29

29

இலங்கையில் 10 குடும்பங்களில் 04 குடும்பங்கள் போதிய உணவு இல்லை !

இலங்கையில் உள்ள ஒவ்வொரு 10 குடும்பங்களில் 04 குடும்பங்கள் போதிய உணவை உட்கொள்வதில்லை என உலக உணவுத் திட்டத்தின் சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் உணவு மற்றும் எரிபொருள் நெருக்கடி  காரணமாக மக்கள் உணவு உட்கொள்வதை தவிர்த்து வருவதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்காலத்தில் நாட்டின் நிலைமை இன்னும் மோசமடையலாம் என உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையர்களிடையே உணவு வேளை என்பது நிச்சயமற்ற நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ள உலக உணவுத்திட்டம், நாடாளவிய ரீதியில் உணவு பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுவதனால் அநேகமானவர்கள் பல்வகைமை குறைந்த உணவுகளையே உட்கொள்ளும் பழக்கத்தை ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது

திருமணமாகாத பெண்ணுகளும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு – இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு !

திருமணமான பெண்ணைப் போலவே திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என இந்திய உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கருக்கலைப்பு யாருக்கு எந்த சூழலில் செய்யப்பட வேண்டும் என்பது பற்றிய விதிமுறையை ஒழுங்குபடுத்துவது குறித்த வழக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இதன்போது தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், சட்டப்பூர்வமாக ,பாதுகாப்பாக கருக்கலைப்பு செய்ய அனைத்து பெண்களும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்றும் திருமணமாகாத பெண்களுக்கும் 20 முதல் 24 வார கர்ப்பத்தை கலைக்க உரிமை உண்டு என கூறியுள்ளது.

கருக்கலைப்பு விதிகளில் திருமணமாகாத பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியலமைப்புக்கு எதிரானது என நீதிபதி கூறியுள்ளார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு மனைவியின் அனுமதியின்றி, கணவன்மார்களால் ஏற்படும் பாலியல் வன்கொடுமையும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் கருக்கலைப்புக்கான விதிகளின் கீழ் ( marital rape) என எடுத்துக் கொள்ள வேண்டும் என உச்சநீதிமன்ற பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

எம்.டி.பி சட்டத்தின் விளக்கம் சமூக யதார்த்தத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என கூறியள்ள நீதிபதி  சமூகம் மாறும்போது சமூக இயல்புகள் மாறுகின்றன ,உருவாகின்றன மற்றும் சட்டங்கள் நிலையானதாக இருக்கக்கூடாது மற்றும் காரணத்தை முன்னெடுக்கக்கூடாது என கருத்து தெரிவித்துள்ளார்.

உலகம் முன்னோக்கிச் சென்றாலும் இலங்கை ஓரிடத்தில் அசையாமல் நிற்கிறது – சஜித் பிரேமதாச

உலகம் முன்னோக்கிச் சென்றாலும் எமது நாடு ஓரிடத்தில் அசையாமல்  நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வெல்லவாய தனமல்வில சபைக் கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருக்க, உலகம் முன்னோக்கிச் செல்கிறதென அவர் தெரிவித்துள்ளார்.

நாடு ஓரிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டின் எதிர்காலம் குறித்த புரிதல் அவர்களுக்கு இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையிலும் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்காக பல பணிகளை செய்துள்ளதாகவும் அதற்கு சக்வாலா மற்றும் காஸா திட்டங்கள் சிறந்த எடுத்துக்காட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

15 வயதுடைய பாடசாலை மாணவி கற்பழித்து கொலை – 13 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது !

15 வயதுடைய பாடசாலை மாணவி கற்பழித்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் டிஎன்ஏ பரிசோதனையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று (28) எஹலியகொட பொலிஸாரால் பலீகல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு எஹலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் பாடசாலைச் சீருடையுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் எஹலியகொட பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர் இன்று (29) அவிஸ்ஸாவல மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

வவுனியாவில் பின்தங்கிய கிராமங்களில் கர்பிணித்தாய்மார்களுக்கு அதிகமாக குருதிச்சோகை !

பின்தங்கிய கிராமங்களை சேர்ந்த கர்பிணித்தாய்மார்களிற்கே அதிகமாக குருதிச்சோகை ஏற்படுவதாக வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

பின்தங்கிய பகுதிகளில் பொதுவாக போசாக்கு பிரச்சினைகள் நீண்டகாலமாக காணப்படுகின்றது.  தற்போதைய பொருளாதார நிலைக்கு முன்பாக இருந்த காலப்பகுதியிலும் கூட குருதிச்சோகையால் பாதிக்கப்படும் பின்தங்கிய கிராம புறங்களில் வசிக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

இந்நிலையில் கர்பிணித்தாய்மார்களிற்கு சுகாதார திணைக்களம் ஊடாக உரிய குருதி பரிசோதனையினை மேற்கொண்டு அவ்வாறான அறிகுறிகளை கொண்ட தாய்மார்களிற்கு மேலதிக கவனம் எடுத்து அதற்கான மாத்திரைகள் வழங்குவதுடன் ஏனைய விடயங்களும் வழங்கப்படுகின்றன.

அது குழந்தை பிறக்கும் போது ஏற்படும் சில பிரச்சினைகளை முடிந்தவரை தவிர்ப்பதற்கு உதவும். இதேவேளை குழந்தை சரியான நிறையுடன் பிறப்பதற்கும் தாய்மார்களின் போசாக்கு முக்கிய காரணியாகவுள்ளது.

இந்த பாதிப்பு நிலமை சில காலங்களிற்கு நீடிக்கும் நிலையே உள்ளது என்றார்.

“இது ஒருபுறம் சிங்கள பௌத்த நாடு. மறுபுறம் பாலியல் தொழிலாளர்களின் எண்னிக்கை அதிகரித்துள்ளது.”- மைத்திரிபால கவலை !

பொருளாதார நெருக்கடியால் பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகளின் எண்னிக்கை அதிகரித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துரைக்கும் போதே மைத்திரிபால சிறிசேன இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தமது பிள்ளைகளுக்கு உணவை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமையை எதிர்நோக்கி உள்ளனர்.

இலங்கை எப்போது இப்படி அரசி தட்டுப்பாடும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கோதுமை மாவுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதில்லை. பொருளாதார நெருக்கடி என்ற பிரச்சினை மக்களின் வாழ்க்கை தொடர்பான பிரச்சினையாக மாறியுள்ளது.

வறிய மக்களும் நடுத்தர குடும்பங்களும் உணவு தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்கும். நாட்டின் வெல்வந்தர்களுக்கு இந்த நிலைமை ஏற்படாது. ஒரு புறம் போதைப் பொருள் வியாபாரம் பாரதூரமான அளவில் பெருகி வருகிறது. அந்த வியாபாரத்தை ஒழிக்க அரசாங்கம் வலுவான வேலைத்திட்டத்தை நடைமுறை்படுத்துவதாக தெரியவில்லை.

 

அதேபோல் எண்ணிப்பார்கக முடியாத குடும்பங்களை சேர்ந்த யுவதிகள் பெருமளவில் பாலியல் தொழிலை நோக்கி செல்வதாக காவல்துறை அதிகாரிகள் என்னிடம் கூறினார். இந்த நாடு எந்த திசையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றது. ஒரு புறம் சிங்கள பௌத்த நாடு. மறுபுறம் தமிழ்,முஸ்லிம் என அனைத்து இனங்களும் ஐக்கியமாக வாழும் நாடு.

இவ்விதமாக சென்றால், உணவை பெற்றுக்கொள்ளக்கூடிய செல்வந்தர்களான சிறிய தரப்பினர் மாத்திரம் எஞ்சி, வறிய மக்கள் உட்பட ஏனையோர் மரணித்து விடுவர் “, எனக் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு பேரணி !

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கையாக, யாழ்.போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் இன்று (29) மதியம் 12 மணியளவில் இந்த பேரணி ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதியூடாக, யாழ் காவல் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பிரதான வீதியூடாக சுண்டுக்குளிச் சந்தியை அடைந்து பழைய பூங்கா வீதியூடாக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தை அடைந்தது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட செயலர் க.மகேசனுக்கு யாழ் போதனா வைத்தியசாலை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினரால் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இந்தப் பேரணியின் போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் என அனைவரும் பங்கேற்றனர்

ஆசிரியர் தின நிகழ்வுகளுக்கு பணம் செலுத்தவில்லை என கூறி மாணவியை தாக்கிய பாடசாலை அதிபர் !

நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கொட்டகலை பிரதேச வைத்திய அதிகாரி சாவித்ரி சர்மா தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் தின நிகழ்வுக்காக தனது சகோதரன் 300 ரூபா செலுத்தவில்லை எனத் தெரிவித்து, குறித்த அதிபர் மாணவியின் சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனையடுத்து மாணவி, சகோதரனை தகாத வார்த்தைகளால் திட்ட வேண்டாம் என்றும் எனது தந்தை அருகில் வேலை செய்வதால் அவரிடமிருந்து பணத்தை வாங்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே அதிபர் குறித்த மாணவியை பிரம்பால் தாக்கியதாகவும் இதனையடுத்து பாடசாலைக்கு அருகில் வேலை செய்துகொண்டிருந்த மாணவியின் தந்தை, மகளின் அலறல் கேட்டு, பாடசாலைக்கு வந்து மாணவியைக் காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதலுக்கு இலக்கான மாணவியுடன் தனக்கு 4 குழந்தைகள் இருப்பதாகத் தெரிவித்த தந்தை, பொருளாதார பிரச்சினையில் தான் இருப்பதுடன், தனது மனைவி வெளிநாட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதுடன், தனது மகள் தாக்கப்பட்டமை தொடர்பில் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடையும் செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரிடம் வினவியபோது, ஒழுக்கம் விடயமாகவே குறித்த மாணவியை சிறு தடியொன்றினால் தாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.