15

15

இந்து சமுத்திர பிராந்தியத்தை உலகுக்கு திறந்துவிட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிசெய்து, உலகிற்குத் திறந்துவிடுவதன் மூலம் பலம்வாய்ந்த ஆசியாவை உருவாக்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தை உறுதிப்படுத்தி இலங்கையை கடல்சார் வர்த்தக கேந்திரமாக நிலைநிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டில் சிறந்ததொரு பாதுகாப்பு முறைமை இல்லை என்றால் எமது எதிர்காலம் பாதிக்கப்படும் எனவும் உலக மற்றும் பூகோள அரசியலின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் எனவும் அது நாட்டுக்கு நல்லதல்ல எனவும் தெரிவித்தார்.

இலங்கை கிரிக்கெட் அணியுடன் மீண்டும் மஹேல ஜெயவர்தன !

இலங்கை கிரிக்கெட் அணியுடன் மஹேல ஜெயவர்தன இணைந்துகொள்ளவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், ஐ.சி.சி. இருபதுக்கு – 20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக மஹேல ஜெயவர்தன இணைந்துகொள்ளவுள்ளார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி. இருபதுக்கு – 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்கு நாமல் ராஜபக்ஷ தான் காரணம் என்பது வேடிக்கையானது – ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை கிரிக்கெட் அணி மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்று ஆசிய கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. மிக நீண்ட காலமாக பெரிய வெற்றிகள் எவையும் கிடைத்திராத நிலையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை வெற்றி கொண்ட இலங்கை கிரிக்கெட் அணி மீண்டும் முன்னைய நிலைக்கு திரும்பியுள்ளதாக பலரும் பாராட்டி வருகின்ற நிலையில் தான் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தவேளை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே தற்போது இலங்கை அணி ஆசிய கிண்ணத்தை வெல்ல காரணம் என நாமல் ராஜபக்ச தெரிவித்திருந்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கை அணியின் ஆசிய கிண்ண வெற்றிக்கு நாமல் ராஜபக்ச தான் காரணம் என கூறுவது நகைச்சுவையானது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,

இலங்கை அணியின் வெற்றியின் பெருமை நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமில்லை, அது கிரிக்கெட் வீரர்களுக்கே உரித்தானது எனத் தெரிவித்தார்.

“இது சிங்கள; பௌத்தநாடு. இங்கு திலீபனை நினைவுகூர அனுமதி இல்லை.” – சரத் வீரசேகர

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 1987 ஆம் ஆண்டு 12 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த  திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை நிகழ்த்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர “வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானவை அல்ல. எனவே வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளைப் போற்றித் துதிபாடவோ அல்லது அவர்களை நினைவேந்தவோ அனுமதி கிடையாது.” என் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

இலங்கை பௌத்த – சிங்கள நாடு. இந்த நாட்டுக்குள் தான் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அமைந்துள்ளன. வடக்கு, கிழக்கு வேறு நாடு அல்ல.

தமிழ் மக்களும், அவர்களின் பிரதிநிதிகளும் நாட்டிலுள்ள சட்டங்களுக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். சட்டங்களை மீறினால் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.