2023

2023

இலங்கையிலும் நிலநடுக்க அபாயத்தில் மக்கள்..? – பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கையில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிசார் பொறியியல் சிரேஷ்ட விரிவுரையாளர் உதேனி பண்டார அமரசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் கூறுகையில்,

வெல்லவாய, புத்தல போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் சில நில அதிர்வுகளை உணர்ந்துள்ளனர் என்பது உண்மைதான்.

இது துருக்கியில் ஏற்பட்டது போன்ற நிலநடுக்கத்தை ஏற்படுத்துமா? என்ற தேவையற்ற அச்சம் ஏற்படக்கூடும்.

எங்கள் நிலப்பரப்பு மிகவும் நிலையானது. இருப்பினும், இலங்கை தீவு இந்து – அவுஸ்திரேலிய டெக்டோனிக் தட்டின் மையத்தில் அமைந்துள்ளது.

டெக்டோனிக் தட்டில் பிளவுகள் இல்லாததால் எமது நிலப்பரப்பில் நில நடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக்குறைவு.

நாட்டில் பதிவான சிறிய நில அதிர்வுகள் தொடர்பில் பொதுமக்கள் அநாவசியமாக அச்சமடைய தேவையில்லை.

இந்த நாட்டில் நில அமைப்புக்கு அமைய, அழிவுகரமான அபாயங்களுடன் கூடிய நில நடுக்கங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

“புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” அறிவிக்க தஞ்சாவூர் முள்ளிவாய்கால் முற்றத்தில் கூட்டம்!! இந்தியாவின் இரட்டை வேடம் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையம் தமிழகத்தில் புலிக்கு மீண்டும் ஆயுதப் பயிற்சி? !!!

இச்செய்தி எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது, நல்ல சேதி வருகுது.. நல்ல சேதி வருகுது.. என்று அறிவித்தபடி தமிழக புலித்தேசியவாதத் தலைவர்கள் தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தை நோக்கி விரைந்து கொண்டுள்ளனர் என தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பழ நெடுமாறன், குளத்தூர் மணி, வைக்கோ, கோவை ராமேஸ் என புலித்தேசிய ஆதரவாளர்கள் பலரும் இந்த ஊடகச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்னம் சில மணி நேரங்களில் இடம்பெறவுள்ள இச்சந்திப்பில் பழ நெடுமாறன் “புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” என்றும் “போராட்டம் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது” என்றும் தஞ்சாவூர் முள்ளிவாய்கால் முற்றத்தில் அறிவிக்க உள்ளார். இக்கூட்டத்தில் கலந்துகொள்ள காசி ஆனந்தன் நேற்று காலையே பயணமாகி விட்டதாகவும் தேசம்நெற்க்கு தெரியவருகிறது. இந்த மாநாட்டின் பின்னணியில் 2009 இற்குப் பின் புலிகள் பலவாகச் சிதறுண்டதில் ஒரு பிரிவினரான ஐரோப்பாவில் செயற்படும் ரிசிசி அமைப்பிலிருந்த சிலரே இதனைத் தூண்டிவருவதாகத் தெரியவருகிறது.

இது தொடர்பாக கேப்பிரிட்ஜில் உள்ள வரலாற்று மையத்தைச் சேர்ந்த வி ஜெயாத்தன் விடுத்துள்ள அறிக்கையில் இதுவொரு புனைவு மோசடி என்றும் இதற்கு யாரும் ஒத்துழைக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது பற்றி ரிசிசி உறுப்பினர் தகவல் தருகையில் தம்மோடு இருந்த சிலரே இச்செயலில் ஈடுபட்டு இருப்பதாகவும் இந்நபர்கள் 1990 களுக்கு முன் இந்திய இராணுவத்துடனான தமது இயக்கத்திற்கு ஏற்பட்ட மோதலின் பின்னர் வந்தவர்கள் என்றும் சுவிஸ்நாட்டில் தற்போது வதியும் அப்துல்லா என்ற இயக்கப் பெயரைக் கொண்ட ஒருவருமாக நால்வர் இவ்விடயத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இன்னும் சில மணிநேரங்களில் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு புலிகளின் ஆலோசகராக இருந்து இறுதியுத்தத்தில் தமிழகம் வந்து சேர்ந்த பிரபாகரனின் அரசியல் ஆலோசகர் மு திருநாவுக்கரசு கலந்துகொள்ளமாட்டார் என்று அவருடைடய அணியில் நிற்கும் தியாகராஜா திபாகரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். மு திருநாவுக்கரசுவின் கருத்தியலுடன் அதாவது, இந்திய உளவுத்துறையாடு இணைந்து செயற்பட்டு; இந்தியாவின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுவதன் மூலம், இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் என இத்தரப்பில் உள்ள விரல்விட்டு எண்ணக் கூடிய நபர்கள் நம்புகின்றனர். இவர்கள் இந்திய உளவுத்துறையோடு வெளிப்படையாக தங்களை அடையாளம் காட்டி வருகின்றனர்.

இந்த இந்திய ரோ சார்பு அணியின் முன்னணிச் செயற்பாட்டாளர்களாக மு திருநாவுக்கரசுடன் லண்டனைச் சேர்ந்த நிலா தற்போது சிலகலமாக இந்தியாவில் தங்கியுள்ளார், லண்டன் வரலாற்று மையத்தின் ஆயூட்கால உறுப்பினர் திபாகரன் மற்றும் மயூரன் ஆகியோர் உள்ளனர். நிலா தற்போது தமிழக்தில் இருந்தாலும் அவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளப் போவதில்லை எனத் தெரியவருகின்றது.

முள்ளிவாய்க்கால் முற்றத்தை ஏற்படு செய்யும் பழ நெடுமாறன் தலைமையிலான குழவினரும் இந்திய உளவுத்துறையுடன் செயற்படுபவர்களாக இருந்த போதும், முன்னைய குழவினரைப் போல வெளிப்படையாக தங்களை இந்திய உளவுத்துறையினருடன் அடையாளப்படுத்துவதில்லை.

“பிரபாகரன் ஐரோப்பாவிற்கு வந்துவிட்டார், அவர் நிதி நெருக்கடியில் இருக்கின்றார், அவர் போராட்டத்திற்கு ஆதரவு கேட்கின்றார்” என்ற கதைகள் சில வாரங்களாகவே ஐரோப்பாவில் உலா வந்துகொண்டுள்ளது. இதன் உச்ச கட்டமாக பிரபாகரன் சுவிஸில் சிலரின் வீடுகளுக்கு சென்று விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதாகச் செய்திகள் பரப்பப்பட்டது. அதற்கும் மேலாக முஸ்லீம் பெண்களைப் போன்று பர்தா அணிந்த பெண்ணை சிலர் வீடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பாதுகாப்புச் சிக்கல்கள் காரணமாக தன்னை அடையாளப்படுத் முடியாது என மதிவதனி என் போர்வையில் வந்தவர் தெரிவித்தாகவும் தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.

இந்தச் சந்திப்புகளின் மூலம் வர்த்தகப் புள்ளிகள் 150,000 பவுண்கள் வரை அன்பளிப்புச் செய்ததாகவும் அவர்கள் ஒரு மில்லியன் பவுண் வரை சேர்க்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் தேசம்நெற்க்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பின்னணியில் சற்று பெரிய தொகையை வழங்க விருப்பம் தெரிவித்த லண்டன் வர்த்தகர் துவாரகாவை தான் சந்திக்க வேண்டும் என்று கோரி இருக்கின்றார். அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. துவாரகாவைத் தெரிந்திராத அந்த வர்த்தகரும் துவாரகாவைச் சந்தித்த போது துவாரகாவை அழைத்து வந்தவரைப் பார்த்து “துவாரகாவிற்கு வாகனம் ஓட்டக் கற்றுக்கொடுத்தது யார்?” என்று கேட்க துவாரகாவை அழைத்துவந்தவர் ஒரு தளபதியாகவிருந்த ஆண் போராளியின் பெயரைச் சொல்லியுள்ளார்.

சற்று விசயம் அறிந்த இந்த வர்த்தகர் துவாரகாவைச் சந்திக்க வருவதற்கு முன்னரேயே பேர்மிங்ஹாமில் உள்ள ஒரு மூத்த பெண் போராளியுடன் தொடர்பு கொண்டு தான் எப்படி அவர் துவாரகா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்று கேட்டுள்ளார். ஏனெனில் மதிவதனி போல் அவரும் முக்காடு போட்டுக்கொண்டு வருவார் என்றே அவர் எண்ணினார். அவ்வாறே நடந்தது. அப்பெண் போராளி தான் அந்தக் கேள்வியைக் கேட்குமாறு இந்த வர்த்தகருக்கு கூறியிருந்தார். ஏனெனில் இப்பெண் போராளித் தளபதியே துவாரகாவுக்கு வாகனம் ஓட்டக் கற்றுக் கொடுத்தவர். துவாரகா விடயத்தில் அவர்கள் ஏமாற்றியதை உணர்ந்த அந்த வர்த்தகர் வந்தவர்களுக்கு பணம் கொடுக்கவில்லை.

இந்த நிதி சேகரிப்பை முடுக்கி விடவே முள்ளிவாய்க்கால் முற்றம் கூட்டப்படுகிறது. இதில் “ உலகத் தமிழர்களுக்கு இன்பச் செய்தி, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே காத்திருந்ஙகள்… !” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி குறும்செய்தி அனுப்பி வைக்கின்றது.

பெப்ரவரி 11இல் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மண்டபத்தைத் திறந்து வைத்த இந்தியா 48 மணி நேரத்திற்குள்ளாக “புலிகளின் தலைவர் பிரபாகரன் ஐரோப்பா சென்றுவிட்டார்!” என்று தெரிவிக்க உள்ளனர். இந்த அறிவிப்பு ஒன்றும் எழுந்தமானதாக நடைபெறவில்லை. இதற்கு பணம் புரட்டுவது மக்களை ஏமாற்றுவது தான் என்ற காரணமும் இருக்க முடியாது. இது இந்திய உளவுத்தறையான ரோ இன் ஆசீர்வாதம் இல்லாமல் சாத்தியமில்லை. தேசம்நெற்க்கு கிடைக்கும் மற்றுமொரு தகவல் இந்திய உளவுத்துறையினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிலருக்கு ஆயதப் பயிற்சிகள் வழங்கி வருவதாகத் தெரிவிக்கின்றது. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களிடம் சேர்க்கப்படும் இந்நிதி இலங்கையில் தேவைப்படும் போது வன்முறையைத் தூண்டி இந்திய அரசின் ஆளுமையை மேலும் ஸ்தீரணப்படுத்த பயன்படும் எனத் தெரியவருகின்றது. ஈஸ்ரர் குண்டுவெடிப்புக் கூட பயிற்சிகள் தொடர்புகள் எல்லாமே இந்திய மண்ணிலேயே நடந்துள்ளது. எங்கு எப்போது வெடிக்கும் என்பதனைக்கூட இந்தியா தெரிந்துவைத்திருந்தது.

எண்பதுக்களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத் தமிழ் இளைஞர்களை உசுப்பேற்றிய தமிழரசுக் கட்சி தனக்கேற்பட்ட தோல்வியில் இருந்து மீள தன் வாக்கு வங்கியைப் பலப்படுத்த தமிழீழக் கோரிக்கையை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தியது. ஆனால் அந்தச் சீட்டை அதன் பின் இந்தியாவே மிகத் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தி சிங்களவர்களைப் படுகொலை செய்ய (அனுராதபுரம், கொக்கிளாய், நாயாறு படுகொலைகள்) புலிகளைத் தூண்டி இனமுரண்பாட்டை திட்டமிட்டுத் தூண்டியது. ஆயத அமைப்புகளுக்கு பயிற்சி அளித்து போராட்ட களத்தில் இறக்கியது ஒன்றும் தமிழர்களின் மீதான கரிசனையினால் அல்ல என்பதை காலமும் நிரூபித்துவிட்டது.

அன்றையைக்காட்டிலும் இன்று இலங்கையின் அமைவிடம் உலக வர்த்தகப் போக்குவரத்தில் முக்கியத்துவமானதாக உள்ளது. அதனால் சீனாவும் இந்தியாவும் இலங்கையை ஆளுமை செலுத்துவதில் கங்கணம் கட்டி உள்ளனர். இந்தப் போட்டியில் இந்தியா கலாச்சார மையத்தையும் கட்டித்தரும், தேவைப்பட்டால் அதனைக் குண்டு வைத்தும் தகர்க்கும். இந்தியாவுக்கு செம்பு தூக்குவதற்கு நான் முந்தி நீ முந்தி என்று அரசியல் தலைவர்கள் போட்டி போட்டு களமிறங்கிவிட்டனர். இப்போது இவர்களோடு ஆறுதிருமுருகன், கம்பவாருதி ஜெயராஜ் என்று ஒரு பெரும் கூட்டமே அள்ளுப்படுகின்றது.

அடுத்த முறை அண்ணாமலை மோடியின் சிறுநீரைக் கொண்டு வந்து கோமயம் என்று தெளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அன்று இலங்கையில் இன வன்முறையைத் தூண்டிவிட்ட இந்தியா இன்று மத வன்முறையையும் தூண்டிவருகின்றது. சமூக வலைத்தளங்களிலும் வாய்வார்த்தைகளிலும் என்றுமிலாத அளவுக்கு மதவாத நாற்றம் மோடியின் கோமயத்தின் நாற்றத்தையும் மிஞ்சி நிற்கின்றது.

துருக்கி நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 50ஆயிரத்தை தொடும் என்கிறது ஐ.நா !

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நில அதிர்வுகள் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை அண்மிக்க கூடும் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண இயக்குனர் மாட்டின் கிரிபின்ஸ் தெற்கு துருக்கிக்கான விஜயத்தின் பின்னர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என்பதை துல்லியமாக கூற முடியாது.

நிலநடுக்கத்தால் 26 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். துருக்கி மற்றும் சிரியா முழுவதும் குறைந்தது 870,000 பேருக்கு உணவுத் தேவைப்பாடு உள்ளது.

சிரியாவில் மட்டும் 5.3 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். உடனடி சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 42.8 மில்லியன் டொலர் நிதியை வழங்குமாறு உலக சுகாதார அமைப்பு உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களைக் கோரியுள்ளது.

துருக்கியில் மட்டும் மீட்புப் பணிகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த 8,294 பேரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 32,000-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்று வருவதாகக் வருகின்றனர்.என தெரிவித்தார்.

துருக்கி நிலநடுக்கம் – “பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும்” என்கிறது உலக சுகாதார அமைப்பு!

துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.

சிரிய எல்லையை அண்மித்துள்ள தெற்கு துருக்கியின் காஸியான்டெப் நகருக்கு அருகில் நேற்று (06) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, துருக்கியின் தென்கிழக்கு பிராந்தியத்தில் இன்று முதல் மூன்று மாதங்களுக்கு அவசரகால நிலையை அந்நாட்டு அதிபர் பிரகடனம் செய்தார்.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டும் என கணிக்கும் உலக சுகாதார நிறுவனம், இரு நாடுகளிலும் 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

இதில், துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள 6,000 கட்டடங்கள் அழிந்து விட்டதாகவும், எல்லையில் உள்ள சில நகரங்கள் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்துள்ளதாகவும் இரு நாடுகளின் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

துருக்கி – சிரிய நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 5000ஐ தாண்டியது !

துருக்கி மற்றும் சிரியாவில் நேற்றைய தினம் பதிவான பாரிய நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

7.8 ரிச்டராக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இதுவரையில் 5000ஐ தாண்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவு இது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை பலி எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதன் காரணமாக பல கட்டடங்கள் சரிந்துள்ளதுடன், பல பகுதிகளில் மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. அடுத்தடுத்து 24 மணி நேரத்திற்குள் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது. மேலும் இது பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

முதலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 20 முறை கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டன. காசியான்டெப் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்கி முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது.

குறிப்பாக நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள 10 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கின. அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.

நிலநடுக்க அதிர்வை உணர்ந்து தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் கட்டிடங்கள் தரைமட்டமானதால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயின.

நிலநடுக்கத்தின்போது துருக்கியின் காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், தியர்பகீர், அடானா, மாலத்யா, கிலிஸ் உள்ளிட்ட நகரங்களில் வானுயர குடியிருப்பு கட்டிடங்கள், அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு சரிவது போல நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகின.

1,500-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு திரும்பிய திசையெல்லாம் கட்டிடக்குவியலாக காட்சி அளிக்கிறது.

மலைபோல் குவிந்துகிடக்கும் கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களை மீட்க ஆயிரக்கணக்கான மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டு, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்களும் அவர்களுடன் இணைந்து வெறும் கைகளிலேயே இடிபாடுகளை அகற்றி அதனுள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

துருக்கியில் இடிந்த கட்டிடங்களில் வைத்தியசாலைகளும் அடங்கும். அதனால் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டும் இன்றி நிலநடுக்கம் பாதித்த இடங்களில் பனிப்பொழிவு மற்றும் மழை பெய்து வருவது மீட்பு பணிகளில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே இந்த நிலநடுக்கம் சிரியாவிலும் கடும் பேரழிவை ஏற்படுத்தியது. துருக்கியின் எல்லையையொட்டி இருக்கும் சிரியாவின் வடக்கு பகுதிகள் நிலநடுக்கத்தால் நிலைகுலைந்தன.

அங்கு கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல நகரங்கள் சின்னாபின்னமாகின. குறிப்பாக கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள ஜாண்டரிஸ் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏற்கனவே உள்நாட்டு போரின் போது நடந்த குண்டுவெடிப்புகளால் இடிந்த கட்டிடங்கள் உள்பட நூற்றுக்கணக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.

அதேபோல் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் ஆகிய நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்கு வீதிகள் எங்கும் கட்டிட இடிபாடுகளும், மரண ஓலங்களுமே நிறைந்திருக்கின்றன.

பெரும் இடிபாடுகளுக்கு நடுவில் உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடுவதற்கு மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

துருக்கியில் 3-வது முறையாக நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 2,300ஐ தாண்டியது !

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 2,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சிரியாவில் மட்டும் 783 பேர் உயிரிழந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

7.8 ரிச்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிச்டர் அளவில் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தநிலையில் துருக்கியில் 3-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ரிச்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் கடந்த 1939-ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள சேதம் மிகவும் அதிகம் என கூறப்படுகிறது.

மத்திய துருக்கி நகரங்களில் இடிபாடுகள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் பலர் சிக்கி உள்ளதால் அவர்களை மீட்கும் பணிகளில் அந்நாட்டு அரசு தீவிரம் காட்டி வருகிறது.

சீன பலூன் அட்லாண்டிக் பெருங்கடலில் சுடப்பட்ட விவகாரம் – பதிலடி வழங்குவோம் என சீனா எச்சரிக்கை!

அமெரிக்காவின் மொன்டானாவில் இருந்து தென் கரோலினா வரை வானத்தில் வட்டமிட்ட சீன பலூன் அட்லாண்டிக் பெருங்கடலின் மீது பறந்தபோது, அந்த பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது.

உளவு பலூனாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது சட்டபூர்வமான நடவடிக்கை என்றும், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

ஆனால் இதற்கு சீனா கடும் அதிருப்தியும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இது சர்வதேச நடைமுறையை மீறிய செயல் எனவும், இதற்கு தேவையான பதில் நடவடிக்கை மேற்கொள்ள தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் கூறி உள்ளது.

சிரியாவை உலுக்கிய நிலநடுக்கம் – இதுவரை 195 பேர் பலி !

துருக்கி, சிரியா நாடுகளில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 195க்கும் மேலானோர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தின் தாக்கம் 7.8 ரிக்டராக பதிவான நிலையில் இருநாடுகளிலும் கட்டிடங்கள் பல தரைமட்டாகியுள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைப்பதால் பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும். சரியாக அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் இருந்து சரியாக 15 நிமிடங்கள் இடைவெளியில் இன்னொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளது. அது 6.7 ரிக்டர் என்றளவில் இருந்தது.

காசியான்டேப் நகரம் சிரிய எல்லையை ஒட்டியுள்ள நகரமாகும். தொழில் நகரமாக இது அறியப்படுகிறது. இந்த நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ், சிரியா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருநாடுகளிலும் இதுவரை 195 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியிலிருந்து சமூகவலைதளங்களில் வெளியான வீடியோ காட்சிகள் இடிந்த கட்டிடங்கள், தெருக்களில் தஞ்சம் புகுந்த மக்கள் என வேதனைகளை சாட்சியாக்கியுள்ளது. கட்டிட இடிபாடுகளைப் பார்க்கும்போது பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

துருக்கி அதிபர் எர்டோகன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு, நிவாரணக் குழுக்கள் உடனடியாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த பேரிடரில் இருந்து குறைந்த சேதாரத்துடன் நிச்சயமாக மீண்டு வருவோம் என நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இலங்கைக்கு பயணம் செய்யாதீர்கள் – மக்களை அறிவுறுத்தும் நியூசிலாந்து..?

இலங்கைக்கு பயணம் செய்வதற்கு எதிராக நியூஸிலாந்து மக்கள் அறிவுறுத்தப்படவில்லை என நியூசிலாந்து வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்லெட்டன் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு சர்வதேச சுற்றுலாத்துறை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நியூசிலாந்து அங்கீகரித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்திற்குச் செல்வதற்கு எதிராக நியூசிலாந்து மக்களுக்கு இரண்டு வகையான பயண ஆலோசனைகள் உள்ளன.

‘பயணம் செய்ய வேண்டாம்’ ‘அத்தியாவசியமற்ற பயணத்தைத் தவிர்க்கவும்’. என்பதே அவையாகும். தற்போது 50இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வகையான பயண ஆலோசனைகள் உள்ளன. எனினும் அதில் இலங்கை உள்ளடங்கவில்லை.

மாறாக, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளை உள்ளடக்கிய மிகப் பெரிய நாடுகளின் வரிசையில் இலங்கை இருப்பதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்

இந்தநிலையில் நியூசிலாந்து மக்கள் ‘அதிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் ‘என்பதையே தாம் அறிவுறுத்தியதாக உயர்ஸ்தானிகர் மைக்கல் எப்லெட்டன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கான நியூசிலாந்தின் பயண ஆலோசனைகள் அண்மையில் ‘இறுக்கப்பட்டுள்ளன’ என்று ஒரு செய்தி தவறாகக் பிரசுரிக்கப்பட்டமை தொடர்பிலேயே இந்த விளக்கத்தை நியூஸிலாந்தின் உயர்ஸ்தானிகரகம் வழங்கியுள்ளது.

கொரோனாவில் இருந்து 64 கோடியே 84 லட்சத்துக்கு மேற்பட்டோர் குணமடைவு !

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 கோடியே 61 லட்சத்து 30 ஆயிரத்து 142 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 8 லட்சத்து 63 ஆயிரத்து 202 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 64 கோடியே 84 லட்சத்து 95 ஆயிரத்து 665 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 67 லட்சத்து 71 ஆயிரத்து 275 பேர் உயிரிழந்துள்ளனர்.