15

15

இணையதளத்தை தடுத்ததாக இலங்கை அரசாங்கத்தின் மீது கண்டனம்

இலங்கை அரசாங்கத்தை அடிக்கடி விமர்சனம் செய்யும் லங்கா நியூஸ் வெப் என்னும் இணையதளத்தை இலங்கையில் உள்ளவர்கள் அணுகுவதற்கு தடை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை பிரான்ஸை தளமாகக் கொண்ட எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு கண்டித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மகனான நாமல் ராஜபக்ஷ அவர்கள் குறித்து தாம் வெளியிட்ட ஒரு செய்திதான், தமது இணையதளம் தடுக்கப்படுவதற்கான உடனடிக் காரணம் என்று தாம் நம்புவதாக அதன் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் வடபகுதி மோதலால் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்கு நாமல் ராஜபக்ஷ சென்றபோது அங்கிருந்தவர்கள் அவர்மீது கல்லெறிந்தார்கள் என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த இணையதளத்தை தடுத்ததற்கான காரணம் எதனையும் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

ஏழ்மை என்ற வசனத்தை இலங்கையிலிருந்து நீக்குவதே எமது நோக்கம் – ஜனாதிபதி

mahinda_raajapakse11.jpgஎல்லைக் கிராமம் என்ற வசனம் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டது போல ஏழ்மை என்ற வசனத்தை இலங்கையிலிருந்து நீக்கிவிடுவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

நாட்டிலுள்ள சகல ஏழ்மையான கிராமங்களும் அபிவிருத்தி செய்யப்பட்டு அங்குள்ள மக்களும் அபிவிருத்தியின் பெறுபேறுகளை அனுபவிக்கவேண்டும். அதற்காக அரசாங்கத்தின் சகல அமைச்சர்களும் அதிகாரிகளும் பொறுப்புடன் இருக்கின்றார்கள என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மொனராகலை மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது:

உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் என்று சொல்லிக்கொள்கின்ற ஏகாதிபத்திய நாடுகளின் காலனித்துவத்திற்கு அடிமைப்பட்ட நாடல்ல இலங்கை. ஒரே கொடியின் கீழ் செயற்படுகின்ற கௌரவமிக்க நாடே. எங்களுக்கு அழுத்தம் கொடுக்க எதிர்பார்த்திருக்கின்ற பிரிவினருக்கு எமது மக்களின் தீர்ப்பு என்னவென்பதை நாங்கள் காண்பிக்கவேண்டும்”

பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல்களுக்கு இலக்காகியிருந்த மொனராகலை மாவட்டம் அபிவிருத்தியில் ஓரளவுக்கு பின்னடைந்த மாவட்டமாகும் என்பதால் அந்த மாவட்டத்திலுள்ள சகல ஏழ்மையான கிராமங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு மாகாண சபைக்கு வழங்கப்படவிருக்கின்றது.

அதற்காக சரியான தலைமைத்துவத்தை தேர்ந்தெடுத்து கொள்வது பிரதேச மக்களின் பொறுப்பாகும். பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து நாட்டை ஐக்கியப்படுத்தி ஒரு கொடியின் கீழ் கொண்டுவந்ததன் பின்னர் நடத்தப்படுகின்ற முதலாவது தேர்தலே ஊவா மாகாண சபைத் தேர்தலாகும்.

உலகத்திலுள்ள சிலர் கடந்த காலங்களில் எங்களுக்கு முடிந்தளவு அழுத்தங்களை கொடுத்தனர். எமக்கு வந்த சகல அழுத்தங்களுக்கு மத்தியிலேயே நாம் இந்த சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டோம். அவ்வாறானவர்கள்,  நாடு சுதந்திரம் பெற்றது தொடர்பில் மக்கள் எவ்வாறான பதிலை வழங்கப் போகிறார்கள் என்பதனையே அவதானித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கவேண்டிய நல்ல சந்தர்ப்பமே இந்த தேர்தலாகும்.

இடைத்தங்கல் முகாம்களை சிறைக்கூடங்கள் போன்று பராமரித்தமையே மக்களுக்கு மன நோய் ஏற்படக் காரணம்

இடைத்தங்கல் முகாம்களை சிறைக்கூடங்கள் போல் பராமரித்தமையே இங்கு வாழும் மக்களின் பெருமளவானோர் மனநோயினால் பீடிக்கப்பட பிரதான காரணமாகும்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜே. வி. பி.யின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

முகாம்களைக் காட்டி சர்வதேசத்திடம் கையேந்துவதால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் நலன் தொடர்பில் அரசாங்கமும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார். இடைத்தங்கல் முகாம் வாழ்மக்கள் தொடர்பில் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே விஜித ஹேரத் எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்