புதிய ரயில் சேவைகளை ஆரம்பித்தமை உட்பட பல்வேறு திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்தியதையடுத்து இலங்கை புகையிரதத் திணைக்களம் கடந்த வருடத்தில் 359 மில்லியன் ரூபாவினை மேலதிக வருமானமாகப் பெற்றுக்கொண்டுள்ளது.
இதற்கிணங்க இவ்வருடத்தில் 5000 மில்லியன் ரூபா வருமானம் கிட்டுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அதற்கான செயற்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.
2008ம் ஆண்டில் ரயில்வே திணைக்களம் 3671 மில்லியன் ரூபாவையும் 2009 ஆம் ஆண்டில் 4020 மில்லியன் ரூபாவையும் வருமானமாகப் பெற்றுக் கொண்டுள்ளது. கடந்த வருடங்களை ஒப்பிடும் போது 359 மில்லியன் ரூபாவை 2009ம் ஆண்டில் மேலதிக வருமானமாகப் பெற முடிந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதேவேளை, இவ்வாண்டில் 5000 மில்லியன் ரூபாவை வருமானமாகப் பெறும் வகையில் ரயில்வே திணைக்களம் புதிய வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இதற்கிணங்க இதுவரை காலமும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயில்வே காணிகளைக் குத்தகைக்கு வழங்கும் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் விற்பனைக் கூடங்கள், கடைகள், சிறிய வியாபார நிலையங்களை ஏற்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
பாவனைக்கு உதவாத இரும்பு மற்றும் உலோகப் பொருட்களை விற்பனை செய்தல் வர்த்தக விளம்பரப் பலகைகளுக்கான அனுமதி வழங்கல், புதிய ரயில் சேவைகளை ஆரம்பித்தல் உட்பட பல்வேறு வழிகளிலும் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு முன்னுரிமையளித்தல் என்பன இத்திட்டத்தில் உள்ளடக்க ப்பட்டுள்ளன.