போர்த்துக்கல்லில் இந்திய கர்ப்பிணித்தாய் மரணம் – பதவி விலகிய போர்த்துக்கல் சுகாதாரத்துறை அமைச்சர் !

போர்த்துக்க்கல் நாட்டில் சுற்றுலா வந்திருந்த இந்தியாவைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக லிஸ்பனில் உள்ள சான்டா மரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், குறை மாதத்தில் பிறந்ததால் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதற்கான தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதிகள் காலியாக இல்லை. எனவே, அங்கிருந்து வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரை செய்துள்ளனர்.

 

இதையடுத்து தாயையும் குழந்தையையும், சாவ் பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் தாயின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. வாகனத்திலேயே அவரை மயக்க நிலையில் இருந்து மீட்பதற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சாவ் பிரான்சிஸ்கோ சேவியர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

முறையான மருத்துவ சேவை வழங்காமல் அலட்சியமாக இருந்ததே கர்ப்பிணி மரணத்திற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நிர்வாக ரீதியாக நடந்த தவறுக்கு பொறுப்பேற்று நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மார்ட்டா டெமிடோ பதவி விலகினார். அவரது ராஜினாமா கடிதத்தை பிரதமர் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், புதிய மந்திரி நியமிக்கப்படும் வரை, மார்ட்டா டெமிடோ பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய சுகாதாரத்துறை மந்திரியை தேர்ந்து எடுப்பதற்காக வரும் 15ம் திகதி அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெறுகிறது. இதேபோல், சுகாதாரத் துறையில் இருந்து செயலாளர்கள் அன்டோனியோ லசெர்டா சேல்ஸ் மற்றும் மரியா டி பாத்திமா பொன்சேகா ஆகியோரும் பதவி விலகி உள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *