இலங்கை ஒரு தொழில் முனைவோருக்கு சாதகமான ஒரு நாடு அல்ல. உலகத் தரவரிசையில் தொழில்முனைவோருக்கு சாதகமான நாடுகளின் வரிசையில் இலங்கை 80வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான்இ எல் சல்வடோர் ஆகிய நாடுகள் முறையே 99வது 100வது இடத்தில் உள்ளன. வழமை போல் ஐக்கிய அமேரிக்கா முதலாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இவ்வாறான தொழில்முனைவோருக்கு சாதகமற்ற யுத்தம் தின்ற கிளிநொச்சி மண்ணில் பெண்ணாகப் பிறந்து ஒரு தொழில் முனைவோர் ஆக வருவது என்பது சாதாரண விடயமல்ல.
இளம்பெண்ணாக குடும்பத்தின் சமூகத்தின் எல்லைக்கோடுகளைக் கடந்து செல்வது ஒன்றும் இலகுவான விடயங்களே அல்ல. தங்களை அழகுப் பொருட்களாக காட்சிப்படுத்தி வலம் வரும் போருக்குப் பின்னான இளைய சமூகத்தின் மத்தியில் மூட்டைகளையும் அவமானங்களையும் நையாண்டிகளையும் சுமந்த ஒரு இளம்பெண் அனுஜா தன் அனுபவத்தை லிற்றில் எய்ட் மாணவர்களோடு பகிர்ந்துகொள்கின்றார்.
ஓகஸ்ட் 20 அன்று லிற்றில் எய்ட் அமைப்பு நிகழ்த்திய தொழில் முனைவோருக்கான கருத்தரங்கு மற்று கண்காட்சி விற்பனையில் கலந்துகொண்ட அனுஜா ராஜ்மோகன் தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய பண்புகளை தனது அனுபவத்தினூடாக முன்வைக்கின்றார். ஒவ்வொரு தொழில் முனைவோரும் பெண்ணும் அனுஜாவின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள நிறையவே இருக்கின்றது. குடும்பத்தினரால் சமூகத்தால் ஓரம்கட்டப்பட்டு மணவாழ்க்கை வாய்க்கப்பெறாது என்று ஒதுக்கப்பட்ட அனுஜா அக்காச்சி ஆன கதையல்ல நிஜம்.