18

18

சம்பளம் போதாது – மீண்டும் போராட போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை !

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ஆசிரியர்களுக்கு தற்பொழுது வழங்கப்படும் சம்பளம் போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் முன்னேடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிவிட்ட அரசியல்வாதிகள் தற்போது மக்களின் வரிப்பணதில் சுகபோகம் அனுபவித்துக்கொண்டு மக்களின் வாழும் உரிமையை பறித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் மக்களின் போராட்டங்களை அடக்கி ஆட்சியாளர்கள் ஒருபோதும் வெற்றி பெறமுடியாது என்பதோடு போராட்டம் ஒரு நாள் இந்த அரசாங்கத்தை அழித்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தலிபான்களின் ஆட்சியால் உயர்கல்வியை இழந்த ஒரு மில்லியன் ஆப்கானிய பெண்கள் !

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதை தொடர்ந்து அங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை விதித்து தலிபான்கள் உத்தரவு பிறப்பித்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.

இதனால் கடந்த ஒரு ஆண்டாக அங்கு பெண்கள் மேல்நிலை கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளை மீண்டும் திறக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை தலிபான்களை வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் உயர் கல்வியை இழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக் குழு தெரிவித்துள்ளது.

பெண்கள் கல்வி கற்க முடியாமல் போன கடந்த ஓராண்டானது, ஒரு சோகமான, வெட்கக்கேடான மற்றும் முற்றிலும் தவிர்க்கப்படக்கூடிய ஒரு ஆண்டுவிழா என்று ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்திற்கு ஆழமான சேதத்தை ஏற்படுத்துகிறது என ஐநா தெரிவித்துள்ளது.

ஆசிய தடகளப் போட்டியில் சாதனை படைக்க தயாராகவிருக்கும் தமிழ் இளைஞன் புவிதரன் – உதவ முன்வருவார்களா அனுசரணையாளர்கள் ?

ஆசிய தடகளப் போட்டிக்கான தகுதிகாண் போட்டி இன்று தியகம மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் திறந்த வயது பிரிவிற்கான கோலூன்றிப்பாய்தல் தகுதிகாண் போட்டியில் இராணுவ மெய்வல்லுநர் போட்டி வீரராக பிரதிநிதித்துவம் செய்த சிறிகந்தராசா புவிதரன் 5.15m பாய்ந்து புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார். சாவகச்சேரி இந்துக் கல்லூரி பழைய மாணவராகிய இவர் இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப் போட்டியில் கோலூன்றி பாய்தலில் சாதனைகளை பதிவு செய்துள்ளார். இவருக்கான பயிற்சிகளை கணாதீபன் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோலூன்றிப் பாய்தல் இலங்கை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை 3 தடவைகள் அடுத்தடுத்து தவறவிட்ட புவிதரன், இன்று நடைபெற்ற மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டியில் முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார். தற்போது புவிதரனிடம் இருக்கின்ற கோலானது 4.80 அல்லது 4.90 மீட்டர் உயரத்தை தாவுகின்ற அளவைக் கொண்ட கோலாகும். எனவே இலங்கை சாதனையை முறியடிக்க அந்த கோலின் உயரம் போதாதது. அதுமாத்திரமின்றி, தற்போதைய சந்தையில் கோலொன்றின் விலை 5 இலட்சம் ரூபாவாக உள்ளதுடன், அதை வாங்குகின்ற வசதியும் புவிதரனுக்கு இல்லை. தேசிய சாதனையாளர் புவிதரனிற்கு புதிய கோலொன்றினை கொள்வனவு செய்வதற்கு அனுசரணையாளர்கள் முன் வர வேண்டும், அவர் மேலும் பிரகாசிப்பதற்கு வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும். எனவும் கோரப்பட்டுள்ளது.

IMF உடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் கடன் வழங்குநர்களுக்கு அறிவிக்க தயாராகும் இலங்கை !

அண்மைய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் தொடர்பில் அரசாங்கம் முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் இந்த முன்னேற்றம் குறித்து இலங்கையின் கடன் வழங்குநர்களுக்கு, அறிவிக்கப்படும் என உலகளாவிய சட்ட நிறுவனமான, கிளிஃபோர்ட் சான்ஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தெளிவூட்டல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இணைய வழியாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா, இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட்ட பல நாடுகளிடம் இலங்கை கடனைப் பெற்றுள்ளது.

அத்தோடு இறையாண்மை பத்திரங்களிலும் கடன்களை பெற்றுள்ள நிலையில் சுமார் 50 பில்லியன் டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“அரசியல் தீர்வு என்பது சமஸ்டி கட்டமைப்பிலான அதிகார பகிர்வாக இருக்க வேண்டும்.”- எம்.ஏ.சுமந்திரன்

“அரசியல் தீர்வு என்பது சமஸ்டி கட்டமைப்பிலான அதிகார பகிர்வாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும்.” என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்ற மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐ.நாவில் இந்தியாவின் கூற்றிலே இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை கொடுப்பதில் இலங்கை அரசாங்கம் கால இழுத்தடிப்பு ஒன்றை செய்து வருகின்றது என்று சொல்லியிருக்கிறார்கள்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உள்ளடங்கலாக அதிகாரப் பகிர்வு முறை செய்யப்பட வேண்டும் என்று தான் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். 13 ஆம் திருத்தச் சட்டத்துடன் இந்த விடயம் நிறைவுக்கு வருகிறது என அவர்கள் சொல்லவில்லை. ஆகவே அந்த நிலைப்பாடு நல்ல நிலைப்பாடு. முதல் படியாக 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுவத்துவதாக இருந்தாலும் அதனைச் செய்யட்டும். ஆனால் அது தீர்வல்ல.

அரசியல் தீர்வு என்பது சமஸ்டி கட்டமைப்பிலான அதிகார பகிர்வாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அதிகாரப் பகிர்வையே நாம் ஏற்றுக் கொள்வோம். இந்தியாவும் அந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது.

ஐ.நாவில் நிறைவேற்றப்படப் போகும் தீர்மானங்கள் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை நான் பேசியுள்ளேன். அதில் என்ன மாற்றம் தேவை என தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் அதனை நிறைவேற்றப் போகிறவர்கள் இணை அணுசரணை நாடுகள். அவர்கள தான் இறுதியில் அதில் வேறு எதனையும் சேர்த்துக் கொள்ளலாமா, இதைப் பலப்படுத்தலாமா, அப்படிச் செய்தால் வாக்குகள் கூடுமா, குறையுமா என்கின்ற கடைசி தீர்மானங்களை எடுப்பார்கள். ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள வரைபு ஓரளவு எல்லா விடயங்களையும் அணுகுகின்ற ஒரு வரைபாக உள்ளது. அது இன்னும் பலமூட்டப்பட வேண்டும் எனக் கோரியுள்ளோம்.

எல்லோருடைய கருத்துகளையும் உள்வாங்கியுள்ளார்கள். ஏனைய நாடுகளுடன் பேசி முடிவு எடுப்பார்கள். கூட்டத்தின் இறுதி நாட்களில் வாக்கெடுப்பு நடைபெறும்” என்றார்.

இலங்கை தொடர்பில் ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட புதிய பிரேரணை திருப்தியளிப்பதாகவில்லை – சி.வி.விக்னேஸ்வரன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான நிலையில், அதற்கு முன்னதாகவே இம்முறை இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தவேண்டுமெனவும் அதற்கேற்றவாறான மிகவும் வலுவான பிரேரணையொன்றை பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் கொண்டுவரவேண்டுமென்றும் பெரும்பாலான தமிழ்க்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன.

அந்தவகையில் இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை வரைவு சில தினங்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள நிலையில், அதன் உள்ளடக்கம் திருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளதா என்று வினவியபோது

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் பெருமளவிற்குத் திருப்தியடையமுடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் தயாரிக்கப்பட்டுள்ள பிரேரணையில் நாம் எதிர்பார்த்ததை விடக் குறைந்தளவிலான விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன. மிகமுக்கியமாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தப்படுமென எதிர்பார்த்தபோதிலும், அவ்விடயம் உள்ளடக்கப்படவில்லை. அதேபோன்று அரசியல் காரணங்களுக்காகவும் வெறுமனே வாக்குமூலங்களின் அடிப்படையிலும் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தப்படும் என்றும், பயங்கரவாத்தடைச்சட்டம், காணி அபகரிப்பு மற்றும் இராணுவயமாக்கல் ஆகிய விடயங்கள் தொடர்பில் வலுவான கருத்துக்கள் முன்வைக்கப்படும் என்றும் எதிர்பார்த்தோம். இருப்பினும் அத்தகைய கருத்துக்கள் உள்ளடக்கப்படவில்லை.

இப்பிரேரணையில் பல்வேறு விடயங்கள் எமக்குச் சார்பானவையாக அமையாதபோதிலும், கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் புதிதாகக் கொண்டுவரப்படும் ஒவ்வொரு பிரேரணைகளும் சற்று முன்னேற்றகரமானவையாகவே காணப்படுகின்றன. எனவே இலங்கை தொடர்பில் எதிர்வருங்காலங்களில் கொண்டுவரப்படக்கூடிய பிரேரணைகள் மேலும் காத்திரமான விடயங்களை உள்ளடக்கிய வலுவான பிரேரணைகளாக அமையவேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.

கஞ்சா மூலம் 52 நாடுகள் பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டுகிறார்கள் – இராஜாங்க அமைச்சர் டயனா கமகே

கஞ்சா என்பது ஒரு மருந்தாகும். அதை போதைக்காக பயன்படுத்துமாறு நான் கோரியதில்லை. மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. கஞ்சா செய்கை மூலம் 52 நாடுகள் பில்லியன் கணக்கான டொலர்களை வருமானமாக ஈட்டுகின்றனர். என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் கஞ்சா செய்கை தொடர்பில் தாம் வெளியிட்ட கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார். ஊடகங்களில் நாங்கள் கூறுவதனை செய்தியாக போடுவதில்லை, ஏதாவது ஓர் சிறு பகுதியை மட்டும் போடுகின்றார்கள் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னதாக கோட்டாபாய ராஜபக்ச கோவிட் காரணமாக இழந்த இரண்டு வருடங்களை மீள அவருக்கு வழங்கவேண்டும், மன்னார் கருவாடு காய போடும் இடம் என இவர் கூறிய  கருத்துக்கள் சர்ச்சைகளாக பேசப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளின் பிடியில் 20 கிராமங்கள் – 10 பேர் வரை இறப்பு !

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் பயன்படுத்தி இதுவரையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320 பேர் வரையில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , யாழ். போதனா வைத்தியசாலையில் போதைக்கு அடிமையானவர்களுக்கான சிகிச்சை மையத்தில் இரண்டு மாத கால பகுதிக்குள் 134 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களில் பெரும்பாலானோர் 18 வயதிற்கும் 23 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடையவர்களே என தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை யாழ்ப்பாணத்தில் அதிக போதைப்பாவனைக்கு உள்ளானவர்கள் வாழும் கிராமமாக சுமார் 20 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் இந்தப் போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூகத்தினர் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் 25 சதவீதம் பேர் மாணவர்கள் – புத்தகக்கல்வியை மட்டுமே போதிக்கும் பாடசாலைகளே காரணம் !

இலங்கையில் போதைப்பொருள் பாவைனை தொடர்பான அறிக்கைகள் மற்றும் தரவுகளின் படி “ போதைப்பொருள் பாவனை தொடர்பில் கைது செய்யப்படுவோரில் பெரும்பாலானோர் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களே எனவும் அவர்களில் 20 அல்லது 25 சதவீதம் பேர் பாடசாலை மாணவர்களாாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.” எனவும் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த நிலை வட-கிழக்கில் இன்னமும் மோசமடைந்துள்ளது. பாராளுமன்ற அமர்வுகளில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இது தொடர்பான பதற்றமான நிலை தொடர்பில் பாராளுமன்றில் பதிவு செய்திருந்தனர். போதைப்பொருள் ஒழிப்புக்கான முறையான தீர்வுத்திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் இந்த போதைப்பொருள் ஒழிப்புக்கான கல்வி அமைச்சின் நடவடிக்கைகள் என்ன என்ற கேள்வி பாராளுமன்றின் ஏனைய உறுப்பினர்களாலும் அதிகமாக விமர்சிக்கப்பட்டன. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் இது தொடர்பான கேள்வியை கல்வி அமைச்சரிடம் எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த உரையாற்றிய போது “பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளை பரிசோதிக்கும் நடைமுறை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்படும் எனவும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நுட்பமான வழிகளில் பல்வேறு போதைப் பொருட்கள் பரிமாற்றப்படுகின்றன எனவும் இது தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும் கூறியிருந்தார். இதனை தற்காலிகமான – வழமையான அமைச்சர்கள் வழங்கும் சராசரியான உறுதிப்பாடற்ற பதிலாகவே எடுத்துக்கொளள முடியும். தவிர இது பற்றி எந்த முன்னேற்றமும் ஏற்படப்போதில்லை என்பதையும் கல்வி அமைச்சரின் பதில் மூலமாக உணர முடிகிறது. ஒப்பீட்டளவில் தெற்கை விட வட-கிழக்கில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் ஐஸ்போதைப்பொருள், ஊசி போதப்பொருள் பாவனை அசுர வளர்ச்சி கண்டு வருவதுடன் இதன் விளைவாக வாள்வெட்டு மற்றும் வன்முறை கலாச்சாரம் ஒன்றும் நமது பகுதிகளில் மேலோங்கிக்கொண்டிருக்கின்றது. கடந்து முடிந்த குறுகிய கால இடைவெளியில் ஊசி போதைப்பொருள் பாவனையால் யாழ்ப்பாணத்தில் ஐந்து இளைஞர்கள் வரையில் உயிரிழந்துள்ளமையும் இங்கு நோக்கப்பட வேண்டியது. இது அண்மைய காலத்தில் போதைப்பொருள் பாவனையின் தீவிர தன்மையை நன்கு தெளிவுபடுத்துகிறது.

யாழில் அதிகரிக்கும் போதைப்பொருள் கலாச்சாரம் – போதையில் 7 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய 14 வயதுச் சிறுவன் !

யாழ். கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுயொன்றில், உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுக்கு அடிமையான 14 வயதுச் சிறுவன் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை வன்புணர்ந்துள்ளார் .

அந்தப் பகுதியிலுள்ள முன்பள்ளி ஒன்றில் வைத்தே இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது . அண்மையில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 14 வயதுச் சிறுவன் கைது செய்யப்பட்டு நன்னடத்தை பாடசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளை , பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்தத் தகவல் தற்போதே ஊடகங்களுக்குத் தெரியவந்துள்ளது.