07

07

1996 – இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் இன்று !

யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.

1996 ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்த வேளை செம்மணி பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்குட்படுத்தி கழுத்தை நெறித்துபடுகொலை செய்திருந்ததாக கூறப்படுகின்றது.

அவரைத் தேடிச் சென்ற, தாயார், சகோதரன் மற்றும் உறவினர் ஒருவரும் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்

இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களையும் செம்மணி பகுதியில் உள்ள வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியாவில் அதிகரிக்கும் சிறுவர் மற்றும் கர்ப்பிணி தாய்மாரின் மரணம் வீதம் !

“நுவரெலியா மாவட்டத்தில்  சிறுவர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் மரணம் அதிகரித்துச்செல்வது பாரிய அச்சுறுத்தலாகும்.” என எதிர்க்கட்சி உறுப்பினர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (7) இடம்பெற்ற பிள்ளைகள் தாய்மாரின் மந்தபோசணை தொடர்பாக யுனிசெப் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்

இலங்கையில் மந்தபாேசணையால் சிறுவர்கள் மற்றும் தாய்மார்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது நுவரேலியா மாவட்டமாகும். ஏனைய மாவட்டங்களில் மந்தபோசணையால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றபோதும்  நுரவரெலியா மாவட்டத்திலேயே சிறுவர் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களின் மரணம் அதிகரித்துச்செல்வது பாரிய அச்சறுத்தலாகும். குறிப்பாக 2020இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் பிரகாரம் பெருந்தோட்ட பிரதேசத்திலே 5வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களில் 34வீதமானவர்கள் வளர்ச்சி குன்றியதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேபோன்று இறுதியாக இடம்பெற்ற சனத்தொகை மற்றும் சுகாதார கணிப்பீட்டின் பிரகாரம் 5வயதுக்கு உட்பட்ட  நான்கில் ஒரு சிறுவர் குறை நிரையுடனும் 10இல் ஒரு சிறுவன் குறை ஊட்டச்சத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டியப்பட்டுள்ளது. அத்துடன் 72ஆயிரம் குழந்தைகள் ஓரளவு அல்லது நீண்டகால ஊட்டச்சத்து குறைபாடாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் மலையகத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் கரடுமுரடான பாதைகளில் தேயிலை ஏற்றும் லாெரிகளிலுமே தங்களின் பிரசவத்துக்காக வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நிலைமையே இன்றும் காணப்படுகின்றது.இவ்வாறான நிலையில் அவர்களுக்கு சுகப்பிரவசம் மிகவும் குறைவாகும். இந்த நிலை மாற்றப்படவேண்டும். தோட்ட வைத்தியசாலைகள் அரசுடமையாக்கப்பட்டு, அங்கு பிரசவ அறைகள் ஏற்படுத்தப்படவேண்டும். மலையத்தில் கர்ப்பிணித் தாய்மார்கள் தங்களின் பிரசவத்துக்காக பல கிலோமீட்டர் செல்லவேண்டிய அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்.

அத்துடன் உலக சுகாதார நிறுவனத்தின் உலக போசணை இலக்கு 2028,ன்ஊடாக 5வயதுக்கு குறைவான சிறுவர்களின் குன்றிய வளர்ச்சியை 40சதவீதத்தால் குறைப்பதற்கும் உடல் தேய்வை 5சதவீதத்தால் குறைப்பதற்கும் அதிக உடல் நிலையை முற்றாக கட்டுப்படுத்துவதற்கும் அதேபோன்று பிறப்பு நிரை குறைவை 30சதவீதத்தால் கட்டுப்படுத்துவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.ஆகவே இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களை மந்தபோசணை நிலைமையில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

எனவே மலையகம் உட்பட நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் சிறுவர்கள் மற்றும் தாய்மாரின் மந்தபாேசணை நிலைமைக்கு பொருளாதார நெருக்கடியே காரணமாகும். அதேபாேன்று பொருட்களின் விலை அதிகரிப்பு, போஷாக்கு உணவுக்கு இருந்துவரும் தட்டுப்பாடே காரணமாகும். பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 1000ரூபா பெற்றுக்கொண்டு பாேஷாக்கான உணவு பெற்றுக்கொள்வது பாரிய பிரச்சினையாகும் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றார்.

“பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபகேடு.” – சாணக்கியன் காட்டம் !

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சாபகேடாக சந்திரகாந்தன் உள்ளார் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் 07 ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்ற பிள்ளைகள் மற்றும் தாய்மார்கள் மந்தபோசணை தொடர்பான சபை ஒத்திவைப்பு இரண்டாவது நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடந்த நாட்களில் வெளிநாட்டிற்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டு அந்நாடுகளின் அரசியல் தரப்பினர், இலங்கையர்களுடன் சந்திப்பில் ஈடுப்பட்டேன். முன்னேற்றமடைந்துள்ள நாடுகள் அதிகாரத்தை பகிர்ந்தளித்துள்ளன. புலம் பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அதிகார பகிர்வு அவசியமானது.

கடந்த நாட்களில் வெளிநாடுகளில் முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தேன். எதிர்வரும் காலங்களில் வெளிநாடுகளில் அரசியலில் தொடர்புமில்லாமல் உள்ள இரண்டாம் தரப்பினருடன் ஒன்றிணைந்து இலங்கைக்கான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காணி விவகாரத்திற்கு பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை,அதிகார பகிர்வு ஆகியவற்றுக்கு தீர்வு அவசியமாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபகேடு. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. பாடசாலைகளும் இராணுவம் வசமுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. இவ்வாற நிலையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் கட்சி மாநாட்டிற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை மட்டக்களப்புக்கு வரவேற்றுள்ளார்.

தனது சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் நாமல் ராஜபக்ஷ உள்ளார். அவ்வாறிருக்கையில் நாமல் ராஜபக்ஷவை மேடைக்கேற்றி மட்டக்களப்பு மாவட்ட மக்களை தரம் குறைத்துள்ள சந்திரகாந்தனை சபையில் வன்மையாக கண்டிக்கிறேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமலிருந்திருந்தால் அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் கூட கிடைத்திருக்காது. கல்முனை பிரதேச செயலக பிரிவு குறித்து விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுப்போம் என்றார்.

அரசாங்க வேலை பெற்றுத் தருவதாக கூறி பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கோரிய இலங்கை ஐக்கிய முன்னணியின்  யாழ். மாவட்ட அமைப்பாளர் !

அரச தொழில் பெற்றுத் தருவதாக கூறி பெண் ஒருவரிடம்  பாலியல் இலஞ்சமும், 50 ஆயிரம் ரூபா பணமும் பெற்றுக்கொள்ள முனைந்ததாக கூறி  இலங்கை ஐக்கிய முன்னணியின்  யாழ். மாவட்ட அமைப்பாளரும் அவரது செயலாளர் எனக் கூறப்படும் நபரும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்கஹவல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களை புறக்கோட்டை – மிதக்கும் சந்தை பகுதியில்   உணவகம் ஒன்றுக்குள் வைத்து கைது செய்ததாக  இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினர் நீதிமன்றுக்கு இன்று ( 7) அறிவித்தனர்.

அதன்படி குறித்த இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன  கெக்குனவல உத்தரவிட்டார்.

கல்முனை பகுதியைச் சேர்ந்த,  ஸ்ரீ லங்கா ஐக்கிய முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என கூறப்படும்  நபரும் மற்றும்  அவரது செயலர் என கூறப்படும் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த  ஒருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

 

முறைப்பாட்டாளரான பெண்ணிடம், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும், பாலியல் இலஞ்சமும் சந்தேக நபர்களால் கோரப்பட்டுள்ளதாகவும், அதில் 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முனைந்த போது அவர்களைக் கைது செய்ததாகவும்  இலஞ்ச ஊழல் ஆணைக் குழு சார்பில் மன்றில் ஆஜராகிய உப பொலிஸ் பரிசோதகர்  சந்ரசிறி, உப பொலிஸ் பரிசோதகர்  ஹர்ஷ,  பொலிஸ் சார்ஜன் சமிந்த,  மற்றும் விஜேசிங்க ஆகியோர் அடங்கிய குழுவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.