“கிரிக்கெட்டில் வென்றாலும் ஆப்கானிஸ்தானை விட நாம் வீழ்ச்சியடைந்த நிலையிலுள்ளோம்.”- ஜனாதிபதி ரணில்

“கிரிக்கட் விளையாட்டுக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் சிறந்த உதாரணத்தை தசுன் வழங்கியுள்ளார்.” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்ட வலைப்பந்தாட்ட வீராங்கனைகள், கிரிக்கட் வீரர்கள் மற்றும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களைப் பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு கௌரவமளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள சினமன் லேக் சைட் ஹோட்டலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கயாஞ்சலி அமரவன்சவுடனான வலைப்பந்தாட்ட அணியும் , தசுன் ஷானக தலைமையிலான கிரிக்கட் அணியும் ஆசிய கிண்ணங்களை வெற்றி கொண்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களைப் போன்று நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன். காரணம் இந்த வெற்றிகள் எமக்கு கிடைக்க வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.

கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானுடன் போட்டியிட்டு நாம் தோல்வியடைந்தோம். எனினும் இந்த தோல்வியைக் கண்டு எமது அணி பின்வாங்கவில்லை. தசுன் இந்த தோல்வியை , தமது அணியை பலமிக்கதாக்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். இது கிரிக்கட் விளையாட்டுக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் சிறந்த உதாரணத்தை தசுன் வழங்கியுள்ளார்.

இலங்கை இன்று ஆப்கானிஸ்தானை விடவும் வீழ்ச்சியடைந்த நிலையிலேயே உள்ளது. இந்நிலைமையிலிருந்து மீள முடியாது என்று சிலர் எண்ணுகின்றனர். கிரிக்கட் விளையாட்டில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்த போது இலங்கை கிரிக்கட் அணி பின்வாங்காமல் பலத்துடன் அடுத்த கட்டத்திற்குச் சென்றது.

அதேபோன்று நாமும் தோல்வியை வெற்றியடைவதற்கான ஆயுதமாக்கிக் கொண்டால் விரைவில் நெருக்கடிகளிலிருந்து மீள முடியும்.

தற்போது நாம் ஆப்கானிஸ்தானை விட வீழ்ச்சியடைந்துள்ளோம். சிலர் இந்த நெருக்கடிகளிலிருந்து மீள முடியாது என்று எண்ணுகின்றனர். தசுனைப் போன்று அனைவரும் எண்ணினால் இந்த நெருக்கடிகளிலிருந்து நிச்சயம் மீள முடியும்.

நாம் ஆசியாவில் மாத்திரமின்றி முழு உலகிலும் வெற்றியாளர்களாவதற்கு , எவ்வித அச்சமும் இன்றி உலகத்துடன் போட்டியிடத் தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நாம் உலகத்துடன் போட்டியிடுவதற்கு பதிலாக, உலகிலுள்ள சட்டங்களை எமது வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கே நாம் பழக்கப்பட்டுள்ளோம். இது ஒருபோதும் சாத்தியமாகவில்லை.

இதற்கு முன்னர் இது போன்ற வெற்றிகளின் ஒரு பங்கினை அரசியல்வாதிகள் தம்வசப்படுத்திக் கொண்டனர். எனினும் நாம் அந்த நடைமுறையை முற்றாக நீக்கி, வெற்றியின் நூற்றுக்கு 200 சதவீத பங்கினையும் வீர, வீராங்கனைகளுக்கே உரித்தாக்கியுள்ளோம் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *