25

25

இலங்கை அணி தொடர் வெற்றி – ஆட்டநாயகன் சங்கக்கார; தொடர்நாயகன் நுவன் குலசேகர

srilanka-cri.jpgஇலங்கை அணி 2-0 என்ற அடிப்படையில் தொடர் வெற்றியைக் கைப்பற்றியது. மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றி தேல்வியின்றி முடிவடைந்தது. இலங்கை அணி நான்கு விக்கெட்டுக்களை இழந்து 391 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் போட்டியை இடைநிறுத்திக் கொண்டது.

இதுவரை எந்த அணியும் 4 வது நாளில் 492 ஓட்டங்களைச் சேர்த்து வென்றதாக சரித்திரம் இல்லை. இதற்கு முன்னர் 7 விக்கெட்டுக்கு 418 ஓட்டங்களைச் சேர்த்து வெற்றி பெற்றதே சாதனை இருந்து வருகிறது அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2003ல் மேற்கிந்தித் தீவுகள் அந்தச் சிறப்பைப் பெற்றது.

இலங்கை, பாகிஸ்தானுக்கிடையிலான ஒரு நாள் போட்டி எதிர்வரும் 30ம் திகதி தம்புள்ளையில் நடைபெறும்.

PAKISTAN
1ST INNINGS: 299
SRI LANKA
1ST INNINGS: 233
PAKISTAN
2ND INNINGS:
425-9 decl
SRI LANKA
2ND INNINGS

T. Paranavitana c Alam b Malik   73
M. Warnapura c Malik b Kaneria   31
K. Sangakkara not out   130
M. Jayawardene c Akmal b Kaneria   2
T. Samaraweera c Akmal b Ajmal   73
A. Mathews not out    64
Extras: (b1, lb7, nb9, w1)   18
Total (for 4 wkts, 134 overs)  391
To bat: Tillakaratne Dilshan, Rangana Herath, Chaminda Vaas, Thilan Thushara, Nuwan Kulasekera.
Fall of wickets: 1-83 (Warnapura), 2-139 (Paranavitana), 3-155 (Jayawardene), 4-277 (Samaraweera).
Bowling: Gul 12-0-65-0 (nb5), Aamer 21-5-46-0 (nb1), Younus 8-0-25-0 (w1),
Ajmal 43-9-95-1, Malik 14-1-38-1 (nb3), Kaneria 36-3-114-2.

சிங்கப்பூரிலிருந்து வந்த இரு இளைஞர்கள் கைது

_arrested.jpgசிங்கப் பூரிலிருந்து நாடு திரும்பிய இரண்டு தமிழ் இளைஞர்கள் சீதுவ பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வீதிச் சோதனைப் பொலிஸார் இவர்களின் பொதிகளைச் சோதனையிட்டனர்.

அதன்போது அவற்றில் 72 கையடக்கத் தொலைபேசிகள், உதிரிப்பாகங்கள், மூன்று டிஜிற்றல் கமெராக்கள், 12 விஸ்கி போத்தல்கள், ஒரு லப்டொப், இரண்டு காட்டுன் சிகரட்டுகள் என்பனவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைக்காக இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இப்பொருட்களின் பெறுமதி 15 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் பெண்ணுக்கு இரண்டாம் தாரமாக வாழ்வு சலுகையாகக் கருதுகிறாரா மகிந்தானந்த?

mahindanandaaluthgamage.bmpமின்சக்தி எரிசக்தி பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையானது தமிழ்ப் பெண்களையும் அவர்களின் பாரம்பரிய கலாசார விழுமியங்களையும் இழிவுபடுத்துகின்ற வகையில் அமைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக் கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு தலைமை வகித்த யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;

பாராளுமன்றத்தில் பிரதியமைச்சர் மஹிந்தானந்த ஆற்றிய உரையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. அதேநேரம், தமிழ் மக்களும் இந்த கூற்றை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை.

போரின் கெடுபிடிகளால் தமிழ் மக்கள் மிகப்பெரும் துயரங்களை அனுபவித்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் அல்லல்பட்டு கொண்டிருக்கும் இவ்வேளையில் பிரதியமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இவ்வாறு கூறியிருப்பது வெட்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.

தனது மனைவியின் சம்மதத்துடன் யாழ்ப்பாணத் தமிழ்ப் பெண்ணொருவரை தான் திருமணம் செய்யவுள்ளதாக கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் மகிந்தானந்த அளுத்கமகே கூறியமையையானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.

தமிழ்ப் பெண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரத்துடன் வாழ்பவர்கள். ஆனால், தனது மனைவிக்கு அடுத்ததாக இரண்டாவது மனைவியாக தான் தமிழ்ப் பெண்ணொருவரைத் திருமணம் செய்யவுள்ளதாக அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

அவரின் கருத்தானது தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. தமிழ்ப் பெண்களுக்கு இரண்டாம் தரமாக வாழ்வழிப்பதையும் தமிழர்களுக்கான சலுகையாக அவர் கருதுவதாகவே தெரிகிறது. இக்கருத்தைத் தமிழ் மக்களை ஒரு போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

முதலாம் தர மாணவர்களைச் சேர்க்க ஆகஸ்ட் விடுமுறையில் நேர்முகப் பரீட்சை – கல்வியமைச்சு அறிவிப்பு

school-children.jpgஅரசாங்க பாடசாலைகளில் அடுத்த ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கு புதிய மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் ஆகஸ்ட் விடுமுறை காலத்தில் நடத்தப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நேர்முகப் பரீட்சைகளை நடத்தும் குழுக்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கள்  நியமிக்கப்பட்ட பின்னர் விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்படவுள்ளனர். இக்குழுக்களுக்கான தலைமை அதிகாரியாக கல்வி நிருவாக சேவை கல்விப் பணிப்பாளர் செயற்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணி

வடக்கில் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட நிபுணர் குழுவினருடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் (23) மாலை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், இந்தியாவிலிருந்து வந்த நிபுணர்களும் இலங்கை இராணுவப் பொறியியலாளர் பிரிவினரும் கலந்துகொண்டனர்.

மூன்று விதமான கண்ணி வெடிகளை அகற்றுவது குறித்த இந்தச் சந்திப்பில் ஆராயப்பட்டதுடன், முன்னுரிமை அடிப்படையில் பணிகளை மேற்கொள்வதென்றும் தீர்மானிக்கப்பட்டதாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

மக்களை மீளக் குடியமர்த்தி சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துமுகமாகக் கண்ணிவெடிகளை அகற்றும் மனித நேயப் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதுடன், அதற்கான அட்டவணையைத் தயாரித்து வழங்கவுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். இதன்படி, அரச அலுவலகங்கள், குடியிருப்புகள் என முன்னுரிமை அளித்து கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

“கண்ணிவெடிகள் இல்லையென இனங்காணப்பட்ட பிரதேசங்கள் இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படும். முக்கியமான பாதைகள் மற்றும் பிரதேசங்களில் ஏற்கனவே இராணுவத்தினர் கண்ணி வெடிகளை அகற்றிவிட்டனர்” என்றும் அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தெரிவித்தார்.

இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களின் நலன்களை மேம் படுத்துவது குறித்து வவுனியா அரச அதிபர், பாதுகாப்பு உயர் அதிகாரிகளுடன் நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சார்க் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்

saarc_colombo_2009.jpgசார்க் பிராந்திய நாடுகளின் போக்குவரத்து அமைச்சர்கள் மாநாடு இன்று கொழும்பில் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்கவின் தலைமையில் நடைபெறவுள்ளது. சார்க் நாடுகள் அமைப்பின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகட்டலில் இம்மாநாடு இன்று காலை 9.00 மணிக்கு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

கொழும்பிலிருந்து இந்தியாவின் கொச்சின், மற்றும் தூத்துக்குடி வரை படகு சேவைகளை ஆரம்பிப்பது, தலைமன்னாரிலிருந்து சென்னை வரை ரயில் சேவைகளை ஆரம்பிப்பது போன்றவை தொடர்பில் இம்மாநாட்டில் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது.

சார்க் நாடுகளின் நல்லுறவு, சார்க் நாடுகள் முகங்கொடுக்கும் பொதுவான பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது. அத்துடன் நாடுகளுக்கிடையில் பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துச் சேவை சார்க் நாடுகளின் உள்ளக தொடர்புகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது.

பிராந்திய நாடுகளின் போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகள், இந்நாடுகளின் கடல், தரை மற்றும் வான் போக்குவரத்துச் சேவைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலும் இம்மாநாட்டில் விரிவாக ஆராயப்படவுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது. மேற்படி மாநாட்டை முன்னிட்டு சார்க் நாடுகளின் போக்குவரத்து அமைச்சுச் செயலாளர்களின் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றதாகவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

மடுத்திருப்பதி ஓகஸ்ட் திருவிழாவில் பக்தர்களுக்கு விசேட பாதுகாப்பு ஒழுங்குகள்

madhu_mary.jpgமடு மாதா தேவாலய ஓகஸ்ட் திருவிழாவையும், அதில் கலந்துகொள்ளும் பக்தர்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

மடு மாதா திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்கள் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு மடு தேவாலய நுழைவாயில் சந்தியில் தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் தகவல்களை திரட்டும் பொருட்டு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் பாதுகாப்பு தரப்பினர் விசேட படிவம் ஒன்றை தயாரித்துள்ளனர். தேவாலய நுழைவாயில் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் இதற்கான விண்ணப்பம் வைக்கப்பட்டுள்ளது டன் இராணுவத்தினரால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னர் அனுமதிக்கப்படுவர்.

பாதுகாப்புப் படையினர் தயாரித்துள்ள படிவத்தின் பிரதிகளை நேற்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டு வைத்தது. பக்தர்களின் பாதுகாவலரின் பெயர், விலாசம், தேசிய அடையாள அட்டை இலக்கம், வாகன இலக்கம்,செசி இலக்கம், இன்ஜின் இலக்கம், வாகன உரிமையாளரின் பெயர், விலாசம், பினான்ஸ் லீசிங் கம்பனிகளின் விபரம், சாரதியின் பெயர், விலாசம், சாரதி அனு மதி பத்திர இலக்கம், காப்புறுதிப் பத்திர இலக்கம், வருமானப் பத்திரம், எவ்விடத் திலிருந்து வருகின்றார்கள், பக்தர்களின் தொகை ஆகிய விபரங்களே அந்த படிவத்தில் கோரப்பட்டுள்ளது.

பக்தர்கள் குழுவுக்கு பொறுப்பாக வருபவர் மாத்திரம் படிவத்தை பெற்றுக் கொண்டு நிரப்பி பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும்.

பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையில் இம்முறை மடு மாதா திரு விழாவை அரச அனுசரணையுடன் மிகவும் கோலாகலமாக கொண்டாட தேவையான சகல வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கட்டுநாயக்காவுக்கு ரயில் சேவை

train0000.jpgகட்டு நாயக்கா விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு முதல் முதலாக ரயில் சேவையை நடத்துவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் நலன்கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து வரும் பயணிகள் மற்றும் விமானம் மூலம் செல்லவுள்ள பயணிகள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனை நீக்குவதற்கு இச்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது கட்டுநாயக்கா விமான நிலைய ரயில் நிலையம் திருத்தப்படுவதுடன் புகையிரத வீதிகளின் புனரமைப்பு பணிகளும் ஆரம்பமாகியுள்ளன.

வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரை விடுவிப்பதற்கான வழிவகைகளை ஆராயுமாறு உத்தரவு

supremecourtphoto.jpgவவுனி யாவில் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வெளியேற அனுமதிகோரும் மக்களை விடுவிக்கக்கூடிய வழிவகைகளை ஆராயுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

சட்ட ரீதியான அனுமதி இன்றி விருப்பத்துக்கு மாறாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று தொடர்பாக ஆராய்ந்த போதே உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வவுனியா முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நால்வர் தொடர்பாக இந்த மனுவை அவர்களது உறவினர் ஒருவர் தாக்கல் செய்திருந்தார்.