September

September

இலங்கை தமிழர்களின் எதிர்கால நிலைத்திருப்பில் அரசியல் சாராத பொதுக்கட்டமைப்பு ஒன்றினுடைய தேவையும் அவசியமும்….! – அருண்மொழி

வடக்கு – கிழக்கு சமூக அக்கறையுடைய இளைஞர்களிடையேயும் அரசியல் விமர்சகர்களிடையேயும்  பொதுக்கட்டமைப்பு ஒன்றின் தேவை பற்றிய விடயங்கள் ஆழமான  பேசுபொருளாக மாறி வருகின்ற இந்த நிலையில் தேசம் நெற் இன் இந்தக்கட்டுரை பொதுக்கட்டமைப்பின் தேவை பற்றியும் அதன் செயல் கட்டமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றியும் பேசுகின்றது.

முதலில் இந்த பொதுக்கட்டமைப்பு ஏன் தேவை..? என்பது பற்றி நோக்குதல் அவசியமாகின்றது.

இவ்வாறான பொதுக்கட்டமைப்பு ஒன்றின் உருவாக்கத்துக்கு மிக அவசியம் ஏற்பட்ட பின்னணியில் இலங்கை வாழ் தமிழ் மக்களை இணைக்ககூடிய ஒரு மையப்புள்ளியாக ஒரு பொது அமைப்பு ஒன்றின் தேவை அதிகமாக கடந்த காலங்களில் உணரப்பட்டமையேயாகும். உலகின் ஒவ்வொரு அடக்கப்பட்ட சமூகங்களிலும் அரசியல் சார்ந்த அமைப்புக்களே அரசிற்கும் அடக்கப்பட்ட சமூகங்களுக்குமிடையான தொடர்பாளராக செயற்பட்டு, மக்களினுடைய உரிமைகளை மையப்படுத்திய நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியோராக காணப்படல்  வேண்டும். ஆனால் இலங்கை தமிழர் அரசியலை பொறுத்த வரை அப்படியான ஒரு அமைப்பு இல்லை என்பதே உண்மை.  தமிழர் மத்தியில் பல அமைப்புக்கள் அரசியல் சார்ந்து உருவாகியுள்ளமையால் மக்கள் எந்த அமைப்பின் பக்கம் நிற்பது என்ற குழப்பமான ஒரு சூழலே நிலவுகின்றது. கடந்த காலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஓரளவேனும் பலமான ஒரு அமைப்பாக காணப்பட்டமையால் மக்களுடைய வாக்குகள் முதல் ஆதரவு என அனைத்துமே அதனை மையப்படுத்தியதாக காணப்பட்டடது. எனினும் கூட்டமைப்பு தன்னுடைய அரசியலை மக்கள் நலன்சார்ந்து பெரியளவிற்கு நகர்த்தியிராத நிலையில் மக்கள் மாற்று அணிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றில் தமிழரின் வாக்கு பலத்தை சிதைத்துள்ளதுடன் சிறுபான்மை இனங்களின் ஆதரவு இல்லாமலேயே ஒரு கட்சி பெரும்பான்மையுடன் அரசமைக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கியமான காரணத்தை நாம் சிந்தித்தித்து பார்க்க வேண்டியோராகவுள்ளோம்.

தமிழ் மக்கள் பேரவையுடைய தோல்வியும் கூட பொதுக்கட்டமைப்புக்கான வெளி ஒன்றினை உருவாக்கியுள்ளது. முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பில் இருந்து விலகியதை தொடர்ந்து வடக்கு – கிழக்கின் புத்தி ஜீவிகளையும் இளைஞர்களையும் இணைத்து பாரிய கொள்கைப் பிரகடனங்களோடு உருவாக்கப்பட்ட அந்த அமைப்பானது தன்னுடைய அரசியலுக்காக மக்களுடைய எதிர்பார்ப்பை சிதைத்து எஞ்சி நின்ற நம்பிக்கையையும் தவிடுபொடியாக்கியது. இது பொதுக்கட்டமைப்பு பற்றி அதிக இளைஞர்கள் சிந்திக்க பயப்படுகின்ற ஒரு சூழலையும் உருவாக்கி விட்டது. இந்த நிலையிலேயே பொதுக்கட்டமைப்பு பற்றி சிந்திக்க வேண்டியோராக நாமுள்ளோம்.

தமிழர் சமூகத்தினுடைய பின்தங்கிய நிலையை அடிப்படையில் இருந்து கட்டமைக்க பொதுக்கட்டமைப்பு ஒன்றினுடைய தேவை அவசியமாகின்றது. கல்வி சார்ந்து தமிழர் சமூகம் அடக்கப்பட்டமை கூட கடந்தகால போராட்டங்களுக்கான மையமாகும். உண்மையிலேயே அந்த அடக்கு முறையில் நாம் தோற்றுப்போய் பெரும்பான்மை சமூகம் வென்றுவிட்டது என்பதே உண்மை. நம்முடைய தமிழர் சமூக கல்வி நிலை அண்மைக்காலங்களில் அதிகம் பின்தங்கியுள்ளது. மாணவர்களிடம் கல்விக்கு தடையாக போதைப் பொருள்பாவனை,  வறுமை , சமூக ஏற்றத்தாழ்வுகள் என பல காரணங்கள் துணை போகின்ற நிலையில் ஆக்கபூர்வமான சமூகம் ஒன்றை கட்டி எழுப்புவது தொடர்பாக கவனம் செலுத்தக்கூடிய பொது அமைப்பு ஒன்று இன்றியமையாததாகிறது.

அரசியல் தலைவர்கள் தமிழ் மக்களுக்காக பிரச்சினைகள் ஏற்படும் போது எதிர்வினையாற்றக் கூடியோராகவோ..? அல்லது மக்களுடைய மனதை புரிந்து கொண்டோராகவோ..? இல்லை. மக்களுடைய நிலையை புரிந்து அதனை பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக அரசியல் தலைவர்கள் இல்லை. நம்முடைய அரசியல் தலைவர்கள் தங்களுள் சண்டையிட்டு கொள்வதிலும் ஒருவரை ஒருவர் விமர்சிப்பதிலும் கவனம் செலுத்துகின்றனரே தவிர மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கவில்லை என்பதே நிதர்சனமும் கூட. இந்த நிலையிலேயே மக்களுக்கான அரசியல் தலைவர்களை உருவாக்கவும் அடையாளம் காட்டவும் இந்த பொதுக்கட்டமைப்பு அவசியமாகிறது.

தமிழர் சமூகங்களிடையே பொருளாதார அபிவிருத்தியை உருவாக்க அரசியல் தலைமைகள் தவறிய நிலையில் பொருளாதார மேம்பாட்டை மையப்படுத்தி ஒரு பொது அமைப்பின் தேவை அவசியமாகின்றது. சொல்லப்போனால் மக்களுடைய வாழ்வை அபிவிருத்திப்பாதையில் கொண்டு செல்வோம் எனக்கூறும் தேர்தல்கால  அரசியல்வாதிகளுடைய வாழ்க்கையிலும் வாகனங்களிலும் மட்டுமே அபிவிருத்தி தென்படுகிறதே தவிர வட – கிழக்கில் ஏழை எந்த அபிவிருத்தியும் இல்லாமலே இருக்கின்றான். மேலும் ஆளும் கட்சியுடன் இணைந்து செயலாற்றும் அரசியல்வாதிகள்  பொருளாதார அபிவிருத்தி என்னும் பெயரில் உள்ள  வேலைவாய்ப்பு வெற்றிடங்களை நிரப்புகின்றனரே தவிர புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கவோ,  தொழில் முயற்சிகளை தமிழர் பகுதிகளில் உருவாக்கவோ முனைவதாக தெரியவில்லை. இதனாலேயே தமிழர் சமூகம் பொருளாதார நிலையிலும் பின்நிற்க வேண்டியுள்ளது. இந்தநிலையிலேயே தொழில்வாய்ப்புக்களை உருவாக்கக்கூடிய அமைப்பு ஒன்றினுடைய தேவை அவசியமாகின்றது.

இதே வேளை இனம் எனும் போது தமிழர் என நம்மை நாமே குறிப்பிட்டாலும் கூட பிரதேசவாதத்தால் வடக்கு தமிழர்,  கிழக்கு தமிழர்,  மலையகத் தமிழர் எனவும் [அதற்குள்ளும் பல உபபிரதேச பிரிவுகள் உள்ளன] சாதிய கட்டமைப்புக்களாலும் சமயரீதியாகவும் பல கூறாக பிரிந்துள்ள தமிழர்களை ஒன்றிணைத்து பயணிக்க வேண்டிய ஒரு பொதுக்கட்டமைப்பு தேவையாக உள்ளது.

விமர்சனங்கள் தாண்டி 2009 க்கு முன்பு வரை மக்களை வழிப்படுத்த காணப்பட்ட ஒரு அமைப்பினுடைய தேவையை இன்று உணரக்கூடியதாக உள்ளது.

இந்தநிலையில் மக்களை வழிப்படுத்தவும் அரசியல் சார்ந்து நம்முடைய கருத்துக்களை ஒரு சேர பதிவு செய்யவும் அரசியலை தீர்மானிக்கூடிய எனினும் அரசியல் பின்னணியற்ற ஒரு அமைப்பினுடைய தேவை காலத்தின் கட்டாயமாகியுள்ளது. இங்கு பொதுக்கட்டமைப்பு என்னும் போது ஆயுதக்கலாச்சாரம் பற்றி சிந்திப்பதல்ல. ஆக்கபூர்வமான நகர்வுகளூடாக நம்முடைய உரிமைகளையும் நிலைப்பையும் பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்யபப்ட்டுள்ள அரசிடம்  இருந்து பாதுகாப்பதும் பெற்றுக்கொள்வதும் தமிழர் பகுதிகளின் சமூக,  பொருளாதார,  கல்வி, கலாச்சார  நிலைகளை மேம்படுத்துவதுமேயாகும்.

பொதுக்கட்டமைப்பின் செயல் பயணம் எப்படி இருக்க வேண்டும்..?

இந்த பொதுக்கட்டமைப்பினுடைய எழுச்சியானது திரையில் நாம் காண்பது போல ஒரு சில உணர்ச்சி பாடல்களுடன் முழுமை பெற மாட்டாது. அது தன்னுடைய தளத்தை ஒவ்வொரு கிராம மட்டங்களிலும் இருந்து தொடங்க வேண்டும். கிராமங்கள் ஒவ்வொன்றிலும் ஆக்கபூர்வமாக சமூகத்துக்காக சிந்திக்க கூடிய சரியான நபர்களை அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவர்கள் மூலமாக அந்த கிராம முன்னேற்ற நடவடிக்கைகளை படிப்படியாக பொதுக்கட்டமைப்பு நகர்த்த வேண்டும். கிராமங்களின் இளைஞர் அமைப்புக்கள் / விளையாட்டுக் கழகங்களை கொண்டு அவர்களுடைய சமூகத்தின் தேவையை அவர்ககளே பொறுப்பெடுக்க கூடிய ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும். இந்த பொதுக்கட்டமைப்பு வடக்கு – கிழக்கு – மலையகத்தின் கிராமங்களை மையப்படுத்தியதாக நகர ஆரம்பிக்க வேண்டும். இதுவே அமைப்பினுடைய முனைப்பான வளர்ச்சிக்கான அடிப்படைகளை ஏற்படுத்தும்.

பொதுக்கட்டமைப்பின் நகர்வுகள் ஏழ்மையை மாற்றக் கூடியதாக நகர வேண்டும். புலம்பெயர் தேசங்களிலிருந்து அனுப்பப்படும் பணம் முறையாக எல்லோரிடமும் போய் சேர்வதில்லை. அத்துடன் அந்த பணம் பசியோடு இருப்பவனுக்கு ஒரு வார காலமோ அல்லது குறிப்பிட்ட காலத்துக்கான உணவுத்தேவையை பூர்த்தி செய்யுமே தவிர பணம் முடிய அந்த குடும்பத்தின் நிலை…? எனவே புலம்பெயர் அமைப்புக்களுடாக கைமாற்றப்படுகின்ற பணத்தை முறையாக பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பசியோடு இருப்பவனுக்கு நிரந்தமான சுயதொழில் ஒன்றை ஏற்படுத்திக்கொடுக்க அந்தப்பணத்தை பயன்படுத்தல் ஆரோக்கியமானது. மேலும் பண்ணைகள் அமைத்தல்,  தள்ளு வண்டிக்கடைகள் ஏற்படுத்திக்கொடுத்தல், தொழில் உபகரண வசதிகளை வழங்குதல், இப்படியாக பொருளாதார மாற்றங்களை அடிப்படையில் இருந்து ஏற்படுத்துவதுடன் தன்னம்பிக்கையாளர்களை உருவாக்குதும் வறுமை ஒழிப்பின் ஒரு படியே..!

இவ்வளவு பெரிய இழப்புக்களின் பின்னணியில் நம்முடைய கல்விக்கு பெரிய பங்குண்டு. நம்முடைய அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக வளப்படுத்துவது காலத்தின் அதிமுக்கிய தேவையாகவுள்ளது. போதைப்பொருள் பாவனை, வாள் வெட்டுக் கலாச்சார மோகம், என அடுத்த தலைமுறை தன்னுடைய கல்வியை நம்கண்முன்னேயே தொலைத்துக்கொண்டு நிற்கின்றது. நெல்சன் மண்டேலா கூறுவது போல ஒரு சமூகம் தன்னை மாற்றிக்கொள்ளவோ அல்லது முன்னேறவோ  நினைக்குமிடத்து கல்வி மட்டுமே தெளிவான ஒரு ஆயுதம் என கூறுகின்றார்.  எனவே எல்லா மாணவர்களுக்கும் சரியான முறையான ஆரோக்கியமான கல்வி கிடைக்க வகை செய்தல் அவசியமாகின்றது. மாணவர்களிடையே வாசிப்பு பழக்கதைத்தை மீள கட்டியெழுப்பல்,  நம்முடைய வரலாற்றை ஆரோக்கியமாக கடத்துதல்,  மாணவர் தொழில்வழிகாட்டல் கருத்தரங்குகளை மேற்கொள்ளல், பாடசாலை மட்டங்களில் காணப்படும் ஏற்றத்தாழ்வான நிலையை இல்லாதாக்க செயற்படல்,  மாணவர்களின் கல்விக்கான வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவுதல் என பல நடவடிக்கைகளை தொடர்ச்சியாகவும் மாணவர்களோடு மாணவர்களாகவும் மேற்கொள்கின்ற பட்சத்தில் ஆரோக்கியமான அடுத்ததலைமுறையை உருவாக்க முடியும்.

மிக முக்கியமாக உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்பு தனித்து ஒரு மாவட்டத்தை மட்டுமே மையப்படுத்தி இயங்காது எல்லா பகுதி தமிழர்களையுப் மையப்படுத்தி இயங்குவதே பொதுக்கட்டமைப்பின் வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவு கிடைக்கவும் இலகுவாக வழி செய்யும். இதை விடுத்து யாழ்ப்பாண பகுதியை மட்டுமே மையப்படுத்தி பொதுக்கட்டமைப்பு நகருமாயின் அது வீண் முயற்சியே..!

ஆக்கபூர்வமான வகையில் எங்களுடைய தேவைகளையும் வலிகளையும் பெரும்பான்மை சமூகத்திடம் முன்வைக்க வேண்டிய பொறுப்பினை பொதுக்கட்டமைப்பு மேற்கொள்ள வேண்டும். முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள், மாணவர் படுகொலை நிகழ்வுகள் என்பன பற்றிய நிகழ்வுகளை ஆக்கபூர்வமாக எல்லா தரப்பினருக்கும் தெரியப்படுத்தல் வேண்டும். அதாவது எங்களுடைய வலிகளையும் தேவையையும் அதன் நியாயப்பாட்டையும் பெரும்பான்மை சமூகத்துக்கு எடுத்துக்கூற கூடிய ஒரு ஊடகமாக இந்த பொதுக்கட்டமைப்பு செயற்பட வேண்டும்.

இவை தவிர பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் வேலைவாய்ப்புக்கான உதவிகளை வழங்குதல்,  நுண்நிதி உள்ளிட்ட தொடரும் சமூக பிரச்சினைகள் தொடர்பாக மக்களிடையே பேசுதல், அழிந்து வரும் கலைகளையும் கடந்த கால வரலாறுகளையும் ஆவணப்படுத்துதலும் மீள் ஆக்கப்படுத்தலும் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளல் என்ற வகையிலாக சமூகப்பபொறுப்புடன் கூடிய ஒரு பொதுக்கட்டமைப்பே இன்றைய காலத்தின் தேவையாகும்.

இந்த வகையிலாக எல்லா பகுதி தமிழர்களையும் ஒரே கோர்வையாக இணைத்துக்கொண்டு செல்லக்கூடியதான நெகிழ்திறன் உள்ள ஒரு அமைப்பாகவும், தமிழர் சமூகத்தின்  அடிப்படையில் இருந்து ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களூடாக தன்னுடைய எதிர்கால தூரநோக்குககளையும் இலக்குகளையும் கட்டமைத்து பயணிக்க கூடிய ஒரு அமைப்பாகவும் இருக்கின்ற பட்சத்தில் மட்டுமே இந்த அமைப்பினுடைய பயணத்தின் மீது முழுமையான மக்கள் நம்பிக்கையும் திருப்பப்பட்டு அரசியல் சார்பற்ற ஆனால் அரசியலை தீர்மானிக்க கூடிய அமைப்பாக அது வளர்ச்சி கண்டு தமிழ் மக்களுக்கான அமைப்பாக மிளிர முடியும். இந்த அமைப்பினுடைய வெற்றிக்காக எத்தனை வருடங்களும் எடுக்கலாம். ஆனால் அமைப்பினுடைய வெற்றியின் இறுதியில் இந்த பொதுக்கட்டமைப்பு மக்களிடம் ஏற்படுத்தியுள்ள நம்பிக்கையின் அளவே மதிப்பீடாக காணப்படும். அந்த மக்கள் நம்பிக்கையே பொதுக்கட்டமைப்பு கைகாட்டும் வழி சரியெனும் நிலைக்கு மக்களை கொண்டு செல்ல அத்தியாவசியமானது.

பொறுத்திருந்து பார்க்கலாம் பொதுக்கட்டமைப்பு என்ற விடயத்தை இலங்கைத்தமிழ் இளைஞர்களும் புத்திஜீவிகளும் அரசியாலாளர்களும் எவ்வாறு கையாளப்போகின்றனர் என்று……..!

யாழ் மேலாதிக்கம் என்பது என்ன? : எம் ஆர் ஸ்டாலின்

யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற இனமேலாதிக்க கருத்தியலை குறிக்கின்றதோ அதேபோலத்தான் இக்கருத்தியலை நாம் புரிந்துகொள்ள முயலவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது சிங்கள மக்களை குறிக்கவில்லை. சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரானதும் இல்லை. அதேபோலத்தான் யாழ் மேலாதிக்கம் என்பதையும் அதற்கெதிரான கருத்துப்பரிமாறல்கள் என்பதையும் யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானதாக கொச்சையாக புரிந்துகொள்ளக்கூடாது.

ஆனால் துரதிஸ்ட வசமாக இந்த புரிதலில் சிலருக்கு சிக்கல் இருக்கின்றது மேலும் சிலர் புரிந்து கொள்ளாதவாறு திரித்து கிழக்கில் இருந்து யாழ்-மேலாதிக்கம் குறித்து கருத்திடுவோர் மீது பிரதேசவாத துரோக முத்திரை குத்த முனைகின்ற போக்கும் அதிகரித்து வருகின்றது.

தமிழ் தேசியமென்பது பரந்துபட்ட தமிழ் மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளில் இருந்து உருவாகிய கருத்துருவமா? அன்றில் தமிழ் சமூகத்தில் ஆதிக்க சக்திகளாக அகல கால்பதித்து நின்ற யாழ்-மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்தே அச்சிந்தனையுருவாக்கம் நிகழ்ந்ததா? இக்கேள்விகளுக்கான விடைகளை நாம் மேலோட்டமாக பார்ப்போம். அதனுடாகவே தமிழ் தேசியம் என்பதையும் யாழ் மேலாதிக்கம் என்பதையும் விளங்கிக்கொள்ளலாம்.

ஒரு சமூகமோ அல்லது ஒரு இனமோ அதன் அசைவியக்கம் சார்ந்து தனக்கான ஒரு கருத்தியலுடனேயே பயணிப்பது வழமையாகும். அந்த கருத்தியலின் உருவாக்கத்தில் அச்சமூகத்தின் சமூக பொருளாதார பண்பாட்டம்சங்களே நிச்சயம் தாக்கம் செலுத்தும். எனவே அந்த சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரின் செல்வாக்கானது அச்சமூகத்தினது கருத்தியல் உருவாக்கத்தில் பிரதான பங்கெடுக்கும்.

அந்த வகையில் தமிழ் தேசியத்தின் வேர்களாகவும் பிதாமகர்களாகவும் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதையிட்டு ஆராய்வோமானால் பொன் இராமநாதன், ஜ ஜி பொன்னம்பலம், சுந்தரலிங்கம், எஸ் ஜே வி செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரை தவிக்கமுடியாது. இவர்களெல்லாம் தனவந்தர்களாகவும், பிற்போக்குவாதிகளாகவும், ஏழைகளை சுரண்டி பிழைப்போராகவும், ஆதிக்கசாதி வெறியர்களாகவும், ஆணாதிக்க மற்றும் பிரதேசவாதிகளாகவும், ஏகாதிபத்தியத்தின் முகவர்களாகவும் இருந்தார்கள் என்பது நமக்கேயுரித்தான வேதனையான வரலாறு ஆகும். இந்த பின்னணியில் இருந்துதான் தமிழ் தேசியமென்பதன் சிந்தனை மற்றும் கருத்தியல் உருவாக்கத்தில் தாக்கம் செலுத்திய வர்க்கத்தினரையும் இத்தமிழ் தேசியமென்பதன் ரிஷிமூலம் என்ன என்பதையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

1920களில் பள்ளிக்கூடங்களிலே அனைத்து மாணவர்களுக்கும் சம ஆசனமும் சமபந்தி போசனமும் வழங்கப்படக்கூடாதென்றும் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டுமென்றும் பிரித்தானிய தேசாதிபதியிடம் சென்று தலைகீழாக நின்று வாதாடியவர் பொன்.இராமநாதன் ஆகும்.

அதேபோல எல்லோருக்கும் வாக்குரிமை வழங்க கூடாது ‘வேளாளருக்கும் தனவந்தருக்கும்’ மட்டுமே வாக்குரிமை வேண்டும் என்றும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டால் அது கும்பலாட்சிக்கு வழிகோலும் என்று டொனமூர் ஆணைக்குழு முன் சென்று சாட்சியம் சொன்னவரும் இந்த பொன்.இராமநாதன்தான்.

1944ஆம் ஆண்டு இலவச கல்வி மசோதா முன்வைக்கப்பட்டபோது
ஜி.ஜி பொன்னம்பலம் சிறிபத்மநாதன், மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் சட்டசபையிலே ஒருமித்து நின்று அந்த மசோதாவை எதிர்த்தார்கள்.

அதுமட்டுமல்ல ஆங்கிலத்தை அகற்றி சுயபாஷைகளை அரச கரும மொழியாக்குவோம் என்று தென்னிலங்கையில் சுயபாஷை இயக்கம் உருவானபோது அதனை கடுமையாக எதிர்த்து ‘சிங்களமும் வேண்டாம் தமிழும் வேண்டாம்’ என்று அரச கரும மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டுமென்று காலனித்துவத்தின் முகவர்களாக வாதங்களை முன்வைத்தவர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தலைமைகளேயாகும்.

1947ல் பத்து லட்ஷம் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க காரணமான பிரசா உரிமை சட்டத்தை ஆதரித்து யுஎன்பியின் மக்கள் விரோத ஆட்சிக்கு துணைபோனவரும் இந்த பொன்னம்பலம்தான்.

இன்னுமொருவர் தமிழ்த்தேசியத்தின் தத்துவவாதி என்றும் ‘அடங்கா தமிழன்’ என்கின்ற ‘பெருமைமிகு’ அடைமொழியாலும் போற்றப்படுபவர் சுந்தரலிங்கம். அந்த மனிதனைப்போல் சாதிவெறியன் இனியொருபோதும் பிறக்க முடியாது.

1957 ல் நெற்காணி சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினர் அதை எதிர்த்தனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு சமபந்தி போசனத்தையும் சம ஆசனத்தையும் மறுத்தவர்கள், இலவச கல்வி கூடாது ‘கண்ட கண்டவர்களுக்கு’ கல்வி எதற்கு என்று குவித்திரிந்தவர்கள், வாக்குரிமையா ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கூடவே கூடாது என்று கொக்கரித்தவர்கள், சுயபாஷையா? எதற்கு? ஆங்கிலத்தை அகற்றத்தேவையில்லை என்று தமது சொந்த நலன்களில் நின்று அடித்து பேசியவர்கள், மலையக மக்களை நிர்கதிக்குள்ளாக்கியவர்கள், ஏழைமக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்த்தவர்கள் எல்லோரதும் அரசியல் பரம்பரியமே இன்று வரை தொடருகின்ற தமிழ் தேசிய அரசியலாய் இருக்கின்றது.

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களையும் மசோதாக்களையும் எதிர்த்தவர்கள், பிரித்தானிய-சிங்கள ஆளும் வர்க்கத்தோடு இணைந்து கொண்டு ஏழை மக்களை ஒடுக்கி பிரபுத்துவ அரசியல் செய்தவர்கள் யாரோ அவர்களே துரதிஸ்ட வசமாக எமக்கு தேசியத்தை போதித்தனர்.

1947 ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது ‘அங்கே ஜின்னா பாகிஸ்தானை பிரித்தார். இங்கே பொன்னா தமிழீழத்தை பிரித்து எடுப்பேன்’ என்று பேசித்திரிந்தார் பொன்னம்பலம். பாராளுமன்ற முறைமை அறிமுகமானபோது தேர்தல் அரசியலுக்கான இனவாத அணிதிரட்டல் ஒன்றை நோக்கியே அவரது இந்த பேச்சுக்கள் இருந்தன.

1956ல் அரச கருமமொழிச்சட்டம் வந்தபோது பிரித்தானியரின் அருவருடிகளாக ஆங்கிலம் கற்று அரச நிர்வாக அதிகாரிகளாக இலங்கையெங்கும் பரவியிருந்த யாழ்ப்பாணத்து அதிகார வர்க்கம் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டது.

1971ல் கல்வி தரப்படுத்தல் வந்தபோதும் இந்த அதிகார வர்க்கத்தின் வாரிசுகளே பாதிப்படைந்தனர். இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளவே ‘தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது ஒட்டுமொத்த தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள்’ என்று ஒப்பாரிவைத்தனர் இந்த யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தினர்.

ஆனால் அதற்கு மாறாக கல்வித்தரப்படுத்தல் என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய ஆறு மாவட்ட மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாய் அமைந்திருந்தன. இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய இட ஒதுக்கீட்டுக்கு சமனான அந்த சட்டத்தை தமிழரசு கட்சியினர் யாழ் மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்து எதிர்த்தனர்.

மூதூர் பிரதிநிதியான தங்கதுரையும் மட்டக்களப்பு பிரதிநிதியான இராஜதுரையும் கல்வி தரப்படுத்தலால் பரந்து பட்ட தமிழர்களுக்கு வரலாற்றில் முதற்தடவையாக பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்கும் என்கின்ற மாற்று கருத்துக்களை தமிழரசு கட்சியில் முன்வைத்தபோது அவை புறந்தள்ளப்பட்டன. கல்வி தரப்படுத்தல் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் எதிரான இனவாத செயற்பாடு என்றே தமிழரசு கட்சி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

பிரிவினை கோரிக்கை எமது மக்களையை அழித்தொழிக்கும் என்று வட்டுக்கோட்டை மாநாட்டிலேயே வந்து சொன்னார்கள் கனவான் தேவநாயகமும் தொண்டமானும். ஆனால் கிழக்கினதும் மலையகத்தினதும் அதிருப்திகளை அமிர்தலிங்கம் போன்றோர் கருத்தில் கொள்ளவில்லை.

யாழ்-மேட்டுக்குடிகள் யாழ்ப்பாணத்துக்கு உள்ளே ஒடுக்கப்பட்ட மக்களினதும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழும் ஏனைய பிரதேச மக்களினதும் சமூக பொருளாதார வாழ்வியல் பிரச்சனைகளை பின்தள்ளி தாமும் தமது வாரிசுகளும் எதிர்கொண்ட உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் மட்டுமே அனைத்து தமிழருக்கும் உரியதான பிரச்சனைகளாக அரசியல் மயப்படுத்தினர். தமது நலன்களை அடிப்படையாக கொண்டே ஆயுத போராட்டத்தை முன்மொழிந்தனர். அதையே தமிழ் தேசியமென்றனர். தமிழீழ கோரிக்கையை பிறப்பித்தனர்.

இதுதான் யாழ் மையவாத சிந்தனை ஆகும். ஒரு சமூகத்தில் மேலாட்சி செலுத்துபவர்கள் தமது நலன்களில் மட்டுமே மையம்கொள்ளும் சிந்தனையின் வழியிலேயே அனைவரையும் பயணிக்க கோருவதும் அதுவே தமிழ் தேசியம் என்று முழங்குவதும் மேலாதிக்கமாகும்.

அதனால்தான் 1960-1970 காலப்பகுதியில் வடமாகாணத்தில் வெளிக்கிளம்பிய சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை தலைமையேற்று நடத்த அன்றைய காலத்தில் முக்கிய அரசியல் சக்திகளாக இருந்த தமிழ் காங்கிரசும் தமிழரசு கட்சியும் முன்வரவில்லை. அது முழுக்க முழுக்க வர்க்க அரசியல் பேசுகின்ற இடதுசாரி கட்சிகளாலேயே வழிநடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி அந்த சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை பாராளுமன்றத்தில் கிண்டலடித்து உரையாற்றினார் தளபதி அமிர்தலிங்கம். தமிழ் தேசியத்தின் தந்தை என்று விளிக்கப்படுகின்ற செல்வநாயகமோ ‘நான் கிறிஸ்தவன் இது இந்துக்களின் பிரச்சனை’ என்று ஒதுங்கிக்கொண்டார்.

ஆனால் தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல. மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல. மாறாக பரந்துபட்டு பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும்.

ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால் தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை.

ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி நிலம் பண்பாடு பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது. வடக்குக்கும் கிழக்குக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான (மடுவென்பது கிடங்கெனக்கொள்க) அரசியல்,பொருளாதார,பண்பாட்டு வித்தியாசங்கள் குவிந்து கிடக்கின்றன. வரலாற்று ரீதியாக ஒருபோதும் வடக்குக்கும் கிழக்குக்குமான ஒரே அரசியல் தலைமை இருந்ததுமில்லை.

அதையும் தாண்டி வடக்கில் எங்கே பொதுப்பண்பாடு காணப்படுகின்றது. யாழ்ப்பாண சமூகம் என்பது சாதிகளால் கட்டமைக்கப்பட்ட அதிகார படிநிலை சமூகமாகும். சாதிக்கொரு சவக்காலையும் சாதிக்கொரு வீதியும் சாதிக்கொரு கோவிலும் வைத்துக்கொண்டு தமிழினத்துக்கான பொதுப்பண்பாட்டை எப்படி உருவாக்க முடியும்? எல்லோருக்குமான சமூகநீதியை எங்கே தேடுவது? நாமெல்லோரும் ஓரினம் என்னும் கூட்டுணர்வு எப்படி சாத்தியமாகும்? இன்றுவரை அகமண முறையை கைவிட தயாரில்லாது சாதிகளின் பொருட்காட்சி சாலையாக தோற்றமளிக்கும் யாழ்ப்பாணத்தில் வாழுவது ஓரினமா? அன்றி ஒரே மொழி பேசும் பல பழங்குடியினங்களா என்று கேட்க தோன்றுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பல கோவில்கள் தலித் மக்களுக்காக பூட்டிக்கிடக்கின்றன. ‘ஊர்கூடி தேரிழுப்பதென்பது’ முதுமொழி. ஆனால் ஊரிலுள்ள ஆதிக்க சாதிகள் புலம்பெயர்ந்து போனபின்பு தேரிழுக்க உயர்குடிகள் இல்லை என்பதால் ஜெஸிபி மெசினை கொண்டு தேரிழுக்கின்றோம் எதற்காக? தலித் மக்களை தேரில் கை வைக்க விடக்கூடாதென்பதற்காகத்தானே, தேர் தீட்டு பட்டுவிடும் என்பதற்காகத்தானே. இந்த நிலையில் தமிழருக்கான பொது பண்பாடு எங்கேஇருக்கின்றது? இருப்பதெல்லாம் வெறும் சாதிய பண்பாடு மாத்திரமேயாகும். அவற்றை கட்டிக்காப்பதுவும் யாழ்ப்பாண- மேலாதிக்கம்தான் நாம் குரல் கொடுப்பது யாழ்பாணத்து மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் ஏழைகள் மற்றும் சாதியரீதியில் ஒடுக்கப்படும் தலித் மக்களுக்காகவும்தான்.

இந்த லட்ஷணத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களில், பாராளுமன்ற உறுப்பினர்களில், மாகாண சபை உறுப்பினர்களில் யாதொருவராயினும் தாழ்த்தப்பட்ட குலத்தவர் உண்டோ என்கின்ற கேள்வியெழுப்புதல் அவசியமற்றது ஆகும். அப்படி எதுமே இன்னும் சாத்தியமாகவில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலன்சார்ந்து ஒரு சிறு துரும்பையேனும் நகர்த்திய வரலாற்றை கொண்டிராத கறுவாக்காட்டு பரம்பரைகளான சுமந்திரனும்,விக்கினேஸ்வரனும்,கஜேந்திரகுமாரும் மக்களின் தலைவர்களாக வலம் வர முடிகின்றது.

உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன? எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால் என்ன பதில்? வெறுமனே வாக்கு வங்கி அரசியலுக்காகவே இந்த தமிழ் தேசியவாத பிதற்றல்களை யாழ்ப்பாண கட்சிகள் காவித்திரிகின்றன என்பதே உண்மையாகும். அதனாற்தான் இந்த யாழ் மேட்டுக்குடிகள் பேசுகின்ற தேசியம் என்பது போலியானது. மக்களை ஏமாற்றி மேட்டுக்குடிகளின் நலன்களை மட்டுமே பூர்த்திசெய்கின்ற கபட நோக்கம் கொண்டது என்று சொல்லுகின்றோம்.

ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல. பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.

தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன் லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக் ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.

‘துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே’ என்கின்றது புறநானுற்று அறம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பான் கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பார் திருவள்ளுவர்.

இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம் தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும். இத்தகைய அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும் உருவாகின்ற தமிழுணர்வுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும்.

தேசியவாதமென்பது இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம் போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே தேசியவாதமாகும்.

ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான் என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது. பன்மைத்துவ தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது.

நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும் உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே அதன் தாற்பரியமாகும். அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும் மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.

செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியை தொடங்கி கிழக்கு மாகாணத்துக்கு வந்து தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாகி அணிதிரளுங்கள் சமஷ்டியை பெற்றுத்தருகின்றேன் என்று அறைகூவல் விடுத்தார். அப்போது சமஸ்டி சாத்தியமில்லாதது,கிழக்கு மூவினங்களும் வாழும் இடம் இங்கே இனவாத அரசியல் வேண்டாம், இரத்த ஆறு ஓட வழிவகுக்க வேண்டாம் என்று செல்வநாயகத்தை எச்சரித்தார் மட்டக்களப்பின் நல்லையா மாஸ்டர் என்னும் பெருந்தகை. பதிலுக்கு கிழக்குமாகாணத்தின் சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார, மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டு சாதனை புரிந்த அந்த மகானை அரச கைக்கூலி என்று பிரச்சாரம் செய்து தோற்கடித்தது தமிழரசு கட்சி.

மறுபுறம் செல்வநாயகத்தின் அறைகூவலின் பின்னால் ஒன்றுபடுவோம் என்று சொல்லி தமிழரசு கட்சியை கிழக்கு மாகாணத்தின் மூலை முடுக்குகளெல்லாம் கொண்டு சென்று வளர்த்து 1977ல் தமிழர் தலைவராக மட்டக்களப்பிலிருந்து மேலெழுந்து வந்த இராஜதுரைக்கு என்ன நடந்தது? அவரை வஞ்சித்து, ஒதுக்கி, துரோகியாக்கி வெளியேற்றியது தமிழரசுகட்சி. சொல்லப்பட்ட காரணம் என்னதெரியுமா? 1978ஆம் ஆண்டு சூறாவளியால் அழிந்து கிடந்த மட்டக்களப்பை பார்வையிட வந்த பிரதமர் ‘பிரேமதாசாவை வரவேற்கச்சென்றது குற்றம்’ என்றது அமிர்தலிங்கத்தின் குற்றப்பத்திரிகை. அத்தனைக்கு பின்னரும் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரலில் செல்வநாயகத்தின் 35 வது நினைவு கூட்டமொன்றுக்காக யாழ்ப்பாணம் சென்ற ராஜதுரையை ‘மட்டக்களப்பு சக்கிலியா’ ‘துரோகி’ என்று துரத்தினார் சிவாஜிலிங்கம் என்கின்ற தமிழ் தேசிய பித்தர்.

* யாழ் மேயரான செல்லன் கந்தயன் யாழ்- நூலகத்தை திறந்துவைத்தல் கூடாது என்கின்ற மேட்டுக்குடிகளுக்கு ஒத்தாசை வழங்கி திறப்புவிழாவை தடுத்து நிறுத்தினர் தமிழீழவிடுதலைப்புலிகள்.

*தமிழ் பேசும் இஸ்லாமியரை தமிழ் தேசியத்துக்கு வெளியே துரத்தியடித்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள்.

*2004 ல் தமிழீழத்தின் நிழல் நிர்வாக கட்டமைப்புக்கு 32 துறை செயலாளர்களை தமிழீழ விடுதலை புலிகள் நியமித்தபோது 31 செயலர்களை வடமாகாணத்துக்குள் சுருட்டிக்கொள்ளுதல் தகுமோ? என்று கேட்ட கருணாம்மானை துரோகி என்று அறிவித்து வெருகல் படுகொலைக்கு ஆணையிட்ட அன்றே அறுந்து போனது வடக்கு கிழக்கு தாயக உறவு.

பிரபாகரனது முப்பத்துவருட ஆயுதப்போராட்டம் தமிழ் பேசும் மக்களின் (சாதி,மத, பிரதேச,) பன்மைத்துவத்துவ குரல்களை அங்கீகரிக்க மறுத்து வீணாகி மண்ணோடு மண்ணாகிப்போனது..

இப்போது கிறிஸ்தவரையும் கழித்துவிட்டு இந்து கட்சிகளின் உருவாக்கத்துக்கு அத்திவாரம் இட்டுக்கொண்டிருக்கின்றது. யாழ்-மையவாத சிந்தனை முகாம். அதனை மூத்த தமிழீழவாதிகளில் ஒருவரான மறவன் புலவு சச்சுதானந்தம் கச்சிதமாகவே செய்து வருகின்றார்.

அண்மைக்காலமாக பெண்களின் குரலை உதாசீனம் செய்துவருகின்றது தமிழரசுக்கட்சி. கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மங்களேஸ்வரி சங்கருக்கு வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்டமைக்கு சுமந்திரன் சொன்ன காரணம். ‘அவர் துரோகம் செய்ய கூடியவர்’ என்று முன்னரே உணர்ந்தாராம் சுமந்திரன். இப்படி அவரே முடிவெடுப்பதென்றால் கட்சியின் செயலாளர் பதவியை துரைராசசிங்கத்துக்கு கறிவேப்பிலைக்கா கொடுத்து வைத்திருக்கின்றது தமிழரசு கட்சி? இதைத்தான் யாழ் மேலாதிக்கம் என்கின்றோம். ஒரு கணவனை இழந்த பெண் என்னும் வகையில் சசிகலா ரவிராஜை வைத்து வாக்குசேகரிக்க முயன்றது தமிழரசு கட்சி. அதன்பின்னர் அவருக்கு நடந்த அநியாயத்துக்கு விளக்கம் தேவையில்லை.

தமிழ் சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்ற இந்த யாழ்ப்பாண மேட்டிமை சக்திகளிடத்தில் உண்மையான தமிழ் தேசிய சிந்தனை இல்லை. இருப்பதெல்லாம் ஆதிக்க சிந்தனை மட்டுமேயாகும். அதில் சிங்களவர்களிடமிருந்து அதிகாரத்தை கைமாறி புதிய எஜமானர்களாக தங்களுக்கு முடி சூட்டி கொள்ளுகின்ற கபட நோக்கம் மட்டுமே மறைந்திருக்கின்றது. அதுவே வடமாகாண சபை முதலமைச்சர் விடயத்திலும் நடந்தேறியது.

நம்மை நாமே ஆளுதல் என்கின்ற அற்புதமான சிந்தனை ஆட்சியாளர்களை அடையாளமிட்டு மலினப்படுத்தப்பட்டுவிட்டது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு பதிலாக தமிழ் எம்பிக்களும் அமைச்சர்களும் முதலமைச்சரும் வந்துவிட்டால் தமிழ் தேசியம் தழைத்தோங்கும் என்று அப்பாவித்தனமாக நம்பவைக்கப்பட்டுள்ளனர் எமது மக்கள். வெறும் இனவாத வெறியை விதைத்து ஆளுவதற்கான உரிமைக்காக மட்டுமே போராட்டம் என்கின்ற எளிமைப்படுத்தப்பட்ட கருத்துருவமே சாமானிய மக்களின் மனநிலையில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது..

இதுவரைகாலமும் தமிழ் தேசியத்தை தலைமையேற்று வழிநடத்தியவர்களில் அநேகமானோர் யாழ்- மேட்டுக்குடி நலன்களில் மையம்கொண்டுள்ள ஆதிக்க சிந்தனைக்கு மாற்றானவர்களாய் இருக்கவில்லை. அப்படியிருக்க முனைந்த ஒரு சிலரும் மைய நீரோட்ட அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். ஒதுக்கப்பட்டனர். அல்லது துரோகிகள் என்று கொன்றொழிக்கப்பட்டனர். இத்தகைய கேடுகெட்ட யாழ்-மேட்டுக்குடி தலைமைகளுடைய ஆதிக்க சிந்தனையின் அம்மணத்தை மறைக்க தேசியம் என்றும் தாயகமென்றும் விடுதலையுணர்வு என்றும் வேசம்கட்டுவதற்கு பெயர்தான் யாழ்- மேலாதிக்கம் என்பதாகும்.

அதனால்தான் சொல்கின்றோம். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழீழம் என்பது யாழ்-மேலாதிக்க தமிழீழம்தான் . இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் தேசியம் என்பது யாழ் மேலாதிக்க தமிழ் தேசியம்தான். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் நோக்கு என்பதும் யாழ் மேலாதிக்க தமிழ் நோக்குத்தான். என்றொருநாள் தமிழ் பேசும் மக்களின் தலைமையானது யாழ்-மேட்டுக்குடிகளிடமிருந்து கைமாறுகின்றதோ அன்றுதான் தமிழர்களின் நன்னாள் தொடங்கும். (Source: padakutv.lk)

வெலிகடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணியின் மனைவி இன்று காலமானார்!

குட்டிமணி அவர்களது துணைவியார் திருமதி.இராசரூபராணி இன்று காலை காலமானார். ‘குட்டிமணி’ என்ற இயக்கப் பெயரால் பரவலாக அறியப்பட்ட செல்வராஜா யோகச்சந்திரன் என்பவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவராவார்.

குட்டிமணியை தேடி வீட்டிற்கு சென்ற ஆமி, பொலிஸ்இ இரகசியப் பொலிசாரினாலும் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார். 1972 ல் குட்டிமணி தேடப்பட்ட காலம் முதல், இரு (ஆண், பெண்) பிள்ளைகளையும் பல கஸ்டங்களுக்கு மத்தியில் வளர்த்து ஆளாக்கியுள்ளார். அவரும் தமிழினத்திற்காக குட்டிமணி போராடிய காலங்களில் பலவகையிலும் தனது கணவருக்கு ஒத்தாசையாக இருந்து விடுதலைக்கு உதவியுள்ளார்.

ரெலோ தளபதி குட்டிமணி: பொலிஸார் மீது தாக்குதல், வங்கிக்கொள்ளை எனக் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டிருந்த ரெலோ போராளியான குட்டிமணி, 1981 ஏப்ரல் முதலாம் திகதி படகு ஒன்றின் மூலம் தமிழ்நாடு செல்ல முயற்சிக்கும் போது, அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டார். அவரோடு ஸ்தாபக தலைவர் தங்கதுரை என்பவரும், தேவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டார்கள்.

பல்வேறு குற்றங்கள் தொடர்பில் அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு நடத்தப்பட்டது.

வழக்கில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் படி, கைதுசெய்யப்பட்ட குட்டிமணியும் ஜெகன் என்பவரும் பல மாதங்களுக்கு எந்த வெளியுலகத் தொடர்புமின்றி, சட்டத்தரணிகள் கூட அணுகமுடியாதபடி, தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

தடுத்து வைத்திருக்கப்பட்ட போது, சொல்லொணாச் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். குறித்த சித்திரவதைகள் பற்றிய விவரணங்கள் வழக்கின் சாட்சியப் பதிவுகளில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

குட்டிமணி மற்றும் ஜெகனுக்கு எதிரான கொழும்பு உயர்நீதிமன்றில் நடந்த வழக்கில் 1982 ஓகஸ்ட் 13 ஆம் திகதி அவ்விருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டபின், மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட முன்பதாக, குட்டிமணி ஏதேனும் தெரிவிக்க நீதிபதியினால் தரப்பட்ட வாய்ப்பில் குட்டிமணி தெரிவித்த விடயமானதுஇ தமிழ் இளைஞர் மத்தியில் நீண்ட தாக்கம் செலுத்தியதொரு கூற்றாக அமைந்து.

தன்னுடைய கூற்றிலே குட்டிமணி “நான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. நான் ஒரு நிரபராதி. பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட என்னை, அவர்கள் சித்திரவதை செய்து சில வாக்குமூலங்களில் கையெழுத்துப் பெற்று, அவை எனக்கெதிரான சான்றாக இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுஇ நான் குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறேன்.

இந்த நீதிமன்று இன்று வழங்கியுள்ள ஆணையைப் பற்றி, நான் என்னுடைய சில அடிப்படை எண்ணங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இன்று இந்த வழக்கிலே, இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது தமிழீழம் அமைக்கப்படுவதற்கான புதிய உத்வேகத்தையும் வளம்மிக்க உரத்தையும் ஊக்கத்தையும் வலுவான காரணங்களையும் வழங்கும்.

இன்னும் வேறும், தமிழ் இளைஞர்களும் இந்த நீதிமன்றின் முன் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் நிற்கவைக்கப்படுவார்கள். இது தொடருமானால், விதிக்கப்படும் தண்டனையானது தமிழர்களின் விடுதலைக்கான ஊக்கமாக அமையும்.

நான் தமிழீழத்திலேயே தூக்கிலிடப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய முக்கிய உறுப்புகள், அவை தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

என்னுடைய  கண்பார்வையற்ற ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போதுதான் தமிழீழம் நிதர்சனமாவதை குட்டிமணி இந்தக் கண்களால் காணமுடியும். என்னுடைய உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார். (Source: telo.org)

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்தது இங்லாந்து ! – ஆஸிக்கு அதிர்ச்சி தோல்வி.

சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் டி.20 போட்டியில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. கடைசி பந்து வரை இந்தப் போட்டி சுவாரஸ்யமான  போட்டியாக அமைந்தது.

163 ஓட்டங்கள் என  இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியா 124/1 என்று 14 பந்துப்பறிமாற்றங்களில் எளிதான வெற்றி நிலையில் இருந்தது. கடைசியில் 160/6 எனினும் முடிவு இங்லாந்து வசமானது தான் சோகம்.

14வது பந்துப்பறிமாற்றம் வரை சிறப்பாக ஆடி வந்த ஆஸி அதனை தொடர்ந்து 14 பந்துகளில் 9 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தட்டுத் தடுமாறியது. இதனையடுத்து கடைசி 3 பந்துப்பறிமாற்றங்ளில் 26 ஓட்டங்கள்கள் தேவைப்பட்டது,  டி20-யில் இதுவும் ஒன்றும் பெரிய விஷயமல்ல, ஆனால் விக்கெட்டுகள் போய்க்கொண்டே இருந்தால் கடினம்தான். கடைசி 2 பந்துப்பறிமாற்றங்களில் 19 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் 19வது பந்துப்பறிமாற்றத்தில்  4 ரன்களே ஆஸிக்கு கிடைத்தது, கடைசி பந்துப்பறிமாற்றத்தில் 15 ஓட்டங்கள்  தேவைப்பட்டது. டாம் கரன் அந்த ஓவரை வீசினார்.

இதில் 2வது பந்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் கவர் திசையில் ஒரு பெரிய சிக்சரை அடித்து வெற்றியை நெருக்கினார், 4 பந்துகளில் 9 ரன்கள் தேவை. ஆனால் இன்னொரு பவுண்டரி அடிக்க முடியவில்லை. 2 ரன்கள் குறைவாக முடிந்தது.

163 ரன்கள் இலக்கை எதிர்த்து களமிறங்கிய ஆஸ்திரேலியா, கேப்டன் ஏரோன் பிஞ்ச் (46), வார்னர்  (58) ஆகியோர் மூலம் 98 ஓட்டங்கள் பெற்று  அதிரடி தொடக்கம் கண்டது. வார்னர் 47 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 58 ரன்களையும் ஏரோன் பிஞ்ச் 32 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 46 ஓட்டங்களையும்  சேர்க்க முதலில் பிஞ்ச், மிட் ஆஃபில் கேட்ச் கொடுத்து ஆர்ச்சரிடம் வெளியேறினார். ஸ்டீவ் ஸ்மித்  ஒரே பந்துப்பறிமாற்றத்தில்  ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸுடன் 11 பந்துகளில் 18 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில்  ரஷீத் பந்தில் பிடிகொடுத்து  ஆட்டமிழந்து சரிவைத் தொடங்கி வைத்தார். அதே ஓவரில் ரஷீத் 1 ஓட்டத்துடன்  கிளென் மேக்ஸ்வெலை வீழ்த்தினார்.

அடுத்ததாக வார்னர் 58 ஓட்டங்களில் ஆர்ச்சரிடம் ஆட்டமிழந்து வெளியேறினார். . அலெக்ஸ் கேரியை 1 ஓட்டத்துடனும் ஆஷ்டன் ஆகர் 4 ஓட்டத்துடனும்  முக்கியக் கட்டத்தில் ஆட்டமிழந்தனர். 19 பந்துப்பறிமாற்ற முடிவில் 148/6 என்ற நிலையில் கடைசி பந்துப்பறிமாற்றத்தில் ஸ்டாய்னிஸ் ஒரு சிக்சரைத்தவிர பவுண்டரி அடிக்க முடியவில்லை 2 ஓட்டங்களில் ஆஸ்திரேலியா தோற்ற போது ஸ்டாய்னிஸ் 23 ஓட்டங்கடன் ஆட்டமிழக்காது இருந்தார். , வெற்றி பெற வேண்டிய நிலையிலிருந்து தோல்வி கண்டது ஆஸ்திரேலியா, ஆனால் மோர்கனின் தலைமைத்துவம் அருமையாக இருந்தது.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட செய்ய அழைக்கப்பட்ட இங்கிலாந்து 162/7 என்று முடிந்தது, டேவிட்மலான்  66 ஓட்டங்களையும் பட்லர்  44 ஓட்டங்களையும் எடுத்தனர். ஜோர்டான் (14) நீங்கலாக மற்ற வீரர்கள் யாரும் இரட்டை இலக்கமே எட்டவில்லை, கேன் ரிசர்ட்ஸன் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.ஆட்ட நாயகனாக டேவிட் மலான்  தேர்வு செய்யப்பட்டார்.

2016க்குப் பிறகு இங்கிலாந்து வெற்றிகரமாக 180 ஓட்டங்களுக்கும் குறைவான இலக்கை தடுத்துள்ளது. ஞாயிறன்று நடைபெறும் 2வது போட்டியில் இங்கிலாந்து வென்றால் தொடரைக் கைப்பற்றும்.

 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் ! – மலேசிய முன்னாள் பிரதமர்.

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குமாறு தமது அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த மொகிதின் யாசினுக்கு வலியுறுத்தியதாக மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் மொகமட் தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஆரம்பத்தில் மொகிதின் யாசினுக்கு கடிதமொன்றை அனுப்பி வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்ராஜெயாவில் நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மகாதீர் மொகமட் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிக்கவில்லை என்றாலும் தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து அந்த இயக்கத்தை நீக்குவது மலேசியாவுக்கு நல்லது.

மேலும், ஏனைய நாடுகளைப் போல மலேசியாவும் எந்தவொரு குழுவையும் ‘தீவிரவாதிகள்’ என சுலபமாக முத்திரை குத்திவிடக் கூடாது.

நான் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரிக்கவில்லை. அவர்களுடைய பிரச்சினை இலங்கையில் இடம்பெற்ற ஒன்று. மலேசியாவுக்கு அதில் தொடர்பில்லை.

அத்துடன், மலேசியாவில் அவர்கள் தவறான செயல்களில் ஈடுபடாதபோது அந்த இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் எமக்கு கிடையாது.

மேலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தை இலங்கை அரசே தீவிரவாத இயக்கம் என்று பட்டியலிடாத போது, மலேசியா ஏன் அந்த இயக்கத்தைத் தீவிரவாத பட்டியலில் வைத்திருக்க வேண்டும்.

இன்றைய மலேசிய பிரதமரும் அண்மையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவரை உள்துறை அமைச்சராக இருந்தவருமான மொகிதீன் யாசினுக்கு எழுதிய கடிதத்தில், புலிகள் இயக்கத்தை இன்னமும் தீவிரவாத பட்டியலில் வைத்திருப்பதற்கான காரணம் ஏதும் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தேன்.

ஆகவே, தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து நீக்குவது மலேசியாவுக்கு நல்லது என கடிதத்தில் வலியுறுத்தி  இருந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘உலகிலேயே கோலியின் ஆட்டத்துக்கு அருகில் கூட யாரும் இல்லை ” – ஷோய்ப் அக்தர்

ஷோய்ப் அக்தர் அடிக்கடி இந்திய வீரர்களைப் புகழ்ந்து பேசி வருவது வழக்கம், அதுவும் நட்சத்திர வீரர்கள், செல்வாக்குள்ள வீரர்களை தேர்ந்தெடுத்து புகழ்வார்,  இந்த நிலையில் அவர் விராட் கோலியை புகழ்ந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

விராட் கோலியை அவர் பெரிய அளவில் புகழ்ந்துள்ளார், காரணம் அதற்குள்ளேயே கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்களையும், 80 அரைசதங்களையும் அடித்துள்ளார். இந்நிலையில் அக்தர் இந்திய வீரர்களை, குறிப்பாக கோலியைப் புகழ்வது குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அக்தர் பதில் கூறுகையில், “நான் இந்திய வீரர்களையும், விராட் கோலியையும் புகழக்கூடாது. பாகிஸ்தானில்.. ஏன் உலகிலேயே கோலியின் ஆட்டத்துக்கு அருகில் கூட யாரும் இல்லை.

ஏன் என் மீது கோபப்பட வேண்டும், போய் புள்ளி விவரங்களைப் பார்த்து விட்டு பேசுங்கள், பிறகு என்னை விமர்சியுங்கள். ஒரு காலத்தில் பாகிஸ்தான் வீரர்கள் போல் இருக்க வேண்டும் என்று இந்திய மக்கள் தங்கள் வீரர்களிடத்தில் எதிர்பார்த்தனர், ஆனால் இன்றைய நிலமை தலைகீழாகி விட்டது” என்றார் ஷோயப் அக்தர்.

மேலும் சமீபத்தில் இங்கிலாந்திடம் டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் தோற்றதையும் கடுமையாக ஷோயப் அக்தர் விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பின் பசில் ராஜபக்ஷ, அவருக்குப் பின் நாமல் ராஜபக்ஷ என ராஜபக்ஷக்கள் மாத்திரமா அரசியல் செய்ய வேண்டும்?- ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி !

நாட்டில் ஒரு சாதாரண அரசியல்வாதிக்கு எழுந்து நிற்க வாய்ப்பு வழங்காமல் இருப்பது மிகவும் கொடுமையான விடயமென முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக  கருத்து  தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் மனங்களில் ஏற்பட்ட விரக்தியின் காரணமாகவே அரசாங்கத்திற்குப் பெரும்பான்மை அதிகாரத்தை வழங்கியுள்ளனர். அத்துடன் இன்று  ஜனாதிபதி, கிராமப்பகுதிகளுக்கு  சென்றால், கடவுள் வருகிறார் எனக் கூறும் நாடு இது. நேற்று முன்தினம் நாடு முழுவதும் பலத்த மழை  பெய்து இருந்தது.

இதன்காரணமாக ஜனாதிபதி விமானத்தின் ஊடாக  நாடு முழுவதும் சென்றமையால் இருக்கலாம். இவ்வாறு மக்கள் மனநிலை இருக்கும்போது அரசியலமைப்பு திருத்தம் குறித்துக் கலந்துரையாடுவது பொய்யான விடயமாகும்.

ஆகவே கொடுப்பதை உட்கொண்டு விட்டு வேறு எதற்காவது காத்திருப்பதுதான் தற்போது செய்ய வேண்டிய விடயம்.

இதேவேளை 19 ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் ஜனாதிபதி பதவிக்காலம் மீண்டும் வரம்பற்றதாக இருக்கும். அதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குப் பின் பசில் ராஜபக்ஷ, அவருக்குப் பின் நாமல் ராஜபக்ஷ என நாட்டில் ஆட்சி நடைபெறும்.

இவ்வாறு  ராஜபக்ஷக்கள் மாத்திரமா அரசியல் செய்ய வேண்டும்” என அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா விலகல்!

ஐ.பி.எல் தொடரின் நடப்பு சாம்பியனான மும்பை இந்தின்ஸ்  அணியில் முக்கிய மாற்றமாக, அந்த அணியின் நட்சத்திரப் பந்துவீச்சாளரான லசித் மலிங்காவுக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, தனிப்பட்ட காரணங்களால் இந்த ஆண்டு சீசனில் விளையாட முடியாத நிலையில் இருப்பதாக அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டார்.

அணியின் திருப்புமுனை பந்துவீச்சாளராக இருந்த மலிங்கா இல்லாதது மும்பை  அணிக்குப் பெரும் பின்னடைவுதான். இருப்பினும், ஆஸி. அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் வருகை, அந்த அணிக்கு வலு சேர்க்கும்.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், ”ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு நடக்கும் ஐபிஎல் சீசன் டி20 தொடரில் தனிப்பட்ட காரணங்களால் தன்னால் பங்கேற்க முடியாது என்று லசித் மலிங்கா தெரிவித்துள்ளார். அவர் குடும்பத்துடன் இலங்கை செல்ல உள்ளார். ஆதலால், மும்பை  அணியில் ஆஸி.யின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்ஸன் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் அபுதாபி வந்து அணியில் இணைவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி வெளியிட்ட செய்தியில், “மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரும் ஜேம்ஸ் பேட்டின்ஸனை வரவேற்கிறேன். மலிங்காவுக்குத் தேவையான ஆதரவை அணி நிர்வாகம் வழங்கும். எங்களுக்குப் பொருத்தமானவராக பேட்டின்ஸன் இருப்பார், எங்களின் வேகப்பந்துவீச்சு வலுப்பெறும், குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சூழலுக்குச் சிறப்பாக இருக்கும்.

லசித் லெஜெண்ட் வீரர். மும்பை அணியின் தூண்களில் ஒருவர். இந்த சீசனில் லலித் மலிங்காவை நாங்கள் இழக்கிறோம் என்பது வருத்தம்தான், அதுதான் உண்மை. இந்த நேரத்தில் லசித் அவரின் குடும்பத்தாருடன் இலங்கையில் இருப்பது அவசியம் என நம்புகிறோம். மும்பை இந்தியன்ஸ் அணி, வீரர்களின் நலன், அவர்களின் குடும்பத்தாரின் நலனில் அதிகமான அக்கறை வைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இலங்கை அணி தங்கள் மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக டி20 தொடரில் விளையாடியது. அந்த தொடரில் மலிங்கா இடம் பெற்றார். ஒரு நாள் போட்டியில் அவர் விளையாடி ஏறக்குறைய ஓராண்டு ஆகிவிட்டது குறிப்பிட்டத்தக்கது.

இழுபறியிலும் ஒருவர் மீது ஒருவருடைய வசைப்பேச்சிலும் முடிவடைந்துள்ள கூட்டமைப்பின் பொதுக்குழுக்கூட்டம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கடந்த (29.08.2020) வவுனியாவில் நடைபெற்றது. பல்வேறுபட்ட இழுபறிகளுடன் முடிவடைந்த இந்த கூட்டமானது கூட்டமைப்பினுள் காணப்படும் தளர்வை தோலுரித்துக் காட்டியுள்ளது என்றே கூற வேண்டும்.

லங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கத்தை பதவியிலிருந்து அகற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட விடாமல் எம்.ஏ.சுமந்திரன் காப்பாற்ற, இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் பெரும் இழுபறியில் முடிந்தது.

செயலாளர் கி.துரைராசசிங்கம் தேசியப்பட்டியல் நியமனத்தில் நடந்து கொண்ட விதம் பிழையானது. அவருக்கு எதிரான நடவடிக்கையை பொதுச்சபையை கூட்டி எடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சசிகலா ரவிராஜ் நாடாளுமன்ற உறுப்பினராக வரக்கூடாது என்ற நோக்கத்துடன் எம்.ஏ.சுமந்திரனின் பின்னணியில் மாவை சேனாதிராசாவிற்கு தெரியாமல் இரகசிய சதி நடவடிக்கையில் கட்சியில் செயலாளர் கி.துரைராசசிங்கம் ஈடுபட்டு, தேசியப்பட்டியல் நியமனத்தை கலையரசனிற்கு வழங்கினார் என குற்றம்சாட்டப்பட்டது.

தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குபவர்களின் பெயர் பட்டியலில் பெண் பிரதிநிதித்துவம், அம்பாறை பிரதிநிதித்துவம் ஆகியவற்றை மாவை சேனாதிராஜாவும்  வைத்திருந்த நிலையில் இரகசிய சதி நடவடிக்கையினால் அவரும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிகின்றது.

இந்த நிலையில், செயலாளரின் சதி நடவடிக்கைக்கு ஒழுக்காற்று நடவடிக்கையெடுத்து அவரை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென கூட்டத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் அ.பரஞ்சோதி தீர்மானத்தை வாசித்தார். இதன்போது கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் “மத்தியகுழு கூட்ட நிகழ்ச்சி நிரலில் இந்த பிரேரணை இடம்பெறவில்லை. நிகழ்ச்சி நிரலில் இடம்பெறாத பிரேரணையை நிறைவேற்றுவது சட்டவிரோதமானது, செயலாளர் இந்த தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு செல்லலாம் என தெரிவித்தார்.

இதையடுத்து, செயலாளர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் பொதுச்சபையை கூட்டி நிறைவேற்றுவதென முடிவானது.

அதேநேரம், தேசியப்பட்டியல் விவகாரத்தில் செயலாளர் நடந்து கொண்டது ஒரு சதி நடவடிக்கைக்கு ஒத்தது, அது சட்டவிரோதமானது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், அம்பாறைக்கு நியமனம் வழங்கியதை யாரும் எதிர்க்கவில்லை. அந்த நியமனத்தை அனைவரும் ஆதரித்தனர். எனினும், நடந்து கொண்ட முறை சட்டவிரோதமானது.

செயலாளரை காப்பாற்ற இரா.சம்பந்தனும் முயன்றார். “செயலாளர் கிழக்கை சேர்ந்தவர். இந்த தீர்மானத்தை வடக்கிலுள்ளவர்கள் கொண்டு வருகிறீர்கள். இது பிரதேசவாதத்தை தூண்டலாம். அதனால் இதை இப்போதைக்கு நிறைவேற்றாமல் தவிருங்கள்“ என இரா.சம்பந்தன் கேட்டார்.

இது முழு மத்தியகுழுவையும் கொதிப்படைய வைத்தது. இது பிரதேசவாதமல்ல. கட்சி ஒழுக்கம் சார்ந்தது. இப்படி கீழ்த்தரமாக சிந்திக்காதீர்கள். முதலில் உங்கள் கருத்தை மீளப் பெறுங்கள் என எல்லோரும் கூட்டாக வலியுறுத்த, வெலவெலத்து போனார் சம்பந்தன்.

ஒரு கட்டத்தில், இளைஞரணியை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன்- “ஐயா நீங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குத்தான் தலைவர். நாங்கள் உங்கள் வயதிற்கு மரியாதை தந்து பேசாமலிருந்தால் அனைத்திற்குள்ளும் மூக்கை நுழைக்கிறீர்கள். இது தமிழ் அரசு கட்சி பிரச்சனை. நீங்கள் பேசாமலிருங்கள். மைக்கை பக்கத்திலுள்ள தமிழ் அரசு கட்சி தலைவர் மாவையிடம் கொடுங்கள்“ என கறாராக சொல்ல, சம்பந்தன் மேலும் வெலவெலத்தார்.

கூட்டத்தினர் ஏகோபித்து இதை ஆமோதித்தனர்.

மன்னார் எம்.பி சாள்ஸ் நிர்மலநாதன்- தமிழ் தேசிய கூட்டமைப்பின் தோல்விக்கு ஒரேயொரு காரணம் இரா.சம்பந்தன் தான் என நேரடியாக குற்றம்சாட்டி, சம்பந்தன் மீதான குற்றச்சாட்டுக்களை பட்டியலிட்டார். அத்துடன், கட்சியின் செயலாளரை மாற்றாமல், யாரும் கட்சிக்கூட்டம் என மன்னார் பக்கமே வரக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

சுமந்திரன் பேசும்போது, கே.வி.தவராசா, ஈ.சரவணபவன், அவரது உதவியாளர் பிரதாப், வேலணை பிரதேசசபை உறுப்பினர் நாவலன், அவரது சகோதரன் குணாளன் உள்ளிட்டவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றார்.

அப்போது ஒருவர் குறுக்கிட்டு- அப்படியானால் சுமந்திரன் குரூப்பை வைத்து தனியே கட்சி நடத்தப் போகிறீர்களா என கேட்டுள்ளார்.

பின்னர் சரவணபவன் பேசும்போது- சுமந்திரனிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்டு, அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென வலியுறுத்தினார். அத்துடன், உதயன் பத்திரிகை தொடர்பான குற்றச்சாட்டுக்களை நிராகரித்து, தமிழ் தேசியத்திற்கு விரோதமானவர்களை – அது எந்த கட்சி சார்ந்தவர்கள் என்றாலும்- பத்திரிகை விமர்சிக்கும். உதயன் பத்திரிகை விமர்சிக்கிறது என யாராவது தமிழ் தேசிய விரோதிகள் குற்றச்சாட்டு முன்வைத்தால், அதை நாம் கணக்கிலேயே எடுக்க மாட்டோம் என சுமந்திரனுடையகருத்துக்கு தன்னுடைய பதிலை அவர் வழங்கியுள்ளார்.

செயலாளர் எழுந்து ;  பேச ஆரம்பிக்க, அவரை ஒருமையில் சிலர் அழைத்து, “உமது கதையை நாம் கேட்க வரவில்லை. உம் மீது நடவடிக்கையெடுக்கவே கூட்டம். சத்தம் போடாமல் இரும்“ என சத்தமிட்டனர். செயலாளர் மேற்கொண்டு எதனையும் பேச முனையவில்லை.

கூட்டத்திலிருந்த ஒருவர் திடீரென, செயலாளரை நீக்க ஆதரவளிப்பவர்கள் கையை உயர்த்துங்கள் என்றார். மேடையில் இருந்தவர்கள் தவிர, அரங்கிலிருந்தவர்களில் சுமந்திரன், அவரால் நியமனம் வழங்கப்பட்ட சாணக்கியன், குருநாதன் ஆகிய மூவரையும் தவிர மிகுதி அனைவரும் கையை உயர்த்தினர்.

கே.வி.தவராசா பேசும்போது- சுமந்திரன் காலையில் ஒன்று, மதியத்தில் ஒன்று, மாலையில் ஒன்று என மாற்றி மாற்றி பேசுபவர், அவரது சிங்கள நேர்காணலில் சொல்லப்பட்ட விடயங்களை சுட்டிக்காட்டி, அது தவறானது, அதனால் கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட வீழ்ச்சியை சுட்டிக்காட்டினார். ஆனால், அதன் விளக்கத்தில் திரிவுபடுத்தி பொதுமக்களிற்கு விளக்கமளித்ததையும் சுட்டிக்காட்டினார்.

மாவை சேனாதிராசா பேசும்போது- தமிழ் தேசியத்தை வீழ்த்த தெற்கு பின்னணியில் இயங்கும் வித்தியாதரன் ஒரு பத்திரிகையை நடத்திக் கொண்டு, தமிழ் தேசியத்திற்கு எதிராக செயற்படுவதை சுட்டிக்காட்டினார். அதில் சுமந்திரன் தொடர்புபட்டுள்ளார் என குற்றம்சாட்டினார்.

இதை சுமந்திரன் மறுத்தார். தனக்கும் அந்த பத்திரிகைக்கும் தொடர்பில்லையென்றார்.

அதேபோல சுமந்திரனின் நெருங்கிய உறவினரும், அமெரிக்கன் மிசன் திருச்சபையை சேர்ந்தவருமான டி.பி.எஸ்.ஜெயராஜ் அண்மையில் தவறான தகவல்களுடன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த கட்டுரையில் அனேக தகவல் தவறுகள் இருந்தன. இதை பததிரிகை ஆதாரத்துடன் கூட்டத்தில் காண்பித்த மாவை, இப்படியான தவறான தகவல்களை கொடுத்து, தன்னைப்பற்றிய தவறான விம்பத்தை உருவாக்க சுமந்திரனே முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார்.

டி.பி.எஸ் தனது நெருங்கிய உறவினர் என்பதை ஏற்றுக்கொண்ட சுமந்திரன், அவர் கட்டுரை எழுதியதற்கும் தனக்கும் தொடர்பில்லையென்றார்.

மொத்தத்தில்  எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் கூட்டமைப்பின் அடுத்த கட்ட நகர்வுகள் எப்படியாக அமையப்போகின்றது என….!

ஐபிசி தமிழ் ‘ரீக்கடை’ நடத்தியவர்கள் உட்பட அறுவர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர்!!!

சுமந்திரன் ‘தமிழ் தேசிய நீக்கம்’ செய்கின்றார் என்று ஐபிசி தமிழில் ‘ரீக்கடை’ நடத்தியவர்களையும் பேர்லோ திட்டத்தில் வீட்டில் இருந்தவர்களையும் ஐபிசி தமிழ் வேலை நீக்கம் செய்துள்ளது. ஐபிசி ரீக்கடையயைத் திறந்து சுமந்திரன் ‘தமிழ் தேசிய நீக்கம்’ செய்கின்றார் என்று அரட்டை அடிக்க அனுமதித்த கோகுலன், முகுந்தன் ஆகிய பாஸ்கரனுக்கு வேண்டப்பட்டவர்களே வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவருடன் ராஜ்குமார், சுலோமி, சுரேஸ், தினேஸ் ஆகியோரும் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஐபிசி கலையகம் பிரித்தானியாவில் தனது மனிதவலுவைக் குறைத்துவருவது இது முதற்தடவை அல்ல. நிறுவனங்கள் மனிதவலுவைக் குறைப்பது இன்றுள்ள காலகட்டத்தில் புதிதும் அல்ல. ஆயினும் 2020 இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் ஐபிசி தமிழ் க்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிக்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

ஐபிசி ஒன்றும் இலாபத்தில் இயங்குகின்ற ஊடகமல்ல. அதன் வருமானம் அதன் லண்டன் கலையகத்தை இயக்குவதற்கே போதுமானதாக இல்லை. நிறுவனர் கந்தையா பாஸ்கரன் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் விரல்விட்டு எண்ணக் கூடிய பெரும் செல்வந்தர்களில் ஒருவர். அவர் ஐபிசி யை இயக்குவது நிச்சயமாக லாபநோக்கத்திற்காக அல்ல. தமிழ் மக்கள் மத்தியில் தன்னையொரு முக்கிய புள்ளியாக, அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ‘கிங் மேக்கர்’ஆக தன்னை உருவகப்படுத்துவதே அவருடைய நோக்கமாக இருக்க முடியும்.

அதன் ஒருகட்ட நகர்வாகவே 2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் எம் ஏ சுமந்திரனை தோற்கடிக்க கட்சிக்குள்ளேயே பிரிவினையயைத் தூண்டிவிட்டதில் ஐபிசி நிறுவனர் பாஸ்கரன் முன்னணியில் நின்றார். எம் ஏ சுமந்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐபிசி நிறுவனர் லட்சங்களை வழங்கியதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தேசம்நெற்க்கு தெரிவித்திருந்தன. அவ்வாறான நிதி வழங்கப்பட்டவர்களில் மாவை சேனாதிராஜா முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவர்ணவாகினி குழுமத்தை வாங்குவதற்கும் ஐபிசி திட்டமிட்டு செயற்பட்டு வந்ததும் தேசம்நெற்க்கு தெரியப்படுத்தப்பட்டு இருந்தது. சுவர்ணவாகினியயை வாங்குவதற்காக மின்னல் ரங்காவோடு ஐபிசி கூட்டுச் சேர்ந்திருந்தது. அச்சமயம் ரங்கா ராஜபக்ச சகோதரர்களின் பக்கம் நின்றார். ஆனால் அவர் விபத்து ஒன்றில் சிக்கியதையடுத்து அவ்வழக்கை சென்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசு அவருக்கு எதிராகப்பயன்படுத்திக் கொண்டது. ரங்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ராஜபக்ச சகோதரர்களுக்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஐபிசி இன் சுவர்ணவாகினி கனவும் பலிக்கவில்லை.

ஆனால் தேர்தல் முடிவுகள் கந்தையா பாஸ்கரனின் கனவைக் கலைத்துவிட்டது. கடந்த தேர்தலில் எம் ஏ சுமந்திரன் வெல்வது உறுதி என்பது தேர்தலுக்கு முன்னரேயே தேசம்நெற் போன்ற ஊடகங்களினால் உறுதியாக கூறப்பட்டதுடன், தமிழரசுக் கட்சியினுள் கூடுதல் வாக்குகளை சுமந்திரன் பெறுவார் என்பதையும் ஊகித்து இருந்தோம். ஆனால் ஐபிசி தமிழ் சுமந்திரன் தோற்கடிக்கப்படுவார் என்று விருப்புவாக்குகள் எண்ணப்படும் பொழுதுகூட நம்பி இருந்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாகவும் ஐபிசி சொல்ல முற்பட்டது. அதற்கேற்ப நேர்காணல்களையும் ஒளிபரப்பியது. ஆனால் எம் ஏ சுமந்திரனின் விருப்பு வாக்கு எண்ணிக்கை ஒரு போதுமே சர்ச்சைக்குரியதாக இருக்கவில்லை.

மத்தியில் கோத்தபாயாவின் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றதும், சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் கூடுதல் விருப்புவாக்குகளுடன் வெற்றி பெற்றதும், ஐபிசி தமிழ் ஆதரித்த வேட்பாளர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதும் கந்தையா பாஸ்கரனின் கனவுகள் கலைக்கப்பட காரணமானது. கோத்தபாய அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில் சுவர்ணவாகினிக்குள் யாரையும் நுழைய அனுமதிப்பதாக அவர்கள் இல்லை.

ஐபிசி தமிழி இன் ‘ரீக் கடை’ நிகழ்ச்சி எம் ஏ சுமந்திரன் மீது சேற்றை வாரியிறைக்கும் வகையிலேயே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் எம் ஏ சுமந்திரனால் முன்மொழியப்பட்ட பெண்கள் மீது மோசமான அநாகரிகமான தாக்குதல்கள் நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண்கள் இது தொடர்பாக தங்கள் விசனத்தை முகநூலில் பதிவு செய்திருந்தனர். ஐபிசி தமிழின் நன் மதிப்பையும் இந்நிகழ்வு மிகவும் பாதித்து இருந்தது.

சட்டத்தரணியான எம் ஏ சுமந்திரன் மக்களின் கணிசமான ஆதரவுடன் வெற்றி பெற்றதும், ஐபிசி தமிழ் சட்டச் சிக்கலுக்குள்ளாகலாம் என்ற அச்சமும் காரணமாகவும் ‘ரீக் கடை’ க்குப் பொறுப்பானவர்கள் நீக்கப்பட்டு இருக்கலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் ஐபிசி தமிழ் தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்தும் அங்குள்ள பணியாளர்களை வைத்து நிறுவனத்தை நட்டத்தில் இயக்க முடியாது என்ற காரணத்தினாலேயே வேலை நீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த மாகாணசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் நிலையில் மாகாணசபையிலும் ஐபிசி தனது செல்வாக்கை செலுத்த முற்பட்டு வருகின்றது என பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தோற்கடிக்கப்பட்ட நிலையில், அவர் கட்சியின் தலைவராக இருந்த போதும் உறுதியான முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை. மாகாணசபை உறுப்பினர்கள் தேர்வில் எம் ஏ சுமந்திரனின் கைகள் ஓங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் எம் ஏ சுமந்திரனின் ஆளாக இருந்த ஆர் நோல்ட்டையும் ஐபிசி சுமந்திரனுக்கு எதிராக திருப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது. சுமந்திரன் – ஐபிசி தமிழ் மோதல் மாகாணசபை தேர்தலில் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எம் ஏ சுமந்திரனுக்கு எதிராக ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் செயற்பட்ட போதும் சுமந்திரனின் வெற்றியயை எவராலும் தடுக்க முடியவில்லை. ஒரு வகையில் இந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் இருந்து அந்நியப்பட்டு வருகின்றனவோ என்றே எண்ணத்தை தோற்றுவிக்கின்றது. ஐபிசி தமிழ், உதயன், காலைக் கதிர், வலம்புரி அனைத்துமே சுமந்திரனுக்கு எதிரான ஊடகங்களாகவே செயற்படுகின்றன.