேயிலை உற்பத்தி பிரித்தானியருக்கு லாபம் அளித்த நிலையில் அதனை மேற்கொண்டு முன்நகர்த்திச் செல்வதற்காக இன்னும் ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். இந்த நிலையில் தேயிலை செய்கையை விருத்தி அடையச் செய்வதற்காகவும் – அங்கு குறைந்த ஊதியத்திற்கோ அல்லது ஊதியம் இல்லாமலோ  வேலை செய்வதற்கான தொழிலாளர்களை தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து பிரித்தானிய அரசு  கொத்தடிமைகளாக இலங்கையின் மத்திய மலைநாடு உள்ளிட்ட பகுதிகளில் கொண்டு வந்து குடியமர்த்தியது.
200 வருட மலையக மக்களும் 150 வருட தேயிலையும் – மலையகத் தமிழர் பண்பாட்டு பேரவை
காலனித்துவம் என்பது 19 – 20 ஆம் நூற்றாண்டுகளில் மிகவும் மலிந்து போயிருந்த நிலையில் அடிமைகளாக தேயிலைத் தோட்டங்களுக்குள் கொண்டுவரப்பட்ட தென்னிந்திய மக்கள் குறிப்பாக தென்னிந்திய தமிழர்கள் கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டதுடன்  அவர்களின் உடல் உழைப்ப சுரண்டப்பட்டதுடன் உழைப்புக்கான ஊதியம் வழங்கப்படவில்லை.
அத்துடன் அங்கு வாழ்ந்த மக்களின் அடிப்படை மனித உரிமைகளும் பிரித்தானியரால் எதுவிதமான கவனத்திலும் கொள்ளப்படவில்லை.  இது பிரித்தானியருடைய காலகட்டத்தில் நீண்டு கொண்டே இருந்தது. கொத்தடிமைகளாக கொண்டுவரப்பட்ட மக்கள் அடைக்கப்பட்ட லயங்களில் எந்தவிதமான அடிப்படை சுகாதார வசதிகளும் அற்ற ஒரு நிலத்தில் வாழ நிர்பந்திக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்களுக்கு கல்வி வசதிகளோ – சுகாதார வசதிகளோ – பொருளாதார உற்பத்தி செயற்பாட்டுக்கான அடிப்படை வசதிகளோ எவையுமே ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை.
காலனித்துவ கால இலங்கையில் மலையக மக்களின் இழிவான நிலை கண்டு கொள்ளாது  விடப்பட்ட போதும் சுதந்திரத்திற்கு பின்னரான கால இலங்கையிலும் கூட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் கவனிப்பாரற்ற நிலையிலே காணப்படுகின்றனர். இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி இன்று வரை ஏதோ ஒரு விதத்தில் அடக்கப்படுபவர்களாகவும் – கண்டுகொள்ளப்படாதவர்களாகவும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களாக உள்ள தமிழர்கள் காணப்படுகின்றனர். சுதந்திரத்திற்கு பின்னரான கால இலங்கையில்  தீர்வு திட்டங்கள் தருவதாக கூறி உருவாக்கப்பட்ட அத்தனை அரசியல் திருத்தங்களின் ஊடாகவும் – சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கையில் நடைபெற்ற அத்தனை தமிழ் –  சிங்கள இனக் கலவரங்களின் போதும் பெரும் பாதிப்பை சந்தித்த ஒரு இனமாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். சுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையில் மிகப்பெரிய வலிமை உடைய மக்கள் கூட்டத்தினராக காணப்பட்ட மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் திட்டமிட்ட வகையில் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டனர். இது மிகப்பெரிய ஒரு நீட்சியான கதை.
1931 ஆம் ஆண்டின் உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்டம்.
1948 ஆம் ஆண்டின் குடியுரிமை பறிப்பு சட்டம்.
.1949 ஆம் ஆண்டின் இந்திய- பாகிஸ்தானிய குடியுரிமை சட்டம்.
1956 ஆம் ஆண்டின் அரச கரும மொழிகள் சட்டம்.
1958 ஆம் ஆண்டின் பேரின வாத வன்முறை தாக்குதல்கள்.
1964 ஆம் ஆண்டின் சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தம்.
1971 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்த சட்டம்.
1972 ஆம் ஆண்டின் முதலாம் குடியரசு யாப்பில் சோல்பரி யாப்பின் 29 ஆம் பிரிவை நீக்கிய ஏற்பாடு.
1972 ஆம் ஆண்டின் காணி சீர்திருத்த திருத்த சட்டம்.
1974 ஆம் ஆண்டின் சிறிமா – இந்திரா உடன்படிக்கை.
1978 ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பு.
1978 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1979 ஆம்ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1980 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1981 ஆம் ஆண்டு வன்முறை தாக்குதல்கள்.
1983 ஆம்ஆண்டு கறுப்பு ஜீலை இன வன்முறை தாக்குதல்கள்.
1984 ஆம் ஆண்டு இரத்தினபுரி தமிழர்கள் மீதான வன்முறை தாக்குதல்கள்.
1986 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் இன வன்முறை தாக்குதல்கள் (தலவாக்கலை)
1994 ஆம் ஆண்டு தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் உருவாக்கம்.
என தொடர்ந்து இலங்கையில் நடைபெற்ற அத்தனை மாற்றங்களாலும் பாதிக்கப்பட்ட ஒரு கூட்டத்தினராக மலையகத் தோட்டத் தொழிலாளர்களை குறிப்பிடலாம்.
பழிவாங்கப்பட்ட இலங்கை தோட்டத்தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர்
இலங்கையில் கணிசமான அளவிற்கு சிங்களவர்களும் கூட  தோட்டங்கள் உருவான  ஆரம்ப காலங்களில் தோட்டத் தொழிலாளர்களாக காணப்பட்டனர். ஆனால் இன்று சிங்களவர்கள் யாருமே தோட்டத் தொழிலாளர்களாக இல்லை. அவர்கள் அனைவருக்கும் அடுத்தடுத்த ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமும் தங்களுடைய ஆதரவு நிலைப்பாட்டை பொறுத்து மலையகப் பகுதிகளில் தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்த சிங்களவர்களை காணி உரிமையாளர்களாக மாற்றியது. சிங்களவர்களை காணி உரிமையாளர்களாக மாற்றிய இதே அரசாங்கங்கள் மலையகத் தமிழர்களை அரசியல் அனாதைகளாக விட்டுவிட்டனர்.
இந்த அரசாங்கங்களுடன் கூட்டணி அமைத்துக் கொண்டு மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வளர்த்தெடுப்பதாக கூறிக்கொண்ட மலையக கட்சிகள் இன்று வரை அந்த மக்கள் சார்ந்த எந்த முன்னேற்றத்தையும் வழங்கவில்லை. மாறாக அந்தக் கட்சிகளின் ஆட்சி முறை தென்னிந்தியாவில் நடப்பது போல குடும்ப ஆட்சியாக மாறியதுடன் – மலையக அரசியல்வாதிகளின் பிள்ளைகள் வெளிநாடுகளில் ஆடம்பரமான பாடசாலைகளில் படிக்க இவர்களை நம்பி ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்கக்கூடிய மலையக மக்களின் பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலைகள் இல்லாத தாய்மொழி பாடசாலைகளின் அரவணைப்பில்லாது லயங்களை அண்மித்துள்ள சிங்கள பாடசாலைகளிலும் –  முஸ்லீம்  பாடசாலைகளிலும் கல்வி கற்க ஒதுங்குகின்ற துர்ப்பாக்கிய நிலை பல இடங்களில் இன்று வரை நீடிக்கின்றது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் மட்டுமே வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றும் போக்கே நீடிக்கின்றது.
மலையக மக்கள் மத்தியில் தொடரும் அடிமைமுறைகள்.
அண்மைய தரவுகளின் படி மலையக மக்களிடையே மந்த போசணை அதிகரித்துள்ளதாகவும் – மாணவர்களின் பாடசாலை வருகை வீதம் குறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக இலங்கையின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது எல்லா துறைகளிலும் ஏதோ ஒரு வகையில் மலையக மக்கள் பின்தங்கிய ஒரு வாழ்வியலையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். முறையான பாடசாலை வசதிகள் இல்லை – தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பற்றாக்குறை –  பாடசாலைகள் இருந்தாலும் பாடசாலையில் கற்பித்தல் கருவிகளின் குறைவு – விளையாட்டு மைதானங்கள் இன்மை – சமூக அபிவிருத்தி நிறுவனங்கள் இல்லை – முறையான பாதை வலையமைப்பு வசதிகளில்லை –  முறையான தொலைதொடர்பு வசதிகள் இன்மை – முறையான சுகாதார வசதிகள் இன்மை என இலங்கையின் ஏனைய இடங்களுக்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய இந்த சலுகைகள் கூட மலையக தோட்டப்புறங்களில் கிடைப்பது எட்டாக்கனியாகியுள்ளது.
No photo description available.
அண்மையில் சமூக வலைதளங்களில் பெரிதாக ஒரு படம் பேசு பொருளாகியிருந்தது. ஒரு மாணவி கிழிந்த சப்பாத்து  அணிந்திருப்பது தான் அந்த படம். இலங்கையில் இலவச கல்வி என ஒரு பக்கம் இலங்கையின் கல்விமான்கள் மார் தட்டி கொண்டாலும் கூட அந்த இலவசக் கல்வி  கூட மலைகள் சிறுவர்களை சென்றடைவதற்கு பல தடைகள் இன்று வரை காணப்படுகின்றன.  பாதை வசதிகள் முறையாக இல்லாததால் பல கிலோமீட்டர் நடந்தே பாடசாலைக்குச் செல்லும் துர்பாக்கிய நிலை இன்றும் மலையகத்தில் உள்ளன. ஒரு அவசரநிலையில் மருத்துவ சாலைகளுக்கு செல்வது கூட இந்த பாதை வசதிகள் இன்மையால் தடைப்பட்டு விடுகின்றது.
இப்படியான ஒரு நிலையிலேயே அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறிய ஒரு அறிவிப்பு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகிறது. அதாவது மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வருகை தந்து இருநூறு ஆண்டுகள் பூர்த்தியாகின்ற நிலையில் அதனை ஒரு விழாவாக கொண்டாடும்படி ஜனாதிபதி அறிவித்திருந்தார். இன்று வரை அந்த மக்களின் வாழ்க்கை தரம் இலங்கையின் ஏனைய பகுதி மக்களோடு ஒப்பிடும்போது மிகப் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உத்தரவை வழங்காது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு விழாவை கொண்டாடும் படி கூறுவதும் – அதனை மலையக அரசியல்வாதிகள் பெருமையான விடயமாக  அதைகாவிச்சென்று மக்கள் மத்தியில் கூறுவதும் – விழா எடுப்பதும் –  அந்த மக்கள் எத்தனை தூரம் ஏமாற்றப்படுகிறார்கள் அல்லது வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதற்கு மிகச் சிறப்பான எடுத்துக்காட்டு.
Jeevan Thondaman steps down - Breaking News | Daily Mirror
கோட்டபாய அரசாங்கம் ஆட்சி அமைத்த போது தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கும் என்ற மிகப்பெரிய ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தனர். கோட்டபாய ராஜபச்கவுடன் இணைந்து செயற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்னும் சில தினங்களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் பெற்றுக் கொடுக்கப்படும் என உறுதியளித்தே  மக்களிடமிருந்து பாராளுமன்ற தேர்தலின் போது வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர். புதிய பாராளுமன்றம் பதவியேற்று மூன்று வருடங்கள் ஆகின்ற போதிலும் கூட இன்று வரை அந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த சம்பளம் கிடைக்கவில்லை. இதே நிலைதான் சுதந்திரம் அடைந்த இலங்கையில் இருந்து இன்று வரை நீடிக்கின்றது.
இலங்கையின் பல துறைகளிலும் வேலை செய்யக்கூடிய எல்லா தொழிலாளர்களுக்கும் நாள் சம்பளம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமே. அண்மையில் கூட ஆசிரியர்கள் சம்பளம் அதிகரிப்பு கோரி போராட்டங்களை மேற்கொண்ட போது அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டது. இவ்வாறெல்லாம் இருக்கும்போது மலையகத் தோட்ட தொழிலாளர்கள் கேட்கக்கூடிய ஆயிரம் ரூபாய் சம்பளத்தை கொடுப்பது அரசாங்கத்துக்கு என்ன சிக்கல் இருக்க போகிறது..? இந்த வருட சுதந்திர தினத்திற்காக மட்டுமே 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருட பட்ஜெட்டிலும் சண்டையே நடக்காதுள்ள  இலங்கையில் பாதுகாப்புக்கு என பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்படுகிறது. இவை அனைத்தும் வீணான செலவுகளே. இவற்றைக் கொண்டு மலையக மக்களின் வாழ்வாதாரத்தை அரசாங்கம் பல்வேறு பட்ட வழிகளிலும் மேம்படுத்த முடியும். ஆனால் அரசாங்கம் செய்யாது.
மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுப்பதில் இருக்கக்கூடிய – கொடுக்காமல் இருப்பதற்கு பின்னணியில் இருக்கக்கூடிய அரசியலை சற்று ஆழமாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.;
இதற்குப் பின்னால் உள்ள அரசியல் மிகப்பெரியது. மலையகத் தோட்டங்களில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் பட்சத்தில் மலையக தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஒரு குடும்பத்தில் இருவர் ( பெரும்பாலும் கணவன் –  மனைவி) தோட்டங்களில் வேலை செய்தால் குறித்த குடும்பத்துக்கு மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைக்கும். அறுபதாயிரம் ரூபாய் சம்பளமாக அவர்களுக்கு மாதாந்தம்  கிடைக்குமாயின் அவர்களும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள மக்களைப் போல சாதாரணமான ஒரு வாழ்க்கையை அவர்களால் வாழ முடியும். தங்களுடைய பிள்ளைகளுக்கு நிறைவான கல்வியை அவர்களால் கொடுக்க முடியும். தங்களுக்கான வீட்டு தேவைகளை யாருடைய துணையுமின்றி அவர்களால் என்ன நிறைவேற்றிக் கொள்ள முடியும். பிள்ளைகளை நன்றாக கல்வி கல்வி கற்க வைப்பதன் மூலம் கல்வி கற்ற பரம்பரை ஒன்றை உருவாக்கி – அவர்களை அரச பணிகளில் அமர வைக்க முடியும். கல்வி கற்றவர்கள் மலையகப் பகுதிகளை கைவிட்டு வேறு பகுதிகளுக்கு சென்று தொழில் தேட ஆரம்பிப்பர். கல்வி கற்ற தலைமுறை ஒன்று உருவாக ஆரம்பித்து விட்டால் இயல்பாகவே  அந்த மக்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் தோட்டங்களை விட்டு விலகி விடுவர். அதன்பின் தோட்டங்களில் வேலை செய்வதற்கு இவர்கள் எதிர்பார்ப்பது போல கொத்தடிமைகள் இல்லாது போய்விடுவார்கள். இதனை தடுப்பதற்காகவே இந்த அரசாங்கமும் – அவர்களோடு இணைந்துள்ள மலையக அரசியல் தலைவர்களும் பல தசாப்தங்களாக  மலையக மக்களின் உரிமைகளை தடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கும் வரை மட்டுமே இந்த அரசியல்வாதிகளால் அரசியல் செய்ய முடியும். இந்த ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பிரச்சனையை தீர்த்து வைத்து விட்டால்..? மலையக அரசியல்வாதிகள் எதை வைத்து அரசியல் செய்வது..?
இதுதான் மலையக மக்களுக்கான சம்பளம் அதிகரிப்பு இன்றுவரை தடைப்பட்டு நிற்பதற்கான முக்கியமான காரணம்.
மலையக மக்கள் இன்று வரை எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான தீர்வு என்ன என கேட்டால்..?
மக்கள் அரசியல் மயப்படுத்தப்படுதல் வேண்டும். மக்கள் அரசியல் மயப்படுத்தப்படாத வரை இந்த ஏமாற்று அரசியல் தலைமைகள் அரசியல் என்ற பெயரில் உழைத்துக் கொண்டுதான் இருக்கப் போகிறார்கள். மலையகத்தில் இயங்கி வரக்கூடிய சமூக மட்ட அமைப்புகள் முதலில் மக்களை அரசியல் மயப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாளாந்த உணவுக்கே பெரும் பாடாக இருக்கின்ற நிலையில் நாட்கூலிகள் ஆகவே வாழ்ந்து பழக்கப்பட்ட மக்களை அரசியல் மயப்படுத்துவது மிக கடினமான ஒரு செயலாக இருந்தாலும் இதனை மலையகத்தில் உள்ள புத்திஜீவிகள் செயல்படுத்த முன்வருதல் வேண்டும். இங்கு அரசியல் இல்லாமல் எதுவுமே இல்லை. இங்கு நாம் உண்ணக்கூடிய உணவில் இருந்து இரவு தூக்கம் வரையான அனைத்து விடயங்களையும் தீர்மானிப்பது இந்த அரசியலே. எனவே மக்கள் அரசியல் மயப்படுத்தப்படுவது இன்றியமையாது ஒன்றாக உள்ளது. மக்கள் அரசியல்மயப்படுத்தப்படும் போதுதான் தம் இரத்தத்தை உறிஞ்சுவது அட்டைகளல்ல- தம்மால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்தலைவர்களே என்பதை புரிந்து கொள்வார்கள். மலையகத்தில் ஒவ்வொரு மழைக்காலங்களிலும் பாதைகள் காணாமல் போய்விடுகின்றன. அதில் பெரிய ஊழல் நடந்து கொண்டிருக்கிறன்றது. வெள்ளளைக்காரன் போட்ட பாதைகள் கூட இன்றுவரை தாக்குப்பிடிக்க மலையகத்தில் சுதந்திரத்துக்கு பின்பு தலைமையேற்றுக்கொண்ட அரசியல்வாதிகள் போட்ட பாதைகள் ஒர பெருமழையுடன் காணாமல் போய்விடுகின்ற நிலை நீடிக்கின்றது. இன்றைய அரசியல்வாதிகளும் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவர்களே.., ஆனால் அவர்கள் கார் – மாளிகைவீடு – பிள்ளைகளுக்கான வெளிநாட்டுக்கல்வி என வாழ பாவம் சாதாரண மக்கள் தமது பிள்ளைகளுக்கு  இன்றுவரை தேயிலை கொழுந்து பறிக்க பழக்கிக்கொணடிருக்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டுமாயின் மக்கள் அரசியல்மயப்படுத்துவது தான் மலையக மக்கள் சார்ந்த முன்னேற்றத்துக்கான முதல் படி,
கல்விகற்ற  பட்டதாரிகள் கணிசமான அளவுக்கு மலையகப் பகுதிகளில் உருவாகி விட்டார்கள். இருந்தாலும் பட்டதாரிகளால் மட்டுமே இயக்கப்படக்கூடிய சில அமைப்புகளே மலையகப் பகுதிகளில் இன்று வரை காணப்படுகின்றன. ஏனைய பட்டதாரிகள் தாம் படித்தோம் –  தாம் கல்வி கற்றோம் –  ஒரு அரச வேலையை பெற்றுக் கொண்டோம் என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று கொண்டு தங்களுடைய வாழ்க்கையை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சமூகம் சார்ந்த செயல்பட முன் வருதல் வேண்டும். குறிப்பாக மலையக பகுதி மாணவர்களுக்கான அடிப்படைக் கல்வி தடைப்பட்டு போகின்ற ஒரு சூழல் காணப்படுகின்றது. எனவே இந்தப் பட்டதாரிகள் இணைந்து மாணவர்களுக்கான கல்வி அறிவை குறிப்பாக  வாசிப்பு பழக்கத்தையும் ஊக்குவிக்க வருதல் வேண்டும். மலையக மக்கள் இன்றுவரை எதிர்கொள்ளக்கூடிய முக்கிய பிரச்சினைகளுக்கு காரணம் இந்த பட்டதாரிகள் பலரின் சுயநல மனப்பாங்கு. பெரும்பாலான மலையகமக்கள் லயப்புற வாழ்க்கைக்கே பழக்கப்பட்டவர்கள். ஆனால் பட்டதாரிகள் பலரும் ஏனைய மக்களை காட்டிலும்  அறிவுநிலையில் மேம்பட்டவர்களாகவும் – தோட்டப்புற வாழ்க்கைக்கு வெளியேயுள்ள சமூகத்தை அறிந்து கொண்டவர்களாகவும் காணப்பட்டாலும் கூட பல பட்டதாரிகளின் சுயநல மனப்பாங்கினால் தம்சார்ந்த முன்னேற்றத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு சமூக முன்னேற்றத்தை மறந்துவிடுகின்றனர். கல்வி கற்ற பட்டதாரிகளுக்கு இருக்கக்கூடிய சமூகப்பொறுப்பு தொடர்பில் மலையக பட்டதாரிகள் விழிப்பாக இருக்கவேண்டும். புரட்சியாளர்  சேகுவேரா “கல்வியே புரட்சிக்கான அடிப்படை ” என கூறுகிறார். எனவே அந்த பொறுப்பை பட்டதாரிகள் எடுத்துக்கொள்ள வுண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆயிரம் ரூபாய் சம்பள பிரச்சனைக்கான  தீர்வுக்கான போராட்டங்களை தொழிற்சங்கங்கள் இதயசுத்தியுடன் முன்னெடுக்க வேண்டும். தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளுடன் இணைந்து மக்களை ஏமாற்றி வருகின்ற செயற்பாடுகளே  பல தசாப்தங்களாக நிகழ்ந்து வருகின்றன. எனவே  தொழிற்சங்கங்கள் தொடர்பிலும் தொழிற்சங்க அங்கத்தவர்கள் தெரிவு தொடர்பிலும்  மலையகத் தோட்ட தொழிலாளர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தமக்கான தலைவர்களை அடையாளம் காணக்கூடிய – உருவாக்ககூடிய ஒரு களமாக தொழிற்சங்கங்களை மலையக மக்கள்பயன்படுத்த வேண்டும்.
அரசாங்கம் மலையகத் தோட்டத் தொழிலாளர்களையும் தேசிய இனமாக கருதி அவர்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளை வழங்க முன் வருதல் வேண்டும். மக்களுக்காக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கக்கூடிய உண்மையான அரசியல் தலைமைகளை மக்கள் உருவாக்க வேண்டும். தேர்தல் கால வாக்குறுதிகளை நம்பி மதி மயங்காது தெளிவான தலைமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது என்ற விழிப்புணர்வை மலையகப் பகுதிகளில் செயற்பட்டு வரும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களிடையே தொடர்ச்சியாக மேற்கொள்ளுதல் வேண்டும்.  அதுவே முறையான மாற்றத்துக்கான அடிப்படையாகவும் அமையும்.
இவ்வாறாக ஒரு நீண்ட கால செயற்றிட்டங்களின் அடிப்படையில் மட்டுமே மலையகத்தை மீட்டெடுக்க முடியும்.
“ஆளும் வர்க்கம் எப்போதும் மலையக மக்களை அடிமைப்படுத்தப்பட்டவர்களாகவே அடக்குமுறைக்குள் வைத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இன்று மலையகத்தில் உருவாகியுள்ள கல்வி கற்ற மக்கள் கூட்டம் – புத்திஜீவிகளை உள்ளடக்கிய குழுக்கள் என அனைவரும் இணைந்து செயல்பட்டு மலையகத்தை முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளாத வரை 400 ஆண்டுகள் கடந்தாலும் இந்த நிலை மாறப்போவதில்லை என்பதே நிதர்சனம்.”
“ஏனெனில் அரசியல்வாதிகளும் ஏமாற்றி பழகி விட்டார்கள் – மக்களும் அவர்களின் வார்த்தைகளுக்கு ஏமாற பழகிவிட்டார்கள்.”
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *