அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும், அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான காணொளிக் கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“இலங்கையும் இந்தியாவும் ஒருமித்துச் செயற்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம். பல துறைகளில் ஒருமித்துச் செயற்படுவதற்கு இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சம்மதமும் தெரிவித்திருக்கின்றார்கள். இதுவும் வரவேற்க வேண்டிய விடயம்.
விசேடமாக இரு நாட்டு மக்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்குப் பல வசதிகளை இரு நாட்டு அரசுகளும் செய்துள்ளன. அதுவும் வரவேற்க வேண்டிய விடயம்.
இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பொறுத்த வரையில் நீதியின் அடிப்படையில் – சமத்துவத்தின் அடிப்படையில் – கௌரவத்தின் அடிப்படையில் – சமாதானத்தின் அடிப்படையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்திய அரசின் தொடர்ச்சியான கருத்தாகவும் வலியுறுத்தலாகவும் உள்ளது.
இந்தியாவின் இந்தக் கருத்தை தற்போதைய பாரதப் பிரதமரும் முன்னாள் பிரதமர்களும் தற்போதைய அரசும் முன்னாள் அரசுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளன.
இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு நிறைவேற்றியே ஆகவேண்டும்.
அதை நிறைவேற்றுவதற்கு நல்லிணக்கப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, அரசமைப்பில் உள்ள சகல விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பல விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
இதனூடாகத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான – உறுதியான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது. இதைப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசிடம் மீண்டும் இடித்துரைத்துள்ளார்.
அதேவேளை, இலங்கை அரசும் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று இந்திய அரசிடம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளது. எனவே, என்ன நடக்கப் போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .