27

27

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தால் நிராகரிப்பு !

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று பேரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று நிராகரிக்கப்பட்டன.

வவுனியா மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு தொடர்பான உண்மை விளம்பல் விசாரணை இடம்பெற்ற போதே, பிரதிவாதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்டன.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் 16 ஆவது சரத்தின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தரப்பிலான உயர் அதிகாரிகளால், மூன்று பிரதிவாதிகளிடமிருந்து தனித்தனியாக குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்ளுமாறு முன்வைக்கப்பட்ட விண்ணப்பம் விசாரணைகளின் பின்னர் இன்று நிராகரிக்கப்பட்டது.

வழக்கின் முதலாம் பிரதிவாதியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இரா.கண்ணன் நிராகரித்ததுடன், அதற்கான  கட்டளையை வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு இன்று அனுப்பியிருந்தார்.

ஏனைய இரண்டு பிரதிவாதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இன்று நிராகரிக்கப்பட்டன.

இந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை தாம் வழங்கவில்லை என வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிகள் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

அதற்கமைய, உயர் பொலிஸ் அதிகாரிகளால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்தது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் LTTE அமைப்புடன் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட மூன்று பிரதிவாதிகளும் கடந்த 12 வருடங்களாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணை ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொலை தொடர்பில் செய்யப்பட்ட நால்வருக்கு பிணை !

மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு பிரதிவாதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி N.M.M.அப்துல்லா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நான்கு பிரதிவாதிகளும் தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனை தவிர, பிரதிவாதிகளுக்கு வௌிநாடுகளுக்கு செல்ல தடையுத்தரவு பிறப்பித்த நீதிபதி, பிரதிவாதிகளின் கடவுச்சீட்டை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கடவுச்சீட்டு இல்லையெனின் அதற்கான சத்தியக்கடதாசியை சமர்பிக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.

அதனை தவிர பிரதிவாதிகளின் வதிவிடத்தை உறுதி செய்து, கிராம உத்தியோகத்தரிடம் பெறப்பட்ட சான்றுப்பத்திரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வவுணதீவில் இரண்டு பொலிஸார் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானின் சாரதியான கபூர் மாமா என்றழைக்கப்படும் சஹீர் ஆதம்லெப்பை உள்ளிட்ட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களுக்கு எதிரான சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, பிரதிவாதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் பொருளாதார நெருக்கடி – வடக்கில் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பப்படும் குழந்தைகள் !

வடமாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 246 சிறுவர்கள் வடமாகாணத்தில் வசிக்கும் பெற்றோர்களால் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மக்கள் எதிர்நோக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடியே இதற்குக் காரணம் என வடமாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு ஆணையாளர் குருபரன் ராஜேந்திரன் ஆங்கில நாளிதழொன்றுக்கு தெரிவித்துள்ளார் .

இதேவேளை தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தாய்மார்கள் வெளிநாடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் குருபரன் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் திறைசேரியில் இருந்து வழங்கப்பட வேண்டிய நிதியானது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்திற்கு முறையாகப் பெற்றுக் கொள்ளப்படாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும்
இதற்குக் காரணம் அரசாங்கம் எதிர்நோக்கும் கடுமையான நிதி நெருக்கடிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“எனது காலத்தில் மக்கள் உண்டு, குடித்து மகிழ்ச்சியாக இருந்தார்கள்.” – மைத்திரிபால சிறிசேன

“எனது காலத்தில் மக்கள் உண்டு, குடித்து மகிழ்ச்சியாக இருந்தார்கள்;அக்காலத்தில் பொருட்களின் விலை குறைவு-சம்பளம் அதிகம்:” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அப்போது பொருட்களின் விலை குறைவாகவும், சம்பளம் அதிகமாகவும் இருந்தது. மக்கள் கடவுளின் உதவியால் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் அனைத்துக் கட்சி அரசுகள் உருவாகவில்லை. எனவே, மிகவும் முற்போக்கான கட்சிகளை ஒன்று திரட்டி கூட்டமைப்பை உருவாக்கி மக்கள் நேய ஆட்சியை உருவாக்குவேன் என நம்புகிறேன்.கொழும்பைச் சூழவுள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரிக்கப்படுவது நல்லதொரு சூழ்நிலை அல்ல. அதன் மூலம் அரசுக்கு எதிரான மக்களின் எழுச்சி அதிகரிக்கவே செய்யும்’’ என்றார்.

போதைக்காக ஓடிக்கொலேன் குடித்த குடும்பஸ்தர் மரணம் – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணத்தில் போதைக்காக ஓடிக்கொலேன் குடித்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் புகையிரத நிலைய வீதியை சேர்ந்த மார்க்கண்டு திருக்குமரன் (வயது 54) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மயங்கிய நிலையில் காணப்பட்டவரை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையின் போது, குறித்த நபர் போதைக்காக ஓடிக்கோலனை அருந்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வைத்திய பரிசோதனையின் போது இருதய நோயினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட அமைதிப்போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். – மனித உரிமைகள் கண்காணிப்பகம்

கொழும்பில் கடந்த சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்மீது பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையையும் 84 பேர் கைதுசெய்யப்பட்டமையையும் கண்டித்திருக்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், இதன்மூலம் எதிர்ப்புக்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாத இலங்கை அரசாங்கத்தின் போக்கு மீளுறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரித்திருக்கின்றன.

அரசாங்கத்தினால் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்புத்தெரிவித்து சோசலிஸ இளைஞர் சங்கத்தினால் கடந்த சனிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியைக் கலைப்பதற்கு பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் தடியடிப்பிரயோகமும் நடத்தப்பட்டது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் இடைக்கால நிறைவேற்றுப்பணிப்பாளர் ரிறானா ஹஸன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார்:

உலகளாவிய ரீதியில் சிவில் சமூக இடைவெளியை ஒடுக்குவதற்கும், போராட்டக்காரர்களை அடக்குவதற்கும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களை அமைதிப்படுத்துவதற்கும் அரசாங்கங்கள் பயங்கரவாதத்திற்கு எதிரான நடைமுறைகளைப் பயன்படுத்துவதை அவதானிக்கமுடிகின்றது.

அந்தவகையில் இவ்வார இறுதியில் (கடந்தவார இறுதி) அதற்கான சிறந்த உதாரணமாக இலங்கை அமைந்திருக்கின்றது. இருப்பினும் அதன்மூலம் இன்னமும் மக்களை நிறுத்தமுடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இவ்விடயம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:

இன்றைய தினம் (சனிக்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 84 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதன் மூலம் எதிர்ப்புக்களைப் பொறுத்துக்கொள்ளமுடியாத இலங்கை அரசாங்கத்தின் போக்கு மீளுறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

இருப்பினும் இந்த அமைதிப்போராட்டக்காரர்கள் அரசின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே போராடுகின்றார்கள். எனவே கைதுசெய்யப்பட்ட அமைதிப்போராட்டக்காரர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.

அதுமாத்திரமன்றி ஆர்ப்பாட்டங்களுக்கு மேலும் தடையேற்படுத்தும் வகையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ‘அதியுயர் பாதுகாப்பு வலய’ உத்தரவு தொடர்பிலும் நாம் மிகுந்த கரிசனை கொண்டிருக்கின்றோம். அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதென்பது ஓர் மனித உரிமையாகும் என்று அப்பதிவில் மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.