ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அதை தொடர்ந்து அங்கு பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக பெண்கள் மேல் நிலைக் கல்வி பயில தடை விதித்து தலிபான்கள் உத்தரவு பிறப்பித்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.
இதனால் கடந்த ஒரு ஆண்டாக அங்கு பெண்கள் மேல்நிலை கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்கு பெண்களுக்கான உயர்நிலைப் பள்ளிகளை மீண்டும் திறக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை தலிபான்களை வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் உயர் கல்வியை இழந்துள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக் குழு தெரிவித்துள்ளது.
பெண்கள் கல்வி கற்க முடியாமல் போன கடந்த ஓராண்டானது, ஒரு சோகமான, வெட்கக்கேடான மற்றும் முற்றிலும் தவிர்க்கப்படக்கூடிய ஒரு ஆண்டுவிழா என்று ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது. இது ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்திற்கு ஆழமான சேதத்தை ஏற்படுத்துகிறது என ஐநா தெரிவித்துள்ளது.