05

05

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 21 ஆக உயர்வு !

சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாணத்தில் கன்ஜி திபெத்திய சுயாட்சி பகுதியில் உள்ள லூடிங் கவுன்டி பகுதியில் இன்று மதியம் 12.52 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின.

100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. நிலச்சரிவு ஏற்பட்டதில் பெரிய கற்கள் உருண்டு விழுந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர் என முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு சிச்சுவானின் வென்சுலானி பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ரணிலின் காரும் ஒரு இறாத்தல் பாணும்.”- அனுரகுமார திஸாநாயக்க சாடல் !

ஜனாதிபதி ரணிலின் வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் பத்தொன்பது மில்லியன் என்றால் அந்த வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கு 205 மில்லியன் ரூபா சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் 14 மில்லியன் ரூபா வீட்டிற்கு ஏற்பட்ட சேதம் எனவும் எஞ்சிய 191 மில்லியன் ரூபா வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் எனவும் சுட்டிக்காட்டியுள்ள ஜே.வி.பி தலைவர் 191 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் என்றால் வாகனத்தின் பெறுமதி எவ்வளவு என கேள்வி எழுப்பியுள்ளார்.

“இன்று நாட்டு மக்கள் ஒருஇறாத்தல் பாணை முன்னூறு ரூபாய்க்கு வாங்க வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட நாட்டில் ஜனாதிபதியின் காரின் மதிப்பு எவ்வளவு? இப்படியான ஆட்சியாளர்கள் எப்படி மக்களின் துயர் உணர்வார்கள் என அனுர கேள்வி எழுப்புகின்றார் .

“வேலை செய்யாத அரச ஊழியர்கள் வீட்டுக்குச் செல்லுங்கள் என்று ரணில் கூறுகிறார். ஆனால் ரணிலின் ஊடகப் பிரிவின் எத்தனை இயக்குனர்கள்? டைரக்டர் மீடியா ஆலோசகர், மீடியா டைரக்டர் ஜெனரல், டெபுடி டைரக்டர்கள், மீடியா டைரக்டர்கள், வீடியோ எடிட்டிங் டைரக்டர்கள், எலக்ட்ரோரனிக் மீடியா டைரக்டர்கள், கிரியேட்டிவ் போட்டோகிராபி இயக்குனர்கள் இப்படி எத்தனை பேர் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர்? இவர்களுக்கு சம்பளம் ஒரு இலட்சத்து எண்பதாயிரத்திற்கு மேல் . அதுதவிர அவர்களுக்கு வாகனங்களும் வழங்கப்படுகின்ற்றன.

இவர்களின் கடமைகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க அறிக்கை வெளியிட வேண்டும். ஒரு ஜனாதிபதிக்கு இவ்வளவு தேவையா? என அனுர கேள்வி எழுப்பியுள்ளார்.

“எனக்கு ஆதரவாக டோனி மட்டுமே இருந்தார்.”- விராட் கோலி நெகிழ்ச்சி !

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் முன்னாள் தலைவர் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 60 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போனது. போட்டியின் முடிவில் விராட் கோலி நிருபர்களிடம் கூறியதாவது,

நான் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவர் பதவியில் இருந்து விலகியதும், எம்எஸ் தோனி மட்டுமே எனக்கு மெசேஜ் செய்தார். நிறைய பேரிடம் எனது எண் உள்ளது, ஆனால் யாரும் எனக்கு செய்தி அனுப்பவில்லை. அவருடனான மரியாதையும் தொடர்பும் உண்மையானது. பாகிஸ்தானுடன் போட்டி கூடுதல் நெருக்கடியாகும். இதனால் இந்த ஆட்டத்தில் யாருக்கும் தவறு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை திருப்பியழைக்க ஜனாதிபதி ரணில் நடவடிக்கை !

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

“ராஜபக்சவினரை பாதுகாக்கும் பொறுப்பை ரணில் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.”- சஜித் பிரேமதாஸ

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ராஜபக்சவினரை அரசியலுக்கு வரவழைப்பதற்காக தரை விரிப்பு விரிக்கப்படுவதாகவும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நிராகரித்த ராஜபக்சவினரை பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாடு இழந்த நில உரிமையையும் பணத்தையும் ராஜபக்ச அரச குடும்பம் மீளப் பெற்றுத் தர வேண்டும் என மக்கள் கோருவதாகவும், மக்களின் குரல்களுக்கு செவிசாய்த்து ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மக்களின் பொதுச் சொத்துக்கள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதாகவும், மோசடிகளுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

ராஜபக்சவினர் ஆட்சியில் இல்லாவிட்டாலும், தற்போதைய அரசாங்கம் ரத்துபஸ்வல கொலைக் கலாசாரத்தை மீண்டும் உருவாக்க முயல்வதாகவும், ஜனநாயகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இந்நாட்டு இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தி மிலேச்சத்தனமான முறையில் நசுக்கப்படுவதாகவும் இளைஞர்கள் மீதான அடக்குமுறையை எதிர்க்கட்சி என்ற வகையில் முழுமையாக எதிர்ப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார்.

“சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் 22ஆவது திருத்தத்தில்.” – அமைச்சர் அலி சப்ரி

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று (திங்கட்கிழமை) பேசிய அவர், அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் அரசியலமைப்பின் 22 வது திருத்தம் நிறைவேற்றப்படும்போது மீண்டும் திரும்பும் என்று கூறினார்.

முன்னர் திட்டமிடப்பட்ட இடைக்கால ஏற்பாட்டை தக்கவைக்க தற்போதைய ஜனாதிபதி விரும்பவில்லை என்றும் 19 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவே அவர் விரும்புவதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக தேசிய பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்தை சமநிலைப்படுத்துவதற்கும், சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை தயாரிப்பதற்கும் இலங்கை தயாராகி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

” உலகம் முழுவதும் கையேந்துவதே அரசாங்கத்தின் கொள்கைக் திட்டமாக உள்ளது.” – உதய கம்மன்பில

” உலகம் முழுவதும் கையேந்துவதே அரசாங்கத்தின் கொள்கைக் திட்டமாக உள்ளது.” என நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

” உலகம் முழுவதும் கையேந்துவதே கொள்கைக் திட்டமாக உள்ளது. நாட்டை மீட்பதற்கான திட்டம் ஆளும் கட்சியிடமோ அல்லது எதிர்க்கட்சியிடமோ இல்லை. அதனால் தான் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளோம்.

அழுத்தக் குழுவாக நாம் செயற்படுவோம். பிரச்சினைகளை பற்றி பேசுவதில் பயன் இல்லை, தீர்வுகளை பற்றி கதைக்கவே இந்தக் கூட்டணி.

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர், சக்கரைப் பழக்கத்தை கைவிடாமல், அதனை தொடர்ச்சியாக சாப்பிட்டால் என்ன நடக்கும்? அதுபோலவே கடன் பொறிக்குள் இருந்து மீள்வதற்காக மீண்டும் மீண்டும் கடன் வாங்கும் நடவடிக்கையையே ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

எமது நாடு பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. அந்தத் தீயை அணைக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது. எனவே, எமது புதிய அரசியல் கூட்டணியில் இணையுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.” என்றார்.

“சிறிலங்கா சுதந்திர கட்சி ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளது.” – சந்திரிக்கா குமாரதுங்க

சிறிலங்கா சுதந்திர கட்சி ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளது என இலங்கையின்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் புதிய நவ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்சிக்கு களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமை தாங்குகின்றார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் மிகவும் ஜனநாயக கட்சியாக இருந்த சுதந்திரக் கட்சி தற்போது ஜனநாயகத்தை கொன்று குவித்துள்ளதாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன், கட்சியின் கொள்கை அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி கட்சியின் கொள்கைகளையும், கட்சியையும் பாதுகாத்த மக்களுக்காக தொடர்ந்தும் பாடுபடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் தற்போது எந்தக் கொள்கைகளோ, ஆட்களோ இல்லை என்றும் பெயர் பலகை மட்டுமே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

“55 லட்சம் மக்களை உணவுக்காக போராட வைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” சம்பிக்க ரணவக்க

“நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளி 55 இலட்ச மக்களை உணவிற்காக போராட வைத்துள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் சட்டத்தின் முன்னிலைப்படத்தி தண்டிக்கப்பட வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல பகுதியில் இன்று திங்கட்கிழமை (5) இடம்பெற்ற புதிய சிறிலங்கா சுதந்திர கட்சி காரியாலய திறப்பு விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பெற்றுக்கொண்ட அரச முறை கடன்களை மீள செலுத்த முடியாது என இலங்கை உத்தியோகப்பூர்வமாக அறிவித்ததால் நாடு வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது என பொருளாதார நெருக்கடியை தீவிரப்படுத்திய பஷில் ராஜபக்ஷவின் தரப்பினர் குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.

நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் உண்மையை குறிப்பிடாமல் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொய்யுரைத்தமை பொருளாதார நெருக்கடிக்கு தீவிரமடைவதற்கு பிறிதொரு காரணியாக உள்ளது. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பொதுஜன பெரமுன தனது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக செயற்பட்டது.

நாட்டின் நிதி நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை,மீண்டும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் செயற்பட்டதால் இன்று 55 இலட்ச மக்கள் உணவுக்காக போராட வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜபக்ஷர்களின் முறையற்ற அபிவிருத்தி,வரையறையற்ற வெளிநாட்டு அரசமுறை கடன்களினால் நாடு நிச்சயம் வங்குரோத்து நிலைமை அடையும் என்பதை குறிப்பிட்டதால் 2013 ஆண்டு அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். 2015ஆம் ஆண்டு பாரிய போராட்டத்தின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கத்தின் நோக்கம் முழுமைப்படுத்தபடவில்லை. இருப்பினும் நல்லாட்சி அரசாங்கம் நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு செல்லவில்லை.நாட்டு மக்களுக்கு பல்வேறு வழிமுறைகளில் நிவாரணம் வழங்கப்பட்டது.

நாடு வங்குரோத்து நிலையடைவதற்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் பொறுப்பு கூற வேண்டும்.நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தையும்,நாட்டையும் தவறாக வழி நடத்தி முழு நாட்டையும் வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை இலக்கு  வைத்து கைதுகள் இடம்பெறுகின்றன. நாட்டின் பொருளாதாரத்தை வேண்டுமென்றே நெருக்கடிக்குள்ளாக்கி 55 இலட்ச மக்களையும் உணவுக்காக போராட வைத்துள்ள அரசியல்வாதிகள், அரச உயர் அதிகாரிகள் சட்டத்தின் முன்னிலைப்படுத்தி தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தெரிவு !

கொரோனா காலத்தில் பிறந்தநாள் கொண்டாடியது, பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய நபரை அரசின் கொறடாவாக்கியது, பணவீக்கத்தை கட்டுப்படுத்த தவறியது போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளால் சொந்தக் கட்சிக்குள்ளேயே பொரிஸ் ஜோன்சனுக்கு எதிர்ப்பு எழுந்தது.

அதனையடுத்து ரிஷி சுனக் உள்ளிட்ட கன்சர்வேடிவ் கட்சியின் அமைச்சர்கள் தொடர்ச்சியாக இராஜினாமா செய்யத் தொடங்கினர். இதனால் பொரிஸ் ஜோன்சன் பாரிய நெருக்கடிக்குள்ளானார்.

இதன் காரணமாக வேறுவழியின்றி தனது பிரதமர் பதவியை கடந்த ஜூலை 7 ஆம் திகதி, பொரிஸ் ஜோன்சன் இராஜினாமா செய்தார்.

அதனையடுத்து பிரித்தானியாவுக்கு புதிய பிரதமர் மற்றும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

கட்சியின் தலைமைத்துவத்துக்காக தன்னுடன் போட்டியிட்ட முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை தோற்கடித்து அவர் வெற்றிபெற்றுள்ளார்.

இது தொடர்பிலான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில்  இதன்மூலம் பிரித்தானியாவின் மூன்றாவது பெண் பிரதமராக அவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் ஆளும்கட்சியில் கடந்த ஏழு வாரகாலமாக இடம்பெற்ற இந்தத் தலைமைத்துப் போட்டியின் முடிவை வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள ஒரு மாநாட்டு மையத்தில் வைத்து கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் சேர் கிறகம் பிராடி அறிவித்தபோது லிஸ் ட்ரஸின் ஆதரவாளர்கள் கரவொலியை எழுப்பி ஆரவாரம் செய்திருந்தனர்.

கென்சவேர்ட்டிவ் கட்சி உறுப்பினர்கள் அளித்த 82.6 வீத வாக்குப்பதிவில் கிட்டிய வாக்குகளில் லிஸ் ட்ரசுக்கு 81,326 வாக்குகள் கிட்டியிருந்தன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ரிஷி சுனக்கிற்கு 60,399 வாக்குகள் கிட்டியிருந்தன.

இந்த அறிவிப்பின் பின்னர் கென்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்தை பெற்றுக்கொண்ட வெற்றியாளரான லிஸ் ட்ரஸ் தனது உரையை வழங்கிய போது பிரித்தானியாவில் உயரும் எரிசக்தி செலவுகளை சமாளிக்க ஒரு திட்டத்தை அறிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் தற்போதைய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நாளை ராணி எலிசபெத்தை ஸ்கொட்லாந்தில் உள்ள பல்மோரல் கோட்டையில் சந்தித்து தனது பதவிவிலகல் கடிதத்தை வழங்குவார்.

அதன் பின்னர் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ், ராணியின் நியமனத்திற்குப் பின்னர் பிரதமாராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.