அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதம் முதல் சுமார் 2,80,000 குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நோய்த் தடுப்பு மையம் கூறும்போது, “அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதிலிருந்து மார்ச் மாதம் முதல் சுமார் 2,80,000 குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பு மற்றும் சேர்க்கை சதவீதம் குறைந்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 70 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் தென் பகுதியில் தொடர்ந்துகொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. உலகின் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் 20% அமெரிக்காவில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் கலிபோர்னியா மாகாணம் முதலிடத்தில் உள்ளது. அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு 8 லட்சத்தை நெருங்கவுள்ளது. பலி எண்ணிக்கையில் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 33 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.