October

October

ஆப்கானில் ஷியா முஸ்லிம்களின் பள்ளிவாசலில் பயங்கர குண்டு வெடிப்பு – 100 பேர் வரை பலி !

ஆப்கானிஸ்தானின் பள்ளிவாசல் ஒன்றில் குண்டு வெடித்ததில் 100 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவியுள்ளனர்.

ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது அதிலிருந்தே ஆப்கானிஸ்தானில் இருந்து அந்நாட்டு மக்கள் வெளியேறிவருகின்றனர். அமெரிக்கா மட்டும் 1,24,000 பேரை மீட்டது. தலிபான்களின் கெடுபிடி நிறைந்த ஆட்சிக்குப் பயந்து இன்னமும் அங்கிருந்து மக்கள் வெளியேறக் காத்திருக்கின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைந்துவிட்டாலும் அவர்களுக்கு எதிராக வடக்கு கூட்டணி உள்ளிட்ட இனக்குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர். அங்கு இன்னும் பொருளாதாரம் மீளவில்லை. இதனால் அங்கு மக்கள் பணமின்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தநிலையில் வடக்கு ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து பள்ளிவாசல் வெடித்ததில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. குண்டூஸ் மாகாணத்தின் பண்டார் கான் அபாத் மாவட்டத்தில், ஷியா முஸ்லிம் மக்கள் வெள்ளிக்கிழமையான இன்று பிற்பகல் பள்ளிவாசலில் தொழுகை நடத்திக் கொண்டு இருந்தனர்.

அப்போது மசூதியில் பயங்கர சத்ததுடன் குண்டு ஒன்று வெடித்தது. இதில் பலர் உடல் சிதறி பலியாகினர். பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

காபூல் விமான நிலையம் அருகே ஆகஸ்ட் 27-ம் தேதி நடந்த இரு மனித வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 18 அமெரிக்க ராணுவத்தினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 143 பேர் படுகாயமடைந்தனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஐஎஸ்-கோராசன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்தநிலையில் அந்நாட்டில் தற்போது மீண்டும் குண்டுவெடிப்பு நடந்துள்ளது.

 

2021 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு இரண்டு ஊடகவியலாளர்களுக்கு !

இவ்வாண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு இரண்டு ஊடகவியலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறையில் உலகளாவிய ரீதியில் பங்களிப்பு செய்கிற சாதனையாளர்களுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே மருத்துவம், இயற்பியல், வேதியல் மற்றும் இலக்கியம் ஆகியவற்றுக்கான நோபல் பரிசுகள் சுவீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (08) சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு சமாதானத்திற்கான நோபல் பரிசு ஊடகவியலாளர்கள் மரியா ரெசா மற்றும் டிமிட்ரி முராட்டோவ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரத்தை பாதுகாத்ததன் மூலம் ஜனநாயகத்தையும் சமாதானத்தையும் நிலைநிறுத்தியமைக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

“வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் கைவசமுள்ளன. அரசுடன் இணைந்து செயற்பட தயார்.” – இரா.சாணக்கியன்

“வடக்கு கிழக்கின் அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் கைவசமுள்ளன. வடக்கின் அபிவிருத்திக்காக அரசுடன் இணைந்து செயற்பட தயார்.” என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டை நடத்தி செல்ல வருமானம் அதிகமாக இருக்க வேண்டும். செலவு குறைவாக இருக்கவேண்டும். சாதாரணமாக கூறுவது என்றால் நாட்டில் பணம் இருக்க வேண்டும்.உலகில் ஷ்டீவ் ஜொப்ஸ். பில்கேடஸ், ஜெக் மார்க் போன்ற மில்லியனர்கள், பில்லியனர்கள் தமது திறமையால், உழைப்பால் முன்னேறி வந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், எமது நாட்டில் மில்லியனர்கள் அதிகளவில் உள்ளனர். திருட்டுகளின் ஊடாக மில்லியனரகள் ஆனவர்கள் உள்ளனர். அவர்களின் திருட்டுகளுக்கு உதவி செய்த அரசியல்வாதிகள் உள்ளனர்.  திறமையால் முன்னேறியவர்களும் இருக்கின்றனர். எனினும்,  அரசியல்வாதிகள் உதவியுடன் பணம் சம்பாதித்தவர்களே அதிகளவானவர்கள் உள்ளனர். அண்மைய காலங்களை எடுத்துக்கொண்டால் ஒரு வருடத்துக்குள் பில்லியன் கணக்கில் இலாபம் பெற்ற தனியார் நிறுவனங்கள் உள்ளன. அவர்களுக்கு அவ்வாறு முடியும் என்றால், அரசுக்கு வருமானம் குறைவடைந்தமை குறித்து அரசாங்கம் தேடியறிய வேண்டும்.

அரசு வழங்கிய வரி சலுகைகள் காரணமாக பொதுமக்களை விட நிறுவனங்களே அதிகளவில் நன்மை பெற்றனர். இன்று சீமெந்து, பால்மா, கேஸ் உள்ளிட்டவற்றுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளன. சீனி மோசடி, வெள்ளைப்பூடு மோசடி என்று மோசடிகளை அடுக்கிக்கொண்டே செல்லாம். நான் விமர்சிக்கவில்லை. வரிச்சலுகை வழங்கப்படுவதால் சாதாரண மக்கள் மீதே தாக்கம் செலுத்துகின்றது.  பாரிய நிறுவனங்கள் பாதிக்கப்படுவதில்லை. எனவேதான், பொதுமக்களுக்கு நன்மை பெற்றுக்கொடுக்கும் வகையிலான வரிச்சலுகை முறையினரை அறிமுகப்படுத்துமாறு நாங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றோம்.

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க 2019 ஏப்ரல் பட்ஜட்டில் முன்மொழியப்பட்டது. இன்றுவரை 153 குடும்பங்களுக்கு மாத்திரம் அந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. அந்த கொடுப்பனவும் 2019 டிசெம்பர் 31ஆம் திகதிக்கு பிறகு வழங்கப்படவில்லை. காணாமல் போன நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. எனினும், அதனை செய்யும் வரை அந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். அதற்காக மரண சான்றிதல் வழங்குவதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

எனவே  காணாமல் போன நபர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் வரை இந்த தொகை அந்த மக்களுக்கு நிவாரணமாக வழங்கப்பவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். வடக்கு – கிழக்கில் உள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான எம்மிடம் உள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கு – கிழக்கில் உங்கள் அருகில் வைத்திருந்த அந்த நபர்கள் செய்த மோசடிகள், திருட்டுகள் காரணமாகவே நீங்கள் பாரிய தோல்வியை அந்தப் பகுதிகளில் சந்திக்க நேரிட்டது. இன்றும் அதுதான் நடக்க போகின்றது. நிதியமைச்சரின் கட்சியை சேர்ந்த மூவரின் பெயரில் மட்டக்களப்பு மண் அகழ்வு அனுமதிப்பத்திரம் உள்ளது. பீ.சந்திரகுமார் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர்.

அடுத்தது, சதாசிவம் மயுரன் வியாழேந்திரனின் தம்பி, அடுத்தது, சிவனேசத்துறை சந்திரகாந்தன். இந்த தகவல்களை நாடாளுமன்றில் தான் நான் பெற்றுக்கொண்டேன். நாங்கள் நிதியமைச்சருடன் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி வேலைத்திடங்களில் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம். எம்மிடம் சிறந்த முன்மொழிவுகள் உள்ளன.

மாவட்ட ரீதியில் சில முன்மொழிவுகளை கூட எம்மால் வழங்க முடியாது உள்ளது. எனவே எமது திட்டங்களை முன்மொழிய எமக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தாருங்கள்.“ எனக்குறிப்பிட்டுள்ளார்.

அகதிகள் பிரச்சினையை பேசிய நாவலாசிரியருக்கு இலக்கியத்துக்கான நோபல் !

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு கடந்த திங்கட்கிழமையில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைக்கான  நோபல் பரிசு பெறுபவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு  இன்று அறிவிக்கப்பட்டது . தான்சானியா  நாவலாசிரியர் அப்துல்ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. அகதிகள் பிரச்சினை, காலனி ஆதிக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான எழுத்துக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

பிரான்சில் 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் – போப் பிரான்சிஸ் விசனம் !

பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தேவாலயங்கள் நிற்காததற்கு அவமானப்படுவதாக போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கத்தோலிக்க மதகுருமார்களால் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக சமீபத்தில் வெளியான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஜீன் மார்க் சாவ் தலைமையில் இரண்டு ஆண்டுகளாகத் தனியார் விசாரணைக் குழு நடத்திய ஆய்வு முடிவில், “ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களில், உலகெங்கிலும் தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருவதைத் தொடர்ந்து இந்த விசாரணை நடத்தப்பட்டது. பிரான்ஸில் கடந்த 70 வருடங்களுக்கும் மேலாக, இந்தப் பாலியல் துன்புறுத்தல்கள் நடந்து வருகின்றன.

பிரான்ஸில் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தைச் சேர்ந்த 3,000 பாதிரியார்களும், பிற ஊழியர்களும் இந்தப் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டுள்ளனர். 1950ஆம் ஆண்டு முதல் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள்  பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக போப் பிரான்சிஸ் முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து போப் பிரான்சிஸ் கூறியதாவது, “பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது வருத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். தேவாலயத்தின் இயலாமைக்காகவும், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தேவாலயங்கள் நிற்காததற்கும், நீண்டகாலமாக, பாதிக்கப்பட்டவர்களைக் கவலையில் வைத்திருந்ததற்காகவும் நான் அவமானம் கொள்கிறேன். இது அவமானத்துக்கான தருணம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அடிப்படை வசதிகள் இல்லாது 14 மில்லியன் மக்கள் பாதிப்பு !

ஆப்கானிஸ்தானில் 5 வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் தீவிர ஊட்டசத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. அமைப்புகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையில் சர்வதேச அமைப்புகள் உடனடியாக தலையிடாவிட்டால் ஒரு மில்லியன் குழந்தைகள் உயிரிழக்கும் அபாய சூழல் உள்ளது என்றும் ஐ.நா. அமைப்புகள் எச்சரித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஜனநாயக ஆட்சி வீழ்ந்தது. அமெரிக்கப் படைகளுடனும், ஆப்கானிஸ்தான் அரசுடனும் 20 ஆண்டுகாலமாக சண்டையிட்டு வந்த தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இதனையடுத்து அங்கு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் உலக நாடுகள் ஆப்கனுடனான உறவைத் துண்டித்தன. இதனால், அங்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆப்கானில் சுமார் 14 மில்லியன் மக்கள் தண்ணீர், உணவு, அடிப்படை மருத்துவ சேவை, போதிய ஊட்டச்சத்து பற்றாக்குறை ஆகியனவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் யுனிசெப் அமைப்பின் ஆப்கானிஸ்தானுக்கான பிரதிநிதி ஹெர்வெ லுடோவிக் டே லிஸ் இரண்டு நாள் பயணமாக ஹெராட் நகருக்குச் சென்றார். அவருடன் உலக உணவுத் திட்டத்தின் ஆப்கனுக்கான பிரந்திநிதி மேரி எல்லென் மெக்கோர்ட்டியும் சென்றார்.

அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் 95% வீடுகளில் போதிய உணவு இல்லை. குழந்தைகளுக்காக பெற்றோர், பெரியவர்கள் சில வேளை உணவுகளை தியாகம் செய்கின்றனர்.

இது குறித்து மேரி எல்லென் மெக்கோர்ட்டி கூறும்போது, “குழந்தைகளுக்காக பெற்றோரும், பெரியவர்களும் பட்டினி கிடக்கும் சூழலைப் பார்க்கும்போடு கவலையாக இருக்கிறது. இதில் உடனடியாக தலையிடாவிட்டால் ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாடு மிக மோசமான பிரச்சினையாக உருவெடுக்கும். சர்வதேச சமூகம் உடனடியாக ஆப்கானிஸ்தானுக்கு தாராளமாக நிதிகளை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை சரி செய்யமுடியாத அளவுக்குச் சென்றுவிடும்” என்று கூறியுள்ளார்.

சில மணிநேரம் முடங்கிய பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் – 700 கோடி டொலர்கள் வரை இழப்பாம் !

உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் திடீரென முடங்கியதற்கு அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சக்கர்பர்க் மன்னிப்பு கோரியுள்ளார்.

உலகின் முன்னணி சமூக வலைதள நிறுவனமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் என பல்வேறு செயலிகளை நிர்வகித்து வருகிறது.

உலகம் முழுவதும் பேஸ்புக் சேவையை சுமார் 285 கோடி வாடிக்கையாளர்களும், வாட்ஸ்அப் செயலியை சுமார் 200 கோடி வாடிக்கையாளர்களும், இன்ஸ்டாகிராமை சுமார் 138 கோடி வாடிக்கையாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று (அக்டோபர் 4) இரவு 9.15 மணியளவில் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் திடீரென முடங்கின. சேவை முடங்கியதை அறியாத பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனில் கோளாறு ஏற்பட்டது என நினைத்து பல்வேறு செட்டிங்களை மாற்றி சோதனை செய்தனர். பலர் செயலிகள் இயங்காததை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

பின் சில நிமிடங்களில் Server Down எனும் Hashtag ட்விட்டரை ஆக்கிரமித்தது. இதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் நிறுவனம், தங்களின் வலைத்தளம் முடங்கி இருப்பதாக அறிவித்தது. இதேபோன்று மற்ற தளங்களும் இந்த தகவலை வெளியிட்டன.

‘முடங்கிய சேவையை திரும்ப செயற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். விரைவில் சரியாகி விடும்’ என பேஸ்புக் அறிவித்தது. எனினும், நீண்ட நேரம் இந்த பிரச்சினை சரியாகவே இல்லை. இன்று அதிகாலை இந்த சேவைகள் சரியாகின. உலகம் முழுக்க சுமார் 7 மணிநேரம் சேவை முடங்கி, பின் செயற்பாட்டுக்கு வந்தது.

7 மணிநேர முடக்கத்தால் பேஸ்புக் நிறுவன பங்குகள் பங்குச்சந்தையில் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. அமெரிக்காவின் நாஸ்ட்காம் பங்குச்சந்தையில் இந்நிறுவன பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு 700 கோடி டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் சேவைகள் மீண்டும் சரியாகின்றன. இன்று ஏற்பட்ட இடையூறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அக்கறை செலுத்தும் நபர்களுடன் தொடர்பில் இருக்க எங்களின் சேவைகளை எந்தளவு நம்புகிறீர்கள் என்று எனக்கு தெரியும்’ என மார்க் சக்கர்பர்க் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இவ்வருட இயற்பியலுக்கான நோபல்பரிசு மூவருக்கு !

உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல்பரிசுகள் நேற்றைய தினத்தில் இருந்து வருகிற 11-ந்திகதி வரை அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், நடப்பு ஆண்டின் இயற்பியலுக்கான நோபல்பரிசு பெறுபவர்கள் குறித்து இன்று அறிவிக்கப்பட்டது.

2021 இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

புவியின் காலநிலையில் மாறுபாட்டை அளவிடுதல் மற்றும் வெப்பமடைதல் கணித்தல் ஆகியவற்றிற்காக சியுகுரோ மனாபே, கிளாஸ் ஹாசெல்மேன் மற்றும் ஜார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல்பரிசுபகிர்ந்தளிக்கப்படுகிறது.

முன்னதாக, நேற்று அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகியோருக்கு மருத்துவத்திற்கான நோபல்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்பட்டது 2021ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு !

2021ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு  வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நோர்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

வழக்கமாக நோபல் பரிசுகள் அக்டோபர் மாதத்திலிருந்து அறிவிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு  இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகளான டேவிட் ஜூலியஸ், ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகிய இருவருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

உடலில் உள்ள வெப்பம், குளிர், உடல் வலியைத் தொடாமல் கண்டறியும் ஆய்வுக்காக மருத்துவத்துக்கானநோபல் பரிசு  இவர்களுக்கு வழங்கப்படுகிறது. அற்புதமான கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு குழு பாராட்டு தெரிவித்துள்ளது.

வரும் 11ஆம் திகதி வரை நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட உள்ளன.

“வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயலாதீர்கள்.”- ஐ.நாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வடகொரியா !

ஆறு மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஏவுகணை சோதனையை தொடங்கியுள்ள வடகொரியா ஒரே மாதத்தில் 4 ஏவுகணைகளை சோதித்து உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.இந்த சூழலில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்தது. அந்த கூட்டத்தில் வடகொரியாவின் ஏவுகணை சோதனை குறித்து கவலை தெரிவித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளுக்கு தடைவிதிக்கும் கவுன்சிலின் தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்த வடகொரியாவுக்கு அழைப்பு விடுத்தது.

இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வடகொரியா வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரியான ஜோ சோல் சூ கூறுகையில் ‘‘அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளால் இதேபோன்ற ஆயுத சோதனைகளில் சமமாக பிரச்சினை எடுக்காததால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இரட்டை கையாளும் தரநிலை கொண்டது என்பது தெரிகிறது. வடகொரியாவின் இறையாண்மையை ஆக்கிரமிக்க முயன்றால் எதிர்காலத்தில் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை சிந்தித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் செயல்பட வேண்டும்’’ என கூறினார்.