17

17

“கிரிக்கெட்டில் வென்றாலும் ஆப்கானிஸ்தானை விட நாம் வீழ்ச்சியடைந்த நிலையிலுள்ளோம்.”- ஜனாதிபதி ரணில்

“கிரிக்கட் விளையாட்டுக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் சிறந்த உதாரணத்தை தசுன் வழங்கியுள்ளார்.” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்ட வலைப்பந்தாட்ட வீராங்கனைகள், கிரிக்கட் வீரர்கள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள சினமன் லேக் சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கயாஞ்சலி அமரவன்சவுடனான வலைப்பந்தாட்ட அணியும் , தசுன் ஷானக தலைமையிலான கிரிக்கட் அணியும் ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைப் போன்று நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். காரணம் இந்த வெற்றிகள் எமக்கு கிடைக்க வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.

கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானுடன் போட்டியிட்டு நாம் தோல்வியடைந்தோம். எனினும் இந்த தோல்வியைக் கண்டு எமது அணி பின்வாங்கவில்லை. தசுன் இந்த தோல்வியை , தமது அணியை பலமிக்கதாக்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இது கிரிக்கட் விளையாட்டுக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் சிறந்த உதாரணத்தை தசுன் வழங்கியுள்ளார்.

இலங்கை இன்று ஆப்கானிஸ்தானை விடவும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே உள்ளது. இந்நிலைமையிலிருந்து மீள முடியாது என்று சிலர் எண்ணுகின்றனர். கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த போது இலங்கை கிரிக்கட் அணி பின்வாங்காமல் பலத்துடன் அடுத்த கட்டத்திற்குச் சென்றது.

அதேபோன்று நாமும் தோல்வியை வெற்றியடைவதற்கான ஆயுதமாக்கிக் கொண்டால் விரைவில் நெருக்கடிகளிலிருந்து மீள முடியும்.

தற்போது நாம் ஆப்கானிஸ்தானை விட வீழ்ச்சியடைந்துள்ளோம். சிலர் இந்த நெருக்கடிகளிலிருந்து மீள முடியாது என்று எண்ணுகின்றனர். தசுனைப் போன்று அனைவரும் எண்ணினால் இந்த நெருக்கடிகளிலிருந்து நிச்சயம் மீள முடியும்.

நாம் ஆசியாவில் மாத்திரமின்றி முழு உலகிலும் வெற்றியாளர்களாவதற்கு , எவ்வித அச்சமும் இன்றி உலகத்துடன் போட்டியிடத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் உலகத்துடன் போட்டியிடுவதற்கு பதிலாக, உலகிலுள்ள சட்டங்களை எமது வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கே நாம் பழக்கப்பட்டுள்ளோம். இது ஒருபோதும் சாத்தியமாகவில்லை.

இதற்கு முன்னர் இது போன்ற வெற்றிகளின் ஒரு பங்கினை அரசியல்வாதிகள் தம்வசப்படுத்திக் கொண்டனர். எனினும் நாம் அந்த நடைமுறையை முற்றாக நீக்கி, வெற்றியின் நூற்றுக்கு 200 சதவீத பங்கினையும் வீர, வீராங்கனைகளுக்கே உரித்தாக்கியுள்ளோம் என்றார்.

இலங்கைக்கு புத்துயிர் அளிக்க வாருங்கள் – வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் குமார் சங்கக்கார கோரிக்கை !

வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு புத்துயிர் அளிக்கும் முயற்சியில் இலங்கைக்கு வருகை தருமாறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார அழைப்பு விடுத்துள்ளார்.

https://www.facebook.com/Official.Kumar.Sangakkara/posts/pfbid0CRNjvqWUo1jXh44y2G7EXZYdTfb6ugn6iyFaeVoEwGCMXnzzuBZkz2fwr49Xz4fcl

உள்ளூர் புகைப்படக் கலைஞர் பிரதீப் கமகேயினால் பிடிக்கப்பட்ட இலங்கையின் இயற்கை காட்சிகளை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்ட குமார் சங்கக்கார,

“நிச்சயமாக பிரமிக்க வைக்கிறது! எங்கள் தீவு மிகவும் வித்தியாசமானது மற்றும் அழகானது.

குறித்த படங்களை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுத்துள்ள குமார் சங்கக்கார, இலங்கை மீண்டும் விருந்தினர்களுக்கான திறக்கப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்..

தனது பேஸ்புக் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ள குமர் சங்கக்கார,

“எங்கள் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்க உலகெங்கிலும் உள்ள அனைத்து நண்பர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவை. இது ஒரு கடினமான ஆண்டு, ஆனால், நமது மக்களின் துணிச்சலான போராட்டங்கள் மற்றும் முயற்சிகளுக்கு நன்றி, இங்கு சில சாதகமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகள் பயண ஆலோசனைகளை தளர்த்துவதன் மூலம், சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறையை நம்பிக்கையுடன் மீண்டும் இங்கு கழிக்கலாம். துரதிர்ஷ்டவசமாக, தேவையற்ற செய்திகள் நல்ல செய்திகளை விட வேகமாக பரவுகின்றன. எனவே தயவுசெய்து இதனை பகிரவும், ”என்று சங்கக்கார தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தீண்டாமைக் கொடுமை – மாணவர்களுக்கு பொருட்கள் கொடுக்க மறுத்த கடை முதலாளி !

தமிழ்நாடு – தென்காசி மாவட்டத்தில் ஊர் கட்டுப்பாடு எனச் சொல்லி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பிய கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் கிராமம். பெரும்புத்தூர் ஊராட்சிக்கு உள்பட்ட இங்கு அரசுப் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வரும் வழியில் மிட்டாய் கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் குழந்தைகள் மிட்டாய் வாங்கிச் சாப்பிடுவது வழக்கம்.

இந்நிலையில், கடைக்கு வந்த குழந்தைகளிடம் கடைக்காரர் , “இனிமேல் நீங்கள் யாரும் இங்கு வந்து தின்பண்டம் வாங்க வேண்டாம். ஸ்கூலுக்குப் போங்க. தின்பண்டம் உள்ளுர் கடையில் வாங்கக் கூடாது. நீங்கள் போங்க. இதை உங்கள் வீட்டிலும் போய் சொல்லுங்கள். தின்பண்டம் கொடுக்க மாட்டுறாங்க எனச் சொல்லுங்க. இனி கொடுக்க மாட்டாங்கடா. ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு” என்று சொல்கிறார்.

உடனே, அதில் ஒரு குழந்தை என்னக் கட்டுப்பாடு என்று கேட்கிறார். உடனே, ‘கட்டுப்பாடுன்னா… ஊர்ல ஒரு கூட்டம் போட்டு பேசிருக்காங்க. உங்கத் தெருவுல யாருக்கும் பொருள்கள் கொடுக்கக் கூடாதுன்னு” என்று சொல்வி அந்தக் குழந்தைகளைத் திருப்பி அனுப்புகிறார்.

இதை அந்தக் கடைக்காரரே வீடியோவும் எடுத்துள்ளார். இந்த வீடியோவை அந்தக் கடைக்காரர் தன் சுய சாதியினர் இருக்கும் வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதன் பிறகு பல வாட்ஸ்அப் குழுக்கள் இந்த வீடியோ வைரல் ஆனது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட நிர்வாகம், ராமசந்திரமூர்த்தி என்பவரை கைது செய்தனர். மேலும், அந்தக் கடைக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்துக்கான பின்னணி தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினர் (கோனார் மற்றும் பட்டியல் சாதியினர்) சேர்ந்தவர்கள் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோனார் சாதியினர் பட்டியல் சாதியினரிடம் வழக்குகளை திரும்பப் பெறக் கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பட்டியல் சாதியினர் இதற்கு உடன்படவில்லை. இதையடுத்து, பட்டியல் சாதியினருக்கு தங்கள் கடைகளில் எந்த பொருளும் கொடுக்கக் கூடாது என கோனார் சமூகத்தினர் தீர்மானம் செய்ததாக கூறப்படுகிறது..

இந்த நிலையில் பாஞ்சாகுளம் கிராமத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தியுள்ளனர்.

எலிசபெத் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை – காரணம் என்ன..?

சமீபத்தில் மறைந்த பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல், பிரித்தானிய பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் ஹாலில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு நாட்டு பிரதிநிதிகளும் நேரில் வந்து ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சீன அரசு சார்பில், அந்நாட்டு உயர் அதிகாரிகள் வந்து அஞ்சலி செலுத்துவதாக இருந்தது. அதற்கு பிரித்தானிய பார்லிமென்டின் பொதுச்சபை சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல் அனுமதி மறுத்து உள்ளார்.

சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கர் முஸ்லிம்கள் மீது மனித உரிமை மீறலில் சீன பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருவது குறித்து பிரித்தானியாவை சேர்ந்த எம்.பி.,க்கள் கடந்த ஆண்டு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, பிரிட்டனை சேர்ந்த 5 எம்.பி.,க்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சீன பகுதிக்குள் நுழைய அந்நாடு தடை விதித்தது. இதையடுத்து, ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் சீன அரசு பிரதிநிதிகள்பார்லிமென்ட் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது என, எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து சீன பிரதிநிதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நடக்கும் ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்க சீன ஜனாதிபதி ஷீ ஜிங்பிங்குக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. அவர் சார்பில் துணை அதிபர் வாங் குயிஷான் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராணியின் இறுதி சடங்கில் சீனா பங்கேற்க தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் இலங்கை பெண் தொழிலாளர்கள் – ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்

இலங்கையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், நாட்டில் தற்போது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுடன் ஒத்துப்போவதில்லை. இந்தநிலையில் வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்லும் இலங்கையர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமகால அடிமைத்தனம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் டொமோயா ஒபோகாடா முன்வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையில் நன்மைகள் இலங்கையில் தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள சமகால அடிமைத்தனம் பற்றிய ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், இலங்கைத் தொழிலாளர்களின், குறிப்பாக தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகள் குறித்து அறிக்கையிட்டுள்ளார்.

தேயிலைத் தோட்டங்களில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்கள், ஆண்களை விட இரண்டு மடங்கு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்ற போதும், ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திற்கு நிகராகவே பெண்களும் சம்பளம் பெறுகின்றனர்.  அத்துடன் ஆடைத் தொழில் மற்றும் வீட்டு வேலைகளில் இதே பாகுபாடு நீடிப்பதாக விசேட அறிக்கையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் தொழிலாளர்கள் மத்தியில் உள்ள முக்கிய பிரச்சினை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையாகும். எனினும் பழிவாங்கப்படலாம் என்ற பயம் காரணமாக முறைப்பாடுகள் செய்யப்படுவதில்லை விடயத்தையும் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.