15

15

சடலங்களின் தொகை அதிகரிப்பதால் ஒப்பந்த அடிப்படையில் அகற்ற நடவடிக்கை

வவுனியா பொது வைத்திய சாலை சவச்சாலைக்கு கொண்டுவரப்படும் சடலங்களின் தொகை நாளுக்கு நாள் அதிரித்து வருவதனால் அனைத்து சடலங்களையும் அரச செலவில் அப்புறப்படுத்த முடியாத நிலை தோன்றியுள்ளது.
இதனால் ஒப்பந்த அடிப்படையில் இந்தச் சடலங்களை அப்புறப்படுத்த தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருகின்றது. கேள்விப் பத்திரம் கோரப்பட்டு அதன் அடிப்படையில் தெரிவு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு வாரத்திற்கு குறைந்தது 50 சடலங்கள் சவச்சாலைக்கு வந்து குவிகின்றன. செட்டிகுளம் நலன்புரி நிவாரணக் கிராமங்களில் நோயாலும் இயற்கையாலும் இறக்கும் வயோதிபர்களது சடலங்களே அதிகமாகுமென அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சவச்சாலையில் அதிகளவான சடலங்களை வைத்திருக்க போதிய இடவசதியின்மையால் ஆஸ்பத்திரி நிர்வாகம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகிறது.

முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களின் விபரங்களை திரட்ட ஏற்பாடு

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்களின் விபரங்களைத் திரட்டுவதற்கு அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் முல்லைத்தீவு மாவட்டக்கிளை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்டக் கிளையின் தலைவர் மௌலவி எம்.எச்.எம்.இப்றாஹிம் விடுத்துள்ள அறிக்கையில்;

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டலில் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதியுடனும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனும் கலந்துரையாடவுள்ளார். அதனால் முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் சரியான விபரங்கள் தேவைப்படுவதனால் அதன் விபரங்களைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தளம், குருநாகல், அநுராதபுரம், கண்டி, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் வாழ்கின்ற முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் குடும்பத் தலைவர்கள், அரச ஊழியர்கள், உலமாக்கல் அதற்குரிய விண்ணப்பங்களைப் பெற்று நிரப்பி அனுப்புமாறும் இது தொடர்பாக மேலதிக விபரங்களுக்கு 0718232462, 0714494040, 0312226710 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர் மௌலவி எம்.ஐ.கைசர்கான் ஹிஜ்ராமாவத்த, கரிக்கட்டை, மதுரங்குளி என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கைக்கும் மியன்மாருக்கும் இடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

myanmar_.jpgஇலங் கைக்கும் மியன்மாருக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்மபடுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு உடன்படிக்கையும் இரு நாடுகளுக்கும் இடையில் விசாத் தளர்வு உடன்படிக்கையுமே இன்று  கைச்சாத்திடப்பட்டன.

மியன்மார் நாட்டுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும்,  மியன்மார் நாட்டு தலைவரும் அமைதிக்கும் அபிவிருத்திக்குமாக கவுன்ஸிலின் தலைவருமான தான் ஷிவிவுக்குமிடையில் நேற்று நண்பகல் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையிலான சமய, கலாசார, வர்த்தகம் மற்றும் உல்லாசப் பயணத்துறை என்பவற்றை மேலும் மேம்படுத்துவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.  உணவு உற்பத்தியில் உலகில் தன்னிறைவு அடைந்துள்ள இரண்டாவது நாடாகக் கருதப்படும் மியன்மாரின் ஒத்துழைப்பை இலங்கையின் அபிவிருத்திக்காகப் பெற்றுக்கொள்வது குறித்தும் இப்பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நேற்று காலை மியன்மாரைச் சென்றடைந்தனர். ஜனாதிபதியையும்,  ஜனாதிபதி தலைமையிலான குழுவினரையும் மியன்மார் நாட்டுத் தலைவரான தான் ஷிவி நேபேதோ விமான நிலையத்தில் பெருவரவேற்பளித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு செங்கம்பள வரவேற்பும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் விஜயத்தின் நிமித்தம் விமான நிலையத்திலும் அதனைச் சு10ழவுள்ள பிரதேசங்களிலும் இலங்கை, மியன்மார் தேசியக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன
இலங்கையில் பயங்கரவாதம் முழுமையாக ஒழித்துக் கட்டப்பட்ட பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்டிருக்கும் முதலாவது இராஜதந்திர விஜயம் இதுவாகும்.

அதேநேரம் இலங்கைக்கும்,  மியன்மாருக்குமிடையிலான இருபக்க இராஜதந்திர உறவுக்கு இவ்வருடத்துடன் அறுபது வருடங்கள் நிறைவடைகின்றன. அதனால் ஜனாதிபதியின் இவ்விஜயம் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவு மேலும் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்கள் ரோகித போகொல்லாகம,  டளஸ் அழகப்பெரும,  விமல் வீரசன்ச எம்.பி. ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் காமினி சேனரத் ஆகியோரும் மியன்மார் சென்றுள்ளனர

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவரிடையே மோதல் – இரு பிரிவுகள் இன்று மூடப்படுகின்றன

sabaragamuwa-university.jpgஇரு மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல்கள் காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் இரு பிரிவுகள் இன்று பிற்பகல் 3.00 மணியுடன் முடப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் கலாநிதி அமரசிங்க தெரிவித்தார். பிரயோக விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளே மறு அறிவித்தல் இன்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

காத்தான்குடியில் மூவினத்தையும் சேர்ந்த 1500 பேருக்கு கண் சத்திரசிகிச்சை

கிழக்கில் 1500 பேருக்கு கண் சத்திரசிகிச்சை செய்யும் நிகழ்வு காத்தான்குடியில் கடந்த சனிக்கிழமை மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. மாகாண சுகாதார அமைச்சர் எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் ஜம்இய்யதுல் ஸபாப் நிறுவனத்தினரால் சவூதி அரேபியாவிலுள்ள அல்பஸர் நிறுவனத்தின் அனுசரணையுடன் பாகிஸ்தானைச் சேர்ந்த கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் 40 பேர் கலந்துகொண்டு இந்த சந்திரசிகிச்சையினை ஆரம்பித்துவைத்தனர்.

காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இது தொடர்பான வைபவம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தலைமையில் ஆரம்பமானபோது பிரதம அதிதியாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் ஜம்இய்யதுல் ஸபாப் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.தாசீம், உதவி முகாமையாளர் ஸபர் ஸாலீ, பாகிஸ்தான் சத்திரசிகிச்சைக்குப் பொறுப்பான டாக்டர் எம்.பகுர்தீன், நகரசபை தலைவர் யூ.எல்.எம்.முபீன், பிரதேச செயலாளர் ஏ.எம்.முஸம்மில் , பிரதிநகர முதல்வர் மர்சூக் அஹமட் லெவ்வை, பள்ளிவாசல் முஸ்லிம் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அல் மனார் அறிவியற் கல்லூரி பிரதிநிதிகள்,ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் என பல தரப்பட்டோர் கலந்துகொண்டனர்.

கண் வெண்படலம் படந்துள்ளோர் பரிசோதனையின் போது தெரிவாகி அவர்களுக்கே சத்திரசிகிச்சை செய்யும் பணி கடந்த சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த சத்திரசிகிச்சை தொடர்ந்து எதிர்வரும் 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை இடம்பெறும். காத்தான்குடி மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் அமைந்துள்ள பொதுவாசிகசாலை மேல் மாடியில் சத்திரசிகிச்சை இடம்பெறுகின்றது.

பொத்துவில், அக்கரைப்பற்று, கல்முனை, அம்பாறை, நிந்தவூர், சம்மாந்துறை, படுவான்கரை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் , சிங்கள மூவின மக்களும் சத்திரசிகிச்சையினை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சத்திரசிகிச்சையினை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானிய வைத்தியர்களுடன் சுகாதார அமைச்சரின் தொண்டு பணியாளர்களும் பிரதேச செஞ்சிலுவைச்சங்க ஜம்இய்யதுல் உலமா, பள்ளிவாசல் சம்மேளனம் , தாருல் அதர் அதவிய்யா பணியார்கள் எனப் பலதரப்பட்டோர் தொண்டு பணியாளர்களாக கடமையாற்றுவதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை வரும் மியன்மார்களுக்கு வீசா நடைமுறை தளர்வு

myanmar_.jpgஇலங் கைக்கு விஜயம் செய்யும் மியன்மார் பிரஜைகளுக்கு வீசா நடைமுறைகள் தளர்த்தப்பட உள்ளன. இதற்கான உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட உள்ளது. தற்போது மியன்மாருக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்த உடன்படிக்கையுடன் இலங்கையின் சுற்றுலா வளர்ச்சிக்கு மியன்மாரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திடவுள்ளார்.

ஜனாதிபதி நேற்றுக் காலை இலங்கையில் இருந்து மியன்மார் புறப்பட்டுச் சென்றார். மியன்மார் பிரதமர் விடுத்த அழைப்பொன்றை ஏற்றுத் தற்போது ஜனாதிபதி அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியாக உள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதியின் மியன்மார் விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடன் அவரது பாரியார் சிராந்தி ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகபெரும, தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத் ஆகியோரும் மியன்மார் சென்றுள்ளனர்.

கடும் போக்கு கொண்ட இராணுவ ஆட்சியாளர்களினால் ஆளப்படும் மியன்மாரில் ஜனநாயகத்தை ஏற்படுத்துமாறு உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. எனினும் மியன்மார் ஜனநாயக செயற்பட்டாளர்களைச் சிறையில் அடைத்து, ஜனநாயக நடவடிக்கைகளுக்கு அந்நாட்டு அரசு தடை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் மியன்மாரின் ஜனநாயகத் தலைவியான ஹான் சான் சூசியைப் பல வருடங்களாக அந்த நாட்டு இராணுவ ஆட்சியாளர்கள் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர்.

இவற்றைத் தவிர அண்மையில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற விசேட கூட்டத்தில், மியன்மார், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தது. தென்கிழக்காசியாவில் உள்ள பௌத்த நாடான மியன்மார் தலைநகர் ரங்கூன் உள்ளிட்ட பல பகுதிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வெளியுலக, ஊடக தொடர்புகள் இன்றி வாழ்ந்து வருவது குறிப்பிடதக்கது 

இந்தியாவின் அரையிறுதிக் கனவு கலைந்தது – தொடரை விட்டு வெளியேறுகிறது

t20-world-cup.jpgஉலகக் கிண்ணத்துக்கான 20 ஓவர் கிரிக்கெட் சுப்பர்-8 சுற்றில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டி ஒன்றில் நடப்புச் சாம்பியன் இந்தியாவும், இங்கிலாந்தும் லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் சந்தித்தன. இரு அணிகளுக்குமே இது ஒரு பலப்பரீட்சையாக  அமைந்ததால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
 
இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இர்பான் பதான், பிரக்யான் ஓஜாவுக்கு பதிலாக ஆர்.பி.சிங்,  ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். நாணயற் சுழற்சியில்; வென்ற இந்திய கேப்டன் டோனி, முதலில் பந்து வீச முடிவெடுத்தார். அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 153 ஓட்டங்களை எடுத்தது.

இந்திய தரப்பில் ஹர்பஜன்சிங் 3 விக்கெட்டுகளயும்,  ஜடேஜா 2 விக்கெட்டுகளையும், சஹீர்கான், ஆர்.பி.சிங் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர. ஆதனைத் தொடர்ந்து  154 ஓட்டங்கள்; எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ஓட்டங்களை எடுத்து  3 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 
இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து போட்டியை விட்டு வெளியேறியது. இந்தியா ஏற்கனவே சுப்பர்-8 சுற்றின் முதல் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம்  தோற்று இருந்தது. இனி தனது கடைசி ஆட்டத்தில் நாளை தென்ஆப்பிரிக்காவை வென்றாலும் அதற்கு பலன் கிடையாது. அதே சமயம் இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டது.

அவசரகால சட்ட நீடிப்பில் வாக்களிக்காமை குறித்து கிஷோரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது

kishore.jpgநாடாளு மன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசர கால சட்டத்தை நீடிப்பது தொடர்பான வாக்களிப்புக்கு சமூகமளிக்காமை தொடர்பில், வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
வழமை போலவே அவசர கால சட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அனைவரும் எதிராக வாக்களித்த வேளையில், சிவநாதன் கிஷோர் அந்த வாக்களிப்பில் கலந்து கொண்டிருக்கவில்லை.

இந்த நிலையில், கூட்டமைப்பின் அடுத்த நாடாளுமன்றக் குழுவின் கூட்டத்தின் போது, இது தொடர்பிலான காரணம் பகிர வேண்டும் என சிவநாதன் கிஷோரிடம் கோரியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி, சுதந்திரமாக செயற்படவோ அல்லது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவோ முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இடைத்தங்கல் முகாம்களில் கழிப்பறை பற்றாக்குறை: ஐ.நா.

idp-100609.jpgஇலங் கையில் போரால் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள வவுனியா முகாம்களில் குளியலறை மற்றும் கழிப்பறை வசதிகளில் பெரும் பற்றாக்குறை காணப்படுவதாக ஜ.நா. கூறியுள்ளது.

இடைத்தங்கல் முகாம்களில் சுமார் ஆறாயிரம் கழிப்பறைகள் தேவைப்படும் நிலை இருக்கிறது என்றும் ஆனால் இதுவரை சுமார் மூவாயிரம் கழிப்பறைகளே கட்டப்பட்டிருப்பதாக ஐ.நா.மன்றம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. 50 பேருக்கு ஒரு கழிப்பறை என்ற நிலையே அங்கேயிருப்பதாக ஐ.நா. தெரிவிக்கிறது.

இந்த குறைபாடுகள் தொடர்பில் தமிழோசைடம் கருத்து வெளியிட்ட இலங்கை மீள் குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன், கழிப்பறைகளை அமைக்கும் பணியை தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்டுவருவதாகவும், கூடியவிரைவில் தேவையான அளவுக்கு கழிப்பறைகள் கட்டிமுடிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தொண்டு நிறுவனங்கள் முகாம்களில் செயலாற்றுவதில் அரசாங்கம் தடைகளை விதிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு 81 அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை

அமெரிக்க இராணுவத்தில் இந்த ஆண்டு மட்டும் 81 வீரர்கள் தற்கொலை செய்து கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த 2008ல் தற்கொலை செய்துகொண்ட அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை வெறும் 31 ஆக இருந்தது.  ஆனால் இந்த ஆண்டு துவங்கி முதல் 6 மாதங் கள் கூட முழுமையாக முடியாத நிலையில் இதுவரை 81 அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு இராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தாண்டு ஜனவரியில் மட்டும் 24 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதையடுத்து 1980 க்கு பின் இந்த ஆண்டுதான் அதிக அமெரிக்க இராணுவ வீரர்கள் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் போரில் பங்கேற்ற பின்னர் தான் வீரர்களிடம் இந்த தற்கொலை பாதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பணப் பற்றாக்குறை, நிதி நெருக்கடி, மனைவியை விட்டுப் பிரிந்தது, தவறான பழக்க வழக்கங்கள் உள்ளிட்ட வையும் இந்த தற்கொலை அதிகரிப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. அமெரிக்க வீரர்களின் தற்கொலை அதிகரிப்பு குறித்து அமெரிக்க இராணுவத்தின் துணைத் தளபதி பீட்டர் சியாரெலி கூறுகையில் :தற்கொலைத் தடுப்பு திட்டங்கள் உரிய முறையில் பலன் அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஏன் அது தோல்வி அடைந்தது என்பது குறித்து விரிவாக ஆராயப் பட வேண்டும் என்றார்.