09

09

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதானோர்: விடுதலை தொடர்பில் ஆராய 10 பேர் கொண்ட குழு நியமனம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வது தொடர்பில் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக சட்ட மா அதிபர் திணைக்களம் பத்துப் பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளதாக நீதி, சட்ட மறு சீரமைப்பு பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி தெரிவித்தார்.

மேற்படி குழு தடுத்துவைக்கப்பட்டுள்ள 631 பேர் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நிரபராதிகளை விடுதலை செய்யவும் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுக்குமென பிரதியமைச்சர் தெரிவித்தார். தேசிய இணக்கச் சபை தின நிகழ்வு நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்

கட்சிக்குள் குவியும் பணங்களை ரணில் கொள்ளையடிக்கிறார் – ஐ.தே.க. சார்பில் வேட்பாளர் இன்றேல் கடும் நடவடிக்கை – ஜோன்ஸ்டன் எம். பி

jon.jpgஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த முறை தேர்தலின் போது 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. 09 மில்லியன் டொலர்களே தேர்தலுக்கு செலவானது. மிகுதி பணத்துக்கு என்ன நடந்தது? என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோர்ன்ஸ்டன் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார். எமது கட்சிக்கு மூடை மூடையாக பில்லியன்களில் பணம் வந்து குவிகின்றது. கட்சித் தலைவர் அப் பணத்தை நன்கு கொள்ளயடிக்கிறார். ‘ஐக்கிய தேசியக்கட்சி’ எனும் பெயரில் அங்கு ரணில் விக்கிரமசிங்க கொம்பனிதான் நடக்கிறதெனவும் ஜோன்ஸ்டன் எம். பி. நேற்றுக் கூறினார். நிப்பொன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மக்களைக் கூட சந்தித்து பேச நேரமில்லாத ஐ.தே.க. தலைவர் அறைக் குள்ளிருந்து எவ்வாறு பணத்தை சுருட்டலாம் என்பது பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருப்பார். அவருக்கு கட்சி பற்றியோ ஆதரவாளர்கள் பற்றியோ சிறிதும் கவலையில்லை.

பல்வேறு வழிகளிலும் கட்சிக்கு கிடைக்கும் பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தனது தலைவர் பதவியை இழக்க விருப்பமில்லாமல் கட்சிக்கு வெளியிலிருந்து ஒருவரை தேர்தல் வேட்பாளராக நிறுத்தியுள்ளாரென்றும் ஜோன்ஸ்டன் எம்.பி. தெரிவித்தார்.

அரசியல் அனுபவமில்லாத ஜெனரல் சரத் பொன்சேகா எப்படி பொது மக்களுக்காக சேவையாற்ற முடியும். எவ்வாறு அவரை நம்பி முழு நாட்டையும் ஒப்படைக்க முடியும். எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்னதாக ஐ.தே.க. கட்சிக்குள்ளிருந்து ஒரு பொது வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டும் இல்லையேல் நாம் கட்சித் தலைமைத் துவத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை யெடுக்க நேரிடுமெனவும் அவர் கூறினார். ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எம். பி. மேலும் கூறுகையில்,

ஜனாதிபதித் தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணி சார்பாக பொது வேட்பாளராக ஜெனரலை நியமிக்க ஐ.தே.க. சார்பில் நடத்தப்பட்ட செயற்குழுக் கூட்டத்தில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த வர்களில் நானும் ஒருவன். நான் ஊட கங்களில் அது குறித்து விளக்கமளித்த தையடுத்து அதனை நிறுத்துமாறும் கூறி எனது அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் கையடக்கத் தொலைபேசிக்கும் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வந்தன. தான் அதற்கு அஞ்சவில்லை. கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் எனக் குண்டு. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கி ரமசிங்க ஒரு தலைவருக்குரிய இலட் சணங்களுடன் நடந்து கொள்கின்றார் இல்லை. எஸ். பி. திஸாநாயக்க போன்ற திறமையானவர்கள் கட்சியை விட்டு செல்லக் காரணம் இவரது நடத்தையே. திறமையானவர்கள் கட்சியை விட்டுப் போவது குறித்து தலைவர் ரணிலுக்கு சிறிதும் கவலையில்லை. செயற்குழுக் கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தையடுத்தே இவர் கட்சியை விட்டு விலகியிருப்பதாக ஒரு ஊடகத்தில் அவர் சிரித்துக் கொண்டு பொய் கூறுகிறார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் கட்சியை எதிர்த்துப் போட்டியிட தைரியமில்லாவிடில் முதுகெலும்புடைய எஸ். பி., சஜித் பிரேமதாச போன்றவர்களை வேட்பாளர்களாக நியமித்திருக்க வேண்டும். எமது கட்சி ஆதரவற்றிருந்த சமயத்தில் எதிர்க்கட்சியிலிருந்து ஏழெட்டு பாராளு மன்ற உறுப்பினர்களுடன் ஐ.தே.கவுக்கு வந்து அதனை கட்டியெழுப்ப உதவியவர் எஸ்.பி. அந்த நன்றியை ரணில் மறந்து விட்டார். திறமை மிக்கவர்கள் போன பின்னர் தொடர்ந்தும் கட்சியில் தானே தலைவராகவிருக்க வேண்டுமென்பதே அவரது விருப்பம். இவ்வாறான குறுகிய உள்நோக்கம் கொண்டவர்கள் இருக்கும் கட்சி எவ்வாறு முன்னேற முடியும். சந்திரிகா ஐ.தே.க.வுக்கு எதிராக செய்த மோசடிகளை மறந்து விட்டு இன்று சந்திரிகாவுடனும் மங்களவுடனும் இணைந்து இணையத்தளத்தில் எமக்கு சேறு பூசுகிறார். இந்தப் பயணம் நீடிக்காது.

ஐ.தே.க. வின் கொள்கைகளில் முரண் பட்டிருக்கும் எனக்கு இன்னமும் கட்சி யிலிருந்து விலகுமாறு கோரி கடிதம் தரா மலிருப்பது அதிசயமாகவுள்ளது. நானும் கட்சியை விட்டு விலகினால் அதை விட பெரிய சந்தோஷம் எமது தலைவருக்கு வெறெதுவுமாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து மன்னாருக்கு இன்று முதல் இ.போ.ச பஸ் சேவை

buss.jpgகொழும் பிலிருந்து மன்னாருக்கான இ.போ.ச பஸ் சேவை இன்று புதன் கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இ.போ.ச. உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதலில் 10 பஸ்கள் இச் சேவையில் ஈடுபடுத்தப்படுமெனவும் இதன் நேர அட்டவணை இன்று அறிவிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை காலமும் மன்னாருக்கு  செல்லும் பயணிகள் மதவாச்சி  சோதனை நிலையத்தில் இறங்கி வேறு பஸ்களில் மன்னாருக்குச் சென்றனர். அதேபோல மன்னார் மக்களும் அங்கிருந்து ஒரு பஸ்ஸில் வந்து மதவாச்சியில் இறங்கி வேறு பஸ்களில் பயணம் செய்தனர். மதவாச்சி சோதனை நிலையம் ஊடக வாகனங்கள் வடக்கே சென்றுவர பாதுகாப்பு அமைச்சு கடந்த சனிக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளது.

அகதி முகாம்களை பார்வையிட்டார் பிளேக்

இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களுக்கு சென்று பார்வையிட்டதுடன், அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக திருப்தி தெரிவித்திருக்கிறார்.

மெனிக் பாமிலுள்ள நிவாரண நிலையத்திற்குச் சென்று பார்வையிட்ட பின்பே தெற்காசிய மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர் பிளேக், மாணவர்களுக்கு நிலக் கண்ணி வெடி அபாயம் தொடர்பாக அறிவூட்டல் கல்வி வழங்கப்படுவதையிட்டும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

மெனிக்பாமில் தங்கியிருப்போர் தொகை தற்போது 94 ஆயிரமாக குறைவடைந்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களை சந்தித்தபோது அவர்களின் நிலைமைகள் தொடர்பாக பிளேக் கேட்டறிந்தார். உணவு, மருத்துவசேவை, சுகாதார வசதிகள் மற்றும் தற்போது நடமாட்ட சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக இடம்பெயர்ந்த மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். ரொபேர்ட் பிளேக்கை மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவும் வவுனியா அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸும் வரவேற்றனர். பிளேக்குடன் அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பட்டனீஸும் உடன் சென்றிருந்தார்.

நடந்தது என்ன? சூரிச் மாநாடும் எழுந்த விமர்சனங்களும்! : மீட்சி

Zurich_TamilParys_Conference(19 -22 தொடக்கம் நவம்பர் 2009ல் தமிழ் தகவல் நடுவத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு சூரிச்சில் நடந்து முடிந்த இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் பங்குபற்றிய மாநாட்டைப் பற்றி ஊடகங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன. இதன் உண்மை நிலையை பலரும் அறிந்து கொள்வதற்காக ‘மீட்சி’யின் சார்பில சில கேள்விகளை தமிழ் தகவல் நடுவத்தின் நிறைவேற்று செயலரான திரு வரதகுமார் அவர்கள் முன் வைத்தோம் அவர் கொடுத்த பதில்களை கீழே காணலாம்.)

1.சமீபத்தில் இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் பங்கு பற்றிய கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதனை தமிழ் தகவல் நடுவம் ஒழுங்கு செய்திருந்தது என ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. இது உண்மையானால் இதை கூட்டியதன் நோக்கம் என்ன?

Zurich_TamilPartys_Conferenceஏறத்தாழ கடந்த 30 ஆண்டு காலமாக நடைபெற்ற போர் அனைத்து சமூகத்தை சார்ந்தவர்களையுமே பாழடித்து சிதறடித்து விட்டது. அனைத்து மக்களும் பவீனப்படுத்தப்பட்டு தமது உரிமைகளை இழந்து, சலுகைகளை நம்பி வாழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இந்த கொடூரமான போரினால் எந்த இனமுமே பயனடையவில்லை!. யாருமே வெற்றி பெறவில்லை!. மிஞ்சியது எல்லாம், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வீழ்ச்சியும் உயிர் உடமை இழப்புகளும் அவலங்களும் ஏக்கங்களுமே!

யுத்தம் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் குறிப்பாக வடக்கு-கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழர்களும் தமிழ்பேசும் சிறுபான்மை சமூகங்கள் என்ற ரீதியில் பல்வேறு பிரச்சினைகள் இன்னல்கள் அழிவுகள் ஆகியவற்றுக்குள் அகப்பட்டு அவதியுற்று வாழ்கிறார்கள். தமது தனித்துவங்களை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள். பலர் அன்றாட வாழ்விற்கே அல்லாடிக்கொண்டு வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தங்கள் எதிர்காலம் இலங்கையில் எப்படி இருக்கும் என்ற ஏக்கத்திலும், எதிர்காலத்தில் நம்பிக்கையின்மையிலும் வாழ்கிறார்கள். போர் முடிந்தாலும், ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும், ஜனநாயகம், மனித உரிமைகள், வன்முறையற்ற வாழ்வு, அடிப்படை அரசியல் அபிலாசைகள் ஆகியவை இன்னமும் தொடர்ந்து எட்டாக் கனிகள் ஆகிவிடுமோ என தமிழ்பேசும் மக்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில்த்தான் நாம் கட்சி, கொள்கை பேதங்களுக்கு அப்பால் தமிழ் பேசும் மக்களின் அரசில் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அனைவரையும் அழைத்திருந்தோம்.

இப்பொழுது சிறீலங்கா ஒரு முக்கியமான காலகட்டத்தில் வந்து நிற்கிறது சிறுபான்மையினங்கள் அலட்சியப்படுத்தப் பட்டதால் நாட்டை விட்டு ஓடியும், இடம் பெயர்ந்தும், முகாம்களில் அல்லலுற்றும், சிறைச்சாலைகளில் வாடியும் வாழ வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டடிருப்பதை நாளாந்தம் நாம் காண்கிறோம். தொடர்ந்தும் பெரும்பான்மை அரசு சிறுபான்மை சமூகங்கள் மீது தனது மேலாதிக்கத்தையும் பார பட்சத்தையும் மேற்கொண்டு வருகிறது.

மேலும் சிறுபான்மைக் கட்சிகளிடையே உள்ள சிறு வேற்றுமைகளைத் தூண்டியும், உபயோகித்தும் அவர்களை பிரித்தும், சிறுபான்மையினரை இரண்டாந்தரப் பிரஜைகளாக தொடர்ந்து வைத்திருக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருகிறது. இவற்றிலிருந்து மீள்வதற்கும் மக்களின் விடிவிற்காகவும் சிறுபான்மையினத்தின் வாழ்வாதார விருப்புகள், மொழி, மதம், அரசியல் சம்பந்தமான உரிமைகள் ஆகியவற்றை அடைவதற்கும் ஒரு வன்முறையற்ற புது அணுகுமுறை தேவை என்பதனையும் அதற்கேற்ற சந்தர்ப்பமும் இதுவே எனவும் உணர்ந்தோம்

வடக்கு- கிழக்கு வாழ் தமிழ், முஸ்லீம் மக்களும், மலையகத் தமிழர்களும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள், இன்னல்கள் ஆகியவற்றிக்கான நிவர்த்திகள், அவர்களின் உரிமைகள், அபிலாசைகள் சம்பந்தமான அரசியல் நடவடிக்கைகளை எப்படி ஒரு பொது வேலைத்திட்டத்துடனும், அணுகு முறையுடனும், முன்னெடுக்கலாம் என்பவை பற்றி, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் ஒரு சுயாதீனமானதும், சுமுகமானதுமான சுற்றாடலில் கலந்து உரையாடுவதற்கும், வேறுபாடுகளை விலக்கி சில ஒருமைப்பாடுகளையும் இணக்கங்களையும் எட்டவும், எதிர்காலத்தில் ஒரு பொது வேலைத்திட்டத்தையும் அணுகு முறையையும் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை மனம் திறந்து ஆராய்வதற்கும், நீண்டகால நோக்கில் இனங்களுக்கிடையான நல்இணக்கத்திற்கும் அரசியல் சமூகம் சம்பந்தமான நம்பிக்கையான கட்டமைப்புக்களை மேலும் மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை எய்தவும் இந்த மாநாடு வழிசமைக்கும் என்ற நோக்கங்களுடன் தான் இம்மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டது.

மேலும் எதுவித அரசியல் அழுத்தங்களும் இல்லாதிருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தாமாநாடு இலங்கைக்கு வெளியே ஒழுங்கமைக்கப்பட்டது. இங்கு வருகை தந்திருந்த அனைவரும் தத்தம் கருத்துக்களை சுயாதீனமாகவும், பரஸ்பர புரிந்துணர்வோடு தெரிவிக்கவும், பரிமாறவும் இந்நிகழ்வு வாய்ப்பளித்தது. இந்த நிகழ்வை ஒழுங்கு படுத்துவதற்கு பல ஆய்வுகளை முன்னெடுத்து TICயில் காலத்துக்கு காலம் நடைபெற்று வரும் சமூக ஆலோசனைக் கூட்டங்கள் மூலம் வெளிவரும் தகுந்த கருத்துக்களை உள்வாங்கி, எம்முடன் தொடர்பில் உள்ள இலங்கையிலும் வெளியேயும் வாழும் சமூக அரசியல் செயலாளர்களின் (activists) ஆலோசனைகள் பெற்று, இதில் பங்குபற்றுவோரை தொடர்பு கொண்டு இதன் நோக்கங்களை தெளிவுபடுத்தி, அவர்களின் அனுமதியை பெற ஒழுங்கமைப்புக்கான வெவ்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண, பல மாதங்கள் ஆகிவிட்டன.

முதலில் இதனை லண்டனில்தான் நடாத்துவதாக இருந்தோம். ஆனால் சில நடைமுறைப் பிரச்சனைகளால் சுவிற்சிலாந்துக்கு மாற்றவேண்டி வந்தது. சம்பந்தப்பட்ட சுவிஸ் அதிகாரிகளின் உறுதுணையுடன் இதனை ஒழுங்குபடுத்த முடிந்தது.

2.தமிழ் தகவல் நடுவம் தனியாக இதை சாதித்திருக்க முடியாது எனவும், இதன் பின்னணியில் வேறு சக்திகள் இருக்கக் கூடும் எனவும் ஊகங்கள் எழுந்துள்ளன? இதன் உண்மை நிலை என்ன?

கண்டிப்பாக இந்நிகழ்வை தமிழ் தகவல் நடுவம் தனியாக நின்று சாதித்திருக்க முடியாது. இதன் பின்னணியில் நின்ற சக்திகள் வேறு யாரும் இல்லை. நல்நோக்குடனும், நல்ல சிந்தனைகளுடனும், மக்களை மனதார நேசிக்கும் தனிநபர்களே கூடிய பங்காளிகளாவார்கள். தம்மை இனங்காட்டாது நாம் எடுத்த முயற்சியினைத் தரளவிடாது முன்னெடுக்க ஊக்குவித்த சுயநலமற்ற இத்தனிமனிதர்கள் இருக்கும் வரை மேலும் பல காரியங்களை சாதிக்கலாம் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

இவர்களைவிட International Working Group (IWG) என்ற அமைப்பும், Essex பல்கலைக் கழகத்தின் மனித உரிமைகள் மையத்தின் Initiative on Conflict Prevention through Quietயைச் சேர்ந்த சிறப்பாய்வு அறிஞர்களும், ஆய்வாளர்களும் ஆவர்.

இக் கலந்துரையாடல் இலங்கைவாழ் மக்களது, முக்கியமாக தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை ஜனநாயக முறையில் வென்றெடுக்க வழியமைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இதனை நடாத்துவதற்கான பெரும்பாலான செலவினை சுவிஸ் அரசாங்கமும், IWGயும், Essex பல்கலைக்கழகத்தின் மனித உரிமை மையமும் பகிர்ந்து கொண்டன. மேலதிக TIC பிரதிநிதிகளின் போக்குவரத்து செலவுகள் இல்கையிலிருந்து வருகை தந்த சிலரது தொலைபேசி, உடுப்புச் சலவை செலவுகள் போன்றவற்றிக்கு தனியார் பண உதவிகளை நாடினோம்.

இதைவிட இங்கு வருகை தந்ந சில பிரதிநிதிகள் தம் சொந்தச் செலவிலேயே பயணச் சீட்டுகளை வாங்கி வந்தார்கள் என்பதும் தங்குவதற்கான செலவினையும் தாங்களே பொறுப்பெடுத்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும் இக்கலந்துரையாடல் குறிப்பிட்டபடி நல்ல முறையில் சிறப்பாய்வு அறிஞர்களது உதவியுடன் திறமையுடன் நடந்ததால் இம் முயற்சியை மேலெடுத்துச் செல்லத் தாம் தயாராக உள்ளோம் என்று சுவிஸ் அரசாங்கம் கூறியுள்ளதென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

3.இக் கூட்டத்தில் என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டன? அவற்றிலிருந்து எடுக்கப்பட முடிவுகள் அல்லது தீர்மானங்கள் யாவை?

இலங்கையில் வாழும் தமிழ்பேசும் மக்களின் எதிர்காலம் பற்றி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஒரு கவலையான உணர்வு நிலவியதின் பின்னணியிலேயே இம்மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டது.

ஒரு திறந்த நோக்கு, பரஸ்பர மரியாதை, ஆக்கபூர்வமான விவாதம் எனும் அடிப்படையிலேயே இக் கூட்டம் நடைபெற்றது. பங்குபெற்றோர் யாவரும் ஒரு நியாயமான, நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றிக்காக ஒற்றுமையுடனும், ஒன்றுபட்ட நோக்குடனும் உழைப்பது என உறுதி பூண்டனர். தம்மிடையே பேசி முக்கியமான விளக்கங்களைப் பெற்று ஒரு பொது நோக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். அத்துடன் தமிழ் பேசும் மக்கள் ஒரு சமாதானமான செழிப்பான சமூகமாக உருவாவதற்குத் தேவையான அவர்களது உரிமைகளை பெறவதற்காகத் தொடர்ந்தும் இப்டியான கலந்துரையாடலில் பங்கெடுத்துக் கொள்வதெனத் தீர்மானம் எடுத்துக் கொண்டனர்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நீண்டகால, இடைக்கால, குறுகியகால ஆதங்கங்கள் பற்றிய தமது கவலைகளை பகிர்ந்து கொண்டனர். இதில் எல்லோருக்கும் ஏற்புடையதான யாவரையும் உள்ளடக்கிய ஒரு அரசியல் தீர்வினை உருவாக்குதல் பற்றியும் ஆராயப்பட்டது. அத்துடன் தற்போதுள்ள பிரச்சினைகளான இடம் பெயர்ந்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் மீள் குடியேற்றம், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், காணாமல் போயுள்ளோர், இராணுவ மயமாக்கல், சட்டம் ஒழுங்கைப் பேணுதல் ஆகியவை பற்றியும் கலந்துடையாடப்பட்டது. இடம்பெயர்ந்த மக்கள் மாண்புடனும், பாதுகாப்பாகவும் தமது வசிப்பிடங்களுக்கு சென்று வாழ ஏதுவாக அவர்களுக்கு தேவையான வீட்டுவசதிகள், வாழ்வாதார உதவிகள் ஆகியவற்றை அவசரமாக செய்து கொடுக்க வேண்டிய அவசியத்தையும் அவை ஒரு சுயாதீனமானதும் அதிகாரம் உள்ளதுமான ஒரு சிவில் அதிகாரத்தின் மேற்பார்வையில் நடைபெறவேண்டிய தேவையையும் ஆராய்ந்தனர்.

மாநாட்டின் முடிவில் பங்கு பற்றிய அரசியல் கட்சிகள் யாவும் கீழ்க்கண்ட இணை அறிக்கையை வெளியிட்டன.

Zurich_TamilParys_Conferenceஇணை அறிக்கை:
தமிழ்பேசும் மக்களின் அரசியல் கட்சிகளை பிரதிநிதிப்படுத்தும் நாம் ஏகோபித்த எமது கருத்துக்களை பரிமாறிக் கொள்ள வழிசெய்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இக் கூட்டத்தை ஆமோதித்து, சகல தமிழ்மக்களின் பிரதிநிதிகளிடையே ஒரு பொது மேடையை உருவாக்குவதற்கு எமது ஆதரவை உறுதி செய்கிறோம்.

தமிழர், முஸ்லீம்கள், இந்திய வம்சாவழித் தமிழர்கள் ஆகிய மூன்று பிரத்தியேகப் பிரிவினரையும் உள்ளடக்கியதே தமிழ்பேசும் மக்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

வேறுபட்டதும் வித்தியாசமானதுமான அடையாளங்களும், அக்கறைகளும், நிலைப்பாடுகளும் வெவ்வேறு கட்சிகளுக்கிடையே உண்டு என்பதை மதிக்கிறோம்.

தமிழ்பேசும் மக்களிடையே ஒற்றுமையும் ஒருமித்த கருத்தும் தேவை என்பதை ஏற்றுக்கொண்டுள்ள வேளையில் சிலபிரச்சனைகளும் அவற்றை அணுகும் முறைகளிலும் வேறுபாடு உள்ளதை என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

ஒரு நீதியான, நிரந்தரமான, அரசியல் தீர்வுக்காக சமூகத்தின் சகல பகுதியினரையும் உள்ளடக்கிய ஒரு மாண்புள்ள மதிப்புள்ள சமாதானமான செயற்பாடுகளை முன்னெடுப்போம் என உறுதி செய்கிறோம்.

ஏற்றுக்கொண்டு எமது கலந்துரையாடலை தொடர்வோம் என் உறுதி செய்யும் பெயர்கள்.

திரு வீரசிங்கம் ஆனந்தசங்கரி – தமிழர் ஜக்கிய விடுதலை முன்னணி
திரு பெரியசாமி சந்திரசேகரன் -மலையக மக்கள் முன்னணி
திரு டக்ளஸ் தேவானந்தா- ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி
திரு அப்துல் றாஃப் ஹக்கீம் -சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
திரு முகமது ஹிஸ்புள்ளா – அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்
திரு மனோ கணேசன் – ஜனநாயக மக்கள் முன்னணி
திரு குலசேகரம் மகேந்திரன் – தமிழீழ விடுதலை இயக்கம்
திரு சிவசுப்பிரமணியம் நந்தகுமார் -ஈழப் புரட்சி அமைப்பு
திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் – அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
திரு சுரேஸ் பிரேமச்சந்திரன்- ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
திரு R சம்பந்தன் – தமிழர் தேசியக் கூட்டமைப்பு
திரு சிவநேசதரை சந்திர காந்தன் – தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
திரு மாவை S சேனாதிராசா – இலங்கைத் தமிழரசுக் கட்சி
திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் – தமிழீழ விடுதலைக் கழகம்
திரு திருநாவுக்கரசு சிறீதரன் – பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி.
திரு ஆறுமுகம் தொண்டமான் -இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்.

4.இக்கூட்டத்தைப்பற்றி முன் கூட்டியே எவ்வித அறிவித்தல் கொடுக்காமலும் கூட்டம் நடைபெறும்போது ஊடகவியலாளர்க்கு அனுமதி மறுத்ததிற்கும் காரணம் என்ன?இதனால் பல சந்தேகங்கள் மக்களிடையே எழுந்துள்ளது பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்த மாநாட்டை நாம் ஒழுங்கு செய்வதில் சில நடைமுறைச் சங்கடங்கள் ஏற்ப்பட்டன. அதன் காரணமாகவே நாம் ஊடகங்களின் பங்களிப்பை கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. பங்குபற்றியோரின் பாதுகாப்பு பற்றிய சுவிஸ் அரசாங்கத்தின கணிப்புக்களையும் கவலைகளையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டியிருந்தது. அத்துடன் இம்மாநாடு ஊடகங்களினால் ஒரு அரசியல் மேடையாக்கப் படுவதையும் நாம் விரும்பவில்லை.

ஆனால் ஊடகங்களை முற்று முழுதாக தடைசெய்வது எமது நோக்கமாக இருக்கவில்லை. நாம் பங்கு பற்றியோரினதும் சுவிஸ் அரசாங்கத்தினதும் பாதுகாப்பு பற்றிய கவலையையும் ஊடகங்களின் அனுமதித் தேவைகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டி இருந்தது.

இருப்பினும் ஒவ்வொரு கூட்ட முடிவிலும் கூட்டத்தில் பங்குபற்றியோர் ஊடகங்களையோ அன்றி சாதாரண மக்களையோ சந்திப்பதற்கு எவ்வித தடையும் இருக்கவில்லை. தினமும் அவர்களை தமிழ் உடகங்கள் உட்பட பலர் வந்து சந்தித்தனர். நண்பர்களும் தமிழ் மற்றும் சிறீலங்காவில் உள்ள ஊடகங்களும் கூட்டத்தில் பங்கு பற்றியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாளாந்த நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொண்டுள்னர் என்பதனை நாம் அறிவோம். அரசியல்வாதிகள் தம் ஆதரவாளர்களை சந்தித்து கூட்டத்தின் நோக்கம் பற்றி ஆராய்ந்தும் அங்கே பேசப்பட்ட விடயங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டனர். எனவே இம்மாநாடு ரகசியமாக நடாத்தப்பட்டது என்று கூறிவிட முடியாது.

தமிழர் தகவல் நடுவம் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக மக்களுக்காகவே உழைத்துள்ளது. மக்களுக்கு நாம் யார் என்பதும் என்ன செய்கிறோம் என்பதும் தெரியும். இது ஒரு திறந்த அமைப்பு. இங்கே ஒளிப்பதற்கு ஒன்றுமில்லை சிறீலங்காவில் வாழும் எல்லா சமூகத்தின் சகல கூறுகளுடனும் நாம் தொடர்பு வைத்துள்ளோம். இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்தமையே எமக்குள்ள மதிப்புக்கு சான்றாகும்.

நாம் பல்வேறு போராளிக் குழுக்களுக்கோ அல்லது உளவு நிறுவனங்களுக்கோ துணைபோவதாக அல்லது அவர்களின் முகமூடிகளாக (fronts) செயற்படுவதாக பழிசுமத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது எமக்கு ஒன்றும் புதிதன்று. இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்தில்லை. நாம் சாதாரண மக்களில் நம்பிக்கை உடையவர்கள். அவர்களே எங்களை மதிப்பீடு செய்யும் புத்திசாதுரியம் நிறைந்தவர்கள்.

இந்த நிகழ்வின் பின்னணியில் எதுவித உள் அரசியல் நோக்கங்களும் இருக்கவில்லை. எந்தவித அரசியல் சக்திகளும் இல்லை. புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்புக்களும் இருக்கவில்லை. உங்களுக்கு எம்மால் உத்தியோக பூர்வமாக தெரிவிக்கப்பட்ட, தெளிவாக்கப் பட்டதிற்கு அப்பால் வேறு எந்த நோக்கங்களோ நிகழ்ச்சி நிரல்களோ அமைப்புக்களோ இல்லை. நாம் பங்கு பற்றியோர்களது அரசியல் நிலைப்பாடுகளுக்கு மரியாதை அளித்தும், மிகுந்த பொறுப்புணர்வோடுமேதான் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து நடாத்தி முடித்துள்ளோம். இதனை காலம் சொல்லும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு தொடர்ந்தம் மிகுந்த பொறுப்புணர்வோடதான் நாம் நடந்து கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

5.இக்கலந்துரையாடலில் பங்கு பற்றியோர் யாவரும் இலங்கையில் இருந்தே வந்துள்னர். எனவே இக் கலந்துரையாடலை இலங்கையில் நடத்தாது வெளிநாடு ஒன்றில் நடத்த வேண்டியதன் தேவை என்ன?

இம்மாநாட்டை இலங்கைக்கு வெளியே நடத்தியமைக்கு முக்கியகாரணம் இதில் பங்கு கொண்டோர் யாவருக்கும் ஒரு நட்பான சூழலை உண்டாக்குவதேயாகும். அவர்கள் முகம் கொடுக்கும் நாளாந்தப் பிரச்சினைகளிலிருந்து அவர்களை அந்நியப்படுத்த வேண்டும் என விரும்பினோம். ஒரு அமைதியான சூழலில் ஓய்வாக இருந்து மனம் திறந்து அளவளாவி ஒரு ஆரோக்கியமான கலந்தரையாடலில் பங்கு பெறவேண்டும் என விரும்பினோம்.

மாநாட்டில் பங்கு பற்றிய யாவரும் ஒரே இடத்தில் தங்கி, ஒன்றாக பழகி, ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், வெளியாருடைய குறிக்கீட்டை தவிர்ப்பதற்குமே சூரிச்சை தேர்ந்தெடுத்தோம். இன்றய சூழ்நிலையில் இப்படியானதொரு மாநாட்டை இலங்கையில் நடாத்துவது இயலாததொன்று.

வெளிநாட்டில் இம்மாநாட்டை ஏற்பாடு செய்தது நாம் அழைத்திருந்த விடயவிற்பன்னர்களின் (subject speacialists)உதவியை பெறவதற்கு இலகுவாக இருந்தது. வெளிநாட்டவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு விசா ஒழுங்கு செய்வதில் தடைகள் வர சாத்தியங்கள் இருந்தது.

6.அடுத்த நடவடிக்கையாக என்ன செய்யப் போகிறீர்கள்?

இத்தகைய நிகழ்வு இத்துடன் முடிந்துபோகும் என நான் எண்ணவில்லை. இந்த நிகழ்வினால் எய்தப்படும் பலன்களைப் பொறுத்து இது போன்ற ஆக்க பூர்வமான நிகழ்வுகள் இலங்கைவாழ் மக்களின் நலன்கருதி குறிப்பாக தமிழ்பேசும் மக்களின் நலன்கருதி அங்கு மேற்கொள்ளப்படும் அரசியல் முன்னெடுப்புகள் சமூகநிலைமைகளின் அடிப்படையில் தொடர்ந்தும் உங்கள் எல்லோரது பங்களிப்புடனும் தொடர்ந்தும் நடைபெற வேண்டும் என்பதே எமது விருப்பு. இதற்கு எல்லோர் உதவியும் எமக்கு தேவை.

கடந்த பல வருடங்களாக வன்முறை மேலோங்கி சமூக அமைப்புகளும் அரசியல் கட்டுமானங்களும் சிதைந்து சீரழிந்து விட்டன. சமூக அமைப்புக்கள் தமது வல்லமைகளை இழந்து அர்த்தமற்றவைகளாகி விட்டன. அவைகள் மக்களின் வாழ்வில் பயனற்றவையாக ஆக்கப்பட்டு விட்டன. ஜனநாயகமும் மனித உரிமைகளும் நசுக்கப்பட்டு விட்டன. தமிழ்பேசும் மக்களை அந்நியப்படுத்தி தான்தோன்றித் தனமாக மேற்கொள்ளப்படும் முறைமையை மாற்றி மக்களை மையப்படுத்தும் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டிய நிலையில் நாம் யாவரும் உள்ளோம்.

எனது மனதின் வேதனை ஒன்றை இங்கு நான் கூறியாக வேண்டும். இது எனது வேதனை மட்டுமல்ல இலங்கை வாழ்மக்களின் பால் மானசீகமாகவே அக்கறை கொண்டவர்களின் வேதனையும் தான். கடந்த 30 ஆண்டுகளின் அவலங்களுக்கும் தேக்கத்திற்கும் பின்னரும் எந்த அரசியல் நடவடிக்கைகள் இந்த இழிநிலைக்கு எமது நாட்டை இட்டுச் சென்றனவோ, அதே பாதையில்த்தான் இப்போதும் செல்வதுபோல் தெரிகிறது. அதே ஓட்டை விழுந்த கப்பலில்தான் அரசியல் பயணங்கள் தொடர்வதுபோல் தெரிகிறது. அப்படியானால் எம் இனிய மக்களுக்கு என்றுமே விமோசனம் இல்லையா? என கேட்கத் தோன்றுகிறது? இந்த நிலைமையை இந்த நிகழ்ச்சி ஓரளவாவது மாற்றியமைக்க வேண்டும். வாயளவில் அல்லாது செயலளவில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் வேண்டும். ஒரு புதிய பரிணாமம், ஒரு புதிய பாதை திறக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும். போர் முடிவுற்ற சூழ்நிலையில் நாம் சரியாகப் பயணிக்க வேண்டும் என்பதே இலங்கை மக்கள் அனைவரது சுபீட்சத்திலும் அக்கறை கொண்டவர்களின் ஆதங்கமாகும்.

Zurich_TamilParys_Conferenceஒரு அரங்கிலேயே தமிழ்பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து மக்கள் நலன்பற்றிக் கலந்துரையாடியதும், பொதுத்திட்டங்களை முன்னெடுப்பது சம்பந்தமான சாத்தியக்கூறுகள் பற்றி பரிசீலித்ததுமான இந்நிகழ்ச்சி பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ளது. தமிழ் பேசும் மக்களது கண்கள் மட்டுமல்ல மற்றய அரசியல் அமைப்புகள் உலக நாடுகள் ஆகியவற்றின் கண்களும் எம்பக்கம் திரும்பி இருக்கின்றன. இப்படியான பொறுப்புணர்வுடனும் சுமுகமாகவும் கண்ணியமாகவும் ஆக்பூர்வமான பேச்சுவார்ததைகளில் ஈடுபட்டு பொது வேலைத் திட்டங்களை அடைவதில் தான் எங்களது பெருமையும் திறமையும் மக்கள் மீதான கரிசனையும் தங்கியிருக்கின்றன.

இந்த நிகழ்வின் பலனாக தமிழ்பேசும் மக்களை மையப்படுத்திய அவர்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளை எய்துவதற்கான அவர்களின் அவலங்களை தீர்ப்பதற்கான அவர்களின் இன்னல்களை நிவர்த்தி செய்வதற்கான ஜனநாயகம், மனிதாபிமானம், மனித உரிமைகளை உள்ளடக்கிய ஒரு பொது வேலைத்திட்டம் பற்றிய எண்ணங்கள் சுமுகமாகவும், பெருந்தன்மையுடனும், பரஸ்பர பரிந்துணர்வுடனும் உருவாக்கப்பட்டதால், அது அனைத்து தமிழ்பேசும் மக்களாலும் மிகுந்த வரவேற்பைப் பெறும் என்பது திண்ணம்.

அதுவே அனைத்து தமிழ்பேசும் மக்களின் இன்றய எதிர்பார்ப்பும் ஆகும். இந்நிகழ்வு பயன் உள்ளதாக அமைவதால் இது இலங்கைவாழ் தமிழ்பேசும் மக்கள் புலம்பெயர்ந்த தமிழ் பேசும் மக்கள் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஆகியவற்றுக்கிடையேயான ஒரு பாலமாகவும் அமையும்.

நாம் அவசியமானதும் காத்திரமானதும் நிரந்தரமானதுமான நல்ல மாற்றங்களை மக்களிடையே கொண்டுவர விரும்பினோமானால் மக்களின் ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவதற்கான வழிகளை சமைப்பதுடன், அவர்களையும் சமூகம் சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபட வைத்தல் வேண்டும். அதற்கான சந்தர்ப்பமும் இடைவெளியும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கு அவர்களது ஜனநாயக உரிமைகளையும் அவர்களுக்கு வேண்டிய சாதனங்களையும் வழங்கி தங்களது விவகாரங்கள் சம்பந்தமான விடயங்கள் பற்றிய முடிவுகளில் அவர்கள் பங்கு பற்றவும், தங்கள் சமூகம் முன்னேற வேண்டும் என உழைப்போரை ஊக்குவிப்பதற்கும் ஜனநாயகம் பலப்படுத்தப்பட வேண்டும். எம்மினத்தின் தலைவர்கள் என்ற வகையில் இம்மாநாட்டுக்கு வருகை தந்தவர்களால் தான் இதனை செய்ய முடியும். இதனை அடைவதற்கான சாவி அவர்கள் கையில் தான் இருக்கிறது. அச்சாவியை பயன்படுத்துவதற்கான சகல உதவிகளை செய்ய உதவுவதே எமது அடுத்த நடவடிக்கையாக இருக்கும்.

7.கடைசியாக உங்களைப் பற்றியும் TICயைப் பற்றியும் வந்த விமர்சனங்களைப் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?

ஒரு மனிதனின் வளர்ச்சிக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் குறைகளை சுட்டிக்காட்டும் நண்பர்கள், சமூகப்பிரதிநிதிகள், தரமான ஊடகத்திறனாய்வு ஆகியவை அவசியமே. மாநாடு தொடங்குவதற்கு முன்பதான ஆரம்ப காலத்தில் ஊடகங்களில் சில எதிர்மறையான செய்திகள் வெளிவந்தன. அதற்கு காரணம் உண்டு. இம்மாநாட்டைப் பற்றித் தமக்கு அறிவித்தல் தந்திருக்க வேண்டும் என அவை நம்பின.

பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள எவரும் பிறருடைய கருத்துக்களுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால் வீணாண குற்றச்சாட்டு எது. தவறான தகவல்கள் எவை. வீண்வம்பு எது என பிரித்துணரக்கூடிய ஆற்றல் அவசியம். அத்துடன் ஒரு நிறுவனத்தை கோஸ்டி சேரா நிறுவனமாக நடாத்துவது கடினம். எப்போதும் சந்தேகங்களும் அழுத்தங்களும் இருந்து கொண்டே இருக்கும். இவற்றில் சிலருடைய ஆதங்கம் நியாயமானவையாக இருக்கலாம். மற்றயவை குறும்பு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படுபவை. உண்மையான அக்கறை கொண்டோரை கண்டுபிடித்து அவர்களுக்கு விளக்கத்தை அளிக்க வேண்டியது எமது கடமை. சாதாரண மக்கள் புத்திசாலிகள். எதை எடுப்பது எதை விடுவது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். எம் எல்லோரிலும் பார்க்க அவர்கள் அறிவு கூடியவர்கள்.

குற்றச்சாட்டுகளில் அநேகமானவை தாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதில் தெளிவில்லாத ‘கருத்துருவாக்கி’களினால்(opinion makers) மேற்கொள்ளப்படுபவை. அவர்கள் சொல்வதில் நல்லவற்றை எடுத்துக்கொண்டு மீதியை புறந்தள்ளலே சிறப்பான செயலாகும். இவை எல்லாம் நாம் நித்தமும் சந்திப்பவை. அத்துடன் இவை எம்மைத் தீங்கிலிருந்து தப்புவதற்கு உசார்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.

மீட்சி: நவம்பர் 2009, தமிழ் தகவல் நடுவத்தின் மாதாந்த வெளியீடு – இதழ் 13

சிறுபான்மையினர் பற்றிய சரத் பொன்சேகாவின் முரண்பாடான கருத்துக்கள் அரசியல் யாப்பை மீறுபவை – சட்டத்தரணி எம். எம். சுஹைர்

pr-can.jpg(இக்கட்டுரை எம். எம். சுஹைர் அவர்களால் எழுதப்பட்டதாகும். இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமாவார்.)

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக அறிவிப்பை விடுத்த தனது முதலாவது விரிவான ஊடகவியலாளர் மாநாட்டில், சரத் பொன்சேகா “எந்த வொரு சமூகமும் மித மிஞ்சிய அதிகாரங்களைக் கோரக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.  (டெய்லி மிரர் 30 நவம்பர் 2009 பிரதான தலைப்புச் செய்தி).

இவரின் இந்தக் கருத்தை வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கும் அதேபோல் முஸ்லிம் மக்களுக்கும் எதிரான ஒரு தாக்குதலாகவே சிறுபான்மையின மக்கள் கருதுகின்றனர்.

இந்தச் சமூகங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் பெரும்பான்மை சமூக அரசுகளிடமிருந்து மித மிஞ்சிய அதிகாரங்களைக் கோரி வருகின்றனர் என்ற தொனிப் பொருளிலேயே அல்லது அந்த மாதிரியான சிந்தனையின் பின்னணியிலேயே சரத் பொன்சேகா இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்றே கருதத் தோன்றுகின்றது.

இன உறவுகள் தொடர்பான மிகவும் பாரதூரமான உணர்வுபூர்வமான விடயத்தில் சரத் பொன்சேகாவின் இந்தக் கூற்று, அவர் இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களை மீண்டும் உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது.

இதில் 23 ஆம் திகதி செப்டம்பர் மாதம் 2008 இல் கனடாவின் “நெஷனல் போஸ்ட்” இதழுக்கு அவர் வழங்கிய பேட்டியில் “சிறுபான்மையினராக இருக்கின்றோம் என்ற காரணத்துக்காக மித மிஞ்சிய விடயங்களுக்கு அவர்கள் கோரிக்கை விடுக்கக் கூடாது” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். “இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். சிறுபான்மையினர் இங்கு விருந்தாளிகள் மட்டுமே” என்று அவர் ஏற்கனவே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக அவர் வருத்தம் தெரிவிப்பார் அல்லது மன்னிப்புக் கோருவார் என்ற எதிர்ப்பார்ப்பு,  இப்போது தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. பல அவதானிகளின் கருத்தும் இதுவாகவே உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா போட்டியிடும் அறிவிப்பை வழங்கிய அண்மைய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இனிப்பு பூசப்பட்ட வில்லைக்குள் பழைய மருந்தை அடைத்துக் கொடுக்கும் ஒரு முயற்சியாகவே இருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்கவுள்ள பெரும்பான்மையின வாக்குகளை திசை திருப்பலாம் என்ற நோக்கில், சரத் பொன்சேகா இந்த அதி உயர் பதவிக்கான போட்டியில் குதித்திருந்தாலும் கூட,  இந்த நாடு சிங்களவர்களுக்கே உரியது என்ற அவரது தொடர்ச்சியான கூற்று, இத்தகைய ஒரு தேர்தலில் முக்கியமானதாகக் கருதப்படும் சிறுபான்மையின வாக்குகளை அவருக்கு ஒருபோதும் வழங்கப்போவதில்லை.

ஏனெனில் சிறுபான்மையினர் தொடர்பாக பேசும்போது “விருந்தாளிகள்”, “சுற்றுலாப் பயணிகள்”, “கோரிக்கை”, “மிதமிஞ்சிய உரிமை” என்றெல்லாம் வார்த்தைப் பிரயோகங்களை அவர் அள்ளிக் கொட்டியிருப்பது வேண்டத்தகாத, விரும்பத்தகாத விடயமாகவே கருத்தப்படுகிறது.

சரத் பொன்சேகாவின் அரசியல் தர்க்கம் இது தான் என்றால், அது இந்த நாட்டின் இனக் குழுக்கள் அனைத்தையும் சிங்களக் குழுக்கள் உட்பட தேவையற்ற ஒரு முரண்பாட்டு அரசியல் சூழலுக்கே தள்ளிவிடும்.

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தில் மிகவும் தெளிவான ஒரு நிலையிலேயே உள்ளார். அதாவது இந்த நாட்டில் எவரும் சிறுபான்மையினராகக் கருதப்படக் கூடாது. இந்த நாட்டை நேசிக்கும் எல்லோருமே பெரும்பான்மையினர் தான். தேசப்பற்றற்ற ஒரு சில தீய சக்திகள் மட்டுமே சிறுபான்மையாக இருக்கின்றன என்பது தான் ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளது.

யாரும் தனக்கு உரிமையில்லாத எதையும் மிதமிஞ்சிய கோரிக்கையாக முன்வைக்கக் கூடாது. இது முற்றிலும் சரி. ஆனால் சரத் பொன்சேகா சிறுபான்மை, பெரும்பான்மை பேதம் இருக்கின்றது என்பதை மிகத் தெளிவாக முன்வைக்க முயலுகின்றார். (டெயிலி மிரர் 27 நவம்பர் 2009)மேலும் பெரும்பான்மையினர் தான் மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது. அவர்களுக்கு எந்தளவுக்கு அது இருக்கின்றது என்ற தீர்ப்பைக் கூற வேண்டியவர்கள் என்ற கருத்தையும் சரத் பொன்சேகா முன்வைத்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் இந்தக் கருத்து சகல பிரஜைகளுக்கும் இருக்கின்ற சமத்துவ உரிமைகள் தொடர்பான அரசியல் சாசன ஏற்பாடுகளை முற்றாக மீறுவதாக அமைந்துள்ளது. ஒருவருக்கு இன, மத மற்றும் வேறுபாடுகளுக்கு அப்பால் சமமான உரிமைகள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறுகின்றது.

“பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒரு பங்கு வகித்த தான் இப்போது “விருந்தாளிகளை”க் கையாள தயாராகி வருகின்றேன்” என்று சரத் பொன்சேகா கூறுவதாகவும் அவருடைய இந்தக் கருத்தில் இருந்து அர்த்தம் கொள்ள முடிகின்றது.

இந்த நாட்டின் சிங்களப் பெரும்பான்மை மக்களால் கூட முன்வைக்கப்படாத ஒரு தீவிரவாதக் கருத்தை சரத்பொன்சேகா மிகத் தெளிவாக முன்வைத்துள்ளார். 1972 மற்றும் 1978 அரசியல் யாப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகளை முழு நாடும் ஆதரிக்கின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையை மீண்டும் ஒரு இருள் சூழ்ந்த யுகத்துக்குள் தள்ளிவிட சரத்பொன்சேகா எத்தனிக்கின்றாரா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

அவர் ஆரம்பத்தில் இராணுவத் தளபதியாக இருக்கின்றபோது தான் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதுவே அரசியல் சாசனத்தை மீறுகின்ற ஒரு செயலாகும். நாட்டின் அரசியல் சாசனத்தையும், அடிப்படைச் சட்டங்களையும் மீறி செயற்பட அவர் தயாராக இருக்கின்றார் என்ற கருத்திலேயே இதை நோக்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற கருத்தை இதற்கு முன்னர் வெளியிட்ட ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி டி. பி. விஜேதுங்க ஆவார். சிறுபான்மையினர் என்பவர்கள் ஒரு மரத்தை படர்ந்திருக்கும் செடிகள் போன்றவர்கள் என்று 1993 ஆம் ஆண்டில் அவர் தெரிவித்திருந்தார்.  அப்போதைய சிறுபான்மைத் தலைவர்கள் தொண்டமான் மற்றும் அஷ்ரப் ஆகியோர் இதற்கு தக்க பதிலளிக்கும் வகையில் ஐ. தே. க.விலிருந்து விலகி 1994 ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவு வழங்கினர்.

இந்த நாட்டின் சிறுபான்மையினர் “விருந்தாளிகள்” என்றும், அந்த “விருந்தாளிகளுக்கு” இந்த நாட்டில் உரிமை இல்லை என்றும் கூறுகின்றவர்கள், அவ்வாறு கூறுவதன் மூலம் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீட்டுக்கான கதவுகளையும் திறந்து விடுகின்றனர்.

சில சிறுபான்மையினர் கடந்த காலங்களில் வெளிநாட்டு ஆதரவுகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் செய்துள்ள நிலையில்,  இத்தகைய கூற்றுக்கள் அவ்வாறான முயற்சிகளை நியாயப்படுத்தும் வருந்தத்தக்க ஒரு சூழலையே தோற்றுவிக்கும்.

வெளிநாடுகளுடனான ஒப்பந்தம் ஒன்றை பொன்சேகா மேற்கொண்டிருக்காவிட்டால், சிறுபான்மையினர் பற்றி அவர் மீண்டும் வித்தியாசமான ஒரு வடிவத்தில் உளறி இருக்கமாட்டார். அல்லது இந்த நாட்டுக்கு மிக அவசரமாகத் தேவைப்படும் தூரநோக்கு அவரிடம் கிடையாது என்பதே இந்த உளறலின் அர்த்தமாகும்.

பாக்கீர் மார்க்காரின் 12 வது ஞாபகார்த்தப் பேருரையை நிகழ்த்திய கலாநிதி, தயான் ஜயதிலக்க (ஐலண்ட் 30 நவம்பர் 2009) இந்த நாட்டுக்கு முன்னே உள்ள தெரிவை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

“இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டும் தான் சொந்தமானது. சிறுபான்மையினர் ஏதோ ஒரு வகையில் விருந்தாளிகள், அல்லது நாட்டுக்குள் வருகை தந்தவர்கள் என்ற குறிப்பானது, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த நாட்டின் 60 வருட கால சுதந்திர வரலாற்றில் பெருமளவு பிரஜைகள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

“இலங்கைக்கான வெற்றிகரமான ஒரு தனித்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே பாதை இன, மொழி மற்றும் சமய ரீதியான பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதங்கள் இன்றி இலங்கை நாடானது அதன் பிரஜைகள் அனைவருக்கும் சம அளவில் சொந்தமானது என்ற கருத்தை வலியுறுத்துவதாகும்.

‘நாங்கள் எல்லோரும் விரிவான ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள்/ உறவினர்கள் என்ற வகையில் ஒருவருக்கொருவர் இயல்பான வித்தியாசங்களுடன் வாழப் போகின்றோமா அல்லது நாம் ஒருவருக்கொருவர் மேலாண்மைக்காகவும், ஏனைய பிரிவுகளுக்காகவும், இந்த சிறிய தீவில் வெவ்வேறு இறைமையுள்ள பிரதேசங்களுக்காகவும் மோதிக் கொள்ளும் கூட்டத்தினராக வாழப் போகின்றோமா இதில் இரண்டாவது நிலைமையை நாம் தெரிவு செய்தால், எமது காலம், வளம், உயிர்கள், எதிர்காலம் என எல்லாமே தொடர்ந்தும் நாசமாகிவிடும்.

“ஒரு நாடு என்ற வகையில் எமக்குள்ள வியக்கத்தக்க முழு ஆற்றல்களையும் நாம் அடைந்து கொள்ள முடியாமல் அது எமது எதிர்காலத்தை சீர்குலைத்துவிடும். பிளவுபட்டிருந்த நாடு இப்போது மீண்டும் ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அரசியல், இராணுவ, பொருளாதார, ராஜதந்திர தலைமையால் இது சாத்தியமாகியுள்ளது. அதற்காக நாம் அனைவரும் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

“அவருடைய அடுத்த இலக்கு மக்கள் மத்தியில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதங்கள் இன்றி மக்களை ஐக்கியப்படுத்துவதாகும். அத்தோடு தனக்குள்ள நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைகளைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியாகவும் நாட்டை விரைவில் விருத்தி செய்வதும் அவரது குறிக்கோளாகும்.

“இந்த இலக்குகளை அடைந்துகொள்ள இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் யுத்தம் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ராஜபக்ஷ சகோதரர்களால் அமைதியும், பாதுகாப்பான சூழலும் ஏற்படுத்தப்பட்டது என்பதை நினைவு கூர கடமைப்பட்டுள்ளனர்.

“இன அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தவோ, அல்லது வேறு வழிகளில் புதிதாக, இன மோதல்களை அல்லது சமய மோதல்களை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியையும் இந்த நாட்டின் பிரஜைகள் நிராகரிக்க வேண்டும்.”

நன்றி: தினகரன்- 09.12.2009