24

24

அதிகளவு போதைப்பொருள் பயன்பாடு – யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு இளைஞன் பலி !

யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இன்று (24) அதிகாலை உயிரிழந்தார் என்று இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் பயன்படுத்தியதனால் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபருடைய உயிரிழப்புக்கு ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவு எடுத்துக் கொண்டமையே காரணம் என மருத்துவ பரிசோதனையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அவர் கூலிக்காக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்” என்றும் காவல்துறையினர் கூறினர்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் கடந்த 6 மாதங்களில் 10 இற்கும் மேற்பட்டோர் ஹெரோயினுக்கு அடிமையாகி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரணில் அரசாங்கத்தின் தேசிய பேரவையில் சி.வி.விக்கி, கஜேந்திரகுமார் – தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என்கிறது கூட்டமைப்பு!

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை களுத்துறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு விசனம் வெளியிட்டுள்ளார்.

சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து வேலை செய்வதானது தமிழ் மக்களின் எதிர்காலத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.” என தெரிவித்துள்ளார்.

……………………….

கடந்த நல்லாட்சி அரசு காலத்திலும் சரி, 2009ஆம் ஆண்டு முதல் மகிந்தராஜபக்ச தரப்பினரையும் எதிர்க்கவும் சரி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினருடன் இரா.சாணக்கியன் அங்கத்துவம் வகிக்கும் தமிழ்தேசியகூட்டமைப்பு இணைந்து செயலாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கடந்த பல ஆண்டுகளாக ரணில் விக்கிரமசிங்க தமிழர் தேசியபிரச்சினைக்கு தீர்வு வழங்ககூடிய தலைவர் என கூறி வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சி.வி விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் ரணில் அரசாங்கத்தின் தேசிய பேரவையில் இணைந்தது தொடர்பில் இரா.சாணக்கியன் விசனம் தெரிவித்துள்ளார்.

யாழில் ஹெரோயின் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பம் !

யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டார்.

இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை குறித்த சிறுமி போதைப்பொருளினை பெற்றுக்கொள்வதற்காக பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபட்டமையினால் தான் கர்ப்பம் தரித்தார் என தெரிவிக்கப்படுகிறது.

“யுத்தத்தின் வலிகள் எனக்கும் தெரியும். யுத்த இழப்புக்கள் எனக்கும் உள்ளது.”- கிளிநொச்சியில் கருணா அம்மான் !

“யுத்தத்தின் வலிகள், பாதிப்புக்கள் எனக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. நானும் எனக்கான அண்ணன் ஒருவரை யுத்தத்தில் பறி கொடுத்துள்ளேன்.” என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (24) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கருணா அம்மான் படையணி என புதிய இளைஞர் அணி ஒன்றை உருவாக்கியுள்ளோம். காரணம் அடுத்து வரும் காலம் இளைஞர்கள் கையில் கொடுக்க வேண்டும். இன்று எமது பாராளுமன்ற உறுப்பினர்களை தூக்கி சென்று பாராளுமன்றத்தில் அமர்த்த வே்ண்டும். நடக்க முடியாத நிலையில் பாராளுமன்றம் சென்று எவ்வாறு எமக்கு சேவை செய்யப்புாகின்றார்கள். இந்த நிலையில் இளைஞர்கள் கையில் அடுத்த காலம் செல்ல வேண்டும். அதற்காகவே தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து பயணிக்கின்றோம்.

யுத்தத்தின் வலிகள், பாதிப்புக்கள் எனக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. நானும் எனக்கான அண்ணன் ஒருவரை யுத்தத்தில் பறி கொடுத்துள்ளேன். அவ்வாறு நீ்களும் உறவுகளையும், அங்கங்களையும் இழந்து இன்றும் மாறாத வடுக்களுடன் வாழ்கின்றீர்கள். தொடர்ந்தும் கடந்த காலங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதில் பயன் இல்லை. அவ்வாறு பெசுவதென்றால் நிறைய பேசக்கூடியதாக இருக்கும். அவற்றை விட்டுவிட்டு, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

அகில இலங்கை ரீதியில், மட்டக்களப்பை சேர்ந்த மாணவன் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதனை நாங்கள் பாராட்டியாக வேண்டும். அவ்வாறு கல்வியில் நாம் இன்றும் பின்னால் செல்லவில்லை. அதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் எவ்வாறு முன்னுக்கு வரலாம் என்பது தொடர்பில் நாங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினையானது இன்னும் 5 ஆண்டுகளிற்கு குறையப்போவதில்லை. தவறான ஜனாதிபதி ஒருவரை நாங்கள் தெரிவு செய்தமையால் இன்று நாட்டின் பொருளாதாரம் அதளபாதாளத்திற்குள் சென்றுள்ளது. மாற்றங்களை உருவாக்கலாம் என்ற நோக்கில் நானும் பின்னால் நின்றேன். எவரது ஆலோசனைகளையும் கேட்காது பல முடிவுகளை தன்னிச்சையாக எடுத்ததன் விளைவினை இன்று நாங்கள் அனுபவிக்க வேண்டி உள்ளது. பசளைக்கு தடை விதித்தமையால் ஏற்பட்ட விவசாய உற்பத்தியின் பாதிப்ப பொருளாதாரத்தை சரிவடைய செய்தது.

அதனால் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பினை சந்தித்தார். தொடர்ந்து பல பொருட்களிற்கு தடை விதிக்கப்பட்டது. அதனால் நாட்டின் பொருளாதாரம் படு வீழ்ச்சி அடைந்தது. மஞ்சளிற்கு விதிக்கப்பட்ட தடையால் 6,000 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு, பல்வேறு வகையில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினை இன்று நாங்கள் அனுபவித்த வருகின்றோம். அதனால் மக்கள் கிளர்ச்சி ஒன்று ஏற்பட்டு நாட்டை விட்டு களைக்கப்பட்டு, எந்தவொரு நாடும் தஞ்சம் கொடுக்காத நிலையில் மீண்டும் நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.

எனவே நாங்கள், பொருளாதாரம், கல்வி உள்ளிட்ட விடயங்களில் வடக்க கிழக்கு மக்கள் சிந்திக்க வேண்டும். அதற்கான முன்னேற்றத்திற்கான பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்திற்கு எதிராக கொழும்பில் மீண்டும் போராட்டம் !

தலைநகர் கொழும்பில் முக்கியமான பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று(23/09/2022) வெளியிட்டுள்ளார்.

இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்குரிய தகுதியான அதிகாரியாக பாதுகாப்புச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் காவல்துறைமா அதிபரின் அனுமதியின்றி,

அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் ஊர்வலமோபொதுக் கூட்டமோ நடத்த முடியாது.

பாதுகாப்பு வலயத்திற்குள் பட்டாசு வெடிக்க கட்டாய தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனை மீறி செயற்படும் மக்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய,

  • நாடாளுமன்ற வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதி,
  • அதிபர் செயலகம்,
  • அதிபர் மாளிகை,
  • பிரதமர் அலுவலகம்,
  • அலரி மாளிகை,
  • உச்ச நீதிமன்றம் உட்பட நீதிமன்ற வளாகம்,
  • கொழும்பு நீதவான் நீதிமன்ற வளாகம்,
  • சட்டமா அதிபர் திணைக்களம்,
  • இராணுவத் தலைமையகம்,
  • விமானப்படைத் தலைமையகம்,
  • கடற்படைத் தலைமையகம்,

இந்தநிலையில் உயர் பாதுகாப்பு வலய பிரகடனத்திற்கு எதிராக மருதானை – டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய போராட்டத்தால் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் சற்றுமுன் போராட்டக்காரர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

மேலும் போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருந்திரளான காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை பாடத்திட்டத்தில் சைகை மொழியை அறிமுகப்படுத்துமாறு கோரி போராட்டம் !

விசேட தேவையுடைய பிள்ளைகளின் பாடசாலை பாடத்திட்டத்தில் புதிய பாடமாக சைகை மொழியை அறிமுகப்படுத்துமாறு கோரி மொனராகலை நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விசேட தேவையுடைய சிறுவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 25 பேர் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கைக் கல்விமுறைமை மௌனமான உடைவுகள் … அல்ல முற்றாக தகர்கப்பட வேண்டியவை:

இலங்கை 1948இல் பெயரளவில் சுதந்திரம் பெற்றாலும் கல்வி, பொருளாதாரம், சிந்தனைமுறை போன்ற விடயங்களில் இன்னமும் காலனித்துவத்தின் பிடியில் இருந்து வெளிவர முயற்சிக்கவில்லை. அதற்குக் காரணம் இலங்கையில் இன்னமும் பிரித்தானியாவின் காலனித்துவக் கல்வி முறையே நடைமுறையில் உள்ளது. பொருளாதாரமும் பிரித்தானிய – அமெரிக்க நாடுகளில் தங்கியிருக்கும் வகையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் பிணைக்கப்பட்டே கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியில் இலங்கை ஒரு பொருளாதார நெருக்கடியை சந்திக்க நிர்ப்பந்திக்கப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. இந்தப் பொருளாதார நெருக்கடியினால் சரியான பொருளாதாரப் பாதையில் இலங்கை சென்றுவிடக்கூடாது என்பதற்காக பிரித்தானிய – அமெரிக்க நவகாலனித்துவம் போராட்டத்தைத் தூண்டிவிட்டு இன்று மீண்டும் இலங்கையை தங்களது நலனுக்கு சேவை செய்ய நிர்ப்பந்திக்கின்றது. இங்கு பதிவு செய்ய வந்தவிடயம் பொருளாதாரம் அல்ல.

செப்ரம்பர் 16, 2022 அன்று ‘மௌனமான உடைவுகள் …‘ தொடரில் சோதணைகளும் … சாதனைகளும் … வேதனைகளும் என்ற தலைப்பில் அழகு குணசீலன் மட்டக்களப்பின் கல்வி பற்றி பேசி கல்வி தொடர்பான பரந்த ஒரு கருத்தைப் பதிவு செய்திருந்தார். அதற்கான எதிர்வினையே இது. அழகு குணசீலனின் பதிவின் சாரம்சம் இது தான்: சிறிய தொகையான மாணவர்கள் பரீட்சைகளில் நல்ல பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைக்கின்றார்கள் பெரும்பாலானவர்கள் வசதிகள், வாய்ப்புகள் இல்லாமல் தோல்வி அடைகிறார்கள். வேதனை அடைகின்றார்கள். அரசியல் வாதிகளும் கனவான்களும் சாதனைகளுக்கு மட்டுமல்ல வேதனைகளுக்கும் பொறுப்பேற்க வேண்டுமென்கிறார் அவர். இதற்கு ஏற்றத் தாழ்வான சமூக, பொருளாதார, அரசியல் சூழலலே காரணம் என்று மிகச் சரியாகவே அடையாளம் கண்டுள்ள அவர் சமூக நீதியைக் கோருகின்றார்.

இந்தக் காலனித்துவக் கல்விமுறை என்பதே ஏற்றத் தாழ்வான சமூக, பொருளாதார, அரசியல் சூழலை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட கல்வி முறை. இந்தக் கல்வி முறை ஒரு போதும் சமூக நீதியைக் கொண்டுவராது. இந்தக் கல்வி முறையை நீங்கள் சீர்செய்ய முடியாது. இந்தக் கல்வி முறை முற்றாகத் தகர்க்கப்பட வேண்டும். வறுமையின் பிடியில் கல்வி கற்று அமெரிக்க ஹவார்ட் பல்கலைக்கழக விரிவுரையாளரான போலோ பெரேரே இக்கல்வி முறையை ‘வங்கி வைப்பீட்டு முறைமை’க்கு ஒப்பிடுகின்றார். அதாவது ஆசிரியர்கள் மாணவர்கள் மீது தகவல்களை வைப்பிடுகின்றார்கள். திணிக்கின்றார்கள். இன்னும் விரிவாக ஆராய்ந்தால் (அரசியல்) அதிகார வர்க்கத்தினால் அதன் நலன்களுக்கு சேவை செய்யும் கல்விமுறை மாணவர்கள் மீது திணிக்கப்படுகின்றது என்கிறார் போலோ பெரேரே.

இந்தக் கல்விமுறையானது ஒடுக்குபவர்களால் ஒடுக்கப்படுபவர்கள் மீது திணிக்கப்படும் கல்வி முறையாகும். இக்கல்விமுறையானது ஒரு போதும் சமூக நீதியைக் கொண்டுவரமாட்டாது. இன்று மேற்குலகில் ஊட்ப்படுகின்ற கல்விமுறை கூட பெரும்பாலும் பெரும் கோப்ரேட் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை உருவாக்குகின்ற கல்விமுறையே. இக்கல்வி முறையில் முகாமையாளர்கள் நேர்மையானவர்களாகவும் தொழிலாளர்கள் களவாணிப்பயல்களாகவுமே சித்தரிக்கப்படுகின்றனர். இக்கல்விமுறை பரந்த சிந்தனையை தடுக்கின்றது. கட்டத்துக்கு வெளியே சிந்திப்பதைத் தடுக்கின்றது. ஆக்கத்திறனைத் தடுக்கின்றது. சமூகப் பார்வையைத் தடுக்கின்றது.

போலோ பெரேரே உடைய வாதத்தை ஆதரிக்கின்ற வகையிலேயே பிரித்தானிய பிரதமர்களின் தெரிவு அமைந்துள்ளது. தற்போதைய பிரித்தானிய பிரதமர் லிஸ் ரஸ்ட் வரையான 56 பிரதமர்களும் பெரும்பாலும் விரல் விட்டு எண்ணக்கூடிய கல்லூரிகளில்: ஈற்றின் கொலீஜ், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகங்கம் ஆகியவற்றிலேயே கல்வி கற்றுள்ளனர். பிரித்தானியாவில் இன்றும் கிரம்மர் ஸ்கூல், ஸ்ரேற் ஸ்கூல் என்ற பிரிவினை உண்டு. தேவாலயங்களின் கட்டுப்பாட்டில் பெரும்பாலும் உள்ள கிரம்மர் ஸ்கூலுக்கு தெரிவுப் பரீட்சை மூலம் திறமையான மாணவர்கள் உள்வாங்கப்படுவார்கள்.

இப்பாடசாலைகளுக்கு அரசு மேலதிக சலுகைகளை வழங்குகின்றது. இம்முறைமை பிரித்தானிய கொன்சவேடிவ் அரசினுடைய கொள்கை. வசதியானவர்களை திறமையானவர்களை ஊக்குவித்து அவர்களை அதிகார மையமாக்குவது. ஸ்ரேற் ஸ்கூல் என்பது அவ்வப்பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்கான அரச பாடசாலைகள்.

இதே மாதிரியான கல்விமுறையை இலங்கையிலும் காணலாம். யாழ்ப்பாண இந்துக் கல்லூரி, கொழும்பு ரோயல் கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் கற்றவர்கள் பொதுவாக அதிகார மையங்களாக உருவாகுவார்கள். முல்லைத்தீவில் என்னதான் படித்து வந்தாலும் பருந்தாக முடியாது. இது தான் தற்போதைய கல்விக்கொள்கைக்கு பின்னால் உள்ள நோக்கம். அதாவது அவரவர் அவரவர் இடத்திரேயே இருக்க வேண்டும். ஏழை ஏழையாகவும் பணக்காரன் பணக்காரணாகவும் இருக்க வேண்டும். வளர்முக நாடு வளர்முக நாடாக கடன் கார நாடாகவே தான் இருக்க வேண்டும். பொருளாதாரப் பிரச்சினைக்கு ஐஎம்எப் மற்றும் உலக வங்கியிடம் கடன் வாங்கித்தான் பிரச்சினையை தீர்க்க முடியும் என்று தான் இந்தக் கல்விமுறை ஊட்டி இருக்கின்றது. அதற்கு வெளியே மாற்றீடு பற்றிச் சிந்திப்பதற்கான சிந்தனை முறை இவர்களிடம் இராது. ஒரு உள்ளங்கையில் அடங்கும் அப்பிளை வைத்து அவர்கள் ஒரு தொகை பண்டங்களைத் தயாரிக்கின்றார்களே நாங்கள் அப்பிளைப் போன்று பத்து மடங்கு பெரிய பிலாப்பழத்தை வைத்து பெரிதாக எந்தப் பண்டத்தையும் செய்வதில்லை. காலணித்துவச் சிந்தனையும் காலணித்துவக் கல்விமுறையும் அதற்கு எங்களை அனுமதிக்காது.

பிரித்தானிய – அமெரிக்க கூட்டினால் தூண்டப்பட்டு நடைபெற்ற போராட்டத்தினால் பதவி துறந்த கோட்டபாய ராஜபக்ச அரசால் இவ்வாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருந்தது. சில ஆண்டுகளாகவே பல மில்லியன்கள் செலவிடப்பட்டு, பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு பெருமளவில் பயிற்சிகளும் வழங்கப்பட்டு இருந்தது. ரணில் விகிகரமசிங்க பதவியேற்று ஒரு சில தினங்களிலேயே புதிய பாடத்திட்ட அமுலாக்கத்திற்காக உருவாக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டது. புதிய பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கும் பிரித்தானியாவின் காலனித்துவ கல்விமுறையான போட்டிப் பரீட்சையின் முக்கியத்துவத்தை மூப்பது வீதமாகக் குறைத்து மாணவர்களுக்கு நேரடியான செய்முறைத் திட்டங்கள் எழுபது வீதமாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு இருந்தது.

தற்போது நடைமுறையில் உள்ள போட்டிப் பரீட்சைமுறை மாணவர்கள் பரீட்சைகளில் சித்தியடைவதையே இலக்காகக் கொண்டுள்ளது. நடைமுறையில் தொழில்துறைகளுக்குக் கூட இக்கல்விமுறை பெரிதாக உதவவில்லை. இப்பரீட்சைகளில் மிகத்திறமையாக சித்தியடைந்த மாணவர்கள் கூட தங்களுக்கோ சமூகத்திற்கோ எவ்வித பயனும் இல்லாமல் வாழ்கின்றனர். அல்லது தற்கொலை செய்கின்றதை காண்கிறோம். இந்தக் கணணி உலகில் கூட பல மாதங்கள், ஆண்டுகள் கற்றதை மனனம் செய்து, ஞாபகத்திற்குக் கொண்டுவந்து பரீட்சை எழுதித் தான் ஒரு மாணவன் தன்னுடைய ஆளுமையை திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆயினும் இந்நடைமுறை இறுக்கமாக பின்பற்றக் காரணம் கல்வியை பலருக்கும் எட்டாக் கனியாக வைத்திருப்பதனூடாக சமூக ஏற்றத்தாழ்வுகளை தக்கவைத்து தற்போதைய சமூகக் கட்டமைப்பைப் பேணுவதே.

கடந்த அரசின் புதிய கல்வித்திட்டம் அமூல்படுத்தப்படுமானால் சுதந்திரத்திற்குப் பின் இலங்கையின் கல்விக் கொள்கையில் ஏற்பட்ட பாரிய திருப்பு முனையாக அது அமையும். போலோ பெரேரே குறிப்பிடும் விடுதலைக் கல்வி என்பதும் இது சார்ந்ததே. மாணவர்களை பிரச்சினைகளை எதிர்கொள்ள வைப்பதன் மூலம் அதற்கான தீர்வுகளைத் தேடத் தூண்டுவது. அதுவே மாணவர்களை அடிமைத் தளைகளில் இருந்து விடுதலை செய்யும் என்கின்றார்.