மட்டக்களப்பில் ஒரு கல்விச் சுனாமி! பல்கலைக்கழகம் செல்வோர் 200 பேர்வரையால் அதிகரிப்பு! நாடு முழவதும் பல்கலைக்கழகம் புகும் மாணர்களின் எண்ணிக்கை 16,000 மாணவர்களால் வீழ்ச்சி!!

அண்மையில் அரசு வெளியிட்ட சட் ஸ்கோர் அடிப்படையிலான பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை புள்ளிவிபரங்களின் படி 2021 பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 16,000 மாணவர்களால் மிகச் சரியாகச் சொல்வதானால் 15765 மாணவர்களால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனாலும் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களிலில் மட்டக்களப்பு மாவட்டம் மட்டும் 192 மாணவர்களை 2020 கல்வியாண்டைக் காட்டிலிலும் 2021 கல்வியாண்டில் கூடுதலாக அனுப்பி வைத்து தீவில் ஒரு கல்விச் சாதனையை நிலை நாட்டியுள்ளது.

எண்பதுக்களில் கல்வியில் கோலோச்சிய யாழ் மாவட்டம் 2021 ஒன்று கல்வியாண்டில் 477 மாணவர்களைக் குறைவாக பல்கலைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. 2020 கல்வியாண்டோடு ஒப்பிடுகையில் இது 9.5வீதம் குறைவாகும். மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய 24 மாவட்டங்களும் சராசரியாக 9.5 வீதமான மாணவர்களை குறைவாகவே பல்கலைக்கழகம் அனுப்பி வைத்துள்ளது. விகிதாசார அடிப்படையில் அனுராதபுரம், காலி, பொலநறுவை ஆகிய மாவட்டங்களிலேயே கூடுதலான 14 முதல் 15 வீதத்திற்கு வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் தலைநகர் கொழும்பில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2377 மாணவர்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக, உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி காணப்படுகின்றது. பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் வீழ்ச்சியும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் வீழ்ச்சியும் அண்ணளவாக ஒரே அளவில் அதாவது 16,000 ஆகக் காணப்படுகின்றது.

மட்டக்களப்பு:
மட்டக்களப்பிலும் ஏனைய மாவட்டங்களைப் போன்று உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டாலும் பல்ககை;கழககங்களுக்குச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை 5.3 வீதத்தால் அதாவது 192 மாணவர்களால் அதிகரித்து இருக்கின்றது. இது தொடர்பாக பிரித்தானியாவில் கென்ற்இல் வதியும் கணித ஆசிரியர் டேவிட் நோபல் தேசம்நெற்க்குக் கருத்துத் தெரிவிக்கையில் சூம் வழியான கல்விச் செயற்பாடுகள் மட்டக்களப்பு மற்றும் கல்வியில் பின் தங்கியிருந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது எனத் தெரிவித்தார். மாணவர்கள் எந்த மூலையில் கிராமத்தில் இருந்தாலும் மறுமூலையில் உள்ள நல்லாசிரியர்களிடம் இருந்து கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது எனத் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள வெளிநாட்டுப் பணமோகத்தின் தாக்கங்களும் அது ஏற்படுத்தும் போதைவஸ்து, மது அருந்தல் மற்றும் வாள்வெட்டுக் கலாச்சாரம் யாழ்ப்பாணத்துக்கு வெளியேயான தமிழ் மாவட்டங்களில் குறைவாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புக தகுதிபெற்ற மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 22வது இடத்திலிருந்து 2021 கல்வியாண்டில் 3வது இடத்திற்கு வந்து தீவில் ஒரு கல்விச் சுனாமியை ஏற்படுத்தியது. மட்டக்களப்பில் 2021 கல்வியாண்டில் 3804 பேர் பல்கலைக்கழகம் செல்லத் தகுதிபெற்றனர். அத்தோடு தமிழ்வாணணன் துவாரகேஸ் உயிரியல் விஞ்ஞானத்தில் தீவிலேயே அதிகூடிய புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச் சுனாமி அதிரடியாக இருந்த போதும் மட்டக்களப்பு கல்வியில் இன்னமும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. தமிழ் மக்கள் செறிந் வாழ்கின்ற வடக்கு கிழக்கில், தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு ஆயிரம் பேருக்கு 6 மாணவர்களையே பல்கலைக்கழகம் அனுப்புகின்றது. கிழக்கு மாகாணத்தின் நிலையும் இதுவாகவே உள்ளது. ஆனால் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மட்டும் ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களைப் பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது.

திருகோணமலை:
மூவின மக்களும் சரிக்குச் சமனாக வாழும் திருகோணமலை மாவட்டம் 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் 14வது இடத்தில் இருந்து 2ம் இடத்திற்குத் தாவியுள்ளது.

அம்பாறை:
அம்பாறை மாவட்டம் 2020 கல்வியாண்டில் ஆயிரம் பேருக்கு 7 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பியதில் இருந்து 2021 கல்வியாண்டில் ஆயிரம் பேருக்கு ஆறு மாணவர்களை மட்டுமே ஆனுப்பும் நிலைக்கு வந்துள்ளது. இருப்பினும் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் 2020இல் 24வது இடத்தில் இருந்து 13வது இடத்திற்கு வந்துள்ளது. பல்கலைக்கழகம் புகும் தகுதியுடைய மாணவர்களின் விகிதாசாரத்தின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் முன்னேறிப் பாய்ந்துள்ளது.

முல்லைத்தீவு:
இலங்கையில் உள்ள மாவட்டங்களில் தங்களுடைய சனத்தொகைக்கு கூடுதலான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற நான்கு மாவட்டங்களில் ஒன்றாக முல்லைத்தீவு மாவட்டம் இருக்கின்றது. 2021 கல்வியாண்டில் முல்லைத்தீவு மாவட்டம் ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்றது. வடக்கு கிழக்கில் முல்லைத்தீவு மாவட்டம் மட்டுமே ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றது. ஆயிரம் பேருக்கு 8 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புகின்ற ஏனைய மாவட்டங்கள் பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை.

பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் 2020இல் 17வது இடத்திலிருந்த முல்லைத்தீவு மாவட்டம் 2021 கல்வியாண்டில் 8 வது இடத்திற்கு முன்னேறி யாழ் மாவட்டத்திற்கு அடுத்த படியாக உள்ளது. ஆனாலும் ஏழாவது இடத்தில் உள்ள யாழ் மாவட்டத்தைக் காட்டிலும் முல்லைத்தீவு மாவட்டம் தனது சனத்தொகைக்கு அதிகமான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்றது.

மன்னார்:
மன்னார் மாவட்டம் தீவில் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் மாவட்ட அடிப்படையில் மிகக் கூடுதலாக 69 வீதமான மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து தீவின் முன்னணிக் கல்வி மாவட்டம் என்ற இடத்தைத் தக்க வைத்துள்ளது. யாழ் மாவட்டத்தைப் போன்று மன்னார் மாவட்டமும் ஆயிரம் பேருக்கு 7 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வருகின்றது.

வவுனியா:
பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தில் வவுனியா மாவட்டமும் முன்னேறிப் பாய்ந்துள்ளது. 2020 கல்வியாண்டில் தீவின் கடைசி மாவட்டமாக இருந்த வவுனியா 2021 கல்வியாண்டில் 15வது இடத்திற்கு தன்னை நகர்த்தியுள்ளது. மாணவர்களைப் பல்கலைக்கழகம் புகச் செய்யும் விகிதாசாரத்தை 59.5 வீதத்தில் இருந்து 63.5 வீதமாக வவுனியா மாவட்டம் அதிகரித்துள்ளது.

கிளிநொச்சி:
வடக்கு கிழக்கில் கிளிநொச்சி மாவட்டம் மட்டுமே கல்வியில் பாய்ச்சலை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சறுக்கியுள்ளது. 2020 கல்வியாண்டில் பல்கலைக்கழகம் புகு விகிதாசாரத்தில் 21வது இடத்திலிருந்த கிளிநொச்சி மாவட்டம் 2021இல் 23வது இடத்திற்று சறுக்கியுள்ளது. மேலும் கிளிநொச்சியின் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதம் 2.5 வீகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. வடக்கு கிழக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டுமே பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. யாழ் மாவட்டம் தன்னுடைய விகிதத்தை அதிகரிக்கத் தவறியிருந்தாலும் வீழ்ச்சியடையவில்லை. அண்ணளவாக தன்னுடைய முன்னைய நிலையை தக்க வைத்துக்கொண்டது.

இதன் மூலம் வடக்கு கிழக்கில் கல்வியில் பின்னிலையான மாவட்டமாக கிளிநொச்சி காணப்படுகின்றது.
இலங்கையிலேயே பல்கைலக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை ஆகக் கூடிய வீதத்தால் 4.72 வீதத்தால் உயர்த்திய மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் முன்னணி வகிக்கின்றது. அதனைத் தொடர்ந்து பல்கைல்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை உயர்த்திய மாவட்டமாக வவுனியா மாவட்டம் திகழ்கின்றது. வவுனியா பல்கலைகம் புகும் மாணவர்களின் விகிதத்தை 3.95 ஆல் உயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெற்கில் பதுளை, யாழ்ப்பாணம் போன்று தன்னுடைய முன்னைய விகிதத்தை தக்க வைத்துக்கொண்டது. மலையகத்தைச் சேர்ந்த நுவரெலியா மாவட்டம் மட்டும் தன்னுடைய பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதாசாரத்தை 1.78 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஏனை தெற்கு மாவட்டங்கள் அனைத்துமே பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளன. ஆகக் கூடுதல் வீழ்ச்சி 5.42 வீகிதம் காலியிலும் அதனைத் தொடர்ந்து 4.94 விகிதம் வீழ்ச்சி கம்பகாவிலும் ஏற்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரை கல்வியில் மட்டக்களப்பு பெரும் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் கல்வியில் குறிப்பிடத்தக்க மைல்கலை எட்டியுள்ளது. வவுனியா மாவட்டம் பல்கலைக்கழகம் புகும் மாணவர்களின் விகிதத்தை மட்டக்களப்பு மாவட்டத்தைப் போல் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மன்னார் மாவட்டம் தொடர்ந்தும் கல்வியில் தன் நிலையை முன்னேற்றி தற்போது முதல் இடத்தில் உள்ளது. யாழ் மாவட்டம் கல்வியில் குறிப்பிடத்தக்க அசைவை ஏற்படுத்தவில்லை. பெரும்பாலும் தன்னிலையை தொடர்ந்தும் தக்க வைத்து வருகின்றது. ஆனால் கிளிநொச்சி தொடர்ந்தும் தன் கல்விநிலையை உயர்த்தத் தவறிவருகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *