26

26

மட்டக்களப்பில் ஒரு கல்விச் சுனாமி! பல்கலைக்கழகம் செல்வோர் 200 பேர்வரையால் அதிகரிப்பு! நாடு முழவதும் பல்கலைக்கழகம் புகும் மாணர்களின் எண்ணிக்கை 16,000 மாணவர்களால் வீழ்ச்சி!!

அண்மையில் அரசு வெளியிட்ட சட் ஸ்கோர் அடிப்படையிலான பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை புள்ளிவிபரங்களின் படி 2021 பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 16,000 மாணவர்களால் மிகச் சரியாகச் சொல்வதானால் 15765 மாணவர்களால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் 192 மாணவர்களை 2020 கல்வியாண்டைக் காட்டிலிலும் 2021 கல்வியாண்டில் கூடுதலாக அனுப்பி வைத்து தீவில் ஒரு கல்விச் சாதனையை நிலை நாட்டியுள்ளது.

எண்பதுக்களில் கல்வியில் கோலோச்சிய யாழ் மாவட்டம் 2021 ஒன்று கல்வியாண்டில் 477 மாணவர்களைக் குறைவாக பல்கலைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. 2020 கல்வியாண்டோடு ஒப்பிடுகையில் இது 9.5வீதம் குறைவாகும். மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய 24 மாவட்டங்களும் சராசரியாக 9.5 வீதமான மாணவர்களை குறைவாகவே பல்கலைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. விகிதாசார அடிப்படையில் அனுராதபுரம், காலி, பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலேயே கூடுதலான 14 முதல் 15 வீதத்திற்கு வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் தலைநகர் கொழும்பில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2377 மாணவர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி காணப்படுகின்றது. பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் வீழ்ச்சியும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் வீழ்ச்சியும் அண்ணளவாக ஒரே அளவில் அதாவது 16,000 ஆகக் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு:
மட்டக்களப்பிலும் ஏனைய மாவட்டங்களைப் போன்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டாலும் பல்ககை;கழககங்களுக்குச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை 5.3 வீதத்தால் அதாவது 192 மாணவர்களால் அதிகரித்து இருக்கின்றது. இது தொடர்பாக பிரித்தானியாவில் கென்ற்இல் வதியும் கணித ஆசிரியர் டேவிட் நோபல் தேசம்நெற்க்குக் கருத்துத் தெரிவிக்கையில் சூம் வழியான கல்விச் செயற்பாடுகள் மட்டக்களப்பு மற்றும் கல்வியில் பின் தங்கியிருந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். மாணவர்கள் எந்த மூலையில் கிராமத்தில் இருந்தாலும் மறுமூலையில் உள்ள நல்லாசிரியர்களிடம் இருந்து கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டுப் பணமோகத்தின் தாக்கங்களும் அது ஏற்படுத்தும் போதைவஸ்து, மது அருந்தல் மற்றும் வாள்வெட்டுக் கலாச்சாரம் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான தமிழ் மாவட்டங்களில் குறைவாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புக தகுதிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 22வது இடத்திலிருந்து 2021 கல்வியாண்டில் 3வது இடத்திற்கு வந்து தீவில் ஒரு கல்விச் சுனாமியை ஏற்படுத்தியது. மட்டக்களப்பில் 2021 கல்வியாண்டில் 3804 பேர் பல்கலைக்கழகம் செல்லத் தகுதிபெற்றனர். அத்தோடு தமிழ்வாணணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானத்தில் தீவிலேயே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச் சுனாமி அதிரடியாக இருந்த போதும் மட்டக்களப்பு கல்வியில் இன்னமும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் செறிந் வாழ்கின்ற வடக்கு கிழக்கில், தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு ஆயிரம் பேருக்கு 6 மாணவர்களையே பல்கலைக்கழகம் அனுப்புகின்றது. கிழக்கு மாகாணத்தின் நிலையும் இதுவாகவே உள்ளது. ஆனால் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மட்டும் ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.

திருகோணமலை:
மூவின மக்களும் சரிக்குச் சமனாக வாழும் திருகோணமலை மாவட்டம் 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் 14வது இடத்தில் இருந்து 2ம் இடத்திற்குத் தாவியுள்ளது.

அம்பாறை:
அம்பாறை மாவட்டம் 2020 கல்வியாண்டில் ஆயிரம் பேருக்கு 7 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பியதில் இருந்து 2021 கல்வியாண்டில் ஆயிரம் பேருக்கு ஆறு மாணவர்களை மட்டுமே ஆனுப்பும் நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் 2020இல் 24வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு வந்துள்ளது. பல்கலைக்கழகம் புகும் தகுதியுடைய மாணவர்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் முன்னேறிப் பாய்ந்துள்ளது.

முல்லைத்தீவு:
இலங்கையில் உள்ள மாவட்டங்களில் தங்களுடைய சனத்தொகைக்கு கூடுதலான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற நான்கு மாவட்டங்களில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டம் இருக்கின்றது. 2021 கல்வியாண்டில் முல்லைத்தீவு மாவட்டம் ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்றது. வடக்கு கிழக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமே ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றது. ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற ஏனைய மாவட்டங்கள் பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் 2020இல் 17வது இடத்திலிருந்த முல்லைத்தீவு மாவட்டம் 2021 கல்வியாண்டில் 8 வது இடத்திற்கு முன்னேறி யாழ் மாவட்டத்திற்கு அடுத்த படியாக உள்ளது. ஆனாலும் ஏழாவது இடத்தில் உள்ள யாழ் மாவட்டத்தைக் காட்டிலும் முல்லைத்தீவு மாவட்டம் தனது சனத்தொகைக்கு அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றது.

மன்னார்:
மன்னார் மாவட்டம் தீவில் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மாவட்ட அடிப்படையில் மிகக் கூடுதலாக 69 வீதமான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து தீவின் முன்னணிக் கல்வி மாவட்டம் என்ற இடத்தைத் தக்க வைத்துள்ளது. யாழ் மாவட்டத்தைப் போன்று மன்னார் மாவட்டமும் ஆயிரம் பேருக்கு 7 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வருகின்றது.

வவுனியா:
பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் வவுனியா மாவட்டமும் முன்னேறிப் பாய்ந்துள்ளது. 2020 கல்வியாண்டில் தீவின் கடைசி மாவட்டமாக இருந்த வவுனியா 2021 கல்வியாண்டில் 15வது இடத்திற்கு தன்னை நகர்த்தியுள்ளது. மாணவர்களைப் பல்கலைக்கழகம் புகச் செய்யும் விகிதாசாரத்தை 59.5 வீதத்தில் இருந்து 63.5 வீதமாக வவுனியா மாவட்டம் அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி:
வடக்கு கிழக்கில் கிளிநொச்சி மாவட்டம் மட்டுமே கல்வியில் பாய்ச்சலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சறுக்கியுள்ளது. 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புகு விகிதாசாரத்தில் 21வது இடத்திலிருந்த கிளிநொச்சி மாவட்டம் 2021இல் 23வது இடத்திற்று சறுக்கியுள்ளது. மேலும் கிளிநொச்சியின் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதம் 2.5 வீகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. வடக்கு கிழக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுமே பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. யாழ் மாவட்டம் தன்னுடைய விகிதத்தை அதிகரிக்கத் தவறியிருந்தாலும் வீழ்ச்சியடையவில்லை. அண்ணளவாக தன்னுடைய முன்னைய நிலையை தக்க வைத்துக்கொண்டது.

இதன் மூலம் வடக்கு கிழக்கில் கல்வியில் பின்னிலையான மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுகின்றது.
இலங்கையிலேயே பல்கைலக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை ஆகக் கூடிய வீதத்தால் 4.72 வீதத்தால் உயர்த்திய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் முன்னணி வகிக்கின்றது. அதனைத் தொடர்ந்து பல்கைல்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை உயர்த்திய மாவட்டமாக வவுனியா மாவட்டம் திகழ்கின்றது. வவுனியா பல்கலைகம் புகும் மாணவர்களின் விகிதத்தை 3.95 ஆல் உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கில் பதுளை, யாழ்ப்பாணம் போன்று தன்னுடைய முன்னைய விகிதத்தை தக்க வைத்துக்கொண்டது. மலையகத்தைச் சேர்ந்த நுவரெலியா மாவட்டம் மட்டும் தன்னுடைய பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை 1.78 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஏனை தெற்கு மாவட்டங்கள் அனைத்துமே பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளன. ஆகக் கூடுதல் வீழ்ச்சி 5.42 வீகிதம் காலியிலும் அதனைத் தொடர்ந்து 4.94 விகிதம் வீழ்ச்சி கம்பகாவிலும் ஏற்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை கல்வியில் மட்டக்களப்பு பெரும் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் கல்வியில் குறிப்பிடத்தக்க மைல்கலை எட்டியுள்ளது. வவுனியா மாவட்டம் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தை மட்டக்களப்பு மாவட்டத்தைப் போல் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மன்னார் மாவட்டம் தொடர்ந்தும் கல்வியில் தன் நிலையை முன்னேற்றி தற்போது முதல் இடத்தில் உள்ளது. யாழ் மாவட்டம் கல்வியில் குறிப்பிடத்தக்க அசைவை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலும் தன்னிலையை தொடர்ந்தும் தக்க வைத்து வருகின்றது. ஆனால் கிளிநொச்சி தொடர்ந்தும் தன் கல்விநிலையை உயர்த்தத் தவறிவருகின்றது.

மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் இத்தாலி – முதல் பெண் பிரதமராக பொறுப்பேற்கிறார் ஜார்ஜியா மெலோனி !

இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு கடந்த 2021 ஆம் ஆண்டு மரியோ டிராகி பிரதமரானார்.அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கூட்டணி கட்சிகள் தங்களின் ஆதரவை விலக்கிக்கொண்டனர். இதன் காரணமாக, பெரும்பான்மை இல்லாததால் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி கடந்த ஜூலை மாதம் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

கருத்துக் கணிப்புகளின்படி, ஜார்ஜியா மெலோனி தலைமையிலான பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியின் கூட்டணி இந்தத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்றது. இதையடுத்து ஜார்ஜியா மெலோனி பிரதமராக தேர்வு பெற்றார்.

45 வயதான ஜார்ஜியா மெலோனி ‘ தீவிர தேசியவாதியாகவும், ஐரோப்பிய எதிர்ப்பு ஒற்றுமை தலைவராகவும் கருதப்படுகிறார். 2008 இல், பெர்லுஸ்கோனி பிரதம மந்திரியாக இருந்த போது மந்திரிசபையில் ஜார்ஜியா மெலோனியை விளையாட்டுத் துறை மந்திரியாக நியமித்தார். இந்நிலையில் தற்போது பெரும் செல்வாக்குடன் பிரதமர் வேட்பாளராக அவர் உயர்ந்துள்ளார்.

தென்னிலங்கை மக்கள் கொந்தளிக்கும் உயர் பாதுகாப்பு வலய சட்டம் 1990ஆம் ஆண்டிலிருந்தே தமிழர் பகுதிகளில் உள்ளது – சுமந்திரன்

கொழும்பில் 2 நாட்களுக்கு முன்னர் உயர் பாதுகாப்பு வலயத்தை வரையறுப்பது ஒரு புதிய நடைமுறையல்ல என்றும் குறைந்தது 1990ஆம் ஆண்டிலிருந்தே வடக்கு மற்றும் கிழக்கில் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களில் இத்தகைய சட்டவிரோத எல்லை நிர்ணயம் செய்யப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர்,

“சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் பிரகடனப்படுத்தப்பட்ட உயர் பாதுகாப்பு வலயம் தொடர்பில் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இருந்தாலும் வரலாற்று ரீதியாக 1990 ஆம் ஆண்டு முதல் வடக்கு மற்றும் கிழக்கில் இவ்வாறான வலயங்கள் இருந்தது.

அதனை சவாலுக்கு உட்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2003 இல் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பழமையானது. குறித்த வழக்கு டிசம்பர் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது” என அவர் மேலும் கூறினார்.

சட்டத்தை மீறி தொல்லியல் திணைக்களத்துக்கு 3000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் !

2018-2019 ஆண்டுகளில் மத்திய கலாசார நிதியம் சட்டத்தை மீறி 3000க்கும் மேற்பட்ட ஊழியர்களை தொல்லியல் திணைக்களத்துக்கு பணியமர்த்தியுள்ளது என்று தேசிய கணக்காய்வு அலுவலகம் கூறியுள்ளது.

இவர்களின் சம்பளத்துக்காக 106 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவ்வலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனமொன்றின் சார்பில் ஊழியர்களை பணியமர்த்துவதற்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்யப்படாததன் அடிப்படையில் இந்த நிறுவனம் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.” – அட்மிரல் சரத் வீரசேகர

“நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில் குருந்தூர் மலையில் பௌத்த மத வழிபாடுகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.”  என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

குருந்தூர் மலை – பௌத்த மத அடையாளங்களை பாதுகாப்போம் என வலியுறுத்தி,பௌத்த தேரர்கள்,சிவில் அமைப்பினர் திங்கட்கிழமை (26) சுதந்திர சதுக்க வளாகத்தில் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பௌத்த நாட்டில் பௌத்த மத பாரம்பரிய அடையாளங்கள் மற்றும் உரிமைகளை பாதுகாப்பது சிங்களவர்களின் கடமை மாத்திரமல்ல இலங்கையில் வாழும் அனைவரது கடமையாகும். 2000 வருடகாலம் பழமை வாய்ந்த குருந்தூர் மலையில் பௌத்த மத மரபுரிமைகளை பாதுகாப்பது அவசியமானது.

புழமை வாய்ந்த குருந்தூர் மலை விகாரையினை புனரமைத்து பௌத்த மத வழிபாடுகளில் ஈடுப்பட ஒருசில இனவாதிகள் இடமளிக்கவில்லை.இது முற்றிலும் வெறுக்கத்தக்கதொரு செயற்பாடாகும்.குருந்தூர் மலையில் பௌத்த மத மரபுரிமைகள் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கில் யுத்த தீவிரமடைந்த போது கொழும்பில் இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் இடம்பெற்றன. வீதியில் தேர் ஊர்வலம் சென்றன. சிங்களவர்களுக்கு பொறுமையுண்டு.நாட்டில் நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குருந்தூர் மலையில் பௌத்த மத வழிபாடுகளுக்கு தடையேற்படுத்தப்பட்டுள்ளமைக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் வெட்கப்பட வேண்டும்.

திருகோணேச்சரம் ஆலயத்தில் வளாகத்தில் உள்ள கடைகளை அகற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வலியுறுத்துகிறார்கள். நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு முன்பாக முஸ்லிம்,தமிழ் சமூகத்தினர் கடைகளை வைத்துள்ளார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இனவாதம் பேசிக் கொண்டு இனங்களுக்கிடையில் பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள். கூட்டமைப்பினர் இனவாத செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது ஓய்வூதிய திட்டம் !

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாக ‘மனுசவி’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் திங்கட்கிழமை (26) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நீண்டகால அபிலாஷையை நிறைவேற்றும் வகையில் ‘மனுசவி’ ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.

வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் ஓய்வு கால வாழ்க்கையை வலுப்படுத்தும் வகையில் ‘மனுசவி’ சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு தொழிலாளியின் உயிரையும் பாதுகாக்கும் வகையில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை விரைவில் தொடங்கவுள்ளதாக அமைச்சர் உறுதியளித்தார்.

ரஷ்ய பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 6 குழந்தைகள் உள்பட 13 பேர் பலி !

ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 6 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் நாஜி குறியீடுடன் கருப்பு கலர் டீ ஷர்ட் அணிந்திருந்ததும், துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதும் தெரிய வந்தது என போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தைகள் பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி புடின், ரஷிய பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதல் என கண்டனம் தெரிவித்தார் என கிரெம்ளின் மாளிகை குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி – பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தையை விற்ற தாய் கைது !

பிறந்து ஏழு நாட்களே ஆன தனது கைக்குழந்தையை ரூ.50,000க்கு விற்பனை செய்த இளம் தாய்.நேற்று மாலை அனுராதபுரத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் விற்பனை செய்ய உதவிய தாதி ஒருவரின் கணவருடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணுடன் வசித்து வந்த 40 வயதுடைய ஆண் ஒருவரையும், குழந்தையின் தந்தை, அரசாங்க வைத்தியசாலையின் தாதி, வைத்தியசாலையின் உதவியாளர் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பாடசாலை ஆசிரியர்கள் உட்பட மேலும் பலரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். .

மல்வத்து ஓயா ஆற்றங்கரையில் உள்ள குடிசை ஒன்றில் 40 வயதுடைய ஆண் ஒருவருடன் ஒன்றாக வசித்து வந்த கெபிட்டிகொல்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த பெண் குழந்தையை வாஹல்கட பிரதேசத்தில் உள்ள தம்பதியருக்கு விற்றுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

தமக்கு ஒன்றரை வயது மகனும் இருப்பதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு பால்மாவை இல்லாது செய்தோரே உண்மையான பயங்கரவாதிகள் – இரா. சாணக்கியன்

“உண்மையான பயங்கரவாதிகள் யார்? உரத்தை இல்லாது செய்தது யார், அந்திய செலாவணியை இல்லாது செய்தது யார், வரிசை யுகத்தை உருவாக்கியது யார், குழந்தைகளுக்கு பால்மாவை இல்லாது செய்தது யார், இவர்களே உண்மையான பயங்கரவாதிகள்” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டப்பட்டு வருகின்றது.

Gallery

இதன் ஓர் அங்கமாக நுவரெலியா, ரிகில்கஸ்கட பகுதியில் இன்று (26) நடைபெற்ற கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சாணக்கியன் இவ்வாறு கூறினார்.

இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் கையொப்பமிட்டார்.

 

 

இது தொடர்பில் இரா. சாணக்கியன் மேலும் கூறிய போது,

” பயங்கரவாத தடைச்சட்டம் என இச்சட்டத்துக்கு பெயர் இருந்தாலும், பயங்கரவாத தடுப்புக்கு எதிராக பயன்படுத்துவதில்லை. மாறாக சாதாரண மக்கள் தற்போது இலக்கு வைக்கப்படுகின்றனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்திலுள்ள சரத்துகள் பயங்கரமானவை. வழக்கு தொடுக்காமல் பல வருடங்கள் தடுப்பில் வைத்து விசாரிக்கலாம், பயங்கரவா தடைச்சட்டத்தின்கீழ் கைதான ஒருவர் காவல்துறையினருக்கு வழங்கிய வாக்குமூலத்தை நீதிமன்றத்தை சாட்சியாக பயன்படுத்தலாம்.

இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் கையெழுத்து போராட்டத்தை நாம் மார்ச் மாதமே ஆரம்பித்துவிட்டோம். ஏனெனில் இச்சட்டம் மக்கள்மீது பாயும் என்பது எமக்கு தெரியும்.

தமக்கு விசுவாசமான வியாபாரிகளுக்கு அரசாங்கம் வரிச்சலுகை வழங்கும்போதே, இந்நாடு வங்குரோத்தடையும் என்பது எமக்கு தெரியும். அந்நிய செலாவணிமீது கைவைத்தபோது, வரிசை யுகம் உருவாகும் என்பதும் தெரியும்.

இதற்கிடையில் மக்கள் எழுச்சி போராட்டம் வெடித்தது. நாட்டுக்காக போராடிய இளைஞர்கள் இன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ், தண்டிக்கப்படுகின்றனர். வசந்த முதலிகே பயங்கரவாதியா? போராட்டக்காரர்கள் பயங்கரவாதிகளா? என்றார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படி – ஜீவன் தொண்டமான்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதே உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படியாக அமையும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் அங்கமாக நுவரெலியா, ரிகில்கஸ்கட பகுதியில் இன்று (26) கையெழுத்து திரட்டப்பட்டது. இதில் பங்கேற்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஜீவன் தொண்டமான் எம்.பி. கையொப்பம் இட்டார்.

அதன் பின்னர் நுவரெலியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜீவன் தொண்டமான்,

” அரசியல் வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளது. இதற்கமையவே சாணக்கியன் எம்.பி. விடுத்த அழைப்பை ஏற்று மனுவில் நானும் கையொப்பம் இட்டேன்.

இற்றைக்கு 43 ஆண்டுகளுக்கு முன்னர் தற்காலிக தீர்வாகவே பயங்கரவாத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் போர் முடிவடைந்து பல வருடங்கள் கடந்தும் அந்த சட்டம் நீடிக்கின்றது. இதனை ஏற்க முடியாது. உண்மையான ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தின் முதல்படியாக அச்சட்டத்தை நீக்க வெண்டும்.

இது தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பயங்கரவாத தடைச்சட்டத்தை காங்கிரஸ் தற்போது எதிர்க்கவில்லை. முன்னர் இருந்தே எதிர்த்து வருகின்றோம். எமது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நீதிமன்றம்கூட சென்றுள்ளார் என்றார்.