2023

2023

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை எதிர்த்த போராட்டக்காரர்கள் – 52 பேர் வரை கைது !

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு 52 மன்னராட்சி எதிர்ப்பு போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்தனர்.

சனிக்கிழமையான நேற்று பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூட்டிக் கொண்ட நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில் இருந்து பக்கிங்ஹாம் அரண்மனை வரை கூடியிருந்தனர்.

சிவப்பு, வெள்ளை மற்றும் நீல நிற உடையணிந்து இருந்த அரச நடைமுறை ஆதரவாளர்களுக்கு மத்தியில், நூற்றுக்கணக்கான மஞ்சள் ஆடை அணிந்த மன்னராட்சி எதிர்ப்பாளர்களும் ஊர்வலப் பாதையில் இணைந்து கொண்டனர்.

மேலும் அவர்கள் கையில் “எங்கள் ராஜா இல்லை”(Not My King) என்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு, பெரிய ஸ்பீக்கர்களில் மன்னராட்சிக்கு எதிரான கோஷங்களை கூச்சலிட்டனர்.

முடிசூட்டு விழாவில் மன்னராட்சி எதிர்ப்பாளர்கள் இடையூறுகளை ஏற்படுத்தலாம் என பொலிஸார் உறுதியாக நம்பிய நிலையில் அதன் தலைவர் கிரஹாம் ஸ்மித்-தை ஊர்வலம் தொடங்கும் முன்பே தடுத்து வைத்தனர்.

அத்துடன், மேலும் மன்னராட்சிக்கு எதிரான 51 ஆர்ப்பாட்டக்காரர்களை கூட்டத்தில் இருந்து பிரித்து பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பாக லண்டன் பெருநகர காவல்துறையின் தளபதி கரேன் ஃபிண்ட்லே வெளியிட்ட அறிக்கையில், “இன்று காலை நாங்கள் கைது செய்ததைத் தொடர்ந்து பொதுமக்களின் கவலையை நாங்கள் முற்றிலும் புரிந்து கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மன்னராட்சியை அகற்றிவிட்டு ஒரு அரச தலைவரைத் தேர்ந்தெடுக்க விரும்பும் குடியரசுக் குழுவின் தலைவரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்.

16 மணிநேர காவலுக்குப் பிறகு சனிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்ட கிரஹாம் ஸ்மித், “இங்கிலாந்தில் அமைதியான போராட்டத்திற்கு இனி உரிமை இல்லை” என்று தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்தில் உள்ள 100அடி விகாரையை எக்காரணம் கொண்டும் அகற்ற முடியாது.” – ஜெனரல் சவேந்திர சில்வா

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை இராணுவத்தினரின் வழிபாட்டுக்காகவே உருவாக்கப்பட்டது. அதனை ஒருபோதும் அகற்றமுடியாது என  பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு அப்போது இராணுவத் தளபதியாக இருந்த சவேந்திர சில்வா 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி அடிக்கல் நட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த விகாரைக்கான கலசம் வைக்கும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றிருந்தது.

இதனையடுத்து தனியார் காணிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மேற்படி விகாரையை அகற்றி அந்தக் காணிகளை விடுவிக்குமாறுகோரி மக்களால் 3 நாள் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் கொழும்புச் செய்தியாளர் ஒருவர் சவேந்திர சில்வாவிடம் கேள்வி எழுப்பியதற்கே மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை அரசின் முழுமையான அனுமதியுடன் இராணுவத்தினரின் வழிபாட்டுக்காக அமைக்கப்பட்டது.

இனவாத. மதவாதக் கண்ணோட்டத்துடன் இதனை நோக்குவதை தமிழ்க் கட்சிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

இந்த விகாரை சட்ட விரோதமானது அல்ல. அமைக்கப்பட்ட இந்த விகாரை எந்தக் காரணத்துக்காகவும் அகற்றப்படாது’ என்று சவேந்திரசில்வா பதிலளித்தார்.

நான் நளவன் என்பதால் என்னை ஆவாக்குழு, போதைப்பொருள் கடத்துபவன் என்கின்றனர் – அருண் சித்தார்த் உடனான நேர்காணல் காணொளி!

நான் நளவன் என்பதால் என்னை ஆவாக்குழு, போதைப்பொருள் கடத்துபவன் என்கின்றனர் என யாழ்ப்பாண சிவில் சமூக நிலைய  தலைவர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

அருண் சித்தார்த் தொடர்பிலும் அவர் மீதான விமர்சனங்கள் தொடர்பிலும் – யாழ்ப்பாணத்திலுள்ள சாதிய அடக்குமுறை தொடர்பிலும் தேசம் திரையுடன் இடம்பெற்ற நேர்காணல்.

 

முழுமையான காணொளியை காண கீழேயுள்ளLink ஐ கிளிக் செய்யவும்..!

அவுஸ்ரேலியா வெளியிட்ட நாண்யத்திற்கு வியட்நாம் எதிர்ப்பு!

தெற்கு வியட்நாமின் மஞ்சள் கொடி அடங்கிய நாணயத்தை அவுஸ்திரேலியா வெளியிட்டதற்கு வியட்நாம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இருதரப்பு உறவுகளில் நேர்மறையான போக்குகளை நிராகரிப்பதாக கூறி, நாணய அச்சிடலை நிறுத்துமாறு அவுஸ்திரேலியாவை வியட்நாம் கேட்டுக் கொண்டுள்ளது என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வியட்நாமில் இருந்து தனது படைகள் மீள பெறப்பட்டதன் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அவுஸ்திரேலிய இந்த வரையறுக்கப்பட்ட இரண்டு டொலர் நாணயத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது.

மூன்று பட்டைகள் கொண்ட மஞ்சள் கொடியுடன் பொருட்களை வெளியிடுவதையும், புழக்கத்தில் விடுவதையும் கடுமையாக எதிர்ப்பதாக வியட்நாமின் வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

நாணயத்தின் முகப்பில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உருவமும், முகப்பில் UH-1H உலங்கு வானூர்தியும் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக அறிவித்து உலக சுகாதார மையம் !

கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கொடூர நோயின் தீவிரம் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது.

முதல் அலை, இரண்டாவது அலை என்று உலக நாடுகளை கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்தது. இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது, இந்த பாதிப்பில் இருந்து எப்படி விடுபடுவது என்ற பணிகளில் மருத்துவத் துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.

நீண்ட ஆய்வுக்கு பின் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின் இந்த மருந்துக்கான தட்டுப்பாடு அதிகரித்தது. கொரோனா வைரஸ் வீரியம் தற்போது குறைந்து இருப்பது, உலக நாடுகளில் இதன் மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருப்பது என்று பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார மையம் அறிவித்து இருக்கிறது.

“எனினும், கொரோனா வைரஸ் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். கடந்த வாரம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது எங்களுக்கு தெரிந்தவரையிலான கணக்கு மட்டும் தான்,” என்று உலக சுகாதார மையம் டுவிட் செய்துள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி புடினை கொல்ல டிரோன் தாக்குதல் !

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 430 நாட்களைக் கடந்துள்ளது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு ஆயுதம், நிதி உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி மாளிகையான கிரம்ளினைக் குறிவைத்து நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது என ரஷியா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி மாளிகை மீது 2 டிரோன்கள் தாக்குதல் நடத்த முயற்சிக்கப்பட்டது. அந்த 2 டிரோன்களும் மின்சார ரேடார் மூலம் வீழ்த்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஜனாதிபதி மாளிகையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.

டிரோன் தாக்குதல் முயற்சி நடந்த சமயத்தில் புதின் ஜனாதிபதி மாளிகையில் இல்லை. அவர் மாஸ்கோ நகருக்கு வெளியே ஒடின்ஸ்வொஸ்கை மாவட்டத்தில் உள்ள தனது பங்களாவான நொவொ- ஒயொவாவில் தங்கி இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள ரஷ்யா, இந்த தாக்குதல் முயற்சி உக்ரைனால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – எட்டு குழந்தைகள் பலி !

சேர்பியா நாட்டின் பெல்கிரேட் பகுதியில் உள்ள பாடசாலையில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் எட்டு குழந்தைகள் மற்றும் காவலர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை பொலிசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

14 வயது சிறுவன் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சேர்பியா தலைநகரில் உள்ள வர்ச்சர் பகுதியில் இயங்கி வரும் பாடசாலையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது . எட்டு குழந்தைகள் உள்பட மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்ததோடு ஆறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூடு ஐந்து நிமிடங்கள் வரை நடைபெற்றதாக குறைப்படுகிறது. பொலிசார், அவசர கால மீட்பு படையினர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படிப்பில் நல்ல கவனம் செலுத்தி வந்த மாணவர் போதை பழக்கத்தினால் இவ்வாறு செய்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட கோதுமை மாவில் பூச்சிகள், வண்டுகள் மற்றும் எலிகளின் கழிவுகள் – தொழிலாளிகள் போராட்டத்தில்!

நுவரெலியா நானுஓயா எடின்பரோ தோட்டத்தைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை முதல் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தால் அண்மையில் வழங்கப்பட்ட கோதுமை மாவில் பூச்சிகள், வண்டுகள் மற்றும் எலிகளின் கழிவுகள் காணப்பட்டதாகவும் அதே கோதுமை மாவினை மீண்டும் வழங்குவதற்காக மேலும் 300 கிலோ கோதுமை மாவை தேயிலை தொழிற்சாலையில் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கும் தோட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தோடு தொடர்ச்சியாக தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகள் வழங்காமல் கொழுந்து பறிப்பதில் மாத்திரம் தொழிலார்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் சுகாதார வசதி மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என இம்மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறான செயல்பாடுகளில் ஈடுபடாமல் தோட்ட நிர்வாகம் தொழிலாளர் நலன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என இம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டன் லூசியம் சிவன் கோவில் ஐயருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு ! நெருக்கடியில் நிர்வாகம்!

லண்டன் லூசியம் சிவன் கோவில் ஐயருக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு ஏப்ரல் 28 வூல்விச் கிரவுன் கோட்டில் விசாரணைக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட சிசிரிவி பதிவு தெளிவானதாக இல்லாமல் இருந்ததால் சாட்சியங்களை பலப்படுத்தி வருவதற்காக இவ்வழக்கு இன்னுமொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது பற்றித் தேசம்நெற் க்குத் தெரியவருவதாவதுஇ லூசியம் சிவன் கோவில் மடப்பள்ளி ஐயர் இராமச்சந்திரசர்மா சிறிதரசர்மாஇ லூசியம் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் 273 பஸ்ஸில் தகாதமுறையில் நடந்துகொண்டார் என்ற அடிப்படையிலேயே வழக்கு நடைபெறுகின்றது. இவ்வழக்கு மீண்டும் மே நடுப்பகுதியில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கின்றது.

மடப்பள்ளி ஐயர் இராமச்சந்திர சர்மாஇ சில சமயங்களில் பூசைகளிலும் ஈடுபடுபவர். இவரின் குடும்பம் கொழும்பில் வசிக்கின்றனர். ஐம்பத்தி இரண்டு வயதான இவர் மூன்று குழந்தைகளின் தந்தை. இவர் சில வாரங்களுக்கு முன் பொலிஸாரல் கைது செய்யப்பட்டார்.

இக்கைது பற்றி தேசம்நெற்க்கு அறிய வருவதாவதுஇ ஏப்ரல் 30ம் திகதி இராமச்சந்திர சர்மா ஐயா லூசியம் நகரிலிருந்து ஹீத்தர் கிரீன் செல்லும் 273ம் இலக்க பஸ்ஸில் பயணித்துள்ளார். மாலை 2:45 மணியளவில் ஹீத்தர் கிரீன் பஸ் தரிப்பிடத்தில் இவர் பஸ்ஸில் இருந்து இறங்குகின்ற போது கைது செய்யப்பட்டார். அன்று மதியம் லூசியம் சிவன் கோவிலில் பணியில் இருக்க வேண்டியவர் கோயிலுக்கு வராததால் பலரும் அவரைத்தேடிக் கொண்டிருந்தனர். அவ்வேளையில் பொலிஸார் தொடர்புகொண்டு இராமச்சந்திர சர்மாவுடைய இருப்பிடத்தை தாங்கள் சோதணையிட வேண்டும் என்றும் அவர் பொறொம்ளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். அதன் பின்னர் லூசியம் சிவன் கோவிலுக்கு வந்த பொறொம்ளி பொலிஸார் ஆலயத்தில் இராமச்சந்திர சர்மா தங்கி இருந்த அறையைச் சோதனையிட்டு அவருடைய கடவுச்சீட்டு மற்றும் அவருடைய மற்றுமொரு தொலைபேசியையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இராமச்சந்திர சர்மாவை லூசியம் சிவன் கோவில் செயலாளர் டொக்டர் சிற்றம்பலம் ராஜசுந்தரம் பிணையில் எடுத்தார். ஆனால் அவர் எதற்காக கைது செய்யப்பட்டார் என்பதை ஆலய நிர்வாகத்தில் உள்ள மூவர் மட்டுமே அறிந்திருந்தனர். ஏனையவர்களுக்கு அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற விபரம் தெரியப்படுத்தப்படவில்லை. சிலர் விபரம் கேட்ட போது ஆங்கிலத்தில் பதிலளிக்கத் தெரியாததால் அவர் கைது செய்யப்பட்டதாக தன்னிடம் தெரிவித்ததாக ஆலயத்தின் பக்தர் ச அருள் தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.

இராமச்சந்திர சர்மாவுடைய வழக்குத் தொடர்பாக டொக்டர் சிற்றம்பலம் ராஜசுந்தரத்துடன் தேசம்நெற் தொடர்புகொண்ட போது இது தனிப்பட்ட விவகாரம் என்றும் அது பற்றிப் வெளிப்படுத்த முடியாது என்றும் டொக்டர் ராஜசுந்தரம் தெரிவித்தார். ஒரு பாலியல் குற்றம் தொடர்பில் ஐயர் கைது செய்யப்பட்டிருப்பதும் அவர் தொடர்ந்தும் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பதும் எவ்வாறு தனிப்பட்ட விடயமாகும் என்று கேட்டதற்கு அவர் தன் தொலைபேசியைத் துண்டித்துவிட்டார். டொக்டர் ராஜசுந்தரம் புறொம்பிளியில் ஜிபி யாக பணியாற்றிய போது 2002இல் இவருடைய மூன்று நோயாளிப் பெண்கள் இவர் தங்கள் உடல்பாகங்களை அவசியமின்றி பரிசோதித்ததாக ஏழு குற்றச்சாட்டுக்களை பதிவுசெய்திருந்தனர். ஆனால் இக்குற்றச்சாட்டுக்களில் இருந்து மெடிகல் கவுன்சில் இவரை விடுவித்திருந்தது.

ஏப்ரல் 28இல் வூல்விச் நீதிமன்றத்தில் இராமச்சந்திரனின் வழக்கு நடைபெற்ற போது அருள்தாஸ்இ கணேஸ்இ ராஜ் ஆகியோர் பார்வையாளர்களாக நீதிமன்றம் சென்றிருந்தனர். இம்மூவரும் தற்போதைய நிர்வாகக்குழுவினரால் நிர்வாகக்குழவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கும் விரைவில் உயர் நீதிமன்றுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. லூசியம் சிவன் கோவிலின் இந்த வழக்கு நடவடிக்கைகளுக்கே தற்போது பல்லாயிரம் பவுண்கள் செலவு செய்யப்பட்டுள்ளது. இச்செலவுகள் மேலும் அதிகரிக்க உள்ளது.

லூசியம் சிவன் கோவில் நிவாகம் பல்வேறு தற்போது பல்வேறு நெருக்கடிகளைச் அடுத்தடுத்து சந்தித்து வருகின்றது. இவை தொடர்பாக நிர்வாகக் குழவின் தலைவர் டொக்டர் கருணாகரன் உடன் அண்மையில் உரையாடிய போது அவர் தாங்கள் ஊடகங்களுக்கு பதிலளிப்பதில்லை என மொட்டையாகத் தெரிவித்து விட்டார். டொக்டர் கருணாகரன் வெறுமனே பெயரளவிலேயே தலைவராக உள்ளார். நிர்வாகக் குழவை டொக்டர் ராஜசுந்தரமே கையகப்படுத்தி வைத்துள்ளார்.

மேலும் நிர்வாகக் குழவில் தற்போதுள்ளவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவின் வயதை எட்டிவிட்டனர். அவர்கள் தங்கள் முதுமை காரணமாக செயற்பட முடியாதவர்களாக உள்ளனர் என மற்றுமொரு நிர்வாக உறுப்பினர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். அப்படியானால் ஏன் நீங்கள் நற்பணி மன்றம் மற்றும் மகளீர் அமைப்பு என்பவற்றை ஆலயத்தில் இயங்க அனுமதிக்கவில்லை என்று கேட்டதற்குஇ அவர்கள் ஆலய நிர்வாகத்தோடு இணைந்து செயற்படாமல் அவர்கள் தனித்து செயற்பட முற்படுவதாகத் தெரிவித்தார். அதில் என்ன தவறு? யார் செய்தாலும் ஆலயப் பணிகள் நடந்தால் சரி தானே என்று கேட்ட போது அந்நிர்வாக உறுப்பினர் எல்லாமே ஆலயத்தின் நிர்வாகத்தின் கீழேயே நடக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார்.

லூசியம் சிவன் கோவில் உள்ள இடம் என் சச்சிதானதன் மற்றும் சிலரினால் 1994இல் நீண்ட குத்தகைக்கு எடுக்கப்பட்டு இருந்தது. தற்போதும் கோயில் கட்டிடம் உள்ள பகுதி நீண்டகாலக்குத்தகையிலேயே உள்ளது. இக்குத்தகை இன்னும் சில ஆண்டுகளில் முடிவுக்கு வருகின்றது. ஆனால் ஆலயம் உள்ள நிலத்தை வாங்குவதற்கு முன்னரேயே ஆலயத்தை ஒரு மில்லயனுக்கு மேற்பட்ட செலவில் புனர்நிர்மாணம் செய்தனர். இனிமேல் இந்நிலத்தை என்ன விலைகொடுத்தும் வாங்க வேண்டிய கட்டாயத்தில் ஆலய நிர்வாகம் உள்ளது. கோவிட் பெரும் தொற்றுப் பரவலுக்குப் பின் ஆலயங்களின் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் சில மில்லியன் பெறுமதியான நிலத்தை வாங்குவதற்கு ஆலயம் வசதியுடையதாக உள்ளதா என்ற கேள்வியை தேசம்நெற் நிர்வாகத்தினரிடம் எழுப்பியது. ஆலயத்தை வாங்குவதற்கு எவ்வளவு தேவைப்படும் என்பதை அறுதியிட்டு குறிப்பிட விரும்பாத நிர்வாகக் குழவினர் தங்களால் ஆலயத்துக்கான நிலத்தை வாங்குவதற்கான நிதியைத் திரட்ட முடியும் என உறுதியளித்தனர். ஆலய நிர்வாகத்திற்கு அந்த நிலத்தை வாங்குவதைத் தவிர வேறு வழியில்லாததால் நிலத்தின் பெறுமதியை மிக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறான சங்கடங்களுக்கு மத்தியில் லூசியம் சிவன் கோவிலில் பூசைகள் செய்து வந்த கோபி சர்மா ஐயா 2020 யூனில் ஆலயத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமை தெரிந்ததே. இவர் சமூகவலைத் தளங்களில் தன்னுடைய பதிவுகளால் பலரை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லூசியம் சிவன் கோவில் உள்ளேயும் வெளியேயும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருகின்றது. இப்பிரச்சினைகள் நாளாந்த நிர்வாகப் பிரச்சினைகளில் இருந்து சட்ட நடவடிக்கைகள்இ பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள்இ நன்மதிப்பு இழப்புஇ நிதி நெருக்கடிகள் என இவை தொடர்கதையாகின்றது. மேலும் ஆலயத்தில் ஒரு சாரார் ஆலய நிர்வாகக்குழுவுக்கு எதிரான கடுமையான பிரச்சினைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆலயத்தில் நடைபெற்று வந்த தமிழ் பள்ளியை மறைமுகமாக மூடவும் ஆலய நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக குற்றம்சாட்டி வருகின்றது. கோவிட் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட தமிழ் பள்ளிக்கூடத்தை மீள நடாத்த முற்பட்ட போது அதன் வாடகையை சடுதியாக அதிகரித்து பள்ளிக்கூடத்தை நடத்தவிடாமல் தடுப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இராமச்சந்திர சர்மாவின் வழக்கு மற்றும் ஏனைய நிர்வாகப் பிரச்சினைகள் தொடர்பாக லூசியம் சிவன் கோவில் நிர்வாகம் வெளிப்படையாகப் பதிலளிக்காமல் ஒளிந்துகொள்கின்றனர். நிர்வாகத்தினர் இது தொடர்பாக பதிலளிக்கும் பட்சத்தில் அவற்றை பிரசுரிக்க தேசம்நெற் முன்வரும்.

 

பிரபல நகைச்சுவை நடிகரும் – இயக்குனருமான மனோபாலா காலமானார்!

பிரபல நடிகரும், இயக்குநருமான மனோ பாலா உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.

40 திரைப்படங்கள், 16 தொலைக்காட்சி தொடர்கள் 3 தொலைக்காட்சி படங்கள் உள்ளிட்டவற்றை அவர் இயக்கி உள்ளதுடன் 200 க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

கல்லீரல் பாதிப்பால் சென்னை அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 15 நாட்களாக வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வந்தார்.

நடிகர் கம்ல்ஹாசனின் பரிந்துரையால் 1979 ஆம் ஆண்டு ’புதியவார்புகள்’ படத்தில் இயக்குநர் பாரதி ராஜாவின் உதவியாளராக தனது திரை வாழ்கையை மனோபாலா தொடங்கினார்.

1982 ஆம் ஆண்டு முதல் இயக்குநரான மனோ பாலா, ஆகாய கங்கை (1982), நான் உங்கள் ரசிகன் (1985), பிள்ளைநிலா (1985), பாரு பாரு பட்டினம் பாரு (1986), தூரத்துப் பச்சை (1987), ஊர்க்காவலன் (1987), சிறைப்பறவை (1987), என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் (1988), மூடு மந்திரம் (1989), மல்லுவேட்டி மைனர் (1990), வெற்றி படிகள் (1991), மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் (1991), செண்பகத் தோட்டம் (1992), முற்றுகை (1993), பாரம்பரியம் (1993), கருப்பு வெள்ளை (1993), நந்தினி (1997), அன்னை (2000), சிறகுகள் (2001) (தொலைக்காட்சித் திரைப்படம்), நைனா (2002) உள்ளிட்ட 20 திரைப்படங்களை இயக்கி உள்ளார்.

1994 ஆம் ஆண்டு வெளியான தாய்மாமன் படத்தில் தொடங்கி தொடர்ந்து பல்வேறு இயக்குநர்கள் இயக்கிய திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணைக் கதாப்பாத்திரங்களிலும் மனோபாலா நடித்துள்ளார்.

இவரது தயாரிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் வெளிவந்த சதுரங்கவேட்டை படம் பெரும் வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.