01

01

“இலங்கைக்கு மேலும் கால அவகாசங்கள் வழங்குவது  அர்த்தமற்றது.“- மனித உரிமை பேரவை நாடுகளுக்கு தமிழர் தரப்பு வலியுறுத்தல் !

ஆறு தமிழ் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,  சமயத் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் பிரதான நாடுகளுக்கு வரைபு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அமைப்பின் முன்னெடுப்பில் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது.

இம்மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின்  51 ஆவது  கூட்டத்தொடரை அடிப்படையாகக் கொண்டு உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுக்கு இந்த வரைபு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக  நிறைவேற்றப்பட்டு வந்த பிரேரணைகளை இலங்கை நடைமுறைப்படுத்த தவறி உள்ளமையால்,  மேலும் கால அவகாசங்கள் வழங்குவது  அர்த்தமற்றது என  குறித்த வரைபில் தமிழ் கட்சித் தலைவர்கள், மதத் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மனித உரிமைகள் பாதுகாப்பு பேரவையில் சீனா தன்னுடைய வீட்டோ அதிகாரத்தை (Veto Power)பயன்படுத்தி சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதை தடுக்கும் என்ற நிலைப்பாடு  குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியா என்று உலகின் பல தரப்பினரும் சந்தேகத்தை எழுப்புவது தொடர்பிலும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த கருத்துகள் ஆதாரமற்றவை எனவும் இலங்கையை விட சீனாவோடு மிக நெருக்கமாக இருந்த சூடான், ஐ.நா பாதுகாப்பு பேரவையின்  ஊடாக  மனித உரிமை மீறல்களுக்காக  சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டபோது,  அதற்கு எதிராக எந்த நாடும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்த வில்லை என தமிழ் கட்சிகளின் தலைவர்கள் அனுப்பியுள்ள வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்காக தமிழ் மக்கள்  நீண்டகாலமாக   கோருகின்ற நீதியைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை முன்நிறுத்த பாதுகாப்பு பேரவையை தூண்டுவதற்கான பிரேரணையை நிறைவேற்ற வேண்டும் எனவும் அந்த வரைபில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையிலும் அதிகரித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் – ஒரே மாதத்தில் 26 பேர் பலி !

உலகின் பல நாடுகளில் துப்பாக்கிச்சூட்டு கலாச்சாரம் அதிரித்துவருகின்றது. அமெரிக்காவில் அடுத்தடுத்து பொது இடங்களில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருவது உலகநாடுகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இலங்கையிலும் துப்பாக்கிச்சூட்டு சமபவங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஒரு மாத காலத்தினுள் பதிவாகியள்ளது.

கடந்த மே மாதம் 30ஆம் திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு பிரயோகங்களுக்கு இலக்காகி 26 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கிடையில் காணப்படும் தகராறுகள் காரணமாக இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று(31) ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டமை இறுதியாக இடம்பெற்ற சம்பவமாக பதிவாகியுள்ளது.

கைச்சாத்தானது இலங்கைக்கும் – சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் கைச்சாத்தானது ஒப்பந்தம் !

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவும் ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளது.

இதன்படி, எதிர்காலத்தில் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை விரிவான நிதியுதவி வசதிகளின் கீழ் பெறும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வசதி 48 மாதங்களுக்கு செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின்  பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது, அதே நேரத்தில் நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாத்தல் மற்றும் ஊழல் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான கட்டமைப்பு சீர்திருத்தங்களை முடுக்கிவிடுதல் மற்றும் இலங்கையின் வளர்ச்சி திறனை வெளிப்படுத்துதலுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

 

சர்வதேச நாணய நிதியத்தின் பீட்டர் ப்ரூயர் மற்றும் மசாஹிரோ நோசாகி ஆகியோர் தலைமையிலான குழுவினர், 2022 ஓகஸ்ட் 24 ஆம் திகதி சிறிலங்கா மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கான ஆதரவு குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக கொழும்புக்கு விஜயம் செய்தனர்.

இந்த நிலையில் இலங்கையுடன் உடன்பாடு எட்டப்பட்ட செய்தியை மெசர்ஸ் ப்ரூயர் மற்றும் நோசாகி ஆகியோர் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கல்லில் இந்திய கர்ப்பிணித்தாய் மரணம் – பதவி விலகிய போர்த்துக்கல் சுகாதாரத்துறை அமைச்சர் !

போர்த்துக்க்கல் நாட்டில் சுற்றுலா வந்திருந்த இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக லிஸ்பனில் உள்ள சான்டா மரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குறை மாதத்தில் பிறந்ததால் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதிகள் காலியாக இல்லை. எனவே, அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளனர்.

 

இதையடுத்து தாயையும் குழந்தையையும், சாவ் பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் தாயின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. வாகனத்திலேயே அவரை மயக்க நிலையில் இருந்து மீட்பதற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சாவ் பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

முறையான மருத்துவ சேவை வழங்காமல் அலட்சியமாக இருந்ததே கர்ப்பிணி மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நிர்வாக ரீதியாக நடந்த தவறுக்கு பொறுப்பேற்று நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மார்ட்டா டெமிடோ பதவி விலகினார். அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், புதிய மந்திரி நியமிக்கப்படும் வரை, மார்ட்டா டெமிடோ பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுகாதாரத்துறை மந்திரியை தேர்ந்து எடுப்பதற்காக வரும் 15ம் திகதி அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல், சுகாதாரத் துறையில் இருந்து செயலாளர்கள் அன்டோனியோ லசெர்டா சேல்ஸ் மற்றும் மரியா டி பாத்திமா பொன்சேகா ஆகியோரும் பதவி விலகி உள்ளனர்.

“பயங்கரவாத நாடான இலங்கைக்கு யாரும் பணம் அனுப்பாதீர்கள்.”- வெளிநாட்டவர்களிடம் பொன்சேகா கோரிக்கை !

அரச பயங்கரவாதம் செயற்படும் நாடான இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் கோரிக்கை விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்று வரும் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “இந்த அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒரு பைசாகூட இந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் பசியால் சாகத் தயாராக இருந்தாலும் ஐந்து காசுகூட அனுப்ப வேண்டாம். இந்த அரசுக்கு உதவாதீர்கள். IMF இல் என்ன கிடைக்கிறதோ அதுவே கிடைக்கும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை  அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எங்கே…? – கனடாவில் ஒளிப்படங்காட்சிப்படுத்தல் !

இலங்கை  அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எங்கே என்ற கேள்வியுடன் கனடாவின் ஒன்ராறியோ மாகாணசபையின் கதவினை நோக்கி ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றுள்ளது

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஆகஸ்ட்-30 செவ்வாயன்றுஇலங்கைத்தீவில் இலங்கை அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகள் எங்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாயகத்து தாய்மார்களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவனீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது.

அந்தவகையில் கனடாவில் கனடா ஒன்ராறியோ மாகாணசபை முன்றிலில் ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றிருந்தது.

ஒன்ராறியோ மாகாணசபையில் தமிழினப் படுகொலை கற்கைநெறி தீர்மானம் நிறைவேற்றலுக்கு முழுமையாக பணியாற்றியவர்களான மாகாணமன்ற உறுப்பினரும் கலாச்சார அமைச்சின் செயலருமான மதிப்புக்குரிய லோகன் கணபதி, மாகாண கல்வி அமைச்சர் மதிப்புக்குரிய Stephen Lecce ஆகியோர் கலந்து கொண்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதிக்கான குரலை எழுப்பியிருந்தனர்.

100 ரூபாய் காசுக்காக குழந்தையை கத்தியால் வெட்டிய நபர் கைது !

கத்தி ஒன்றால் வெட்டி 7 வயது குழந்தையை கடுமையாக காயப்படுத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கந்தகெட்டிய பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது காட்டுப்பகுதியில் மறைந்திருந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, ​​சந்தேகநபர் பொலிசார் மீதும் பிரதேசவாசிகள் மீதும் கற்களை வீசித் தாக்கியதாகவும், தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் அவர் கல்லில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் மீகஹகிவுல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபரின் தாக்குதலுக்கு இலக்கான குழந்தை பலத்த வெட்டுக்காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 7 மணித்தியால சத்திரசிகிச்சையின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளது.

குழந்தை தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்பாவின் கைப்பேசிக்கு மீள்நிரப்பு அட்டை ஒன்றை வாங்குவதற்காக பாதிக்கப்பட் குழந்தை கையில் 100 ரூபாயுடன் கடையொன்றுக்கு சென்றுள்ளது. அப்போது மர்மநபர் குழந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

குழந்தை வைத்திருந்த 100 ரூபாயை கேட்டு அந்த நபர் குழந்தையை தாக்கியிருக்கலாம் என குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார். குறித்த நபர் கடந்த சில நாட்களாக கத்தி ஒன்றுடன் அப்பகுதியில் சுற்றித் திரிவதாகவும், அந்தக் கத்தியால் குழந்தையைத் தாக்கியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குழந்தை வைத்திருந்த 100 ரூபாய், கடை அருகே தரையில் கிடந்துள்ள நிலையில் பொலிஸார் அதனை கைப்பற்றியுள்ளனர்.

மூட்டைகளையும் அவமானங்களையும் நையாண்டிகளையும் சுமந்து சாதித்த அக்காச்சி அனுஜா – காணொளி இணைப்பு !

இலங்கை ஒரு தொழில் முனைவோருக்கு சாதகமான ஒரு நாடு அல்ல. உலகத் தரவரிசையில் தொழில்முனைவோருக்கு சாதகமான நாடுகளின் வரிசையில் இலங்கை 80வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான்இ எல் சல்வடோர் ஆகிய நாடுகள் முறையே 99வது 100வது இடத்தில் உள்ளன. வழமை போல் ஐக்கிய அமேரிக்கா முதலாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இவ்வாறான தொழில்முனைவோருக்கு சாதகமற்ற யுத்தம் தின்ற கிளிநொச்சி மண்ணில் பெண்ணாகப் பிறந்து ஒரு தொழில் முனைவோர் ஆக வருவது என்பது சாதாரண விடயமல்ல.

இளம்பெண்ணாக குடும்பத்தின் சமூகத்தின் எல்லைக்கோடுகளைக் கடந்து செல்வது ஒன்றும் இலகுவான விடயங்களே அல்ல. தங்களை அழகுப் பொருட்களாக காட்சிப்படுத்தி வலம் வரும் போருக்குப் பின்னான இளைய சமூகத்தின் மத்தியில் மூட்டைகளையும் அவமானங்களையும் நையாண்டிகளையும் சுமந்த ஒரு இளம்பெண் அனுஜா தன் அனுபவத்தை லிற்றில் எய்ட் மாணவர்களோடு பகிர்ந்துகொள்கின்றார்.

ஓகஸ்ட் 20 அன்று லிற்றில் எய்ட் அமைப்பு நிகழ்த்திய தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு மற்று கண்காட்சி விற்பனையில் கலந்துகொண்ட அனுஜா ராஜ்மோகன் தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய பண்புகளை தனது அனுபவத்தினூடாக முன்வைக்கின்றார். ஒவ்வொரு தொழில் முனைவோரும் பெண்ணும் அனுஜாவின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றது. குடும்பத்தினரால் சமூகத்தால் ஓரம்கட்டப்பட்டு மணவாழ்க்கை வாய்க்கப்பெறாது என்று ஒதுக்கப்பட்ட அனுஜா அக்காச்சி ஆன கதையல்ல நிஜம்.

“சீனாவுடன் இலங்கை தீவிரமாக செயல்படும் என்று நம்புகிறோம்.”- சீனா அறிவிப்பு !

சர்வதேச நாணய நிதியத்தின் நெருங்கிய நண்பர், அண்டை நாடு மற்றும் முக்கிய பங்குதாரர் என்ற வகையில், இலங்கை தொடர்பில் தாம் எப்போதும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச நிதி நிறுவனங்களை ஊக்குவித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனத் தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சிரமத்திலிருந்து மீள, கடன் நிவாரணம் மற்றும் நிலையான அபிவிருத்தியை அடைவதில் இலங்கையின் பதிலளிப்புக்கு ஆதரவளிப்பதில் தொடர்ந்தும் சாதகமான பங்களிப்பை வழங்குமாறு சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு தாம் அழைப்பு விடுத்துள்ளதாக சீன தூதரகம் அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்திய பின்னர், சீன நிதி நிறுவனங்கள் சீனா தொடர்பான முதிர்ந்த கடன்களைக் கையாள சரியான வழியைக் கண்டறிவதற்கும், தற்போதைய சிரமங்களைச் சமாளிக்க இலங்கைக்கு உதவுவதற்கும் தங்கள் தயார்நிலையை வெளிப்படுத்தியுள்ளன.

சீனாவுடன் இலங்கை தீவிரமாக செயல்படும் என்று நம்பும் அதேவேளை, சாத்தியமான தீர்வை விரைவாக உருவாக்கும் என்று நம்புவதாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

‘இலங்கையில் பத்தில் மூன்று பேர் உணவுப் பாதுகாப்பில்லை.”- ஐக்கிய நாடுகள் சபை விசனம் !

இலங்கையில் பத்தில் மூன்று பேர் உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் உணவுத் திட்டத்தின் செயலாளர் ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை எதிர்கொண்டுள்ள மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் அதில் தெரிவித்துள்ளார்.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நடுத்தர வருமான நாடுகளை விட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 90 சதவீதத்தை எட்டியுள்ளது. இது வாழ்வாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் திட்டங்களை பாதித்துள்ளது. இதனால் மில்லியன் கணக்கான மக்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுகின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம், கிட்டத்தட்ட 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்றவர்களாகவும் உதவி தேவைப்படுபவர்களாகவும் இருப்பதாகவும் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்களுக்கு அவசர உணவு உதவி தேவைப்படுவதாகவும் குறிப்பிடுகிறது.