24

24

கிழக்கில் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த சில குடும்பங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இலங்கையின் வடக்கே வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு மீள் குடியேற்றத்திற்கு அழைத்து வரப்பட்டு, இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த சில குடும்பங்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள குருக்கள் மடம் கலைவாணி வித்தியாலயம் இடைத் தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 45 குடும்பங்களைச் சேர்ந்த 127 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரும் அம்பாறை மாவட்டத்திலுள்ள அக்கரைப்பற்று இடைத்தங்கல் முகாமிலுள்ள 42 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேரில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

இவர்களைப் பிரதேச செயலக அதிகாரிகள் பொறுப்பேற்று உறவினர்களிடம் நேரடியாக ஒப்படைத்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.அதிகாரிகளின் தகவல்களின்படி கட்டம் கட்டமாக இக்குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது

த‌மிழக ‌மீனவ‌ர்களை ‌விடு‌‌வி‌க்க கோ‌ரி ராமே‌ஸ்வர‌த்த‌ி‌ல் நாளை ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம்

22-jayalalitha.jpgஇலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு‌ள்ள 21 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், மீனவர்களை தொடர்ந்து தாக்கி வரும் இலங்கை கடற்படையை கண்டித்தும் அ.இ.அ.தி.மு.க சார்பில் நாளை 25ஆ‌ம் தே‌தி ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறு‌கிறது. இது தொட‌ர்பாக அ‌க்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்தக் கோரி கடந்த மாதம் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தமிழக அரசின் சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை அடுத்து மீண்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித் தொழிலை செய்ய ஆரம்பித்தனர்.

ஆரம்பித்த ஒரு சில நாட்களிலேயே இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். 16.9.2009 அன்று ராமேஸ்வரம் பகுதியில் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து, வலைகளை அறுத்து, அவர்களுடைய படகுகளை சேதப்படுத்தி மீன்பிடி சாதனங்களை கடலில் தூக்கி எறிந்ததோடு மட்டுமல்லாமல் 5 படகுகளையும், 21 மீனவர்களையும் கடத்திச் சென்று உள்ளனர்.

தமிழக மீனவர்களை ஈவு இரக்கமின்றி துன்புறுத்துவது, துப்பாக்கியால் சுடுவது, சிறை பிடிப்பது ஆகியவற்றை இலங்கை அரசு வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறது. இது போன்ற துயரச் சம்பவம் நடைபெறும் ஒவ்வொரு முறையும் இலங்கை அரசைக் கண்டித்து அறிக்கை விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கருணாநிதி.

தமிழக மீனவர்களை வாழவிடாமல் தொடர்ந்து துன்புறுத்திக்கொண்டு இருக்கும் இலங்கைக் கடற்படையினரைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் மீட்க மத்திய அரசு மூலமாக தி.மு.க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி மாலை 3 மணி அளவில் ராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலர் டி.ஜெயக்குமார் தலைமையிலும், மீனவர் பிரிவு செயலர் கே.கே.கலைமணி, ராமநாதபுரம் மாவட்ட செயலர் வ.சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

கண்டி பொலிஸ் பிரிவில் பகிரங்க பிடியாணையுடன் 2500 பேர்

நீதிமன்றங்கள் மூலம் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 2500 பேர் கண்டி பொலிஸ் பிரிவுக்குள் இருப்பதாகக் கண்டி பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ரஞ்சித் கஸ்தூரிரத்ன தெரிவித்தார்.

இதேவேளை காலம் குறிக்கப்பட்டபிடி ஆணை தொடர்பில் 800 பேரும் குறித்த பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குள் இருப்பதாகவும் அண்மையில் கண்டி பொலிஸ் நிலையத்தினால் மேற் கொண்ட விசேட ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனை முன்னிட்டு இவர்களைக் கைது செய்யும் முகமாக தற்போது விசேட நடவடிக்கைகளில் கண்டி பொலிஸார் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறினார். கண்டி, கட்டுகஸ்தோட்ட, பேராதனை பிரதேசங்களிலே கணிசமான தொகையினர் ஒளித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

புலிகளின் பணமும், சர்வதேச வலையமைப்பும் இலங்கைக்கு எதிரான பயன்பாட்டில் 2வது சவாலையும் முறியடிக்கும் முயற்சியில் அரசு

240909gl.jpgபயங்கர வாதத்தை முற்றுமுழுதாக ஒழிக்கும் முதலாவது சவாலுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்த எமது அரசாங்கம் புலிகளின் சர்வதேச வலையமைப்பை தோற்கடிக்கும் இரண்டாவது சவாலை முகம்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

இலங்கையில் புலிகளின் அச்சுறுத்தல் முற்று முழுதாக ஒழிக்கப்பட்ட போதும் 29 வருடங்களாக புலிகள் திரட்டிய பெருமளவு பணம் இன்னும் காணப்படுகிறது.  இது தவிர புலிகளின் சர்வதேச தொடர்பாடல் வலையமைப்பும் இன்னும் ஒழிக்கப்படவில்லை.  இதனால் எமது நாட்டுக்கு எதிரான சர்வதேச அச்சுறுத்தல் தொடர்ந்து காணப்படுகிறது.

புலிகளின் அழுத்தம் காரணமாக அமெரிக்க செனட் சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. யுத்தத்தை முன்னெடுத்த ஜனாதிபதி அடங்கலான இராணுவ தளபதிகள் அனைவரையும் சர்வதேச யுத்த நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது. இந்த சர்வதேச சவால்களை வெற்றிகரமாக முறியடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

புலிகள் முழுமையாக ஒழிக்கப்பட்ட போதும் புலிகளின் அச்சுறுத்தல் முழுமையாக ஓயவில்லை. புலிகளின் பணமும் சர்வதேச வலையமைப்பும் இலங்கைக்கு எதிராக பயன் படுத்தப்படுகிறது.

சர்வதேச ரீதியான சவால்களை முகம் கொடுக்கத்தான் தயாராக இருப்பதாகவும் யுத்த நீதிமன்றத்தின் முன்செல்ல நேரிட்டால் அனைவர் சார்பாகவும் தான் செல்வதாகவும் சட்டத்தரணிகளுடான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புலிகளை ஒழித்ததால் பெற்ற சுதந்திரத்தை முழு நாடும் இன்று அனுபவிக்கிறது. பெற்ற வெற்றியை தொடர்ந்து பாதுகாப்பதற்காக இந்த அரசாங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே தென்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது. சகல தரப்பினரும் ஒன்றுபட்டு பெற்ற வெற்றியை பாதுகாக்க வேண்டும்.

யுத்தத்திற்கு பயன்படுத்தப்பட்ட பெருமளவு பணம் இன்று நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படுகிறது. சகல துறைகளி லும் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டு வருகிறது. வெளிநாட்டு வீதிகளின் தரத்திற்கு அம் பாந்தோட்டையிலுள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஆஸ்பத்திரிகள் என்பனவும் சிறந்த நிலையில் உள்ளன.

யுத்தம் முடிவடைந்துள்ளதால் முன்னரை விட அதிகமாக அபிவிருத்தி பணிகள் இடம்பெறும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். பின்தங்கிய பகுதிகள் யாவும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

வடமேல் மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு. முன்னணி 2/3 பெரும்பான்மையுடன் வெற்றியீட்டியது. ஊவா மாகாண சபைத் தேர்தலில் 3/4 க்கு நேருக்கமான வாக்குகளை பெற்றது. அதனைவிட கூடுதல் பெரும்பான்மையுடன் தென்மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெறுவதே எமது நோக்கமாகும்.

இறுதியாக நடைபெறும் தென்மாகாண சபைத் தேர்தல் ஏனைய இரு பிரதான தேர்தல்களுக்கும் சிறந்த அடித்தளமாக இருக்கும். யுத்தம் முடிவடைந்துள்ளதால் பெருமளவு வெளிநாட்டவர்கள் இலங்கை யில் முதலீடு செய்து வருவதோடு வெளி நாட்டு பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது.

இதனால், தொழில்வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது. பிரான்ஸிலுள்ள பல முக்கிய நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன என்றார்.

இங்கு உரையாற்றிய தெஹிவளை- கல்கிஸ்ஸ மாநகர சபை பிரதி மேயரும் தெஹிவளை சு.க. அமைப்பாளருமான தனசிரி அமரசேகர கூறியதாவது,

நான் பெலியத்தை பிரதேசத்தில் பிராச ரப் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி யால் நியமிக்கப்பட்டுள்ளேன். அம்பாந் தோட்டை மாவட்டத்தில் ஐ.ம.சு.மன்னணி மகத்தான வெற்றியீட்டும். தென் மாகாணத்தில் நாம் 85 வீத வாக்குகளை பெறுவோம் தென் பகுதி மக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர். இப்பகுதிகளில் பாரிய அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐ.தே.க. வுக்கு தென்பகுதி மக்கள் இம் முறை நல்ல பாடம் புகட்டுவர். ஐ.தே.க. வின் ஓரிரு கூட்டங்களே நடைபெறுகின் றன. ஐ.தே.க. கூட்டங்களில் பங்குகொள்ள எவரும் முன்வருவதில்லை என்றார்.

யாழ். பாஷையூரில் ஐஸ் தொழிற்சாலை

யாழ்.குடா நாட்டுக் கடற்தொழிலாளர்களின் வேண்டுகோளுங்கிணங்க, குருநகர், பர்ஷையூரில் ஐஸ் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை விரைவில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுள்ளார்.

இத்தொழிற்சாலையை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் அவசியம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலான சந்திப்பொன்று செவ்வாயன்று அமைச்சரின் யாழ். அலுவலகத்தில் நடந்தது குடாநாட்டில் பிடிக்கப்படும் மீன்களைப் பதப்படுத்துவதன் மூலம் வெளிமாவட்டங்களுக்கு மீன்களைக் கொண்டு செல்லும் கடற்தொழிலாளர்கள் அதிக நன்மையடைவார்களென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதேவேளை ஐஸ் உற்பத்தித் தொழிற்சாலையைக் குடா நாட்டில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மிகவிரைவில் மேற் கொள்ளப்பட வேண்டுமென இச்சந்திப்பில் கலந்து கொண்ட கடற்தொழிற்துறை அமைச்சின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பா ளர் தர்மலிங்கத்திற்குப் அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.