22

22

யாழ். பிரபல பாடசாலையில் போதைப்பொருள் பாவித்து மயங்கி விழுந்த மாணவர்கள் – சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் விசனம் !

யாழ். மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் அண்மையில் மூன்று மாணவர்கள் மயங்கி விழுந்ததாகவும் பரிசோதனையின் போது அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்தாகவும் யாழ். போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது.

எனினும், ஆசிரியர்கள், அதிபர்கள் தமது பாடசாலைகளில் நற்பெயருக்குக் களங்கம் வந்துவிடக்கூடாது என்பதால் அது குறித்த தகவல்களை வெளிப்படுத்தாது மறைக்கின்றனர். இந்தச் செயல் கொலைக்குச் சமனானது. இனி இந்த விடயங்களை வெளிப்படையாகப் பேசவேண்டும். ஏனெனில் நிலைமை மோசமாகிவிட்டது.

யாழ். மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றில் அண்மையில் மூன்று மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.

பரிசோதனையின்போது அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்தனர் என தெரியவந்தது. பின்னர் பாடசாலையின் நற்பெயரைக் கருத்தில்கொண்டு சில விடயங்கள் மூடிமறைக்கப்பட்டுவிட்டன. போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு பாடசாலைகளின் பங்களிப்புப் போதாது. இந்த நிலைமை கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

“முடிந்தால் ஒரு விமானத்தையேனும் இந்தியாவில் இருந்து பலாலிக்கு கொண்டுவந்து காட்டுங்கள்.“ – கூட்டமைப்பினருக்கு அமைச்சர் நிமல் சிறிபால சவால் !

பலாலி விமான நிலையத்திற்கு முடிந்தால் ஒரு விமானத்தையாவது கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று (22) வியாழக்கிழமை சிவில் விமான சேவைகள் மீதான ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை தொலைக்காட்சி சேவைகள் மீதான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்

பலாலி விமான நிலையத்திற்கு  பெருமளவான நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதற்காக அதனை திறந்து வைத்தோம். பலாலி விமான நிலையத்தின் சேவைகளுக்காக யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இளைஞர்களையே நியமித்தோம்.

விரைவில் அதனை  திறக்குமாறும் விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதாகவும் பல்வேறு நிறுவனங்கள் உறுதியளித்தன. ஆனால் கடந்த காலங்களில் எவரும் விமானத்தை கொண்டு வரவில்லை.விமானங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க முடியுமென்றால் முதலில் விமானங்களை கொண்டு வாருங்கள். அதற்கு பின்னர் தேவையான வேலைகளை நாங்கள் செய்கின்றோம் என்றார்.

இதன்போது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறிதரன் குறுக்கிட்டு இந்தியாவின் இந்திய எயார்வேஸ் நிறுவனம் மற்றும் இண்டிக்கா என்பன விமானத்தை கொண்டு வர தயாராகவே இருக்கின்றன. இதனால் யாரும் விமானத்தை கொண்டு வரவில்லை என்று கூற வேண்டாம்.  என்றார்.

மீண்டும் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில்,

விமானம் வரும் என்று நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தோம். பல்வேறு செய்திகளையும் அனுப்பினோம். ஆனால் வரவில்லை. பிரச்சினைகள் இருந்தால் பேசி தீர்த்துக்கொள்ளலாம். உண்மையிலேயே விமானங்களை கொண்டு வர முடியுமென்று உறுதிப்படுத்தினால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். அங்கு பெருமளவில் செலவழிக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்றால் இந்தியாவுடன் மற்றும் இந்திய விமான சேவையுடன் கதைத்து விமானங்களை அனுப்புமாறு கூறுங்கள். பிரச்சினைகள் இருந்தால் எங்களுடன் கதைக்குமாறு கூறுங்கள். முடிந்தால் ஒரு விமானத்தையேனும் கொண்டுவந்து காட்டுங்கள். நாங்கள் எங்கள் பக்கத்தில் செய்ய வேண்டியவற்றை செய்துள்ளோம். ஆனால் அந்தப் பக்கத்தில் எதுவும் செய்யப்படவில்லை என்றார்.

30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை ஆரம்பித்தது திருகோணமலை துறைமுகம் !

திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கனிய மணலை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

நீங்கள் வாழும் சூழலில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்களைக் கொண்ட குடும்பங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள் – ஜனாதிபதி அலுவலகம்

வறுமை காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை  பாடசாலைக்கு எடுத்துவந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.

இதனையடுத்து குறித்த செய்தி தொடர்பில் தகவல்களைப் பெற ஜனாதிபதி அலுவலகம் நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, மினுவாங்கொடை பிராந்திய பணிப்பாளர் வஜிர ரணராஜா, கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ. சத்தியானந்த, திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர், மினுவாங்கொடை கல்வி வலய திவுலப்பிட்டி கல்விப் பிரிவின் பணிப்பாளர், கொங்கொடமுல்ல புனித அந்தோனியார் கனிஷ்ட கல்லூரியின் அதிபர்   ஆகியோரிடமிருந்து தகவல்கள் பெற்றப்பட்டன.

அத்துடன், மாணவி வாழும்  பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் இருந்தும் தகவல்கள் பெறப்பட்டன.

எனினும், இந்தத் தகவல்களின்படி அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் அப்பகுதியில் பதிவாகவில்லை என்று உறுதியாகியுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக உணவு நெருக்கடி ஏற்பட்டால் இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளதன் படி,

எந்தவொரு குழந்தையோ, நபரோ அல்லது குடும்பமோ உணவு நெருக்கடிக்கு உள்ளானால் இதற்குத் தீர்வுகாண விசேட வேலைத்திட்டமொன்று பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள்  மட்டத்தில்   ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகத்தில்  உணவுப் பாதுகாப்புத் திட்டப் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

0114354647  மற்றும் 0114354354 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து 5705/5707 ஆகிய நீட்டிப்பு  இலக்கங்களின் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.

உலக உணவுத் திட்டத்தின் கீழ் உதவி பெறத் தகுதியான அளவுகோல்களைக் கொண்ட தரப்பினராக   05க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சமுர்த்தி பயனாளிகளது குடும்பங்கள், ஊனமுற்றோர் மற்றும் நாட்பட்ட நோயாளர்களைக் கொண்ட குடும்பங்கள், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஏழ்மையான குடும்பங்கள், கணவன் அல்லது மனைவி இல்லாத குடும்பங்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களைக் கொண்ட குடும்பங்கள், ஆரம்பக் கல்வி கூட பெறாத ஏழைக் குடும்பங்கள், கடுமையான உணவுப் பற்றாக்குறையுள்ள குடும்பங்கள்  மற்றும் கடுமையான உணவுப் பஞ்சத்தில் இருக்கும் குடும்பங்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவ்வாறான குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ்  மாதாந்தம் 15,000 ரூபாவை   கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக வழங்க முடியும். அதற்கமைய முதல் 03 மாதங்களுக்கு பணம் வழங்கப்படுவதுடன் மேலும் 06 மாதங்களுக்கு உணவு வழங்கும்  திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதுதவிர மாதந்தோறும்    10,000 ரூபா வீதம் 6 மாதங்கள் வரை  கொடுப்பனவு வழங்க அரசாங்கத்தினால்   ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் உள்ளடங்காத மற்றும் தற்சமயம் உணவு கிடைக்காமல் தவிக்கும் குடும்பங்கள் இருப்பின் அவர்களுக்கு குறுகிய காலத்தில் உணவு வழங்க வாய்ப்பு உள்ளது.   கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக ஜனாதிபதி செயலகத்தின் உணவு பாதுகாப்பு திட்டப் பிரிவுக்கு கோரிக்கை முன்வைக்க வேண்டும்.

மேலும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள  மாணவர்களைக் கொண்ட குடும்பங்கள் இருந்தால், அது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, அத்தகைய குடும்பங்களுக்கு அரசாங்கம்  செயல்படுத்தி வரும்  பெற்றோர் பாதுகாவலர் திட்டங்கள் மூலம் உணவு உதவித் திட்டங்கள்  வழங்கப்படும்.

மேலும், உணவின்றி தவிக்கும் குடும்பங்கள் பற்றிய தகவல்களை பாடசாலை ஆசிரியர்களும் சேகரித்து, ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்ப முடியும். அத்தகைய குடும்பங்களுக்கு உதவ விரும்புபவர்களும் இதில்  இணைந்து உதவி வழங்க முடியும்.

அதுமட்டுமின்றி கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு இந்த வேலைத்திட்டங்களை  செயற்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்ய முடியும்.

தமிழர் பகுதி ஆலயம் தொடர்பான பிரச்சினைகளுக்கு அரசியல் தலையீடே காரணம் – பொலிஸார்

வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் புதிதாக படி அமைத்தமை, அதற்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை இன்றையதினம் (22) வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் அமைவு பெற்றுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மக்கள் சென்று வழிபாடு செய்யவும், ஆலயத்தினை புனருத்தானம் செய்யவும் நீதிமன்றினால் தடைவிதிக்கப்பட்டதோடு, குறித்த ஆலயத்தில் புதிய அபிவிருத்தி செய்த குற்றசாட்டில் குறித்த ஆலய பூசகர், நிர்வாகத்தினர் மீதும் நெடுங்கேணி பொலிஸாரால் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய நேற்றையதினம் குறித்த வழக்கானது வவுனியா நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக சிவசேனை அமைப்பின் வன்னி பிராந்திய இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் ஊடகங்களுக்கு கூறுகையில்,

வெடுக்கு நாறிமலை ஆலய தலைவர், செயலாளர், பொருளாளர், பூசகர் குறித்த வழக்கிற்கு சமூகம் அளித்திருந்தார்கள். சட்டத்தரணி தயாபரன் தலைமையிலான எட்டு சட்டதரணிகள் குழாம் இதற்கு ஆதரவாக ஆஜராகியிருந்தார்கள். குறித்த வழக்கில் நெடுங்கேணி பொலிஸாரை விசாரணைக்குட்படுத்தப்பட்டது. அதில் பொலிஸ் சாஜனிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் குறித்த பிரச்சினைக்கு அரசியல் தலையீடே காரணம் என கூறியிருந்தார்.

அத்தோடு குறித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆலய நிர்வாகத்தினர், பூசகர் இதற்கு காரணம் இல்லை எனவும் குறித்த ஆலயத்தில் பூசைக்கு தடையில்லை எனவும் , இதற்கு காரணமான உண்மையான குற்றவாளி யார் என்பதை வருகின்ற 13.10.2022 ஆம் திகதிக்கு முன்பதாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறும் பொலிஸாருக்கு வவுனியா நீதிமன்ற நீதவானால் உத்தரவு பணிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு எமது ஆலயங்களில் சில அரசியல் நடத்துவதே குறித்த பிரச்சினைக்கான காரணம். எமது ஆலயங்களின் வழக்கத்தின்படி ஒரு ஆலயத்தில் நித்திய பூஜைகள் கட்டாயம் நடைபெற வேண்டும் அதற்கு எந்த தடையும் இல்லை அபிவிருத்தி பணிகளை செய்வதற்கே தடை செய்யப்பட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் விளம்பரப் பலகை இதையே கூறுகின்றது எனவும் கூறியிருந்தார்.

குருந்தூர்மலை நில மீட்பை வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் !

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் (வியாழக்கிழமை) பேரணி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக இராமநாதன் வீதி ஊடாக பரமேஸ்வராச் சந்தியை அடைந்து அங்கிருந்து சிறிது நேரம் வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் பேரணியாக பல்கலைக்கழகத்தை வந்தடைந்தனர்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து நேற்றையதினம் (புதன்கிழமை) குருந்தூர்மலையில் அப்பகுதி மக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில்சமூகப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் இ.மயூரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதனை கண்டித்தே யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரவிகரன் மற்றும் மயூரனை விடுதலை செய், எமது காணி எமக்கு வேண்டும், எமது மலை எமக்கு வேண்டும், குருந்தூர் மலையை ஆக்கிரமிக்காதே போன்ற கோஷங்கள் பல்கலைக்கழக மாணவர்களால் எழுப்பப்பட்டது.

ரவிகரன் மற்றும் மயூரன் விடுதலை செய்யப்படாவிட்டால் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

பகல் நேர உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த பாடசாலை மாணவி – பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்கள் !

இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகள் இன்னமும் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ள இந்த நிலையில் இலங்கையில்மந்த போசணையும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் உணவிற்கு பெரும் கஷ்டப்படும் குடும்பம் ஒன்றில் பாடசாலை மாணவி ஒருவர் தனது பகல் நேர உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த நெஞ்சை உருக வைக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மினுவாங்கொடை கல்வி வலயத்திலுள்ள பாடசாலையில் தரம் 09 இல் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு தேங்காய் துண்டுகளை கொண்டு வந்துள்ளார்.

குறித்த மாணவியின் தந்தை நாளாந்த கூலி வேலை செய்தே தனது குடும்பத்தை காப்பாற்றி வருகின்றார். மாணவிக்கு மேலும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். பாடசாலை இடைவேளையின்போது ஏனைய மாணவர்களுடன் பகலுணவை சாப்பிட சென்றபோதே இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவம், ஆசிரியர்களின் காதுகளுக்கு எட்டியதை அடுத்து ஆசிரியர்கள் உணவுப் பொதிகளை கொண்டுவந்து அந்த மாணவிக்கு கொடுத்துள்ளனர்.

இதேவேளை அதே பாடசாலையில் தரம் மூன்றில் கல்விபயிலும் மாணவர்கள் சிலரும் பகலுணவு இன்றி இருக்கின்றனர். அத்துடன், அந்த பாடசாலையில் கல்விபயிலும் மாணவர்களில் பலர் முதல்நாள் இரவு உணவை உட்கொண்டிருக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற நிலத்தில் கஞ்சாவை பயிரிடுங்கள் – டயானாவுக்கு ஹர்ஷ டி சில்வா பதில் !

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெற்று நிலத்தில் மாதிரி கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சரின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் இது அமைந்துள்ளது.

இலங்கையில் கஞ்சா பயிரிடுவது சட்டவிரோதமானது அல்ல எனவும், கஞ்சா ஏற்றுமதி மூலம் பாரிய அளவிலான அந்நிய செலாவணியை ஈட்டமுடியும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே தெரிவித்தார்.

கஞ்சா ஏற்றுமதி மூலம் டொலர்களை சம்பாதிப்பதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கஞ்சாவை விற்பனை செய்து அபிவிருத்தியடைந்த நாடுகள் உலகில் இல்லை எனவும் ஹர்ஷ டி சில்வா இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்களுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்பு – மலேசியா தீர்மானம் !

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்காக 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மலேசியா தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“ அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடைமாற்றும் அறையில் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.”- பெண் எழுத்தாளர் குற்றச்சாட்டு !

27 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய பெண் எழுத்தாளர் ஒருவர் அவருக்கு எதிராக புதிய வழக்கைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது,

“1995-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு கடையின் உடைமாற்றும் அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்தார்” என்று கூறி உள்ளார்.

இதுதொடர்பாக கரோலின் வக்கீல் ராபர்ட்டா கப்லன் கூறும்போது, “டிரம்ப் மீது வருகிற நவம்பர் 24 ஆம் திகதி வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்கப்படலாம்” என்றும் தெரிவித்தார்.

பெண் எழுத்தாளரின் குற்றச்சாட்டை டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது, கரோல் தனது புத்தகத்தை விற்பதற்காக கற்பழிப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்” என்றார்.

ஏற்கனவே டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.