07

07

வவுனியா நிவாரண கிராமம் – 10 ஆயிரம் பேர் காணாமல் போனதாக உத்தியோகபூர்வ தகவல்கள் இல்லை

வவுனியா நிவாரண கிராமங்களிலிருந்து 10 ஆயிரம் பேர் தப்பிச் சென்றதாக பரப்பப்படும் செய்தி ஆதார மற்றதெனவும், மாவட்ட செயலக வட்டாரங்களினால் எந்தவொரு ஊடகத்துக்கோ அல்லது அமைப்புக்கோ இது பற்றி எந்தவித தகவல்களும் வழங்கப்படவில்லை எனவும் வவுனியா மாவட்டச் செயலாளர் கூறுகின்றார்.

மாவட்ட செயலாளரின் பணிப்புரையின் பேரில் மேலதிக அரசாங்க அதிபரினால் வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை அறிக்கையொன்றிலேயே மேற்படி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இக்குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை ஒன்றை வவுனியா மாவட்ட செயலாளர் ஆரம்பித்துள்ளதாகவும், அவ்விசாரணை பூர்த்தியடைந்ததும் அது பற்றிய தகவல்கள் ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படுமென்றும் அவ்அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பணம் செலுத்தி தரகர்களினூடாக தப்பிச் செல்ல இடம்பெயர்ந்த மக்கள் சிலர் முயல்வதாக மாவட்ட செயலகத்துக்கு முன்னர் தகவல் கிடைத்திருந்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நிவாரண கிராமங்களிலிருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தப்பிச் சென்றதாக கூறப்படும் பிரசாரங்கள் அறிந்ததே.

சம்பூரில் அனல்மின் நிலையம் அமைக்க இந்திய குழு இலங்கை சென்றுள்ளது

777ntpc.gifஇலங் கையின் கிழக்கே திருகோணமலையின் சம்பூர் பகுதியில் இருக்கின்ற உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவின் தேசிய அனல் மின் நிலையத்தின் உயர்மட்ட குழு இலங்கை வந்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை மின்துறை அமைச்சர் ஜான் செனிவரத்ன, அனல் மின் நிலையத்திற்கான இடம் அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும் இதில் முதற்கட்ட பணிகள் இடம்பெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும் இந்த பகுதியில் அனல் மின் நிலையம் அமைக்கப்படும் போது, இந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும், மக்களை மீள்குடியேற்ற அங்கு வேறு இடங்கள் ஏராளமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

எனினும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்களுடைய பகுதியில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தாங்கள் இந்திய உயர்மட்ட குழுவை சந்தித்து நிலைமையை விவரிக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரை ரட்ணசிங்கம் கூறினார்.

மான் இறைச்சியுடன் இருவர் புத்தளத்தில் கைது

சட்ட விரோதமாக மான் ஒன்றைக் கொன்று அதனை இறைச்சிக்காக பயன்படுத்தத் தயார் நிலையில் வைத்திருந்த சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தமக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அவ்விடம் சென்ற பொலிஸார் மான் இறைச்சியுடன் இரு சந்தேக நபர்களைப் புத்தளம் கருவலகஸ்வெல பகுதியில் கைது செய்து நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தினர்.

புத்தளம் அநுராதபுரம் வீதி தப்போவ பன்சலகல வனப்பகுதியில் வைத்தே பிரஸ்தாப சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கருவலகஸ் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பெரிலிஸ் பரிசோதகர் அபயரத்ன தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட இருவரையும் இம்மாதம் 9 ஆம்; திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதவான் உத்தரவிட்டார்

இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் தொடர்பு: பாக். பிரதமர் தெரிவிப்பு

pakistanprimeminister.jpgஇலங்கை கிரிக்கெட் அணி மீது பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் யூசூப் ராசா கிலானி தெவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள சென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது கிழக்கு பாகிஸ்தான் நகரான லாஹுரில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

மார்ச் மாதம் 3ஆம் திகதி லாஹுர் கடாபி மைதானத்திற்கருகில் இலங்கை கிக்கெட் வீரர்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த 12 ஆயுத பாணிகளுக்கு விடுதலைப் புலிகள் நிதியளித்ததற்கான தகவல்கள், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவரும் அதிகாரிகளுக்கு கிடைத்துள்ளன என்று பாகிஸ்தான் பிரதமர் கிலாணி செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கடந்த வாரம் லிபியாவில் சந்தித்த போது மேற்படி தாக்குதல் சம்பவத்தில் விடுதலைப் புலிகளின் ஈடுபாடு பற்றி அவருடன் பிரஸ்தாபித்ததாகவும் கிலானி கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக இலங்கை புலனாய்வு அதிகாரிகளுடன் கலந்தாலோசிப்பதற்காக விரைவில் ஒரு குழுவை அனுப்பவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலுக்கு தாமே பொறுப்பு என்று கடந்த ஜூன் மாதம் ரெஹ்றிக் ஈ தலிபான் பஞ்ஜாப் குழு உரிமை கோரியது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக இலங்கை வீரர்கள் சென்று கொண்டிருந்த போதே இத்தாக்குதல் நடத்தப்ப்டடது.

இலங்கை அணியைச் சேர்ந்த 6 வீரர்கள் இத்தாக்குதலில் காயமடைந்ததோடு 6 பாகிஸ்தான் பொலிஸாரும் இரண்டு சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள். இச்சம்பவத்தை அடுத்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி உட்பட பல கிரிக்கெட் அணிகள் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பாகிஸ்தான் சுற்றுப் போட்டிகளில் கலந்து கொள்வதை ரத்துச் செய்தன.

சர்வதேச கிரிக்கெட் சபையும் பாகிஸ்தானில் நடத்தத் திட்டமிட்டிருந்த 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை ரத்து செய்துள்ளது.

ஆப்கான் தாக்குதலில் பொதுமக்கள் பலியானமைக்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம்

ஆப்கானிஸ்தானில் நேட்டோப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர்கள் கண்டித்துள்ளனர். ஆப்கான் மக்களைக் கொல்வதால் அங்கு சமாதானத்தைக் கொண்டு வரமுடியாதென சுவீடன் வெளிநாட்டமைச்சர் சொன்னார்.

தலிபான்களால் கடத்தி வரப்பட்ட இரண்டு லொறிகளும் ஜேர்மன் படையினர் மீது தற்கொலைத் தாக்குதல் நடத்தும் நோக்குடன் கொண்டு வரப்பட்டது. இதைத் தவிர்க்கவே லொறிகளைத் தாக்க வேண்டியேற்பட்டதாக ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் சொன்னார்.

தலிபான்கள் ஆறு கிலோ மீற்றர் தொலைகளுக்குள்ளே நின்று ஜேர்மன் படையினரை தாக்கப் புறப்பட்டனர். இதைத் தடுக்காவிட்டால் பெருமளவான ஜேர்மன் வீரர்கள் உயிரிழந்திருப்பர் என்றும் ஜேர்மன் வெளிநாட்டமைச்சர் குறிப்பட்டார். நேட்டோ படையினரின் தாக்குதல் மிகப் பெரிய தவறு என்று பிரான்ஸ் வெளிநாட்டமைச்சர் கண்டித்தார்.

ஆப்கானிஸ்தானில் சென்ற வெள்ளிக்கிழமை தலிபான்கள் கடத்தி வந்த இரண்டு எரிபொருள் நிரப்பப்பட்ட லொறிகள் நேட்டோப் படையினால் தாக்கப்பட்டது. இதில் சுமார் 90 பேர் பலியாகினர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர்.

பொதுமக்களைப் பொருட்படுத்தாது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதையடுத்தே ஐரோப்பிய யூனியன் வெளிநாட்டமைச்சர்கள் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.

ஜேர்மன் வீரர்களே இந்த வான் தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலை இத்தாலியும் கண்டித்துள்ளது. இது குறித்து பாரபட்சமற்ற விரிவான விசாரணைகள் நடத்தப்படுமென ஐரோப்பிய யூனியன் உறுதியளித்துள்ளது. ஐரோப்பிய யூனியனுக்கு சுவீடன் தலைமை தாங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உயர் கல்வி பெறும் உரிமை சிறுபகுதியினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது -ஜனாதிபதி

slprasident.jpgபொது மக்களின் நன்மைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் பிரஜைகளை உருவாக்குவதே உயர் கல்வியின் முக்கிய நோக்கமாக அமைய வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

உயர் கல்வியைப் பெற்றுக்கொள்ளும் உரிமை நாட்டின் சிறு பகுதியினருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படக் கூடாது என தெரிவித்த ஜனாதிபதி சகல மாணவர்களுக்கும் அந்த உரிமை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டியதெனவும் தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கொழும்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

சிரேஷ்ட அமைச்சர்கள் கல்விமான்கள், முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-பட்டம் பெறுவதற்காக பல்கலைக்கழகத்துக்குள் பிரவேசிக்கும் சகல மாணவர்களுக்கும் சமூகப் பொறுப்பு உண்டு என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது. பல்கலைக்கழக மாணவர்கள் கோரிக்கைக்கும், அழுத்தத்துக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் தம்மை உள்ளாக்கிக் கொள்பவர்கள் அல்லர். அவர்கள் தமக்குரிய சமூக பொறுப்பினை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியம்.

சிறந்த முன்னுதாரணமானவர்களாக அவர்கள் பல்கலைக்கழகத்திலும் சமூகத்திலும் விளங்க வேண்டும். அத்துடன் தாய்நாட்டின் மீதும் சுற்றுச் சூழல் மீதும் நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் சிறந்த தெளிவைப் பெற்றுக்கொண்டிருத்தல் அவசியம்.

அதேபோன்று பட்டதாரிகள் ஆங்கில மொழித் தேர்ச்சி போன்று தகவல் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்வதிலும் கவனம் செலுத்துவது அதிகரிக்கப்பட வேண்டும். பொது மனித நலன்கள் தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுபவராக பட்டதாரிகள் உருவாக்கப்படுவது அவசியமெனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சீன கடற்பரப்பில் உருவாகியுள்ள சூறாவளியே இலங்கையில் காற்றின் வேகத்துக்குக் காரணம்

சீன கடற்பரப்பில் உருவாகியுள்ள சூறாவளி காரணமாகவே இலங்கையில் காற்றின் வேகம் அதிகரித்திருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்த டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

இந்த நாட்களில் இலங்கையின் கிழக்கு, தென் கிழக்கு, மற்றும் மன்னார் குடா கடற்பரப்புக்களில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் :-
சீனாவுக்கு அருகில் கடற் பரப்பில் சூறாவளி ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினால் இந்த நாட்களில் இலங்கைக்கு தென்மேற்காக காற்று வீசுகின்றது. மணித்தியாலயத்திற்கு 40 – 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுகின்ற காற்று சில சமயம் 60 – 70 கிலோ மீட்டர் வரையும் அதிகரிக்க முடியும்.

அதனால் கிழக்கு, தென் கிழக்கு மற்றும் மன்னார் குடாவில் மீன்பிடிப்பவர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடந்துகொள்ள வேண்டும். இந்த நிலைமை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்க முடியும் என்றார்.

பெடரர், ஜோகோவிக் முன்னேற்றம்

federer.jpgஅமெரிக் காவில் நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டிகளில் உலகின் முதல் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 3-ஆவது சுற்றில் லேடன் ஹெவிட்டை (ஆஸ்திரேலியா) வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

நேற்று நடைபெற்ற போட்டியில், பெடரர் 4-6, 6-3, 7-5, 6-4, என்ற செட் கணக்கில் ஹெவிட்டை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

4ஆம் நிலை வீரரான ஜோகோவிக், ஜெசி ரைட்டனை (அமெரிக்கா) 6-7, (2-7), 6-3, 7-6 (7-2), 6-4 என்ற செட்களில் தோற்கடித்தார்.

மற்ற ஆட்டங்களில் பெர்னாண்டோ (ஸ்பெயின்), சோடர்லிங் (சுவீடன்), நிகோலாய் (ரஷியா) ஆகியோர் வென்று 4-வது சுற்றில் நுழைந்தனர். 

ஆப்கானிஸ்தானில் பல வாக்குச்சாவடிகளின் முடிவுகள் ரத்து

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றதாகக் கூறப்படும் வாக்கு மோசடிகள் குறித்து நடத்தப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து அந்நாட்டு தேர்தல் அதிகாரிகள் நானூற்று நாற்பத்து ஏழு வாக்குச்சாவடிகளுக்கான முடிவுகளை ரத்து செய்துள்ளனர்.

கடந்த மாதத்தில் இடம்பெற்ற அதிபர் தேர்தல்களையடுத்து, நாட்டின் சுமார் 28 ஆயிரம் வாக்களிப்பு நிலையங்களில் பெருமளவிலான வாக்கு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்துள்ளன.

இதுவரை எண்ணப்பட்டுள்ள மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளின்படி, அதிபர் ஹமீத் கர்சாய் 49 வீதத்தை எட்டிய வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக, போட்டி வேட்பாளரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அப்துல்லா அப்துல்லா 32 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

271 கிராம் ஹெரோயின் வைத்திருந்த பாக். இருவர் உட்பட அறுவர் கைது

nimal_madiwaka.jpg271 கிராம் எடையுள்ள ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் இருவர் உட்பட ஆறு பேரை போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு ஹெரோயினை கடத்தி வந்த இரு பாகிஸ்தான் பிரஜைகளை கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்தும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இலங்கையர்கள் நால்வரை கொம்பனித்தெருவில் வைத்தும் கடந்த 4ம் திகதி பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட ஆறு பேரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மொத்தமாக 271 கிராம் எடையுள்ள ஹெரோயினை மீட்டெடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது :-பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்த மொஹம்மட் ரபீக் மொஹம்மட் அஹமட், ரம்சான் மொஹம்மட் அப்துல் கரீப் ஆகிய இருவரையும் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து போதைவஸ்து தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்து கடுமையான விசாரணைக்கு ட்படுத்தியுள்ளனர்.

அஹமட் என்பவரிடமிருந்து 97 கிராம் ஹெரோயினையும், கரீம் என்பவரிடமிருந்து 91 கிராம் ஹெரோயினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் இருவரும் வழங்கிய தகவல்களை அடுத்து கொம்பனித்தெரு பிரதேசத்திலிருந்து நான்கு இலங்கையர்களை கைது செய்துள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் 50, 10, 12, 09 கிராம் எடையுள்ள ஹெரோயின்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பிரஜையான மொஹம்மட் ரபீக் மொஹம்மட் அஹமத் என்பவர் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் இதுவரை 11 தடவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்றும் ரம்சான் மொஹம்மட் அப்துல் கரீம் என்பவர் 2008ம் ஆண்டு நவம்பர் முதல் இதுவரை ஆறு தடவைகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்றும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.