July

July

இவ்வருடத்தின் 2வது சந்திரகிரகணம் இன்று – சூரிய கிரகணம் 22இல்

இந்த வருடத்தின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று 6ம் திகதி தோன்றும் என்று நவீன தொழில்நுட்ப வியலாளர்களுக்கான ஆதர் சி கிளார்க் நிலையத்தின் ஆலோசகரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார்.

இன்று பிற்பகல் 2.03 மணிக்கு ஆரம்பமாகும் இச்சந்திர கிரகணம் மாலை 4.14 மணி வரை இருக்கும். இது பகல் வேளையில் இடம்பெறுவதால் இக்கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேநேரம் எதிர்வரும் 22ம் திகதி இலங்கை நேரப்படி சூரிய உதயம் முதல் காலை 7.12 வரையும் சூரியக் கிரகணம் ஏற்படவிருப்பதாகவும் அவர் கூறினார். இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதியும், டிசம்பர் மாதம் 31ம் திகதியும் இவ்வருடத்தில் மேலும் இரண்டு சந்திர கிரணங்கள் ஏற்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையின் சீன இந்திய உறவுகள் ரயில் தண்டவாளத்தின் இரு தடங்கள் போன்றதே

18rohitha_bogollagama_.jpgசீனாவுக்கும்,  இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கமான பிணைப்பால் இந்தியாவுடனான தனித்துவமான உறவுகளுக்குத் தடையில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள அவர், சர்வதேச கற்கைகளுக்கான சீன நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார். அமைச்சர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சீனா,  இந்தியா மற்றும் இலங்கை ஆகிய  3 நாடுகளுக்கும் இடையிலான உறவு சாதகமான முறையில் இருக்கின்றது,  ரயில் தண்டவாளத்தின் இரு தடங்கள் போன்றதே இந்த இரு நாடுகளுடமான இலங்கையின் உறவாகும். மோதல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் வடபகுதியை அபிவிருத்தி செய்வதற்கு சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் பொருளாதார முதலீட்டை அதிகரிக்கவேண்டும்.

இலங்கையுடன் ஏற்கனவே துரிதமாக வளர்ச்சி கண்டுவரும் கேந்திர உறவுகளை சீனா மேலும் விரிவுபடுத்த வேண்டுமென்றும் அமைச்சர் ரோஹித்த போகல்லாகம அழைப்பு விடுத்தார்.
 
கேந்திர ரீதியிலும்,  பொருளாதார ரீதியிலும் இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு விரிவடைந்திருக்கும் நிலையில்,  அமைச்சர் ரோஹித்த போகல்லாகம நான்கு நாள்கள் விஜயத்தை மேற்கொண்டு சீனா சென்றிருக்கிறார்.

யாழ். மாவட்டத்தின் அபிவிருத்திக்கு முதற்கட்டமாக 24 கோடி ரூபா கிடைத்தது

schoolgirls-sri-lanka.jpgவடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்காக அரசு 240.02 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் துரித கதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். அரச அதிபர் கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.  யாழ். அரச அதிபர் மாவட்டச் செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அரச அதிபர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக அரசாங்கம் 240.02 மில்லியன் ரூபாவை ஒடுக்கியுள்ளது.

இதில் யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள் கட்டிட வேலைகளைப் பூர்த்தி செய்வதற்கு 100 மில்லியன் ரூபாவும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு 45 மில்லியன் ரூபாவும் யாழ். பல்கலைக்ககழகத்திற்கு 43 மில்லியன் ரூபாவும் இலங்கை போக்குவரத்துச்சபையின் யாழ். மாவட்டத்திலுள்ள 3 சாலைகளுக்கும் 36.42 மில்லியன் ரூபாவும் கைதடி சித்த வைத்தியசாலைக்கு 17.6 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை புனரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் யாழ். மற்றும் வடமராட்சி வலயங்களில் தலா 6 பாடசாலைகளும் வலிகாமம் வலயத்தில் 4 பாடசாலைகளும் தென்மராட்சி வலயத்தில் 2 பாடசாலைகளும் தீவக வலயத்தில் ஒரு பாடசாலையும் புனரமைக்கப்படவுள்ளன.  இப் பாடசாலைக் கட்டிட வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு நிதி வசதி இன்மையால் இடைநிறுத்தப்பட்டிருந்தன.அதனை முன்னெடுக்கவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் மீசாலைவரணி வீதி,புங்குடுதீவு வீதி, சங்கரத்தை குளக்கட்டு வீதி, கெற்பெலிஉசன் வீதி, சுழிபுரம் பறாளாய் வீதி, காரைநகர் பாலாவோடை ஊரி வீதி, கச்சாய்கெற்பெலி வீதி,ஏழாலை கட்டுவன் வீதி, கோண்டாவில் இருபாலை வீதி மற்றும் அல்லைப்பிட்டி வீதி போன்றன புனரமைக்கப்படவுள்ளன.

யாழ்.பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் சுகாதார வசதிகளை மேம்படுத்தல், பொது உள்ளக விளையாட்டு அரங்குகளை விருத்தி செய்தல் மற்றும் விடுதி வசதிகளை மேம்படுத்தல் போன்றன மேற்கொள்ளப்படவுள்ளன.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதி மூலம் யாழ். மாவட்டத்திலுள்ள 3 சாலைகளிலும் 70 பேருந்துகள் திருத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. கைதடி சித்த வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் அங்கு மூன்று விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.

இவ் வேலைகள் அனைத்தும் மாவட்டச் செயலகத்தின் மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் முன்னெடுக்கப்படவுள்ளனவென்றும் அரச அதிபர் தெரிவித்தார்.

முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது பாகிஸ்தான்

yusuf.jpgமொஹம் மட் யூசுப்பின் அபார சதத்தின் மூலம் இலங்கையுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 50 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது.

காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியின் இரண்டாவது நாளான நேற்றைய தினத்தில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் அணி 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இந்நிலையில் 5 ஆவது விக்கெட்டுக்காக இணைந்த யூசுப், மிஸ்பா உல் ஹக் ஜோடி 139 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது. இதில் சிறப்பாக ஆடிய மிஸ்பா உல் ஹக் 128 பந்துகளுக்கு 9 பௌண்டரிகளுடன் 56 ஓட்டங்களை பெற்றார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய மொஹம்மட் யூசுப் தனது 24 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்திசெய்தார். 185 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 10 பௌண்டரிகளுடன் 114 ஓட்டங்களை பெற்றார். இறுதியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸுக்காக 94 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 342 ஓட்டங்களை பெற்றது.

இதன்மூலம் அது முதல் இன்னிங்ஸில் இலங்கை பெற்ற 292 ஓட்டங்களை விடவும் 50 ஓட்டங்களால் முன்னிலை பெற்றது. இன்று போட்டியின் மூன்றாவது நாளாகும்.

எதிர்க்கட்சி தலைவர் ரணில் பிரிட்டன் பயணம்

ranil.jpgசர்வதேச ஜனநாயக சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க நேற்று சனிக்கிழமை பிரித்தானியா நோக்கி பயணமானார் என்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச ஜனநாயக சங்கதின் உப தலைவராக ரணில் விக்ரமசிங்க செயற்படுகின்றார். அத்துடன் ஜனநாயக சங்கதின் ஆசிய வலய பிரிவின் தலைவராகவும் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்

he_at_norochcholai-2009-07-05.jpgநுரைச் சோலை அனல் மின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பார்வையிட்டார்;. ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் ஜோன் செனவிரட்ன,  மிலிந்த மொறகொட,  மஹிந்தானந்த அளுத்கமகே,  ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் அதிகாரிகள் இப்பயணத்தில் இணைந்துகொண்டனர். இதன் முதற்கட்டப் பணிகள் அடுத்தாண்டு பூர்த்தியடைகின்றன.

முதற்கட்டத்தில் 300 மெகவொட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். விரைவில்  ஆரம்பிக்கப்படவுள்ள இரண்டாhம் கட்டத்தின்மூலம் 600 மெகவொட் மின்சாரம் கிடைகும். இரண்டாம் கட்டப் பணிக்கு 891 மில்லியன் டொலர் செலவிடபடவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சீன அரசாங்கத்துடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்டது.

இதேவேளை,  இலங்கையின் மின்சாரத் தேவையை ஈடுசெய்யும் நோக்கில் இலங்கையின் இரண்டாவது அனல் மின் நிலையம் திருகோணமலையில் அமைக்கப்படும். இதற்கான ஒப்பந்தம் இந்திய அரசுடன் விரைவில் கைச்சாத்திடப்படவுள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் எமது இணையத்துக்குத் தெரிவித்தார்.

‘வணங்காமண்’ கப்பல் நிவாரணப் பொருட்கள் நாளை கொழும்புக்கு வருகிறது!

_vanankaman-captionali.jpg‘கெப்டன் அலி’ என அழைக்கப்படும் வணங்காமண் கப்பலிலிருந்து சென்னைத் துறைமுகத்தில் இறக்கப்பட்ட இலங்கையில் இடம்பெயர்ந்தவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் நாளை திங்கட்கிழமை மற்றுமொரு கப்பலில் கொழும்புக்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர்வாழ் தமிழர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இலங்கையைச் சென்றடைந்த வணங்காமண் கப்பல், இலங்;கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது இந்தக் கப்பல் சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளதெனக் கூறி கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் நாட்டைவிட்டுத் திருப்பியனுப்பப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இக்கப்பல் சென்னைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டது.  இக்கப்பலிலிருக்கும் நிவாரணப் பொருட்களை இலங்கையில் இறக்குவதற்கு இலங்கையை இணங்கச் செய்ய இந்தியா முயற்சிக்கவேண்டுமெனத் தமிழக முதல்வர் மு.கருணாநிதி,  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கோரியிருந்தார்.

மைக்கேல் ஜாக்சனுக்கு 25,000 டாலர் செலவில் சவப்பெட்டி

maical-jak.jpgமைக்கேல் ஜாக்சனின் உடல் அடக்கத்தை ஆடம்பரமாக நடத்த அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். ஒவ்வொரு ஏற்பாட்டையும் கிராண்ட் ஆக செய்கின்றனர். சவப்பெட்டி மட்டும் 25 ஆயிரம் டாலர் செலவில் உருவாக்கியுள்ளனராம்.

தி புரோமெதியான் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சவப்பெட்டி தங்க முலாம் பூசப்பட்டதாகும். வெண்கலத்தால் ஆன அந்த சவப்பெட்டியின் உள்ளே வெல்வெட் விரிக்கப்பட்டுள்ளது.  இந்த ஆடம்பர சவப்பெட்டியை ஜாக்சனின் சொந்த மாகாணமான இன்டியானாவைச் சேர்ந்த பேட்ஸ்வில்லி காஸ்கட் கம்பெனி என்ற நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ளது.

ஜாக்சனின் உடல் அடக்கம் நாளை மறு நாள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளன.

ஈரானில் ஒரே நாளில் 20 போதைப் பொருள் கடத்தல்காரர்களுக்கு தூக்கு

ஈரானில், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 20 பேர் நேற்று ஒரே நாளில் தூக்கிலிடப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகே உள்ள கராஜ் என்ற இடத்தில் உள்ள சிறையில் இந்த தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இவர்கள் அனைவரும் கடந்த 2004 முதல் 2008 வரையிலான காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள். இவர்களிடமிருந்து 700 கிலோ போதைப் பொருட்கள் பிடிபட்டன. விசாரணைக்குப் பின்னர் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஒரே நாளில் 20 பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஈரான் நாட்டு மதச் சட்டத்தின்படி கற்பழிப்பு, கொலை, ஆயுதங்களைக் காட்டி கொள்ளையடிப்பது, 5 கிலோவுக்கு மேல் போதைப் பொருளை வைத்திருப்பது கொலைக் குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கால் 163 பேர் மரணம் 14,635 பேர் இதுவரை பாதிப்பு

aedes_aegypti.jpgடெங்கு காய்ச்சலால் இறந்தவர்களின் தொகை 163 ஆக அதிகரித்திருப்பதுடன், இதுவரை 14,635 பேர் இக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருப்பதாக நேற்று சனிக்கிழமை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம், டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. டெங்கு நுளம்பு உருவாகும் இடங்களை சோதனையிடும் நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தீவிரப்படுத்தியுள்ளது.

10 மாவட்டங்களில் டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களை மேற்பார்வை செய்வதற்கு சுகாதார அமைச்சு 10 அதிகாரிகளை நியமித்துள்ளது. 10 மாவட்டங்களில் 68 இடங்கள் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்படும் இடங்களென அடையாளம் காணப்பட்டுள்ளனர். சிவில் பாதுகாப்பு குழுக்களை கிராம அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், சுகாதார அலுவலர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பகுதி களிலுள்ள சுகாதாரத் துறை அதிகாரிகள் டெங்கு கட்டுப்பாட்டு செயல் திட்டத்தை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

கல்வியறிவூட்டுதல், சிரமதான நடவடிக்கைகள், பரிசோதனைகள், அதிகாரிகளுடன் ஒத்துழைக்காதோர் மீது சட்ட நடவடிக்கை என்பன இந்த டெங்கு கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது