இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் நேற்று செவ்வாய்க்கிழமை காலை வவுனியாவிலுள்ள அகதிமுகாம்களுக்கு சென்று பார்வையிட்டதுடன், அரசாங்கத்தின் மீள்குடியேற்ற நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக திருப்தி தெரிவித்திருக்கிறார்.
மெனிக் பாமிலுள்ள நிவாரண நிலையத்திற்குச் சென்று பார்வையிட்ட பின்பே தெற்காசிய மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான உதவி வெளிவிவகார அமைச்சர் பிளேக், மாணவர்களுக்கு நிலக் கண்ணி வெடி அபாயம் தொடர்பாக அறிவூட்டல் கல்வி வழங்கப்படுவதையிட்டும் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.
மெனிக்பாமில் தங்கியிருப்போர் தொகை தற்போது 94 ஆயிரமாக குறைவடைந்துள்ளது. இடம்பெயர்ந்தவர்களை சந்தித்தபோது அவர்களின் நிலைமைகள் தொடர்பாக பிளேக் கேட்டறிந்தார். உணவு, மருத்துவசேவை, சுகாதார வசதிகள் மற்றும் தற்போது நடமாட்ட சுதந்திரம் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக இடம்பெயர்ந்த மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். ரொபேர்ட் பிளேக்கை மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவும் வவுனியா அரச அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸும் வரவேற்றனர். பிளேக்குடன் அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா பட்டனீஸும் உடன் சென்றிருந்தார்.