05

05

மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் மோதல்; நான்கு பேர் படுகாயம்

சுகாதார பட்டப்படிப்பு மாணவர்கள் தமது பட்டப்படிப்புக்கான கால எல்லையை ஒரு வருடத்தால் குறைத்ததை எதிர்த்து கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். மாணவர்களின் ஆர்ப்பாட்டம் விகாரமகாதேவி பூங்கா முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் ஆரம்பித்தது. பெருமளவு பொலிஸார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மாணவர்கள் அலரிமாளிகை நோக்கி செல்லாது தடுக்க நகரமண்டப சுற்றுவட்டத்தில் அப்பாதையை மறித்து பொலிஸார் நின்றனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கிருந்து திரும்பி லிப்டன் சுற்றுவட்டம் நோக்கிச் சென்றனர்.

இந்நிலையில் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோருக்கு முன்னால் சென்று மாணவர்கள் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவுக்கு செல்வதாகக் கருதி ஆணைக்குழு அமைந்துள்ள லோர்ட் வீதியில் தடுப்பதற்கு காத்திருந்தனர். இதையடுத்து மாணவர்கள் டீன்ஸ் வீதி வழியாக சென்றனர். இந்நிலையில் அவர்களுக்கு முன்னால் சென்று 200 மீற்றர் தூரத்தில் இடைமறித்தனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கும் மாணவர்களுக்குமிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு மாணவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுடன், ஏனைய மூன்று மாணவர்களுக்கு காயமேற்பட்டது. நிலைமையை சமாளிப்பதற்கு கலகம் அடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.  பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவை ஆர்ப்பாட்டக்காரர்கள் பிற்பகல் 12.45 மணியளவில் வந்தடைந்து ஆணைக்குழு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் லோட் வீதி வழியான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பொலிஸார் போக்குவரத்தை சீர்செய்ய சிரமப்பட்டனர். எமது பட்டப்படிப்பு 5 பாடநெறிகளாக 4 வருடம் இடம்பெற்று வந்தது. இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவே தீர்மானித்தது.

நான்கு வருட பாடநெறியை மூன்று வருடங்களில் முடிப்பதற்கு அரசு மேற்கொண்ட தீர்மானம் நியாயமானதா? இந்த பட்டப்படிப்பை மாணவர்கள் எவ்வாறு முழுமையாக பூர்த்தி செய்யமுடியும். இதனால் சுகாதாரத் துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படுமென்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் உதுல் பிரேமரட்ன கருத்துத் தெரிவித்தார்.

மாணவர்கள் பிரதியமைச்சர் நந்திமிந்திர ஏக்கநாயக்கவுடன் சந்திப்பை மேற்கொண்டனர். இதன்போது உயர்கல்வியமைச்சர் பதவியேற்றதும் ஓரிரு தினங்களில் அழைத்தது பிரச்சினைகளையும் பேசித்தீர்வுகாண்பதாக தெரிவிக்கப்பட்டதையடுத்தே ஆர்ப்பாட்டத்தை பிற்பகல் 2.30 மணியளவில் மாணவர்கள் கைவிட்டனர்.

ரியாத்தில் வரலாறு காணாத பெரும் மழை

சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இது குறித்து இளவரசர் பைசல் பின் அப்துல்லா கூறுகையில்,

ரியாத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளும் மூடப்படவுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கு மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்களை மீட்கும் நடவடிக்கைகளில் ரியாத் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பாலங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகார துஷ்பிரயோகம் செய்தவர் என்பதை பொன்சேகா ஏற்க வேண்டும் -வைராக்கிய அரசியலையும் கைவிடக் கோரிக்கை

mahindananda.jpgசரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரச நிதியைத் தவறாகக் கையாண்டதாலேயே அவர் இன்று சிறைக் கைதியாகியுள்ளார் என மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி. பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமதுரையில் மேலும் தெரிவிக்கையில்: சரத் பொன்சேகா தாம் அரசியல் சிறைக்கைதி என தன்னை வர்ணிப்பதை விடுத்து அவர் இராணுவத் தளபதி அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் வைராக்கிய அரசியலைக் கைவிடவேண்டும்.

30 நாடுகள் பங்கேற்கும் ஆசிய பசுபிக் மாநாடு ஜூனில் கொழும்பில் – ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பண நிகழ்வு

ஆசிய பசுபிக் அமைப்பின் 9வது வட்ட மேசை மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் இலங்கையில் நடை பெறவுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவிருக்கும் இந்த மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுமார் 32 நாடுகளைச் சேர்ந்த 150க்கு மேற்பட்டோர் இலங்கை வரவுள்ளனர். இம் மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று கொழும்பு இன்டர்கொன்டினல் ஹோட்டலில் நடைபெற்றது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் நடைபெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சின் செயலாளர் திலக் கொலரே, அமைப்பின் தலைவர் கலாநிதி அந்தனி ச்யு, சுற்றாடல் அமைச்சின் மேலதிக செயலாளர் பத்மினி பட்டுவிட்டகே, 09வது வட்டமேசை மாநாட்டுக்கு தலைமை வகிக்கவிருக்கும் பொறியி யலாளர் சேன பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஸ்திரமான நுகர்வு மற்றும் உற்பத்தி எனும் தொனிப்பொருளிலேயே இம்மாநாடு நடத்தப்படவுள்ளது. ஆசிய பசுபிக் வட்டமேசை மாநாடு தெற்காசிய நாடொன்றில் நடைபெறவிருப்பது இதுவே முதல் தடவையாகுமென கலாநிதி அந்தனி க்யூ தெரிவித்தார்.

இம்மாநாட்டினை இலங்கையில் நடத்துவதன் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த பல புத்திஜீவிகளின் அனுபவங்களை பரிமாறிக்கொள்ள முடிவதுடன், உல்லாசப் பயணிகளுக்கான வருகையை அதிகரிக்க முடியுமெனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தனது உரையில் கூறினார்.

ஆசிய பசுபிக் அமைப்பின் 7வது வட்ட மேசை மாநாடு வியட்நாமிலும் 08வது மாநாடு தன்சானியாவிலும் நடைபெற்றன. அப்போது தீர்மானிக்கப்பட்டதற்கமைய 09வது மாநாடு இலங்கையில் ஜூன் 10 முதல் 12 வரை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இதில் அங்கத்துவம் வகிக்கும் பிலிப்பைன்ஸ், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, சீனா, வியட்நாம், கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கை வரவுள்ளனர். இவர்களது அனுபவங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் நாட்டிலுள்ள அதிகூடிய வளங்களைப் பயன்படுத்தி சூழல் மாசடையாத வகையில் சிறந்த பொருட்கள் உற்பத்தி செய்வது தொடர்பான நுட்பங்களை அறிந்து கொள்வதே மாநாட்டை நடத்துவதற்கான எமது இலக்கு என பொறியியலாளர் சேன பீரிஸ் கூறினார்