எதிர்க் கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரு சிறு கூட்டமாக உள்ளதை கூட்டமைப்பு என்று அழைப்பதா அல்லது முன்னணி என்று அழைப்பதா என தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கேள்வி எழுப்பினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் சில எதிர்க்கட்சிகள் இணைந்து ஒரு சிறு அமைப்பாக உருவாகி உள்ளது. இதனை கூட்டமைப்பு என்றும் கூற முடியாது அதேநேரம் அதனை முன்னணி என்றும் அழைக்க முடியாது. அந்த அளவுக்கு அதற்கு அரசியல் வலுவான நிலை இல்லை. இணைந்துள்ள ஒவ்வொருவரும் மக்களின் ஆதரவில்லாத தனி நபர்களே. இவர்களின் இந்த ஒன்று கூடலுக்கு கூட்டமைப்பு என்றோ முன்னணி என்றோ கூறாமல் வேறு ஒரு சொல்லையே பெயராக இடவேண்டும்.
வலுவான சொல்லை பெயராக இடும் அளவிற்கு அவர்களின் ஒன்று கூடல் பலம்வாய்ந்த நிலையில் இல்லை.
எந்தக் கூட்டமைப்போ அல்லது முன்னணியோ வந்தாலும் அவை அனைத்தையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயங்காது. எந்த சவாலையும் எதிர்கொள்ளக் கூடிய வலுவான நிலையிலேயே அரசாங்கம் உள்ளது. 80 வீத வாக்குப் பலத்தைக் கொண்டுள்ள அரசாங்கம் எந்தக் கூட்டமைப்பு வந்தாலும் தயங்காது முகம் கொடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.