19

19

ஜெனீவாவில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படும் எந்த தீர்மானமாயினும் ஏற்கப்போவதில்லை – இலங்கை அரசாங்கம்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் இலங்கை அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக எதிர்க்கும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது  இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரைபு தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் பேசிய அமைச்சர் அலி சப்ரி,

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு உறுப்பு நாடுகள் ஆதரவு வழங்கினாலும் வழங்காவிட்டாலும் இலங்கை அரசாங்கம் அதனை முற்றுமுழுதாக எதிர்க்கும். தற்போதைய தருணத்தில் இந்தத் தீர்மானம் தேவையற்ற ஒன்றாகும். முக்கிய நாடுகளின் இணை அனுசரணையுடன் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படும் தீர்மானம், பிளவுபடுத்தும் பொறிமுறை என்பதால், அதனை ஏற்கப் போவதில்லை.

தீர்மானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இந்த கடமையை நிறைவேற்றும் பணிகள் தொடரும். உள்நாட்டு பொறிமுறைக்கு அப்பால், அரசியலமைப்பை மீறும் எந்தவொரு வெளிப்புற பொறிமுறையையும் நாம் தொடர்ந்து எதிர்ப்போம்.

இலங்கை தொடர்பான புதிய வரைவுத் தீர்மானம், அதிகாரப் பகிர்வு, தேர்தலை நடத்துதல், காணாமல் போனவர்களின் அவல நிலையை நிவர்த்தி செய்தல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மாற்றுதல், அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான வன்முறைகளுக்குப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

இதன்போது அமைச்சரிடம் புலம்பெயர்ந்த அமைப்புக்களுடனான சந்திப்புக்களு் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது,

சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் அமைப்புகளுடன் எந்தக் கலந்துரையாடலும் மேற்கொள்ளவில்லை. என தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண விரிவான சர்வதேச அணுகுமுறை தேவை என்று நான்கு அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் முன்வைத்த தீர்மானம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது,

அது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, வெவ்வேறான நபர்கள் இந்த விடயத்தில் பணியாற்றுகின்றார்கள் எனவும் அது எவ்வாறு செயற்படுத்தப்படுகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா !

இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக, சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில், 968 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா, இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு, இந்தியா அதிகளவான கடனை வழங்கியிருந்ததுடன், மனிதாபிமான உதவிகளையும் வழங்கியிருந்தது.

கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சீனா இருதரப்பு கடன் உதவியாக 947 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கி முதன்மை வகித்திருந்தது.

அதில் 809 மில்லிய் அமெரிக்க டொலர் சீனா அபிவிருத்தி வங்கியின் ஊடாக நாணய பறிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், முதல் 4 மாதங்களில் இந்தியா 968 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கி, இலங்கைக்கான கடன் வழங்கிய நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்தள்ளியுள்ளது.

இதுதவிர, 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 44 ஆயிரம் தொன் யூரியப உரத்தையும், இந்தியா வழங்கியுள்ளது. இந்தியாவுடனான நெருங்கிய உறவு மற்றும் நல்லெண்ணம் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக, சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில், 968 மில்லியன் அமெரிக்க டொலரை இந்தியா, இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக இலங்கைக்கு, இந்தியா அதிகளவான கடனை வழங்கியிருந்ததுடன், மனிதாபிமான உதவிகளையும் வழங்கியிருந்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சீனா இருதரப்பு கடன் உதவியாக 947 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்கி முதன்மை வகித்திருந்தது.

அதில் 809 மில்லிய் அமெரிக்க டொலர் சீனா அபிவிருத்தி வங்கியின் ஊடாக நாணய பறிமாற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், முதல் 4 மாதங்களில் இந்தியா 968 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கி, இலங்கைக்கான கடன் வழங்கிய நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்தள்ளியுள்ளது.

இதுதவிர, 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 44 ஆயிரம் தொன்  யூரிய உரத்தையும், இந்தியா வழங்கியுள்ளது. இந்தியாவுடனான நெருங்கிய உறவு மற்றும் நல்லெண்ணம் அடிப்படையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கைது செய்யப்பட்ட 69 தமிழ் இளைஞர்கள் – விடுவிக்க விரைவில் நடவடிக்கை என்கிறார் அமைச்சர் டக்ளஸ் !

இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இளைஞர்களையும் விரைவில் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த போது இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 69 தமிழ் இளைஞர்களின் உறவினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மீன்பிடித் தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத காரணத்தினால் அவர்கள் இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சித்ததாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 69 தமிழ் இளைஞர்களும் தற்போது பெங்களூர் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வேறு நாடுகளுக்கு செல்வதை ஒருபோதும் ஏற்க முடியாதென சுட்டிக்காட்டிய அமைச்சர், நட்புறவை பயன்படுத்தி கைது செய்யப்பட்டுள்ள இளைஞர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

குமார் சங்ககாரவுக்கு சிலை வைப்பதற்கு யாழ்ப்பாண பல்கலைகழகத்தினுள் அனுமதி இல்லை !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவுக்கு சிலை நிறுவுவதற்காக யாரும் அனுமதி கோரவில்லை என்றும், அவ்வாறான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வைக்கப்படுவதற்காக துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினம் திங்கட்கிழமை சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இது குறித்து பல்கலைக்கழக விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் உட்பட நிர்வாகத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, பல்கலைக்கழகத்தினுள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவுக்கு சிலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

சிலை அமைப்பதற்காக எவரும் அனுமதி கோரவில்லை. வளாகத்தினுள் சிலைகளை நிறுவுவதென்பது நீண்ட பொறிமுறைகளைக் கொண்டது. அவ்வாறான அனுமதி எதுவும் வழங்கவில்லை என தெரிவித்தார்.

குறித்த சிலையானது மன்னாரை சேர்ந்த யாழ். பல்கலைகழக மாணவனால் உருவாக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

“இலங்கையை கட்டுப்படுத்தும் கருவியாகவே அமெரிக்கா தமிழர் பிரச்சினையை கையாள்கிறது.”- சாள்ஸ் நிர்மலநாதன்

“சர்வதேசம் தமிழர் பிரச்சினையை இலங்கையை கட்டுப்படுத்தும் பகடைக்காயாக பயன்படுத்துகின்றன.” என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், மனித உரிமை உதவி ஆணையாளர் இலங்கை தொடர்பான பரிந்துரைகளை முன் வைத்துள்ளார். வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் இலங்கை அரசாங்கத்தினால் நீண்ட காலமாக துன்புறுத்தப்பட்டு,கடைசியாக 2009 ஆம் ஆண்டு, தமிழ் இனத்தை இனப் படுகொலையாக அழித்த சம்பவங்கள் தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் ஊடாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வரும் என்று நம்புகின்றார்கள்.

ஆனால் சர்வதேச நாடுகளை பொருத்தவரையில் இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்காக தமிழர்களின் விடயங்களை பயன்படுத்தி, அமெரிக்கா போன்ற நாடுகள், இலங்கையை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைப்பதற்கு பகடைக்காயாக பயன்படுத்துவதாக நான் பார்க்கின்றேன்.

சர்வதேச விசாரணை வேண்டும் என்று தொடர்ச்சியாக தாயகம், புலத்தில் இருக்கின்ற சகல தரப்பினரும் ஒன்றிணைந்து ஒருமித்து கோரிக்கை முன் வைத்த போதும், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையை கையாளுகின்ற நாடுகள் ஒரு மென் போக்கை கடைபிடித்து வருகிறது.

தற்போது வந்துள்ள பரிந்துரையில் பல விடையங்கள் இருந்தாலும், தீர்மானம் ஒன்று நிறைவேறும் போது, பிரேரணை எந்தவித பயனும் இல்லாத ஒன்றாக காணப்படும். இலங்கை அரசாங்கம் ஐ.நாவில் எப்படியான தீர்மானங்களை நிறைவேற்றினாலும், இலங்கை அரசாங்கம் இவ்வளவு காலமும், ஐ.நா.பரிந்துரைகளுக்கும்,தீர்மானங்களையும் நிறைவேற்ற எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

தற்போதைய பரிந்துரையின் போது அமைச்சர் அலி சப்ரி, அதற்கு உடன் படமாட்டோம் என்று கூறியிருக்கிறார். தொடர்ச்சியாக தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்ற ஒரு சூழ்நிலையும்,மேற்குலக நாடுகளும் தமிழர் தரப்பை தொடர்ச்சியாக ஏமாற்றுகின்ற சூழ்நிலை தான் தொடர்ச்சியாக காணப்படுகின்றது- என அவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை அனுராதபுரத்தில் !

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை அனுராதபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தலைமையில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் நாட்டின் பல பாகங்களிலும் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் எந்த குடிமகனும் பட்டினி கிடக்கக் கூடாது – ஜனாதிபதி அலுவலகம் அரச நிறுவனங்களுக்கு உத்தரவு !

நாட்டில் எந்தவொரு குடிமகனும் உணவுப் பற்றாக்குறையால் பட்டினி கிடக்கக் கூடாது என்றும் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி அலுவலகம் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஊட்டச் சத்து குறைபாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியான முடிவுகளை அமுல்படுத்துவதற்கும் துரிதப்படுத்தப்பட்ட தேசிய பல்துறை ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சுகள், மாகாண சபை பிரதம செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இலங்கையில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாகவும் 66, 000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாகவும் 6.2 மில்லியன் மக்கள் மிதமான கடுமையான உணவுப் பாதுகாப்பற்றவர்களாக இருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது என இலங்கை தொடர்பான சமீபத்திய ஐ.நா அறிக்கை எச்சரித்துள்ள நிலையில் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி தலைமையில் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு சபையொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

எந்தக் குடும்பமும் பட்டினியால் வாடாமல் இருக்கவும் எந்தக் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருக்கவும் குடும்பங்கள் மற்றும் மக்களை வறுமைப் பொறியில் இருந்து மீட்க நடவடிக்கை எடுப்பதே அவர்களின் பணியாக இருக்கும் என்றும் ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதே நேரம் நாட்டின் சனத்தொகையில் 63 இலட்சம் பேர் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்குவதாக தெரிவித்து உலக உணவு திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையை விவசாய அமைச்சர் மறைத்து செயற்படுகின்றார் என எதிர்க்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் 18வயது இளைஞன் மீது 5பேர் கொண்ட குழுவினர் சரமாரியான வாள்வெட்டு !

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோண்டாவில் கிழக்கை சேர்ந்த 18 வயதுடைய ச. துசாளன் எனும் இளைஞன் மீதே இந்த வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நவாலி கிழக்கு பகுதியில் உள்ள நண்பனின் பிறந்தநாளுக்கு சென்று விட்டு மீண்டும் வீடு நோக்கி உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை நவாலி சம்பந்தப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட வன்முறை குழு குறித்த இளைஞன் மீது வாள்வெட்டினை மேற்கொண்டுள்ளது.

குறித்த இளைஞன் வன்முறை கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கொள்வதற்காக வீதியில் ஓடிய போதிலும் துரத்தி துரத்தி சரமாரியாக வாள் வெட்டினை மேற்கொண்டுவிட்டு வன்முறை கும்பல் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞனை அவ்விடத்தில் நின்றவர்கள் மீட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உலக வங்கியால் வெளியிடப்பட்டுள்ள உலக உணவுப் பணவீக்க சுட்டி – முதல் பத்து நாடுகளில் இலங்கையும் !

செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.

இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் உணவுப் பணவீக்கம் 9.9 சதவீதமாக இருந்ததுடன் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 90.9 சதவீதமாக பத்து மடங்கு அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உணவுப் பணவீக்கம் வேகமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது.

லெபனான் மற்றும் வெனிசுலா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன.

துருக்கி, ஈரான், அர்ஜென்டினா, மால்டோவா, எத்தியோப்பியா, ருவாண்டா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களுக்கு கௌரவமான அரசியல் தீர்வு வேண்டும் – பட்டங்கள் பறக்க விட்டு கவனயீர்ப்பு போராட்டம் !

வடக்கு-கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்’ எனும் 100 நாட்கள் செயல்முனைவின் 50 நாளையிட்டு மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று (திங்கட்கிழமை ) பட்டங்கள் பறக்க விட்டு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு  வேண்டும் என்ற 100 பேராட்டத்தின் 50 வது நாள் போராட்டத்தையிட்டு 8 மாவட்டங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இதன் ஒரு பகுதியாக மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந்தபோராட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு பல கோரிக்கையடங்கிய வாசகங்கள் கொண்ட பட்டங்கள் தயார்படுத்தப்பட்டு அதனை பறக்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.