தென் அமெரிக்காவில் உள்ள சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது.
தென் அமெரிக்க நாடான சிலியில் நேற்று முன்தினம் 8.8 ரிச்டர் அளவுக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. தலைநகர் சான்டியாகோ மற்றும் கன்செப்ஷன் உள்ளிட்ட நகரங்களில் பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாயின. இதில் ஏராளமானோர் பலியாகினர்.
நில நடுக்கம் ரிச்டர் அளவுக்கு 8.8 புள்ளிகளாக இருந்தன. இதன் மையம் கடலுக்கு அருகே இருந்தது. எனவே பசிபிக் கடல் பகுதிகளில் சுனாமி தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. சிலி நாட்டிலும் அதன் அருகே உள்ள குட்டி தீவுகளிலும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
எதிர்பார்த்தது போலவே சிலியில் இருந்து 700 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ராபின்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கியது. 7 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழுந்து வந்து இந்தத் தீவை தாக்கின. இதில் சிக்கி 5 பேர் பலியானார்கள். 13 பேரை காணவில்லை.
சிலி நாட்டில் உள்ள துறைமுக நகரமான டால் குனாவிலும் சுனாமி தாக்கியது. துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கப்பல்கள், மற்றும் படகுகள் ராட்சத அலையில் சிக்கி சேதமடைந்தன. ராபின்சன் குரூஸ் தீவில் சுனாமி தாக்கிவிட்டு, அதைவும் தாண்டி வேகமாகச் சென்றது.
எனவே அமெரிக்காவின் ஹவாய் தீவூ, ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யாவின் கிழக்கு பகுதி உட்பட பசிபிக் கடல் பகுதியில் உள்ள 53 நாடுகளில் சுனாமி தாக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. அனைத்து நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. கடலோர பகுதி மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
பூகம்பம் ஏற்பட்டு 15 மணி நேரம் கழித்து, ஹவாய் தீவில் சுனாமி தாக்கியது. 10 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்து கரையைத் தாண்டி வந்தன. ஆனால் முன்னெச்சரிக்கையாக மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால் சேதம் எதுவூம் ஏற்படவில்லை. பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான போலினிசா தீவிலும் சுனாமி தாக்கியது.