January

January

சுதந்திர தினத்தில் மூன்று அரசியல் கைதிகளுக்கு விடுதலை!

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரனின் கொலைக் குற்றவாளியை விடுவிக்கும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மகேஸ்வரன் 2008 ஜனவரி முதலாம் திகதியன்று கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதேவேளை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவைக் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காகத் தண்டனை பெற்றுவரும் கைதியும் விடுவிக்கப்பட மாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலாளியை விடுவிக்க விரும்புவதாக பொன்சேகா பாராளுமன்றத்தில் அறிவித்தபோதிலும் அவரது கையொப்பம் இடப்பட்ட ஒப்புதல் பெறப்படவில்லை.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் இன்னும் அவரிடம் கலந்தா லோசிக்கவில்லை என பொன்சேகாவின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முடிவுக்கு வந்தது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு விவகாரம் !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை கல்முனை மேல் நீதிமன்றத்தில் இனிவரும் காலங்களில் விசாரணைக்கு எடுப்பதில்லை என கூறி வழக்கு விசாரணை முடிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு இன்று கல்முனை மேல் நீதிமன்ற நீதிவான் ஜயராம் ட்ரொக்ஸி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி வழக்கானது விசாரணைக்காக கடந்த தவணையில் எடுக்கப்பட்ட வேளை பிரதிவாதி சார்பாக ஆஜரான சட்டத்தரணி கடந்த தவணையின் போது குறித்த வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.

இதற்கமைய ஜனவரி மாதம் 26 ஆம் திகதி குறித்த வழக்கினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வழக்கினை நெறிப்படுத்திய அரச சட்டவாதி மன்றிற்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுக்கப்பட்டிருந்தது.இவ்வாறு விசாரணைக்கு இவ்வழக்கு எடுக்கப்பட்ட ஆவணங்கள் இன்று கல்முனை மேல் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து குறித்த வழக்கு தொடர்பில் கல்முனை மேல் நீதிமன்றத்தில் இதுவரை நடைபெற்ற விசாரணைகள் யாவும் முடிவுறுத்த இறுதி தீர்மானம் மன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்களுடன் தொடர்புடைய சம்பவமாக கல்முனை – சாய்ந்த மருது பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்புக்கள் குறித்த விசாரணைகளில் பிரதான பொலிஸ் பரிசோதகர் அபூபக்கர் என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பிலான சாட்சிகளை மறைத்தமை தொடர்பில் அவரைக் கைது செய்ததாக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

சி.சி.டி எனப்படும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர் அம்பாறை பொலிஸ் உப கராஜின் பொறுப்பதிகாரியாக செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

“உள்ளுராட்சி தேர்தல் காலங்களில் பெண்வேட்பாளர்களிற்கு எதிரான டிஜிட்டல் துன்புறுத்தல் அதிகரிக்கலாம்.” – கபே அமைப்பு

உள்ளுராட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமடையும் போது பெண்வேட்பாளர்களிற்கு எதிரான டிஜிட்டல் துன்புறுத்தல் அதிகரிக்கலாம் என தேர்தல் கண்காணிப்பு  அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கபே அமைப்பு மேற்கொண்ட ஆரம்ப கட்ட கருத்துக்கணிப்பின் போது உள்ளுராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களில் 70 வீதமானவர்களும் அடிமட்ட செயற்பாட்டாளர்களும் டிஜிட்டல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.

டிஜிட்டல் துன்புறுத்தலை எதிர்கொண்டவர்களில் 80 வீதமானவர்கள் பொலிஸாரிடமோ கட்சியின் தலையிடமோ  இது குறித்து முறைப்பாடு செய்யவில்லை  அவர்கள் இது பயனற்ற நடவடிக்கை கருதுவதே இதற்கு காரணம் என கபேயின் நிறைவேற்று பணிப்பாளர் மானாஸ் மக்கீம் தெரிவித்துள்ளார்.

பெண் அரசியல்வாதிகள் பொலிஸ் அல்லது தங்களின் கட்சி தலைமையிடம் இது குறித்து முறைப்பாடு செய்தாலும் எந்த பயனும் இல்லை  அவர்களே தங்கள் தீர்வுகளை தாங்களே காணவேண்டியுள்ளது என தெரிவித்துள்ள அவர் பெண் வேட்பாளர்களிற்கு ஒதுக்கீடு முறை ஆண் வேட்பாளர்களிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது இதன் காரணமாக இதன் காரணமாக அவர்கள் டிஜிட்டல் துன்புறுத்தல்களில் ஈடுபடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்கணிப்பின் போது 55 வீதமான பெண் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் தங்கள் அரசியல் வாழ்க்கையின் போது துன்புறுத்தல்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என மானா மக்கீன் தெரிவித்துள்ளார்.

எனினும் டிஜிட்டல் துன்புறுத்தலே தற்போது வழமையான ஒன்றாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் பாதிக்கப்பட்டவர்களில் 90 வீதமானவர்கள் தங்களின் கட்சியை சேர்ந்தவர்களே இதனை செய்கின்றனர் என கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

தனுஷ்க குணதிலக்க கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் தொழில்ரீதியாக பங்கேற்க தடை – சட்டமா அதிபர் ஆலோசனை

இலங்கை கிரிக்கெட் அணியின் தனுஷ்க குணதிலக்கவின் நடத்தை தொடர்பாக விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவுஸ்ரேலியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது, பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்க உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில், இவரின் நடத்தை குறித்து விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் அவர், கிரிக்கெட் அல்லது வேறு எந்த விளையாட்டிலும் தொழில்ரீதியாக பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் அவருக்கு தடை விதிக்குமாறும் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஓய்வுபெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன தலைமையிலான குழுவினால் தொகுக்கப்பட்ட அறிக்கையின் உள்ளடக்கங்களை ஆராய்ந்த பின்னர் சட்டமா அதிபர், தமது பரிந்துரைகள் அடங்கிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதற்கிணங்க, இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை கிரிக்கெட் அணியின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குணதிலக்க தொடர்பாக அவுஸ்ரேலிய சட்ட அமைப்பு என்ன நடவடிக்கை எடுத்தாலும், இலங்கையின் சட்டத்தின்படி அவருக்கு எதிராக பொலிஸார் தனியாக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் விளையாட்டுத்துறை அமைச்சரிடம் சட்டமா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அரசியல் கட்சிகளுக்கும் எனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.” – தசுன் சானக்க

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை என இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒரு அரசியல் கட்சியின் பிரச்சாரத்துடன் எனது படம் பரவுவதை நான் கவனித்தேன். எனக்கு எந்தக் கட்சியுடனும் இணைந்து செய்யபட விருப்பமில்லை.

தாய் நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவதே எனது உண்மையான அன்பும் ஆர்வமும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

அரகலய மக்கள் இயக்கத்தில் பங்குபற்றியவர்களால் சட்டமா அதிபரிடம் 12,000 சத்தியகடதாசிகள் சமர்பிப்பு !

அரகலய மக்கள் இயக்கத்தில் பங்குபற்றியவர்களால் இன்று சட்டமா அதிபரிடம் 12,000 சத்தியகடதாசிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் சட்டவிரோதமாக தடுத்து வைத்தமைக்கு எதிராக சத்தியக்கடதாசிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

2022ஆம் ஆண்டு அரச எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வசந்த முதலிகே தொடர்ந்தும் தடுத்து வைக்கப்படுவது ஏன் என சத்தியக்கடதாசியில் கையெழுத்திட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“யாழ்.போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்தமை ஒரு வரலாற்று சாதனை” – வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை வெற்றி அளித்துள்ளமையானது ஒரு வரலாற்று சாதனை என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த வாரம், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்கு, அவருடைய தாயார் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்குவதற்கு முன் வந்திருந்த நிலையில் அதற்குரிய சத்திர சிகிச்சை கடந்த 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்திய சத்திர சிகிச்சை கூடத்தில்  நான்கு மணித்தியாலமாக இடம்பெற்ற சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையின் பின்னர் மிகவும் வெற்றிகரமான முறையில் தாயாரின் சிறுநீரகம் 17 வயதுடைய  பெண் பிள்ளைக்கு மாற்றப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதல் முதலாக இந்த சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை யாழ்ப்பாண வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்டு அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளமை ஒரு  வரலாற்று சாதனை ஆகும்.

எதிர்காலத்தில் பொதுமக்கள் யாராவது சிறுநீரகம் செயலிழந்த தங்களுடைய உறவினர்கள் யாருக்காவது சிறுநீரகத்தினை தானமாக வழங்க முன் வந்தால் அதற்குரிய உடற் பரிசோதனைகள் மருத்துவ பரிசோதனைகள்  முன்னெடுக்கப்பட்டு  சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையினை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்க முடியும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

50,000 ஆண்டுகளுக்கு முன்பு நியண்டதால் மனிதர்கள் கண்ட பச்சை வால் நட்சத்திரம் மீண்டும் காணும் வாய்ப்பு 2023ல் – எப்போது வானில் தென்படும்..?

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அரிய பச்சை வால் நட்சத்திரம் நாளை மறுதினம் (01) பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது.

C2022E3, அல்லது ZTF என்ற இந்த வால் நட்சத்திரம் இறுதியாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நியண்டதால் மனிதனின் இறுதி காலத்தில் அவதானிக்கப்பட்டது.

இந்த பிரகாசமான பச்சை நிற வால் நட்சத்திரம் நாளைமறுதினம் மற்றும் பெப்ரவரி 2 ஆம் திகதி பூமியில் இருந்து 45 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் என்றும், தென் திசையாக தொலைநோக்கியின் உதவியுடன் இதை பார்க்க முடியும் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வால் நட்சத்திரம் தற்போது நமது சூரிய மண்டலத்தின் வழியாக வேகமாக நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் 50,000 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தோன்றாது என்று பிரிட்டனின் கிரீன்விச் ரோயல் ஒப்சர்வேட்டரியின் வானியலாளர் கலாநிதி கிரெக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கலிபோர்னியாவின் செண்டியோனில் உள்ள ஆய்வகத்தில் வைட் ஃபீல்ட் சர்வே கெமராக்களைப் பயன்படுத்தி இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது.

மதுபோதையில் கைது செய்யப்பட்ட ஆறு பௌத்த பிக்கு பல்கலைக்கழக மாணவர்கள்!

பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடரும் பிக்கு மாணவர்கள் எனக் கூறப்படும் ஆறு மாணவர்கள் மது போதையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஆறு பேரும் கண்டி நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி நகர தலைமையக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட பிக்கு மாணவர்களில், 5 பேர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், ஒருவர் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலும் கல்வியைத் தொடர்வதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கண்டியில் உள்ள மதுபான விற்பனை நிலையமொன்றில் வைத்து இவர்கள் மது அருந்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிறைவேற்று அதிகாரமுள்ள 07 ஜனாதிபதிகளும் கைவைக்காத 13ஆவது திருத்தத்தில் ரணில் கைவைப்பது ஏன்..?

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலை இலக்காக கொண்டு மாத்திரமே 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ளாரே தவிர , தமிழ் மக்கள் மீது கொண்ட அக்கறையால் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே  சன்ன ஜயசுமண இதனை தெரிவித்துள்ளார்.

 

மக்கள் ஆணையற்ற ஜனாதிபதி ரணிலுக்கு 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் உரிமை கிடையாது.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்குவதற்காக 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்தத் திருத்தம் 1987 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஆட்சியமைத்த 7 நிறைவேற்றதிகார ஜனாதிபதிகளில் எவரும் இதில் கை வைக்கவில்லை.

மக்கள் உண்பதற்கு உணவின்றி தவித்துக் கொண்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் , உள்ளுராட்சி மன்றத் தேர்தலை காலம் தாழ்த்தி, பொதுத் தேர்தலும் இன்றி அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதற்காகவே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு செயற்படுகிறார்.

மாறாக தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள இரக்கத்தினால் அல்ல. இது தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் ஏமாற்றும் செயற்பாடு”  என்றார்.