March

March

தனுனவை கைது செய்ய உதவுங்கள்; 10 இலட்சம் ரூபா சன்மானம்

danu.jpgகோட்டை மாஜிஸ்திரேட் நீதவானால் கி 60 / 2010 என்ற வழக்கின் கீழ் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்துவரும் தனுன திலகரட்னவை கைதுசெய்வதற்கு உரிய தகவல்களை வழங்குபவருக்கு 10 இலட்ச ரூபாவை சன்மானமாக வழங்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களம் வெளியிட்டுள்ள சுவரொட்டியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேலே உள்ள படத்தில் காணப்படும், 2/12, மங்கள வீதி, மெனிங் டவுன் மாடி வீடு, கொழும்பு – 08 என்ற விலாசத்தில் வசிக்கும் தனுன திலகரட்ன என்ற நபரை கைதுசெய்வதற்கு உரிய தகவலை வழங்குபவருக்கு 10 இல ட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும். தகவல் வழங்க விரும்பு பவர்கள் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் -011– 2328138, பணிப்பாளர்-011– 2447319, பொலிஸ் அதிகாரி –011– 2324994, (24 மணி நேரம்), உதவி பொலிஸ் அதிகாரி – 011 – 2440157, கட்டுப் பாட்டு அறை-011-2422176, பெக்ஸ் –011-2380381, பொது எண் –011–2320141-5 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். அனைத்து தகவல்களும் ரகசியமாக வைக்கப்படும் என்று அந்த சுவரொட்டியில் கூறப்பட் டுள்ளது.

வவுனியாவில் ஜென்ஷிலா மஜீத்துக்கு இன்று பாராட்டு

majeed.jpgதுணிச்சல் மிக்க பெண்ணுக்கான விருதினை அமெரிக்காவில் பெற்றுக்கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஜென்ஷிலா மஜீதை பாராட்டி கெளரவிக்கும் வைபவம் இன்று, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தலைமையில் நடைபெறும்.

குர்ஆனின் படத்துடன் விளம்பரம்; முஸ்லிம்கள் கடும் ஆட்சேபம்

தமிழ்ப் பத்திரிகையொன்றில் திருக்குர்ஆனின் பெரிய அளவிலான படத்துடன் ஒரு கிண்ணத்தையும் பிரசுரித்து ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதை முஸ்லிம்கள் கடுமையாக ஆட்சேபிக்கின்றனரென ஜனாதிபதியின் ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது,

பள்ளிவாசலுக்குச் செல்லும் அனைவரும் பிரார்த்திக்குமாறும், “அல்லாஹ்வே உங்கள் ஆசீர்வாதத்தைத் தாருங்கள்” என்றும் ஏக வல்ல அல்லாஹ்வையும் அவனுடைய அருள்மறையாம் குர்ஆனையும் மிகவும் நிந்தனை செய்யும் வண்ணம் இவ்வரசியல் விளம்பரம் பிரசுரிக்கப்பட்டு ள்ளதை முஸ்லிம் இயக்கங்களும், உலமாக்களும், பொதுமக்களும் எம் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர்.

அல்லாஹ்வையும் புனித குர்ஆனை சம்பந்தப்படுத்தி ஒரு தேர்தல் சின்னத்தைப் பிரசுரித்துள்ளமை இலங்கையின் தேர்தல் வரலாற்றில் இதுவே முதற்தடவையாகும். முஸ்லிம்கள் இந்நாட்டின் வந்தேறு குடிகள் என முஸ்லிம் சமூகத்தை இழிவு படுத்திய சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கோரும் இவ்விளம்பரம் முஸ்லிம்களின் உள்ளங்களை ஆழ புண்படுத்தியுள்ளது.

சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு நாடு பூராவும் சுற்றித்திரிந்து முஸ்லிம்களுக்கு வேண்டுகோள்விடுத்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நிச்சயம் இதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். அடுத்து ஏகவல்ல அல்லாஹுத்த ஆலாவையும், அவனது அருள்மறையையும் மிகவும் கீழ்த்தரமான அரசியல் விளம்பரத்துக்குப் பாவித்ததையிட்டு பொன் சேகாவின் கட்சியும், அதன் பிரதான பங்காளியான ஜே.வி.பியும் முஸ்லிம்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோர வேண்டும்.

புத்தபிரானின் உருவச் சிலைக்குக் கீழே நிர்வாணமான ஒரு பெண்மணியை வரைந்து பெளத்த மக்களை சீற்றமடையச் செய்துள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ள இத்தருணத்தில் முஸ்லிம்களையும் இவ்விதம் விசனத்துக்குள்ளாக்கும் முறையில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது என்பதை மதங்களை நேசிக்கும் யாவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

மதங்களையும், அவற்றைப் பின்பற்று வோரையும் இவ்விதம் அவமானப்படுத்தி களங்கம் விளைவிக்கின்ற இச்செயற் பாடுகளின் பின்னணியில் மேற்கந்திய சதிகாரக் கும்பல்கள் சியோனிஸ சக்திகள் ஒழிந்திருப்பது முஸ்லிம் உலகுக்கு ஒரு புதிய விடயமல்ல. இந்த யூத சியோ னிஸத்தின் உள்நாட்டு முகவர்களான ஐ.தே.கவும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தாம் வாக்களிக்கக் கோரிய சரத் பொன் சேகாவின் இந்த மதவிரோத செயற் பாடுகளுக்கு எதிராக அறிக்கை விடுவார்களா? என முஸ்லிம்கள் கேட்க விரும்பு கின்றனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வெம்பிளியில் இளைஞர்களின் குழு மோதல்!! ஐவருக்கு மார்ச் 24ல் தண்டனை!!!

Lancelot_Roadதமிழ் இளைஞர் குழுக்களிடையே வெம்பிளியில் இடம்பெற்ற மோதலில் சம்பந்தப்பட்ட ஐவர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு உள்ளனர். மார்ச் 1இல் ஓல்ட்பெயிலியில் இவர்கள் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டனர். இவர்களுக்கான தண்டனை மார்ச் 24ல் வழங்கப்பட இருக்கின்றது.

2009 ஓகஸ்ட் 7ல் வெம்பிளியில் இடம்பெற்ற இளைஞர் குழுக்களிடையேயான மோதல் தொடர்பாகவே இவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டனர். இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, ஹரோ குழுவினர் சவுத் ஹரோ பார்க்கில் ஜக் டானியல் அருந்திக் கொண்டு இருந்துவிட்டு ஈலிங் றோட்டில் உள்ள பாம் பீச் ரெஸ்ரோரன்ருக்கு சென்றுள்ளனர்.

வழியில் லான்ஸ்லொட் வீதியில் இரு குழுக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முறுகல் உருவானது. ஹரோ குழுவினர் ஈலிங் றோட் டிஎம்எக்ஸ் குழுவினரை கொல்லப் போவதாகப் பயமுறுத்தினர். அருகில் இருந்த கார் தரிப்பு நிலையத்திலிருந்து டிஎம்எக்ஸ் குழுவினரது எண்ணிக்கை பெருத்தது. இது அருகில் உள்ள சிசிரிவியில் பதிவாகி உள்ளது. இது நீதிமன்றில் யூரிகளுக்கும் காண்பிக்கப்பட்டது.

இம்மோதலில் வாகீசன் பரமலிங்கத்தின் தாடை உடைக்கப்பட்டதுடன் முகத்திலும் காயங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஹரோ குழுவைச் சேர்ந்த அருள்முருகன் செபமாலை, வாகீசன் பரமலிங்கத்தை கிரிக்கட் பற்றினால் அவரது முகத்திலும் தலையிலும் பலமுறை தாக்கி உள்ளார். அதனால் வாகீசனின் முகத்திலும் தலையிலும் பலத்த காயங்களும் முகத்தில் எலும்பு முறிவுகளும் ஏற்பட்டது. அவரது தாடையையும் அருள்முருகன் செபமாலை உடைத்திருந்தார். 

அதற்கு முன்னர் வாகீசன் பரமலிங்கம், அருள்முருகன் செபமாலையை கொலை செய்யப் போவதாகக் கூறி அவரது முகத்தை பிக்காஸினால் தாக்கி இருந்தார்.

குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்கள்:

ஐங்கரன் தர்மலிங்கம் (24) டிஎம்எக்ஸ் குழு) – கிறீன்போர்ட் : ஐங்கரன் ஆயுதம் (இரும்புக் குற்றி) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

அருள்முருகன் செபமாலை (22) (டிஎம்எக்ஸ் குழு) – கென்ரன் : அருள்முருகன் செபமாலை ஆயுதம் (கிரிக்கட்பற்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் திட்டமிட்ட நோக்குடன் உடற்காயத்தை ஏற்படுத்தியதற்காகவும் குற்றவாவாளியாகக் காணப்பட்டார். இவர் மீது சுமத்தப்பட்ட கொலை முயற்சிக் குற்றச்சாட்டில் இருந்து அருள்முருகன் தவிர்க்கப்பட்டார்.
 
பார்த்தீபன் பரமலிங்கம் (30) (ஹரோ குழு) – என்பீல்ட் : பார்தீபன் ஆயுதம் வைத்திருந்ததற்காகவும் (போத்தல்) வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

வாகீசன் பரமலிங்கம் (27) (ஹரோ குழு) – சறே : வாகீசன் ஆயுதம் (பிக்காஸ்) வைத்திருந்ததற்காகவும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதற்காகவும் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

மதுசூதன் சச்சிதானந்தன் (28) (ஹரோ குழு) – ரெய்னர்ஸ் லேன் : ஆயுதம் (கூரிய ஆயுதம் கத்தி) வைத்திருந்ததற்காக குற்றவாளியாகக் காணப்பட்டார். மதுசூதன் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவர்களுடன் கென்ரனைச் சேர்ந்த அஜித்குமார் தர்மராஜா (26) இவரின் தந்தை கந்தையா தர்மராஜா (48) இருவர் மீதும் வன்முறை நடவடிக்கையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. அஜித்குமார் ஆயுதத்தை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார். சம்பவத்தின் போது அவ்விடத்தில் நின்ற அஜித்குமாரும் தந்தையும் அங்கு உருவான பதட்டத்தை தணிக்க முயன்றமை நீதிமன்றில் நிரூபிக்கப்பட்டு அவர்களுடைய குற்றச்சாட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

விகிதாசாரத் தேர்தல் முறையும், சிறுபான்மை சமூகத்தவர்களும் -04 : சிறுபான்மையினரின் அங்கத்துவம் அதிகரிப்பதனால் மாத்திரம் உரிமைகளைப் பெற்றுவிட முடியாது. உணர்வுபூர்வமான பிரதிநிதித்துவம் தேவை. – புன்னியாமீன்

election_cast_ballots.jpgவிகிதாசார பிரதிநிதித்துவ முறையின் போனஸ் ஆசனமுறை, வெட்டுப்புள்ளி வாக்குகள் பெறாத கட்சிகளை போட்டியிலிருந்து நீக்குதல், தொடர்புடைய வாக்குகளைக் கணிப்பீடு செய்தல்,  முடிவான எண்ணைக் கணிப்பீடு செய்தல், முடிவான எண்ணுக்கமைய ஆசனங்களைப் பகிர்தல், பிரச்சினைக்குரிய ஆசனங்கள் இருப்பின் மிகப் பெரும் பகுதி மிகுதி முறைக்கமைய ஆசனங்களை ஒதுக்கீடு செய்தல் ஆகிய தலைப்புக்களை கடந்தவாரம் நோக்கினோம்.

மேற்படி ஆறு படிமுறைக்கு அமையவே இலங்கையிலுள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்தும் 196 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படுவர்.
தேசியபட்டியல் மூலம் மீதான பிரதிநிதிகளைத் தெரிவு செய்தல்;
இலங்கைப் பாராளுமன்றத்தின் மொத்தப் பிரதிநிதிகள் எண்ணிக்கை 225 ஆகும்.  இதில் 196 பிரதிநிதிகள் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் மீதான 29 பிரதிநிதிகள் தேசிய பட்டியல் மூலமாகவும் தெரிவு செய்யப்படுவர்.

தேசிய பட்டியல் என்றால் என்ன?

விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பாராளுமன்றப் பொதுத் தேர்தலொன்றுக்கு நியமனப் பத்திரம் கோரப்படும்போது 29 பெயர்களைக் கொண்ட பட்டியலொன்றினையும் தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையாளர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும், சுயேட்சைக் குழுக்களையும் கேட்டுக் கொள்வார். இப்பட்டியல் தரப்படுத்தப்பட்டதாக அமைதல் வேண்டும்.

ஒரு அரசியல் கட்சி எத்தனை தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டாலும்கூட 29 பெயர்களைக் கொண்ட ஒரு பட்டியலை மாத்திரமே தாக்கல் செய்ய முடியும். இப்பட்டியலே தேசியப்பட்டியல் எனப்படுகிறது. சுயேட்சைக்குழுக்கள் (விரும்பின்) இப் பட்டியலை தாக்கல் செய்யலாம்.

பொதுத் தேர்தலின் முடிவில் போட்டியிட்ட அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும்,  தனித்தனி சுயேட்சைக் குழுக்களும் தேசிய ரீதியில் பெற்றுக்கொண்ட வாக்கு விகிதாசாரத்துக்கமைய தேசிய பட்டியல் பிரதிநிதித்துவம் தீர்மானிக்கப்படும்.

எமது தெளிவிற்காக 2000 ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகளை உதாரணமாகக் கொண்டு இதனை ஆராய்வோம்.
2000ம் ஆண்டு பொதுத் தேர்தலில்:

தெரிவாக வேண்டிய அங்கத்தவர் எண்ணிக்கை : 225
பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்    : 12,071,062
அளிக்கப்பட்ட வாக்குகள்    : 9,128,832 (75.62%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    : 481,155
செல்லுபடியான வாக்குகள்    : 8,647,668

மேற்படி பொதுத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட 29 அரசியல் கட்சிகளும் 99 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிட்டன. இவற்றுள் அகில இலங்கை ரீதியில் ஒரு இலட்சத்துக்கு (1,00000) அதிகமான வாக்குகளைப் பெற்ற கட்சிகளை நோக்குவோம்.

பொதுசன ஐக்கிய முன்னணி  3,900,901 (45.10%)
ஐக்கிய தேசிய கட்சி   3,477,770 (40.21%)
மக்கள் விடுதலை முன்னணி  518,774 (5.99%)
தேசிய ஐக்கிய முன்னணி  197,983 (2.28 %)
சிஹல உறுமய   127,863 (1.47 %)
தமிழர் விடுதலைக் கூட்டணி  106,033  (1.22 %)

ஏனையவை அனைத்தும் 1,00000க்கும் குறைவாகவே வாக்குகளைப் பெற்றன.

தேசிய பட்டிலுக்கான குறைந்த பட்ச வாக்குகளைக் கணித்தல்

தேசிய ரீதியில் செல்லுபடியான மொத்த வாக்குகளை 29ஆல் வகுக்கும்போது தேசியபட்டியலுக்கான குறைந்தபட்ச வாக்குகளைக் கண்டுகொள்ள முடியும்.

2000ம் ஆண்டு நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய பட்டியலுக்கான குறைந்தபட்ச வாக்கு = 8,647,668 / 29
= 298,195
ஆகும்.

இந்த வாக்கினை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக்குழு பெற்றிருப்பின் தேசிய பட்டியல் பிரதிநிதியொருவரைப் பெற உரித்தாகின்றது.

இனி கட்சிகளுக்கு தேசிய பட்டியலை ஒதுக்கீடு செய்யும்போது அகில இலங்கை ரீதியில் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குகள் தேசியப் பட்டியலுக்குரிய குறைந்தபட்ச வாக்கினால் வகுக்கப்படும். முதலில் முழுமையான எண்ணுக்கமைய ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மேலும் ஆசனம் தேவையெனின் மிகப்பெரும் மிகுதி முறைக்கமைய பகிரப்படும்.

பொதுசன ஐக்கிய முன்னணி பெற்ற மொத்த வாக்குகள் 3,900,901 ஆகும். இதனை 298,195 ஆல் வகுக்கும்போது ‘13’ உம் மிகுதியாக 24366 வாக்குகளும் வரும். எனவே முழுமையான எண்ணுக்கமைய பொதுசன ஐக்கிய முன்னணி 13 தேசியப்பட்டியல் உறுப்பினர்களைப் பெற உரித்துடையது.

அடுத்து இரண்டாவது அதிகப்படியுமான வாக்குகளைப் பெற்ற ஐ.தே.க. 11 தேசியப்பட்டியல் உறுப்பினர்களைப் பெற உரித்துடையது.
மூன்றாவது இடத்தைப் பெற்ற கட்சி மக்கள் விடுதலை முன்னணியாகும். இக்கட்சி பெற்ற மொத்த வாக்குகளான 518,774 ஐ 298,195 ஆல் வாக்கினால் வகுக்கும்போது ‘1’ உம் மிகுதியாக 220579 வாக்குகளும் வரும். எனவே முழுமையான எண்ணுக்கமைய மக்கள் விடுதலை முன்னணி ஒரு தேசியல்பட்டியல் உறுப்பிரைப் பெற்றுக்கொள்ள உரித்துடையது.

2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் மேற்படி 3 கட்சிகளையும் தவிர வேறு எந்தவிதமான அரசியல் கட்சிகளோ அல்லது சுயேட்சைக்குழுக்களோ தேசியபட்டிலுக்குரிய குறைந்த பட்ச வாக்கினைவிட அதிகமாகப் பெறவில்லை.

ஆகவே இங்கும் மிகப் பெரும் மிகுதி முறையைப் பயன்படுத்த வேண்டும்.

முழுமையான எண்களுக்கமைய பொ.ஐ.மு. 13 உறுப்பினர்களையும்,  ஐ.தே.க. 11 உறுப்பினர்களையும், ம.வி.மு 1 உறுப்பினர்களையுமாக மொத்தம் 25 உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டன. மேலும் 4 தேசிய பட்டியல் உறுப்பினர்கள் தெரிவாக்கப்படல் வேண்டும். எனவே மிகப்பெரும் மிகுதிக்கமைய பின்வரும் அந்த 4 உறுப்பினர்களும் தீர்மானிக்கப்படுவர்.

பொ.ஐ.மு. மீதி – 24,366
ஐ.தே.க.  – 197,625
ம.வி.மு.   – 220,579
தே.ஐ.மு. பெற்ற வாக்குகள்- 197,983
சிஹல உருமய – 127,863

இதன்படி ஆகக் கூடுதலான மிகுதியைப் பெற்றுள்ள ம.வி.முன்னணி ஒரு பிரதிநிதியையும்,  2வது மிகுதியைப் பெற்றுள்ள தே.ஐ.முன்னணி ஒரு பிரதிநிதியையும்,  3 வது மிகுதியைப் பெற்றுள்ள ஐ.தே.கட்சி ஒரு பிரதிநிதியையும், 4 வது மிகுதியைப் பெற்றுள்ள சிஹல உருமய ஒரு பிரதிநிதியையும் பெற்றுக் கொள்ளும்.

பொ.ஐ.மு முழுமையான எண்ணுக்கமைய 13 தேசியப்பட்டியல் பிரதிநிதிகளைப் பெற்றுக் கொள்ளும். மிகப்பெரும் மிகுதிக்கமைய பிரதிநிதிகளைப் பெற முடியாது. ஆகவே பொ.ஐ.மு மொத்தமாகப் பெற்றுக்கொண்ட தேசியப்பட்டியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 13 ஆகும்.       

ஐ.தே.க முழுமையான எண்ணுக்கமைய 11 தேசியப்பட்டியல் பிரதிநிதிகளையும் மி கப்பெரும் மிகுதிக்கமைய 1 பிரதிநிதியையும் பெற்றுக் கொள்ளும். ஆகவே ஐ.தே.க மொத்தமாகப் பெற்றுக்கொண்ட தேசியப்பட்டியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 11+1 = 12 ஆகும்.

ம.வி.மு  முழுமையான எண்ணுக்கமைய 1 தேசியப்பட்டியல் பிரதிநிதியையும் மி கப்பெரும் மிகுதிக்கமைய 1 பிரதிநிதியையும் பெற்றுக் கொள்ளும். ஆகவே ம.வி.மு மொத்தமாகப் பெற்றுக்கொண்ட தேசியப்பட்டியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 1+1 = 2 ஆகும்.

தே.ஐ.மு,  சிஹல உருமய ஆகியன மிகப் பெரும் மிகுதி முறைக்கமைய ஒவ்வொரு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். இந்த அடிப்படையில் தேசியப்பட்டியல் 29 பிரதிநிதிகளும் பகிரப்படுவர்.

தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு வெட்டுப்புள்ளி வாக்குகள் 5% பாதிப்பைச் செலுத்த முடியாது.

2000ம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தல் முடிவினூடாக நோக்குமிடத்து சிறிய கட்சிகளான ம.வி.முன்னணி 2 உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளவும்,  தே.ஐ.மு. 1 உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளவும்,  மாவட்ட ரீதியில் போட்டியிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தோல்வியடைந்த சிஹல உருமய ஒரு உறுப்பினரையாவது பெற்றுக் கொள்ளவும் தேசியப்பட்டியல் துணை புரிந்துள்ளது. அதே நேரததில் பிரதான கட்சிகளும்,  தேசியப்பட்டியல் மூலமாக சிறுபான்மையினருக்கு இடம் வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாககப்படுகின்றது.

2000 ஆம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலை அடுத்து பொது ஜன ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியல் மூலமாக லக்ஸ்மன் கதிர்காமர்,  அலவி மௌலானா,  யூ.எல்.எம் ஹனீபா,  மாரிமுத்து, ரிஸ்வி சின்னலெப்பை,  ஆகிய சிறுபான்மைப் பிரதிநிதிகளும்,  ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் மூலமாக ஏ.எச்.எம் அஸ்வர்,  எம்.எஸ்.செல்லச்சாமி,  அப்துல் மஜீட், பி.பி. தேவராஜ்,  கனகராஜா போன்ற சிறுபான்மைப் பிரதிநிதிகளும்,  மக்கள் விடுதலை முன்னணி மூலமாக அன்ஜாத் உம்மா (இலங்கையிலே முதலாவது முஸ்லிம் பெண் பாராளுமன்றப் பிரதிநிதி) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டமை தேசியப்பட்டியல் சிறுபான்மையினருக்கு வாய்ப்பானதொன்று நிராகரித்து விட முடியாதுள்ளது.

குறிப்பாக விகிதாசார தேர்தல் முறையின் கீழ் தனியொரு கட்சிக்கு தனது பெரும்பான்மையினை பெற்றுக் கொள்வது கடினமான நிலை காணப்பட்டமையினால் சிறிய கட்சிகள் சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்தே பிரதான கட்சிகள் அரசாங்கத்தை அமையக்கக்கூடிய நிலை ஏற்பட்டன. இதனால் அக்கட்சிகளை திருப்திப்படுத்திக் கொள்ள தேசியபட்டியலினூடாக பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு பிரதான கட்சிகள் தள்ளப்படுகின்றன. மேற்குறிப்பிட்ட நிலையின் கீழ் தேசியபட்டியலினூடாக சில சிறுபான்மைத்துவம் இடம்பெற்றாலும்கூட, அப் பிரதிநிதித்துவங்கள் தமது இனத்துக்காக அல்லது இனத்தின் உரிமைக்காக எத்தகைய பங்களிப்பினை ஆற்றியன என்பது கேள்விக்குறியே.

குறிப்பாக இலங்கையில் காணப்படக்கூடிய விகிதாசார முறைக்கமைய பாராளுமன்றத்தில் சிறுபான்மை அங்கத்துவம் அதிகரித்துக் காணப்பட்டது என்பது ஏதோ உண்மைதான். ஆனால்,  சிறுபான்மையினரின் உரிமையைப் பெற்றுக்கொள்ள பாராளுமன்றத்தில் அங்கத்துவர் எண்ணிக்கையால் மாத்திரம் உறுதிப்படுத்தப்படுவதில்லை என்பதை கடந்த கால அனுபவங்களினூடாக எம்மால் காணமுடிந்தது. எனவே, பாராளுமன்றத்தில் சிறுபான்மை அங்கத்தவர் என்பதை விட, உணர்வுபூர்வமான செயல்திறன்மிக்க அங்கத்துவமே தேவைப்படுகின்றது.

கட்சிகளால் தேர்தல் காலத்தில் தாக்கல் செய்யப்படக்கூடிய பட்டியலுக்கமையவே தேர்தல் ஆணையாளரினால் தேசியபட்டியல் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டாலும் கூட, இலங்கையில் தேர்தல் சட்ட மூலத்தின் கீழ் கட்சிகளின் செயலாளரினால் சிபாரிசு பண்ணக்கூடிய பிரதிநிதியையும் தேர்தல் ஆணையாளரினால் தேசியபட்டியலினூடாக நியமனம் வழங்கலாம். எனவே,  பட்டியல் முன்வைக்கப்பட்ட போதிலும்கூட, பட்டியலில் உள்ளவர்கள் மாத்திரமே பிரதிநிதித்துவத்தைப் பெறுவார்கள் என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது.

(முற்றும்)

பங்களாதேஷ் இராணுவ உயர் அதிகாரிகள் குழு இலங்கை வருகை

bd.jpgபங்களா தேஷ் இராணுவத்தின் எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழு இலங்கை வந்துள்ளது. இந்த உயர் மட்டக் குழுவினர் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இரு இராணுவங்களுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இலங்கை இராணுவம் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ள நிலையில் இரு நாடுகளும் அனுபவங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. பங்களாதேஷைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் முஹம்மட் இஹ்திஸாம் உல் ஹக் மற்றும் மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக் ஆகியோர் வன்னி இராணுவ நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் முடிவில் பங்களாதேஷ் இராணுவ குழுவினர் இலங்கை இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் வழங்கினர். இந்த சந்திப்பின்போது இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகரும் கலந்துகொண்டார். இராணுவத் தளபதியுடனான சந்திப்பை அடுத்து இராணுவத் தலைமையகத்தின் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த எட்டு உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் தியத்தலாவ இராணுவ அகடமி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம், முல்லைத்தீவு மற்றும் வன்னி பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.

மேஜர் ஜெனரல் இஹ்திஸாம் உல் ஹக், மேஜர் ஜெனரல் ஏ. கே. எம். சபருல்லாஹ் சித்தீக், பிரிகேடி யர் ஜெனரல் ரித்வான் அல் மஹ் மூத், லெப்டினன்ட் கேர்ணல் முஹ ம்மத் அஸதுல்லாஹ் மின்ஹாசுல் அலம், லெப்டினன்ட் கேர்ணல் எம். தெளபீக்குல் ஹஸன் சித்தீக், மேஜர் ஏ. எஸ். எம். பஹவுத்தீன், மேஜர் எம். டி. நஸ்ருல் இஸ்லாம் கான் மற்றும் மேஜர் சகாவத் ஹொஸைன் செளத்ரி ஆகியோரே இலங்கை வந்துள்ளனர்.

விசாரணையின்றி சிறைகளில் இருந்தோரில் 461 பேர் விடுதலை – மேலும் 200 பேரை விடுவிக்க நடவடிக்கை

நீண்டகாலமாக வழக்குகள் விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட் டிருந்தவர்களுள் இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதி, சட்ட மறுசீரமைப்பு முன்னாள் பிரதியமைச்சர் வி. புத்திரசிகாமணி தெரிவித்தார். சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்ட துரித விசாரணைகளை அடுத்து இவர்கள் விடுவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

விசாரணைகள் எதுவுமின்றி சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை விடுவிப்பது தொடர்பில் பதினொரு சட்டத்தரணி களை விசேடமாக நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. கைதிகளின் கோவைகள் தனித்தனியே ஆராயப்பட்டு கடந்த ஜனவரி மாதத்திலிருந்து கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு இதுவரை 461 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், 200 பேரின் கோவைகள் ஆராயப்பட்டு வருவதாகவும் இவர்களுள் வழக்குகள் பதிவு செய்ய அவசிய மில்லாதவர்கள் விடுவிக்கப்படுவார் களென்றும் முன்னாள் பிரதியமைச்சர் கூறினார்.

எம். ரி.வி./ எம்.பீ.சி. அலுவலகம் மீது தாக்குதல்; பணியாளர்கள் சிலர் காயம்

கொழும்பு, ப்ரேப்ரூக் பிளேஸிலுள்ள எம்.ரி.வி./எம்.பீ.சி. அலுவலகம் திங்கட்கிழமை பட்டப்பகலில் இனந்தெரியாத கும்பலொன்றினால் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன், இச்சம்பவத்தில் அந்த ஊடக நிறுவனத்தின் பணியாளர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.

திங்கட்கிழமை  பிற்பகல் 3.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாக எம்.பீ.சி. எவ்.எம். முகாமையாளரான சுரங்க சேனாநாயக்க தெரிவித்தார்.பஸ்ஸொன்றிலும் முச்சக்கர வண்டியொன்றிலும் வந்தவர்களினாலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஹாராஜா நிறுவனத்தின் தலைமை அலுவகமும் எம்.ரி.வி./எம்.பீ.சி. ஊடக நிறுவனத்தின் செய்திப் பிரிவுமே கொழும்பு, ப்ரேப்ரூக் பிளேஸில் அமைந்துள்ளது. மாலை 3.45 மணியளவில் பஸ்ஸொன்றிலும் முச்சக்கர வண்டியிலும் வந்த கும்பலொன்று அந்த நிறுவனக் கட்டிடத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதுபோல் பாசாங்கு செய்துவிட்டு திடீரென கற்கள், போத்தல்கள், பொள்ளுகள் போன்றவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தி பிரதான நுழைவாயிலூடாக உள்ளே நுழைய முற்பட்டுள்ளனர்.

இந்த குண்டர்குழு நடத்திய தாக்குதலில் மஹாராஜா நிறுவனத்தின் தலைமை அலுவலகம், எம்.ரி.வி./எம்.பீ.சி. ஊடக நிறுவன செய்திப் பிரிவு இணைந்திருக்கும் கட்டிடத்திற்கும் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதேநேரம், குண்டர் குழு தாக்குதல் நடத்தும் சத்தம் கேட்டதுமே அருகிலுள்ள அனைத்து பொலிஸ் நிறுவனங்களுக்கும் அறிவித்தும் பொலிஸார் எவரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவில்லையென சுரங்க சேனாநாயக்க கூறினார். குண்டர்கள் நடத்திய தாக்குதலில் கட்டிடத்திற்கும் வாகனங்களுக்கும் மட்டுமல்லாது பாதுகாப்பு கமராக்கள் உள்ளிட்ட பொருட்களும் சேதமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அறிவித்தும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வராததால், சம்பவத்தின் பாரதூரத்தை உணர்ந்தும் தற்காப்பின் பொருட்டும் எம்.ரி.வி./எம்.பீ.சி. நிறுவன பணியாளர்களும் பாதுகாப்பு ஊழியர்களும் குண்டர் குழுவினர் மீது திருப்பித் தாக்குதல் நடத்தியதாகவும் சுரங்க சேனாநாயக்க கூறினார்.

குண்டர்கள் தாக்குதல் நடத்திய கற்கள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தியே பதில் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் குண்டர்கள் பின்வாங்கிவிட்டதாகவும் கூறிய எவ்.எம். முகாமையாளர் சேனாநாயக்க, அதன் பின்னரே பொலிஸார் அங்கு வந்ததாகவும் தெரிவித்தார். குண்டர்கள் நடத்திய தாக்குதலில் தங்களது நிறுவனப் பணியாளர்கள் சிலர் காயமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறிருப்பினும் எம்.ரி.வி/எம்.பீ.சி. ஊகட நிறுவன பணிகளுக்கு எந்தத் தடங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டதுடன், சம்பவத்தை அடுத்து அந்த நிறுவனத்தை சுற்றி பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாகவும் நிறுவன அதிகாரி ஒருவர் கூறினார்.

காஸ்ச் பொயின்றில் பணம் எடுக்க முற்பட்டவரிடம் பணம் பறிமுதல்!

லண்டன் றெட் பிறிஜ் பிகைவ் லேனில் உள்ள பார்க்ளேய்ஸ் வங்கி காஸ்ச் பொயின்ரில் பணம் எடுக்க முற்பட்டவரின் பணத்தை இளைஞர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார். மார்ச் 11 காலை பதினொரு மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி சம்பவம் வங்கியின் CCTVயில் தெளிவாகப் பதிவாகி இருந்ததுடன் அவ்வாதாரங்கள் பொலிஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் லண்டன் கிளைச் செயலாளர் பொன் சிவசுப்பிரமணியம் அவர்களே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உள்ளார். தனது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முற்பட்ட போது காஸ்ச் பொயின்ரில் இருந்து வந்த 300 பவுண்களையும் ஏற்கனவே அவர் வங்கியில் இருந்து எடுத்திருந்த 400 பவுண்களையும் அவரது வொல்லற்றையும் பறிகொடுத்துள்ளார் பொன் சிவசுப்பிரமணியம்.

தான் எதிர்பார்த்திராத வகையில் ஓரிரு நிமிடங்களுக்குள் நடந்த இந்தச் சம்பவத்தால் தனது வங்கிக் நடவடிக்கைகளை வங்கி உறைநிலையில் வைத்திருப்பதாகத் தெரிவித்தார் பொன் சிவசுப்பிரமணியம். CCTVயில் சம்பவம் பதிவாகி இருந்த போதும் சம்பந்தப்பட்டவரைக் கைது செய்து தனது பணத்தை மீளப்பெற முடியுமா? என்பது சந்தேகம் எனவும் அவர் தெரிவித்து இருந்தார்.

ஏப்ரல் தேர்தலில் தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் 25 வீதத்தால் வீழ்ச்சி அடையலாம்!!! : த ஜெயபாலன்

gajendrakumar_ponnampalamSambanthan_R_TNAஏப்ரல் 8ல் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படும் தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ் வாக்குகள் பெருமளவில் சிதறிச் செல்கின்ற நிலையில் உள்ளதால்  2010 பாராளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் 25 வீதம் வரை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 2004 தேர்தலில் வடக்கு கிழக்கில் இருந்து 23 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் சென்றிருந்தனர். இவர்களில் 22 பேர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் ஒருவர் ஈபிடிபி யின் சார்பிலும் தெரிவு செய்யப்பட்டு இருந்தார். இத்தேர்தலில் வடக்கு கிழக்கில் தெரிவு செய்யப்படக் கூடிய தமிழ் பிரதிநிதிகளின் எண்ணிக்கை 15 ஆகக் குறையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் ஆயுத முனையில் இடம்பெற்ற போட்டி பெரும்பாலும் இருமுனையினதாக அமைந்ததால் தமிழ் வாக்குகள் சிதறுண்ணாமல் இருந்தது. அதனால் ஜனநாயகமற்ற அரசியல் பலம்வலுவானதாக அமைந்தது. ஆனால் இம்முறை தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் (ஜீனியர் விகடனில் மட்டுமே வாழ்கின்றனர்.) ஆயுத பலத்தினால் அவர்கள் கட்டியிருந்த ஒற்றுமை சிதறி அவர்களுடைய அரசியல் ஆதரவுத் தளம் ஈடாடியுள்ளது. அதனால் தமிழ் வாக்குகள் மிகவும் சிதறிப் போயுள்ளது.

2004 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தின் 9 ஆசனங்களுள் 9 ஆசனங்களும், வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுள் 5 ஆசனங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுள் 4 ஆசனங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுள் 2 ஆசனங்களும், அம்பாறை மாவட்டத்தில் 7 ஆசனங்களுள் ஒரு ஆசனமும் தமிழ் பிரதிநிதிகளுக்கு அதாவது ஈபிடிபி கட்சிக்கு ஒரு ஆசனமும் ஏனையவை விடுதலைப் புலிகளின் அரசியல் அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் கிடைத்தது. வடக்கு, கிழக்குப் பிரதேசத்துக்குரிய 31 ஆசனங்களுள் 23 ஆசனங்கள் தமிழ் பிரதிநிதிகளுக்குக் கிடைத்தது. இம்முறை 15 ஆசனங்களாகக் குறைந்துவிடலாம் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக மே 18க்குப் பின்னான அரசியலில் ஆர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை தங்கள் கட்சியில் இருந்து ஓரம்கட்டியது. அதனால் அவர்களில் கிசோர் சிவநாதன், கனகரத்தினம், க தங்கேஸ்வரி ஆகியோர் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணிக்குச் சென்றனர். ந சிறிகாந்தா, எம்கே சிவாஜிலிங்கம் ஆகிய இருவரும் ஜனாதிபதித் தேர்தலின் போதே இடதுசாரி முண்ணணியுடன் இணைந்து கொண்டனர். ஏனையவர்கள் தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டனர். இவர்கள் அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் கட்சியின் பட்டியலில் போட்டியிடுகின்றனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இந்த முன்னணியின் குறிப்பான நபர்கள். குறிப்பாக வன்னி யுத்தத்தின் போது வெளிநாடுகளில் தங்கி இருந்து வெளிநாட்டில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரண்டறக் கலந்த இவர்களுக்கு வடக்கு கிழக்கில் ஆதரவுத் தளம் இருக்கின்றதோ இல்லையோ புலம்பெயர்ந்த நாடுகளில் பலமான ஆதரவுத் தளம் உள்ளது.

போட்டியிடுகின்ற கட்சிகள்:

தமிழரசுக் கட்சி (தமிழ் தேசியக் கூட்டமைப்பு), அகில இலங்கை தமிழ் கொங்கிரஸ் (தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி), தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், புளொட், ஈழவர் ஜனநாயகக் கட்சி, இடதுசாரி முன்னணி, என தமிழர் தரப்பு கட்சிகளும் அத்துடன் சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி உட்பட சிங்கள கட்சிகளிலும் பல தமிழர்கள் போட்டியிடுகின்றனர். சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும் போட்டியிடுகிறது.

தேர்தல் களம்:

யாழ் மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 324 வேட்பாளர்கள், 15 அரசியல் கட்சிகளிலும்; 12 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். 250 000 குறைவானவர்களே யாழ் மாவட்டத்தில் வாக்களிக்க கூடியவர்களாக உள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் 6 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 253 வேட்பாளர்கள் 16 அரசியல் கட்சிகளிலும் 12 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2 66 976.

திருகோணமலை, மூதூர், சேருவல தொகுதிகளை உள்ளடக்கிய திருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 217 வேட்பாளர்கள்  17 அரசியல் கட்சிகளிலும், 14 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். 241,133 வாக்காளர்கள் அங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.

கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதிகளை உள்ளடக்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 360 வேட்பாளர்கள்  17 அரசியல் கட்சிகளிலும் 28 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். மட்டக்களப்பு  மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் எண்ணிக்கை 333 644 ஆகும். 

அம்பாறை மாவட்டத்தில் 7 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 660 வேட்பாளர்கள் 18 அரசியல் கட்சிகளிலும் 48 சுயேச்சைக் குழுக்களிலும் போட்டியிடுகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 420 835.

இலங்கையிலேயே அதிகூடுதலான பிரிவுகள் போட்டியிடுகின்ற மாவட்டமாக அம்பாறையும் அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பும் உள்ளது.

யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தெரிவு செய்யப்படும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லீம் மக்கள் துரத்தியடிக்கப்பட்டதால் இழக்கப்பட்ட அவர்களுடைய அரசியல் பிரதிநிதித்துவம் இத்தடவை அவர்களுக்கு கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

போட்டி:

வடக்கு கிழக்கில் இதுவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருந்த ஏகபிரதிநித்ததுவம் இத்தேர்தலில் அடிபட்டுப் போய்விடும் நிலையே உள்ளது. இருந்தாலும் வடக்கு கிழக்கில் கூடுதலான ஆசனங்களைப் பெறும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு 8 முதல் 10 வரையிலான ஆசனங்களை வடக்கு கிழக்கில் தக்க வைக்கும் என எதிர்வு கூறல்கள் உள்ளது. தமிழ் தேசியத்திற்கான முன்னணி ஆர் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும் சவாலாக அமையும். தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தாங்கள் வெளியேறுவதற்கு காரணமாக இருந்த ஆர் சம்பந்தனை திருகோணமலையில் எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி தீவிரமாக உள்ளது. இதற்கு புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள புலி ஆதரவு ஊடகங்கள் பெரும் ஆதரவை வழங்கி உள்ளன. புலம்பெயர் விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளத்தால் உருவாக்கப்பட்ட புதிய துரோகியாக ஆர் சம்பந்தன் உள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர் குரலை தாயக மக்கள் செவிமடுக்கின்றார்களா என்பதும் இத்தேர்தலில் தெரிந்துவிடும்.