04

04

மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா – இரண்டாவது முயற்சியும் தோல்வி !

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, முதல்முறையாக கடந்த 1969ம் ஆண்டு, ‘அப்போலோ’ விண்கலத்தின் மூலம் நிலவுக்கு மனிதர்களை அனுப்பியது. தற்போது, 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் அது ஈடுபட்டுள்ளது. இதற்காக, 322 அடி நீளமுள்ள ஆர்டெமிஸ்-I என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. முதல் கட்டமாக இதை மனிதர்கள் இல்லாமல் நிலவுக்கு செலுத்தி சோதனை செய்யப்பட உள்ளது. இது வெற்றி பெற்றால், அடுத்த முயற்சியில் மனிதர்கள் அனுப்பப்பட உள்ளனர். இந்நிலையில், இந்த ரொக்கெட்டை கடந்த மாதம் 29ம் திகதி விண்ணில் செலுத்த முதல்முறையாக முயற்சி செய்யப்பட்டது.

ஆனால், ரொக்கெட்டில் எரிபொருள் கசிந்ததால், இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. ஒரு வாரத்துக்குப் பிறகு இந்த குளறுபடி நீக்கப்பட்டு, நேற்று மாலை மீண்டும் விண்ணில் ஏவுவதற்கான கவுன்ட்டவுன் தொடங்கியது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்பட இருந்தது. ஆனால், நேற்றும் ராக்கெட்டில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் கசிந்தது. அதை அடைப்பதற்கான முயற்சியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். ஆனால், அது தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக, ரொக்கெட்டை ஏவும் திட்டம் 2வது முறையாக கைவிடப்பட்டது.

புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு முன்னுரிமை !

புதிய அமைச்சரவையை நியமிக்கும் போது பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு பெண்ணொருவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் இடம்பெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போதே பிரதமர் தினேஸ் குணவர்தன இந்த தகவல்களை தெரித்துள்ளார்.
இதேவேளை பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகள் குறித்து நடைமுறை புரிதல் இல்லாத ஆண்களுக்கு இந்த அமைச்சை ஒதுக்குவது அர்த்தமற்ற செயல் என சுட்டிக்காட்டிய பிரதமர், பெண்களின் பிரதிநிதித்துவத்தை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

“முன்பு டயஸ்போரா என்ற பதம் புலி ஆதரவு சொல். இன்று அப்படியில்லை.”- ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர்

நீதியமைச்சின் ஆதரவுடன் வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு இலங்கை ஒருங்கிணைப்பு செயலகமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது பூர்த்தியாகிவிட்டதன் பின்னர் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை  இந்த அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கும் என நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், புலம்பெயர் தமிழர்களுக்காக தனி அலுவலகம் அமைக்கப்படவுள்ளது ஆனால் அதை டயஸ்போரா அலுவலகம் என நாம் அழைப்பதில்லை. புலம்பெயர் இலங்கையர் (Overseas Srilankan) என்பது அதன் பெயர் என ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

டயஸ்போரா என்ற ஆங்கில வார்த்தை ஒரு நாட்டு குடிமக்கள் மற்றொரு நாட்டில் வாழ்வதைக் குறிக்கிறது எனவும் அவர் கூறினார்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் புலம்பெயர் அமைப்புகள் மேற்குலகில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டன. அவர்களைக் குறிக்கும் வகையில் டயஸ்போரா என்ற பதம் உபயோகிக்கப்பட்டதால் அது ‘கெட்ட’ வார்த்தையானது. அதனால் தான் அப்பதத்தை நீக்கினோம்.

நாம் இப்போது புலம்பெயர் அமைப்புகளுடன் பேசி வருகிறோம். எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை இப்போது சொல்வதற்கில்லை. எதிர்காலத்தில் அது பற்றி வெளிப்படையாக பேசக்கூடியதாக இருக்கும் என நம்புகிறேன் என்று சாகல ரத்நாயக்க மேலும் கூறினார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்காக நாங்கள் தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருடனும் விக்னேஸ்வரனுடனும் பேசி வருகிறோம்.

எமது கதவு அனைவருக்கும் திறந்திருக்கிறது. ஏனெனில் இது நாட்டை முன்நிறுத்தி யோசிக்க வேண்டிய காலம். தமிழ்க்கட்சிகள் எம்முடன் இணைந்து பணியாற்றுவதில் எம் தரப்பில் எந்தத் தடையும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

“22 இலட்சம் மக்களை வீதி யோரங்களில் நிறுத்தியதற்காக கோட்டாபாயவை கைது செய்யுங்கள்.”- எஸ்.எம்.மரிக்கார்

மக்களை உணவுக்காக போராடும் நிலைக்கு தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தூர நோக்கற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மூலமே நாடு பொருளாதார நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது. ஆனால்நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இன்று நாட்டிற்கு வருகை தந்தவுடன் அரசின் சலுகைகள் உட்பட விசேட பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் காரணமாக மூன்று வேளை உணவு உட்கொண்டவர்கள் இன்று இரண்டு வேளை மாத்திரமே உணவு உட்கொள்கிறார்கள். இரசாயன உரத்தை தடை செய்து நாட்டு மக்கள் உணவுக்காக போராடுகிறார்கள். பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கிறது.

மேலும் எரிபொருள்  மற்றும் எரிவாயு வரிசைகள், இரசாயன உரத்தினை பெற்றுக்கொள்வதற்கான வரிசைகள் உட்பட ஒருவேளை உணவை க் கூட உண்பதற்கு உணவின்றி மக்கள் உயிரிழப்பதற்கான முழுமையான பொறுப்பினை கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும்.

இதன் காரணமாக உடனடியாக கோட்டாபய ராஜபக்ஷ கைது செய்யப்பட வேண்டும். அவரைக்  கைது செய்வதன் மூலம் 22 இலட்சம் மக்களை வீதி யோரங்களில் நிறுத்தி நாட்டின் பொருளாதாரத்தை அதளபாதாளத்தில் தள்ளி நாட்டை வங்குரோத்து நிலைக்கு  கொண்டு வந்தமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.

அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உரிய தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கருத்து தெரிவித்தார்.

தொடரும் மருந்துத்தட்டுப்பாடு – திணறும் வைத்தியசாலைகள் !

இலங்கையில் மார்பக புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் tabzumab தடுப்பூசி உட்பட புற்றுநோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கிட்டத்தட்ட 20 வகையான மருந்துகள் கிடைக்காததால், தொடர் சிகிச்சை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், கராப்பிட்டி மற்றும் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைகள் மற்றும் மஹரகம வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளில் tabzumab தடுப்பூசி உள்ளிட்ட மருந்துகள் இல்லை என சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1000 மார்பக புற்றுநோய் தடுப்பூசிகளை பெறுவதற்கு கொள்வனவு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் சுமார் 500 தடுப்பூசிகள் பெறப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர்கள் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ளனர்.

புற்று நோயாளர்களுக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்க வேண்டியுள்ள போதிலும், இந்த மருந்துகள் இல்லாததால் நோயாளர் பராமரிப்பு சேவைகள் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹரகம வைத்தியசாலையில் வருடாந்தம் சுமார் 3,000 புற்று நோயாளர்கள் சிகிச்சைக்காக வருவதாகவும், நாளாந்தம் சுமார் 1,000 நோயாளர்கள் உள்நோயாளிகளாகவும் வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

“ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளமை மகிழ்ச்சி.”- சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர்

இலங்கையின் பொருளாதார கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சர்வதேச 2.9 பில்லியன் டொலரைப் பெற்றுக் கொள்வதற்கான ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை எட்டியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியக்குழு இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையினை மேற்கோற்காட்டி செய்துள்ள டுவிட்டர் பதிவிலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

இலங்கைக்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினால் ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் ஊழியர்மட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, மேலதிக கலந்துரையாடல்களையும் தீர்மானங்களையும் எடுப்பதற்காக சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுச் சபைக்குச் சமாப்பிக்கப்படும்.

பொருளாதார உறுதிப்பாட்டினையும் கடன் நிலைபேற்று தன்மையை மீட்டெடுக்கும் வகையிலும் , நிதியியல் உறுதிப்பாட்டினைப் பாதுகாத்தல், பாதிக்கப்படக்கூடியவர்களைப் பாதுகாத்தல், ஊழலினால் பாதிக்கப்படக்கூடிய தன்மைகளை நிவர்த்திசெய்தல், இலங்கையின் வளர்ச்சி வாய்ப்புக்களை வெளிக்கொணர்வதற்குக் கட்டமைப்புசார் மறுசீரமைப்புக்களை முன்னெடுத்தல் என்பன ஊழியர் மட்ட இணக்கப்பாட்டின் குறிக்கோள்களாகவுள்ளன.

சர்வதேச நாணய நிதியத்தினால் ஆதரவானது பொருளாதாரத்தினை உறுதிப்படுத்தல், இலங்கை மக்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் பொருளாதார மீட்சிக்கான தளத்தினைத் தயார்படுத்தல் மற்றும் நீடித்து நிலைத்திருக்கும் மற்றும் அனைத்தும் உள்ளடங்கிய வளர்ச்சியினை ஊக்குவித்தல் என்பவற்றினை நோக்காகக்கொண்டுள்ளது. இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவளிக்கும் முகமாக எமது ஈடுபாட்டினைத் தொடர்ந்தும் முன்னெடுக்க ஆவலுடன் இருக்கிறோம்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“மக்கள் துன்பத்தில், அரசுக்குள் அமைச்சுப்பதவிகளுக்கு சண்டை.”- எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

இருநூற்றி இருபது இலட்சம் மக்கள் பாரிய துன்பங்களை அனுபவிக்கும் வேளையில் அரசாங்கம் அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்வதற்குப் முன்டி அடித்துக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மின்வெட்டு ஏற்படும் போது இந்நாட்டு மக்கள் நடுங்கத் தொடங்குவார்கள் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,மக்கள் ஏற்கனவே வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

நாட்டில் இடம்பெற்று வரும் காரணங்களை நோக்கும் போது சந்தர்ப்பவாத அரசியல் மிகவும் தெளிவாகத் தெரிகின்றது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இத்தகைய சூதுகளில் ஐக்கிய மக்கள் சக்தியோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியோ ஒருபோதும் தொடர்பு கொள்ளாது எனவும் தெரிவித்தார்.

விரட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பியுள்ளார். அது அவ்வாறு நடக்கும் போது, ​​போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது அரசு தனது வன்முறையை பிரயோகித்து அவர்கள் மீது அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எல்லா சிறப்புரிமைகளும் வழங்கப்படும் !

முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளின் கீழ் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தேவையான வசதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றிரவு(02) நாடு திரும்பினார்.

சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தின் மூலம் நேற்றிரவு(02) 11.30 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்தார்.

காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் திடீர் கரிசனை – ஐ.நா அமர்வினை நோக்கி காய்களை நகர்த்தும் ரணில் அரசு !

நீதியமைச்சின் ஆதரவுடன் வெளிவிவகார அமைச்சு வெளிநாட்டு இலங்கை ஒருங்கிணைப்பு செயலகமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இது பூர்த்தியாகிவிட்டதன் பின்னர் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை  இந்த அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு அழைப்பு விடுக்கும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குறித்த அலுவலகம் தொடர்பில் மேலும் பேசிய நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச  ,

குறிப்பிட்ட அலுவலகம் காணிவிடயங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் போன்ற விடயங்களில் புலம்பெயர்ந்த தமிழர்களிற்கு உதவும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் தொடர்பில்புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் காணப்படும் கரிசனைகளிற்கு தீர்வை காணும் விடயத்தில் இந்த அலுவலகம் காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்துடன் இணைந்து செயற்படும்.

புதிய அலுவலகம் தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே புலம்பெயர் தமிழர் அமைப்புகளை தொடர்புகொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வின் போது  அரசாங்க பிரதிநிதிகளிற்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின்போது அரசாங்கம்புதிய செயலகம் குறித்து புலம்பெயர் அமைப்புகளிற்கு தெளிவுபடுத்தும்.  இந்தசெயலகம் மூலம் பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு என்ன செய்யலாம் என்ற கேள்வியை எழுப்பும்.

2015 அல் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்களசமரவீரவின் கீழ் இவ்வாறான அலுவலகமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்றன ஆனால் அவ்வேளை காணப்பட்ட நிலைமை காரணமாக இது சாத்தியப்படவிலை ஆனால் நாங்கள் இந்த முறை அதனை ஆரம்பிப்பதில் உறுதியாகவுள்ளோம் நீதியமைச்சு  அதற்கு ஆதரவளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

………………….

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விடயம் மிகப்பெரும் அரசியல் லாபமீட்டும் விடயமாக மாறிப்பபோயுள்ளது. தமிழ்தேசிய கட்சிகளும் சரி – சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களும் இது தொடர்பில் தேர்தல் காலங்களில் மட்டுமே பேசி பிறகு மீண்டும் ஐ.நா கூட்டத்தொடரின் போது மட்டுமே பேசப்படுகின்ற விடயமாக மாறியுள்ளது.

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கடந்த 2000 நாட்களை தாண்டியும் தங்களுடைய போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். நல்லாட்சி அரசாங்க காலத்திலும் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை. போர் நடந்த காலத்தில் ஆட்சி செய்த ராஜபக்ச அரசு காலத்திலும் காணமலாக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இலங்கை தொடர்ந்து பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் டொலர் தொகையை அதிகரிப்பதற்காகவும் – புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் சர்வதேச அளவில் கொடுத்துவரும் அழுத்தங்களை கட்டுப்படுத்தி – ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கையின் பொறுப்புக்கூறல், நீதி மற்றும் மனித உரிமைகள், நல்லிணக்கம் தொடர்பில் கனிசமானளவு நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக காட்டுவதற்காகவே இந்த ஏற்பாடுகள் எனலாம்.

ரணில் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் காலாதிகாலமாக செய்து வந்த அதே  ஏமாற்றுவித்தையை மீண்டும் ஆரம்பித்துள்ளது. காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் “காணாமல்போனவர்களிற்கான அலுவலகம் ஒரு கண்கட்டு வித்தை. சர்வதேசத்தை ஏமாற்றும் சதி. இதனால் எந்த பயனும் இல்லை.” என எற்கனவே அறிவித்துவிட்ட நிலையில் மீண்டும் ஒரு அலுவலகத்தை உருவாக்கி தமிழர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக நீதியமைச்சர் கூறுவது சர்வதேசத்தை ஏமாற்றுவதும் – புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை திருப்திப்படுத்துவதுமே ஆகும்.

அண்மையில் தமிழர் தொடர்பில் பல தளர்வான போக்கினை ரணில் அரசு முன்னெடுப்பது கூட ஜெனீவா கூட்டத்தொடரை மையப்படுத்திய நகர்வே தவிர வேறெதுவுமில்லை. தீர்வை கொடுப்பதாயின் ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசு காலத்திலேயே தீர்வை கொடுத்திருப்பார். இது சர்வதேசத்தை தற்காலிமாக திருப்திபடுத்தி கால அவகாசம் பெறும் முயற்சியே தவிர வேறொன்றுமில்லை.

“கோட்டாபாயவின் எதிர்கால திட்டம் என்ன.?” – நாமல் ராஜபக்ச விளக்கம் !

அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தாய்லாந்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்பியது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

“எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னாள் ஜனாதிபதி தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் அரசியலில் ஈடுபடலாமா வேண்டாமா என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும். மற்றவர்களுக்காக முடிவெடுக்கும் உரிமை எங்களுக்கு இல்லை,” எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி தனது முடிவை அறிவித்தவுடன் கட்சியின் நிர்வாக சபைக்கு அறிவிப்போம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் குறிப்பிட்டுள்ளார்.