அரசாங்க வேலை பெற்றுத் தருவதாக கூறி பெண்ணிடம் பாலியல் லஞ்சம் கோரிய இலங்கை ஐக்கிய முன்னணியின்  யாழ். மாவட்ட அமைப்பாளர் !

அரச தொழில் பெற்றுத் தருவதாக கூறி பெண் ஒருவரிடம்  பாலியல் இலஞ்சமும், 50 ஆயிரம் ரூபா பணமும் பெற்றுக்கொள்ள முனைந்ததாக கூறி  இலங்கை ஐக்கிய முன்னணியின்  யாழ். மாவட்ட அமைப்பாளரும் அவரது செயலாளர் எனக் கூறப்படும் நபரும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொல்கஹவல பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களை புறக்கோட்டை – மிதக்கும் சந்தை பகுதியில்   உணவகம் ஒன்றுக்குள் வைத்து கைது செய்ததாக  இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினர் நீதிமன்றுக்கு இன்று ( 7) அறிவித்தனர்.

அதன்படி குறித்த இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  கொழும்பு மேலதிக நீதிவான் ஹர்ஷன  கெக்குனவல உத்தரவிட்டார்.

கல்முனை பகுதியைச் சேர்ந்த,  ஸ்ரீ லங்கா ஐக்கிய முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் என கூறப்படும்  நபரும் மற்றும்  அவரது செயலர் என கூறப்படும் கொழும்பு 13, ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த  ஒருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.

 

முறைப்பாட்டாளரான பெண்ணிடம், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும், பாலியல் இலஞ்சமும் சந்தேக நபர்களால் கோரப்பட்டுள்ளதாகவும், அதில் 50 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொள்ள முனைந்த போது அவர்களைக் கைது செய்ததாகவும்  இலஞ்ச ஊழல் ஆணைக் குழு சார்பில் மன்றில் ஆஜராகிய உப பொலிஸ் பரிசோதகர்  சந்ரசிறி, உப பொலிஸ் பரிசோதகர்  ஹர்ஷ,  பொலிஸ் சார்ஜன் சமிந்த,  மற்றும் விஜேசிங்க ஆகியோர் அடங்கிய குழுவினர் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *