July

July

யாழ்.வைத்தியசாலையின் குறைபாடுகளை நீக்க ஏற்பாடு

jaffna-teaching-hospital.jpgயாழ்ப் பாணம் போதனா வைத்தியசாலையில் பல குறைபாடுகள் அவதானிக்கப்பட்டிருப்பதால் அதனை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென மின்சக்தி பிரதியமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.  யாழ்.வைத்தியசாலையைப் பார்வையிட்டபோது பல குறைபாடுகள் இருப்பதை அவதானித்துள்ளேன். இவை உடனடியாக மேற்கொள்ள வேண்டியதால் சுகாதார அமைச்சருடன் தொடர்பு கொண்டு செயல்படுத்தவுள்ளேன் எனத் தெரிவித்தார்.

அவசரமாக யாழ்.போதனா வைத்தியசாலையின் சகல பிரிவுகளும் வர்ணம் தீட்டி அழகுபடுத்த வேண்டியுள்ளது எனவும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ். தீவு பகுதியில் 6 இந்திய மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது காணாமற்போனதாக கூறப்படும் இந்திய மீனவர்கள் அறுவரின் சடலங்கள் இலங்கையின் வடக்கு கடலில் கரையொதுங்கியிருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.

நெடுந்தீவு மற்றும் ஊர்கா வற்றுறை பகுதிகளில் கடந்த 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் கரையொங்கிய ஆறு இந்திய மீனவர்களின் சடலங்களை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார். இந்திய மீனவர்கள் ஏழு பேரைக் கொண்ட படகு கடலில் கடந்த வாரம் கவிழ்ந்துள்ளது.

இதனையடுத்து இம் மீனவர்கள் பற்றிய தகவல்கள் தெரியவரின் அறிவிக்குமாறு இந்திய பொலிஸார் எமக்கு அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நாம் வடக்கு கடலில் கூடுதல் அவதானத்துடன் இருந்தோம். இதன்போதே கரையொதுங்கிய ஆறு சடலங்களும் மீட்கப்பட்டதாகவும் கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

இந்திய மீனவர்கள் அறுவரின் சடலங்களும் யாழ்ப்பாண வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இந்தியப் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட கடற்படை பேச்சாளர், சடலங்கள் குறித்த மேலதிக விடயங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு முழுமையான ஓய்வூதியம்

mahinda_raajapakse11.jpg யுத்த நடவடிக்கைகளின் போது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளினால் அல்லது சட்டத்தை செலுத்தும் போது அங்கவீனமுற்ற படை வீரர்களுக்கு முழுமையான ஓய்வூதியம் வழங்க அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அரச பாதுகாப்பு. மக்கள் பாதுகாப்பு,  சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.

அதன்படி படைத்தரப்பைச் சேர்ந்த ஆண் ஒருவருக்கு 55 வயதில் கிடைக்கக்கூடிய சம்பளத்தையும் பெண் ஒருவருக்கு 45 வயதில் கிடைக்கக் கூடிய சம்பளத்தையும் மதிப்பீடு செய்து ஓய்வூதிய சம்பளத்தொகை நிர்ணயிக்கப்படவுள்ளது.

திருமணம் முடிக்காத நிலையில் கடமையிலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் அதன் பின்னர் திருமணம் முடித்திருந்தால் அவரின் மனைவியையும் இதில் இணைத்துக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

நெருக்கடி நிலை வழக்கு; முஷர்ரப் ஆஜராக வேண்டுமென்று ஆணை

பாகிஸ்தானில் நெருக்கடி நிலையை அமல்படுத்தி உச்ச நீதிமன்ற நீதிபதிகளை அதிரடியாக பதவி நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில் முன்னாள் அதிபர் முஷாரபை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் கடந்த புதன்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது.

நெருக்கடி நிலை, நீதிபதிகள் பதவி நீக்கம் தொடர்பான தனது நடவடிக்கை குறித்து ஜுலை 29ல் நீதிமன்றத்தில் ஆஜராகி முஷாரப் தனது விளக்கத்தை அளிக்குமாறும் தலைமை நீதிபதி இப்திகர் செளத்ரி தலைமையிலான பெஞ்ச் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது.

முஷாரப் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராக வேண்டும் என்பதில்லை. தனது தரப்பில் வழக்கறிஞரைகூட ஆஜர்படுத்தி உரிய விளக்கத்தை அளிக்கலாம் என்றும் அந்த நோட்டீஸில் நீதிபதிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

முஷாரப் அதிபராக இருந்த போது திடீரென நெருக்கடி நிலையை அமுல்படுத்தினார். இதற்கு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி இப்திகர் செளத்ரி உட்பட நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்கள் அனைவரையும் அதிரடியாக பதவி நீக்கம் செய்தார்.

இதையடுத்து ஜர்தாரி அதிபரானதும் அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப்பின் வலியுறுத்தலால் இப்திகர் கெளத்ரி உட்பட பதவிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இந்நிலையில் முஷாரப் தனது ஆட்சியில் எடுத்த நடவடிக்கை குறித்து இப்திகர் செளத்ரி தலைமையிலான பெஞ்ச், மறுஆய்வு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரிட்டனில் முஷாரப்: முஷாரப் தற்போது பிரிட்டனில் உள்ளார். அவர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்வதற்காகச் சென்றுள்ளார். இதனால் அவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமைச்சர் அம்மானுக்கு மனைவி வித்யா ஒரு மாத காலக்கெடு

Karuna_ColVidyawadi_Muraleetharanகருணா அம்மான் என்று அறியப்பட்ட இலங்கையின் தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அவருடைய மனைவி ஒரு மாத காலக்கெடு வழங்கி உள்ளார். அமைச்சர் முரளீதரன் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக சிறிலங்கா கார்டியன் இணையத் தளத்திற்கு வழங்கிய பேட்டியில் (July 22)தெரிவித்துள்ள வித்தியாவதி முரளீதரன் அவர் ஒரு மாத காலத்திற்குள் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தவறினால் அவர் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாகத் தெரிவித்து உள்ளார்.

கருணா அம்மான் 2007 நவம்பர் 2ல் தனது குடும்பத்தினரைக் காண லண்டன் வந்திரந்த வேளையில் ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு போலிக் கடவுச்சீட்டு மோசடிக்காக 9 மாதங்கள் சிறை வைக்கப்பட்டு 2008 யூலை 3 ல் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின் இலங்கை சென்ற கருணாவிற்கு முதலமைச்சர் பதவிக்குப் பதிலாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே தற்போதைய முதலமைச்சர் பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கருணா வெளிநாடு செல்ல வேண்டிய நிர்ப்பங்தம் ஏற்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியாகி இருந்தது.

தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து வந்த போது தனது கணவரிடம் தீர்க்கமான நோக்கம் இருந்ததாகக் குறிப்பிடும் வித்தியாவதி முரளீதரன் தற்போது முரளீதரன் தமிழ் மக்களுக்கும் தமிழ் தலைமைக்கும் துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘ஓம்’ போடும் ஒரு தலையாட்டியாக சுயநலத்துடன் செயற்படுவதாகத் தெரிவித்து உள்ளார். பீடில் வாசித்துக் கொண்டிருக்கும் நீரோ மன்னனின் நிலையில் தனது கணவர் இருப்பதாகவும் வித்தியாவதி முரளீதரன் குறிப்பிட்டு உள்ளார்.

Vidyawadi_Muraleetharanவித்தியாவதி சாதாரண குடும்பத் தலைவி மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் தலைவிகளில் ஒருவர். கணவர் கருணாவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தவர். தற்போது இவர் தனது மூன்று பிள்ளைகளுடன் ஸ்கொட்லன்ட் பகுதியில் வசிக்கின்றார். கடைசியாக லண்டன் கென்சிங்ரன் பகுதியில் குடும்பத்தினருடன் இருந்த வேளையிலேயே கருணா கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

கருணா லண்டனில் இருந்து கடந்த யூலையில் திருப்பி அனுப்பபட்ட பின்னர் கடந்த ஒரு வருடமாக தனது குடும்பத்தினரை நேரடியாகச் சந்திக்கவில்லை. அவருடைய பதவியும் அதையொட்டிய நடவடிக்கைகளும் குடும்ப உறவைப் பாதித்துள்ளதை வித்தியாவதி முரளீதரனின் நேர்காணலில் வெளிப்பட்டு உள்ளது. தொலைபேசியூடாக நான்கு மணிநேரம் இடம்பெற்ற நேர்காணலில் பல பகுதிகளை ஊடக நாகரீகம் கருதி வெளியிடவில்லை என ஸ்ரீலங்கா கார்டியன் இணையத் தளம் தெரிவித்து உள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து சென்ற குழுவினரைச் சந்திக்க வந்திருந்த முரளீதரன் மது போதையில் காணப்பட்டதாகவும் அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிட்டதாகவும் அக்குழுவில் சென்ற சிலர் கருத்து வெளியிட்டு இருந்தனர். அமைச்சர் முரளீதரனுடைய கவனம் செக்ரிறரியில் இருந்த அளவிற்கு ஏனைய விடயங்களில் இருக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசன் சந்திரகாந்தன் 13வது திருத்தச்சட்டங்களில் உள்ள அதிகாரங்களைக் கோரி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார். கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரம் இன்றி அரசு தனியாருக்கு நிலங்களை வழங்குவதற்கு எதிராக கிழக்கு முதல்வர் நேற்று (யூலை 23) மாகாண சபையில் தீர்மானமும் இயற்றி உள்ளார். ஆனால் அமைச்சர் முரளீதரன் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் அவசியமில்லை என அரசுக்கு ஒத்திசைவாக செயற்பட்டு வருகின்றார்.

தொடரும் கருணா – பிள்ளையான் முரண்பாடு கிழக்கு மாகாண சபையை பலவீனப்படுத்துவதாக கிழக்கு முதல்வர் பிள்ளையானுக்கு நெருங்கிய ஒருவர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். கருணா அம்மானின் நிலைப்பாடு மாகாண சபைக்கு கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதில் தடைக்கல்லாக இருப்பதாகவும் அவர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

இதுவரை பிள்ளையானிடம் இருந்து எதிர்ப்பை எதிர்கொண்டு வந்த அமைச்சர் அம்மான் தற்போது மனைவி பிள்ளைகளிடம் இருந்து காலக்கெடுவை எதிர்நோக்கி உள்ளார். ஸ்கொட்லன்டில் வாழும் வித்தியாவதி முரளீதரனின் காலக்கெடுவை வெறும் அடுப்பு ஊதும் குடும்பப் பெண்ணின் மிரட்டலாக அமைச்சர் அம்மானால் தட்டிக் கழிக்க முடியுமா?

ஈழத்தமிழின வரலாற்றில் கோரத்தாண்டவம் ஆடி (1983), இருண்ட பக்கங்களை எழுதி நிற்கும் இருபத்தியாறவது இருண்ட ஜூலை (1989) : புலம்பெயர்ந்து வாழும் TELO உறுப்பினர்கள்

Black_July_Anjaliசுதந்திரம் அடைந்த இலங்கைத்தீவில், சுதந்திரக் காற்றைக்கூட சுவாசிக்க முடியாமல், பெரும்பான்மைவாதம் வேரூன்றி, சிறுபான்மை மக்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு, தமிழினம் ஓரங்கப்பட்டதோடு, ஈழத்தமிழினத்தின் இருப்பையே இல்லாதொழிக்க மாறி மாறி வந்த இலங்கை அரசுகள் எடுத்த முயற்சிகள் ஏராளம் ஏராளம்.

ஈழத்துக்காந்தி தந்தை செல்வா போன்ற உன்னதமான அரசியல் தலைவர்களால் ஈழத்தமிழினத்தின் இருப்பைக் காக்க தொடுக்கப்பட்ட சாத்வீகப் போராட்டங்கள் அனைத்தும் சாகடிக்கப்பட்டபோது அகிம்சை முறைப்போராட்டங்கள் அனைத்தையும் அதிகாரவர்க்கம் ஆயதம் கொண்டு அழித்தொழித்தபோது, இல்லாது ஒழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்தின் இருப்பைக் காப்பாற்ற இறுதி முயற்சியாய் கையிலே ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாய நிலைக்கு தமிழினம் தள்ளப்பட்டபோது. தலைமை ஏற்றவர்தான் தங்கத்துரை என்ற தங்கண்ணா.

நடராஜா தங்கவேல் என்று அழைக்கப்படும் தங்கத்துரை என்ற தங்கண்ணா தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைலவர் மட்டுமல்ல. அவர் ஒரு தத்துவ ஞானியும் கூட. அமைதியும், அன்பும், அடக்கமும், கொண்ட கொள்கையிலே உறுதியும் அணிகலன்களாக அமையப் பெற்ற இந்த இலட்சியமறவன், வாதத்திறமையும், சிறந்த பேச்சாற்றலும் கொண்டவர். “நாம் வன்முறை மீது காதல் கொண்ட மனநோயாளிகள் அல்லர்.“ என்று நீதிமன்ற விசாரணையின்போது இவர் உதிர்த்த வார்த்தைகள் சரித்திரத்தில் சாகா வரம் பெற்றவை.

 தளபதி குட்டிமணி: செல்வராஜா யோகச்சந்திரன் என்ற குட்டிமணி, தலைவர் தங்கண்ணா கூறும் தத்துவங்களையெல்லாம் களத்திலே காரியமாக்கிக் காட்டிய கட்டளைத்தளபதி. கயமைத்தனங்களை கட்டவிழ்த்து விட்ட சிங்கள இராணுவத்தினருக்கு சிம்மசொப்பனமாய் திகழ்ந்தவன். களத்திலே இவன் இறங்கிவிட்டால், இவன் கைகளில் வீரம் விளையாடும். புடைத்து நிற்கும் இவன் தோள்களிலே வெற்றிகள் புன்னகை பூக்கும். இவன் வெறுங்கையோடு வீதியில் வந்தபோது, ஆயதங்களோடு நேருக்கு நேர் வந்த ஆயுதப்படைகள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு, அலறியடித்து ஓடிய  சம்பவங்கள் பல உண்டு.

இவன் தன் தலைவன் காட்டிய நெறி தவறியதில்லை. வைத்த குறியும் தப்பியதில்லை. சிங்கள நீதிமன்றம் மரணதண்டனை விதித்தபோதும் இவன் நீதிமன்றத்தில் “என்னைத் தூக்கிலிட்ட பின் என் கண்களை கண்ணில்லாத ஒரு தமிழனுக்கு கொடுங்கள். அதன் மூலம் மலரப்போகும் தமிழ்ஈழத்தை நான் பார்க்கவேண்டும்.“ என்றான். இதன் காரணத்தாலேயே சிறைச்சாலையில் வைத்தே சிங்கள வெறியரின் முழமையான இரையாகி, உயிரோடிருக்கும் போதே இவன் கண்கள் தோண்டப்பட்டு வீரஉரை நிகழ்த்திய இவன் நாவும் அறுக்கப்பட்டது. ஏ! அஞ்சா நெஞ்சமே! உன் மறுபெயர் தான் குட்டிமணியோ?

முன்னணிப் போராளிகள்:
ஜெகன் என்கின்ற ஜெகநாதன் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைய மகன், தளபதி குட்டிமணியை விட்டு இணைபிரியாத் தோழன். இயந்திரத்துப்பாக்கியும் கையுமாக இந்த இளம்சிங்கம் கண்ட களங்கள் பல. வயதிலே சின்னவன்; வேட்டுக்களை குறி வைப்பதில் மன்னவன். இராணுவத்தின் பிடியிலிருந்து பல தடவை தப்பியவன். அழகிய புன்முறுவலும், அடங்காத புரட்சியுணர்வும் கொண்டவன்.

சிவசுப்பிரமணியம் என்கின்ற தேவன் தலைவர் தங்கண்ணாவின் மெய்ப்பாதுகாவலர். பட்டத்து யானை போன்று நெடிய, கம்பீரமான தோற்றம் ஜெகனைப் போலவே இராணுவத்தின் பிடியிலிருந்து பலமுறை தப்பி சாகசம் புரிந்தவர். பொலிசாரின் துப்பாக்கிக் குண்டுகள் வயிற்றைக் கிழித்தபோதும், சாரத்தைக் கிழித்து, வயிற்றில் கட்டிக் கொண்டே கடலை நீந்தித் தாண்டித் தப்பிய மனோதைரியம் கொண்டவர்.

இப்படி தொடர்ந்தது இளைஞர்படை. தொகை தொகையாய் தலைவர் பின்னால், சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் துடித்து நின்ற மறத்தமிழ் வீரர்களின் மரணத்துக்கு அஞ்சாநிலை கண்டு, அகிலமே முதல் முறையாய் அண்ணாந்து பார்த்தது. அடக்கி ஆண்டவர்களோ அச்சத்தால் மிரண்டனர். தலைகுனிந்த நம்மினமோ தலை நிமிர்ந்து நின்றது. அடலேறுகளின் ஆக்கிரோசத்தில் அகமகிழ்ந்த  அன்னை தமிழும் அரியணையில் ஏற ஆயத்தமானாள். தமிழினத்தின் விடிவுக்காய் தமிழர்படை தொடர்ந்த வேளை துரோகக்கரம் ஒன்று பின்னால் தொடர்ந்ததை யார் அறிவார். பதவி வெறியால் பாவி அவன் சதியாய் பாதியிலே (1981) கைதானார்கள் எங்கள் பைந்தமிழ் வீரர்கள்.

காட்டிக் கொடுத்தவர்களே கடைசிவரை நீங்கள் சிறை மீண்டுவிடக்கூடாது என்பதற்காக காங்கேசன்துறை சீமேந்துக் கூட்டுத்தாபனத்தின் சிங்கள ஊழியரோடு பேரம் பேசி சிறையில் வைத்தே உங்களை தீர்த்துக்கட்ட முயற்சி எடுத்தார்கள். கைதான உங்களைக் காக்கவென்று புறப்பட்டோம். ஆத்திரமுற்றிருந்த அதிகாரவர்க்கம் கோர்த்தது கை இந்தக் கோடாலிக்காம்புகளோடு. சாய்த்தது சிறையில் வைத்தே எங்கள் சரித்திர நாயகர்களை. “இலட்சியத்தை கை விடுங்கள். இன்னொரு நாட்டில் இல்லறத்தோடு இனிதே வாழ வசதிகளோடு வாய்ப்புக்கள் தரப்படும். நீங்கள் மகிழ்ச்சியாக வாழலாம்.“ என்று பேரம் பேசியது ஜெயவர்த்தனா அரசு. அன்று மாத்திரம் நீங்கள் ஆம் என்று சொல்லியிருந்தால், இன்றும் இருந்திருப்பீர்கள் இன்னொரு நாட்டில் வளமாக. ஈழத்தமிழினத்திற்காக நீங்கள் ஏற்றுக்கொண்ட துன்பங்கள் எண்ணில் அடங்காதவை; கல்நெஞ்சையும் கரைக்கக் கூடியவை.

உங்கள் உயிரிலும் மேலான இலட்சியத்தைக் கைவிட மறுத்ததினால், பூட்டிய சிறையினில் மாட்டிய விலங்கோடு தீட்டிய ஆயுதத்தினால் காடையரின் துணையோடு உங்கள் கண்கள் தோண்டப்பட்டு, கால்களில் போட்டு மிதிக்கப்பட்டன. கழுத்து அறுக்கப்பட்டு, உடல்கள் சிதைக்கப்பட்டன. உங்கள் உயிர்கள் பிரியும் முன்பே அங்கங்கள் அறுக்கப்பட்டன. இப்படி ஒவ்வொரு போராளிகளின் உறுப்புக்களும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு புத்தருக்கு காணிக்கையாக்கப்பட்டன.

தென்னிலங்கை வீதிகளில் தமிழர்களின் அவலக்குரல்கள், தெருவெங்கும் தமிழர் பிணங்கள். தமிழரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. கட்டிடங்கள் தீயிடப்பட்டன. இப்படி மனிதநாகரிகம் வெட்கித் தலைகுனிந்த நிலைமையில் நடத்தப்ட்ட கோழைத்தனமான தாக்குதலில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் துடித்துநின்ற இளைஞர்கள் பின்தொடர ஆயதப்போராட்டத்தை ஆரம்பித்து வைத்த தமிழ்ஈழத் தேசபிதா திரு. தங்கத்துரை, தளபதி குட்டிமணி உட்பட புதுயுகத்தின் அத்தியாயங்களை எழுதத் துடித்துநின்ற தோழர்கள் ஜெகன், தேவன், நடேசுதாஸ், சிவபாதம், குமார், ஸ்ரீகுமார், மரியாம்பிள்ளை, குமரகுலசிங்கம் போன்ற முன்னணிப்போராளிகள் உட்பட ஐம்பத்திமூன்று உயிர்கள் வெலிக்கடைச்சிறையில் வெட்டிக் குதறப்பட, நலிவுற்ற நம்மினமோ இன்று நடுத்தெருவில், மரணித்துவிட்ட எங்கள் விடியல்களே! எங்கள் இனத்தின் இன்றைய இன்னல்கள் தீர்க்க இன்னும் ஒருமுறை எழுந்துவர மாட்டிரோ? உங்கள் அனைவருக்கும் எமது ஆத்மாந்தமான கண்ணீர் அஞ்சலிகள் காணிக்கையாகட்டும்.

புலம்பெயர்ந்து வாழும்
தமிழ் ஈழ விடுதலை இயக்க உறுப்பினர்கள்
TELO

விடியலிற்கான நம்பிக்கை – கறுப்பு யூலை அவலம்.

blackjuli.jpgஅவுஸ் திரேலிய சர்வமத குழுவுன் ஏற்பாட்டில் “விடியலிற்கான நம்பிக்கை” எனும் சர்வமத பிரார்த்தனைக்கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

காலம்:  யூலை மாதம் 25ம் திகதி மாலை 2 மணிதொடக்கம்
               4 மணிவரை   (25.07.2009 Saturday)  
      
இடம்:    ST.PATRICKS CATHEDRAL
                Cnr of Gipson street and Cathedral Place
                MELBOURNE.
                (Near the parliament Railway station)
 
வரலாற்றின் இருண்டகால பகுதியின் ஊடாகப்பயணிக்கும் தமிழ் இனத்தின் ஒற்றுமைக்காகவும்,சுபீட்சத்துக்காகவும் இடம்பெறும் இந்த நிகழ்வில் இந்துசமய மற்றும் கிறிஸ்த்தவ சமய பிரார்த்தனைகள் இடம்பெறவுள்ளன.
 
இந்த நிகழ்வில் அவுஸ்திரேலிய மதத்தலைவர்களும் அரசியல்பிரமுகர்களும் மற்றும் அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர்.
 
எனவே அனைத்து தமிழ் உறவுகளையும் இந்த சர்வமத பிரார்த்தனையில் கலந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுக்கின்றனர்.
 
யூலை மாதம் என்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றில் ஒரு “துயரமான மாதம்”.எனவே இந்த மாதத்தில் நிகழும் இந்த நிகழ்வானது தமிழ் மக்களின் விடியலுக்கான நம்பிக்கையை துளிர்விடவைக்கும்.
 
ஆயிரம் ஆயிரம் மனங்களின் உணர்வுகளும் ஆத்மார்த்தமான வேண்டுதல்களும் ஒரே நேரத்தில் ஒன்றாய் குவியும் போது,அதன் ஆன்மீக ரீதியான சக்தி நிச்சயம் பலனைப்பெற்றுத்தரும் என்பது நம்பிக்கை.

– அவுஸ்திரேலிய சர்வமத குழு

பிரான்சில் கறுப்பு யூலை நாளினை முன்னிட்டு ஒன்றுகூடல்

blackjuli.jpgகறுப்பு ஜூலை நினைவாக பிரான்ஸில் இன்றும், நாளை மறுநாளும் ஒன்றுகூடலும் கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது.  1983 யூலை 23 தமிழ் மக்கள் மாபெரும் இனப்படுகொலையில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்களையும் பெறுமதிமிக்க தமது உடமைகளையும் இழந்த நாள். இந்நாளை நினைவுபடுத்தியும், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் பிரான்சின் மனிதவுரிமைச்சதுக்கத்தில் நடைபெறவுள்ளது

இடம்  – பிரான்சின் மனிதவுரிமைச்சதுக்கம்
காலம் – 23.07.2009 வியாழக்கிழமை
நேரம் – பி.ப 16.00 மணி தொடங்கி 18.00மணி வரை
Métro  – Trocadéro – Ligne 6, 9

கறுப்பு யூலை நாளை முன்னிட்டு நடைபெறும் ஒன்றுகூடலைத் தொடர்ந்து 24 மற்றும் 26ம் திகதிகளில் பஸ்ரில் பகுதியில் பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் காலை 10.00 மணியிலிருந்து மாலை 19.00 மணிவரை கவனயீர்ப்புப்போராடட்டம் நடைபெறும் அதேவேளை 26ம் திகதி மதியம் இரண்டு மணிக்கு றீப்பப்ளிக் பகுதியிலிருந்து மாபெரும் கண்டனப்பேரணி ஆரம்பமாகி ஏற்கனவே கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பஸ்ரில் பகுதியை வந்தடையவிருக்கிறது.

மாபெரும் தமிழினப்படுகொலையின் 26 ஆண்டுகள் கடந்தும் இன்றும் திட்டமிட்ட இனப்படுகொலையும், மிகக்கொடுமையான வதைப்புக்களும் நடைபெற்றபடியே இருக்கிறது எமது மக்களைக்காப்பாற்ற பிரான்சு வாழ் தமிழ் அணிதிரள்வோம் என பிரான்ஸ் ஒருங்கமைப்பு குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளது.

இடம்பெயர் மக்களுக்கு அமெரிக்கா 14 மில். அமெ. டொலர் நிதியுதவி

jams_usa.jpgஇடம் பெயர் முகாம்களில் தங்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா நிதியுதவி அளித்துள்ளது.

இடம்பெயர் மக்களது உணவு விநியோகத்தைச் சீர் படுத்தும் நோக்கில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்காக இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தின் பதில் தூதுவர் ஜேம்ஸ் மெர் இந்த நிதியுதவிக்கான காசோலையை வழங்கியுள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய இந்தப் பணம் பயன்படுத்தப்படவுள்ளது.

மீளக் குடியமர்த்துவதற்கு தெளிவான திட்டம். கால அட்டவணை அவசியம் – ஐ.நா

அகதி முகாம்களில் தங்கியிருக்கும் 3 இலட்சம் மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பான தெளிவான திட்டத்தையும் கால அட்டவணையையும் அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென ஐ.நா. செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்திருக்கிறது. உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு இவை முக்கியமான விடயங்கள் என்றும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா, மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்டங்களில் 35 முகாம்களில் யுத்தத்தால் இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் திரும்பிச் செல்வது தொடர்பான தெளிவான திட்டங்களும் கால அட்டவணையும் இருப்பது முக்கியமானது என்று ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதி நீல் புனே தெரிவித்திருக்கிறார்.

“மாதக்கணக்காக நீங்கள் தொடர்ந்தும் 3இலட்சம் மக்களை அங்கு (முகாம்களில்) நீண்டகாலத்திற்கு வைத்திருந்தால் நிதியைப்பெற்றுக்கொள்வது (நிவாரண நடவடிக்கைகளுக்கு) மிகவும் கடினமானதாக இருக்கப்போகின்றது, என்று நான் நினைக்கிறேன்’ என்று நீல் புனே கூறியுள்ளார். நல்லிணக்கத்தின் முதல் கட்டமானது எவ்வாறு (இடம்பெயர்ந்தோர்) நடத்தப்படுகிறார்கள் என்பதாகும். அரசு அதனை அடையாளம் கண்டுள்ளது. நாங்கள் அதனை அடையாளம் கண்டுள்ளோம். ஆனால் இதுவொரு பாரிய சவாலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இடம் பெயர்ந்த மக்களை பராமரிக்கும் பொது மனிதாபிமான செயற்பாட்டுத் திட்டமானது 155 மில்லியன் டொலர் நிதித் தொகையை மதிப்பீடு செய்திருந்தது. ஆனால் அது 270 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இதுவரை 97 மில்லியன் டொலரே கிடைக்கபெற்றுள்ளது.( தேவைப்படும் தொகையில் 36 ./.) 185 திட்டங்களுக்கு தேவையான 173 மில்லியன் டொலர் பற்றாக்குறையாக உள்ளது. ஆயினும் இடம்பெயர்ந்தோரின் அடிப்படைத் தேவைகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. விநியோகத்தைப் பெற்றுக்கொள்வதில் இப்போது அதிகளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நான் தற்போது நினைக்கிறேன் என்று புனே கூறியுள்ளார்.